Advertisement

அத்தியாயம் -36(2)

என்னதான் சரியாக இருந்தாலும் பணம் இல்லாமல் எந்த காரியமும் எளிதில் நிறைவேறாதே. தமனை அர்த்தமாக அவன் பார்க்க, “ஒருத்தர் தவிர மத்தவங்கள கவனிச்சாச்சுங்க ஸார்” என்றான் அவன்.

அந்த ஒருவர் நேர்மையானவர். ஆகவே பணத்தை கொண்டு அவரிடம் காரியம் சாதிக்க முடியாது.

“நல்லா தெரியுமா? ஃப்ரீ பிளாக் கை விட்டு போனா மலரை என்னால ஃபேஸ் பண்ண முடியாது” என்றான் பிரவா.

“சென்ட் பெர்சண்ட் உறுதியான தகவல் ஸார். கண்ணுல எண்ணெய் விட்டுட்டு மனுஷன் ஆராய்வாராம், கடுகு சைஸ்ல தப்பு தெரிஞ்சாலும் விட மாட்டாராம்”

“என் வைஃப், என் சின்ன மாப்ள போல பொழைக்க தெரியாதவங்க நிறைய பேர் இந்த உலகத்துல இருக்காங்க போல”

“ஆமாம் ஸார், நாட்டுல அப்பப்ப மழை பெய்யணும்ல ஸார்” என சொல்லி பிரவாகனிடமிருந்து ஒரு அடியை தன் தோளில் தாங்கிக் கொண்ட தமன் அசராமல், “மேடம் இல்லைனா இவ்ளோ ஷார்ட் பீரியட்ல அக்கவுண்ட்ஸ் சுத்தமாகியிருக்காதுங்க ஸார். நல்லவங்க உங்க கூட இருந்ததால அந்த பலன் உங்களுக்கு கிடைக்குதுங்க ஸார்” என்றான்.

“சரிடா நல்லவனே… எதுக்கும் கமிட்டில இருக்கிற அந்த நல்லவர் வீக்னெஸ் என்னன்னு தெரிஞ்சு வை” என பிரவாகன் உத்தரவு போட சரியென்றான் தமன்.

நள்ளிரவு ஒரு மணிக்கு பிரவாகன் வீடு வர, உடனே எழுந்து கொண்டாள் மலர்.

“இன்னும் சாப்பிடலதானே? இப்படி இருந்தா உடம்பு கெட்டு போகாதா? ஏன் இவ்ளோ கஷ்ட படுறீங்க?” ஆதங்கமாக கேட்டாள் மலர்.

“நிலைமை கட்டுக்குள்ள வர்ற வரைக்கும்தான் மலர். நாளைக்கு வளைகாப்பு வச்சுகிட்டு ஏன் தூங்காம இருக்க? நல்லா ரெஸ்ட் எடுத்தாத்தான் காலைல ஃபங்ஷன் அப்போ பிரிஸ்க்கா இருக்கலாம். என் பசங்க எழுப்பி விட்டுட்டாங்களா?” எனக் கேட்டுக் கொண்டே அவள் வயிற்றில் கை வைத்தான்.

அவனது மகவுகளின் அசைவு தெரிய, ஒரு கஷ்டமும் அவனுக்கு நினைவில் இல்லை. வாகாக இரு கைகளையும் வயிற்றில் வைத்துக்கொண்டு, “ரெண்டு பேரும் விழிச்சிட்டாங்க மலர். பசிக்குதா உனக்கு, சாப்பிடுறியா?” எனக் கேட்டான்.

மலருக்கு ஏழாவது மாதம்தான் என்றாலும் இரட்டைக் குழந்தைகள் என்பதால் நிறை மாத வயிறு போல பெரிதாக இருந்தது. மருத்துவமனை வர வேண்டாம் என இவன் எடுத்து சொன்னாலும் அவள் கேட்பதில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு நிறுத்திக் கொள்கிறேன், அதுவரை வருவேன் என சொல்லி விட்டாள்.

“ஃப்ரூட்ஸ் ஏதாவது சாப்பிடுறியா மலர்? பசங்க டான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க” என்றான்.

“முதல்ல சாப்பிட வாங்க” அவனை அதட்டி சாப்பிட அழைத்து சென்றாள்.

பசி இருந்தாலும் நள்ளிரவு என்பதால் மிகவும் அளவாகவே சாப்பிட்டான்.

“நாளையிலேருந்து பத்து மணிக்கெல்லாம் வீட்ல இருக்கணும் நீங்க” என கட்டளையாக சொன்னாள்.

“என்னால செய்ய முடியாததை கேட்காதன்னு எத்தனை முறை சொல்றது?”

உச்சு கொட்டியவள், “இப்ப எல்லாம் சரி செய்றீங்கன்னாலும் முன்னாடி ஒண்ணும் சரியில்லன்னுதானே உங்க சித்தப்பா அத யூஸ் பண்ணிக்கிட்டார்? ஹாஸ்பிடல் நேம் எப்படி கெட்டு போகுது தெரியுமா? நாளைக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு வர்ற கமிட்டில உள்ளவங்க எப்படின்னு தெரியலை. ஏதாவது தப்பா நடந்து ட்ரஸ்ட் கவர்ன்மெண்ட் கஸ்டடிக்கு போயிடுச்சுன்னா… ” கவலையாக சொன்னாள்.

“என்னை மீறி என் கேம்பஸ்குள்ள தப்பா எதுவும் நடக்காது மலர்” கடின உடல்மொழியில் சொன்னான்.

எதையும் கலந்து ஆலோசிக்க மறுத்து எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் என இவன் இருப்பதில் மலருக்கு கோவமாக வந்தது.

“உங்களுக்கு தெரியாமதானே உங்க சித்தப்பா…”

அவளை பேச விடாதவன், “அவர் செஞ்சது எனக்கு தெரியும், என்ன… இவ்ளோ டீப்பா செய்வார்னு நினைக்கல. ஸோ வாட்? எல்லாம் திரும்ப வரும்” என்றான்.

“இது ஓவர் கான்ஃபிடெண்ட், நீங்களே எல்லாத்தையும் இழுத்து போட்டுக்கிட்டு அதிகமா பிரஷர் எடுத்துக்குறீங்க. பயமா இருக்கு எனக்கு”

“பயமா! எதுக்கு பயம்? எல்லாம் சரியாத்தான் போயிட்டு இருக்கு” அழுத்தமாக சொன்னான் பிரவாகன்.

“ஆமாம் இவர் சொன்னா எல்லாம் சரியாதான் இருக்கும். உலகமே இவர் காலுக்கு கீழ…” பொரிந்தாள்.

“என் உலகம் என் கைக்குள்ளதான் இருக்கு” என சொல்லி அவளை கை வளைவில் நிறுத்திக் கொண்டான்.

அவனை கலக்கமாக நிமிர்ந்து பார்த்தவள், “நிஜமா பெரிய பிரச்சனை எதுவும் ஆகாதே?” எனக் கேட்டாள்.

“சின்னதா கூட எதுவும் ஆகாது” என்றவன் அவளை படுத்துக் கொள்ள சொல்ல, தமனிடமிருந்து அழைப்பு வந்தது.

அவன் சொன்ன செய்தியை கேட்டுக் கொண்டவன் முகத்தில் உணர்ச்சிகளை காட்டாமல் மலரை பார்த்து புன்னகை செய்து கொண்டே இயல்பாக செல்வது போல அறையை விட்டு வெளியேறி விட்டான்.

விவரமாக தமனிடம் கேட்டுக் கொண்டவனுக்கு உடனே சென்றாக வேண்டிய கட்டாயம். மலரிடம் என்னவென சொல்வது என எண்ணிக் கொண்டே இவன் உள்ளே வர, அவளும் கைப்பேசியில் யாருடனோ பேசி விட்டு அப்போதுதான் வைத்தாள்.

“இந்த டைம்ல யார்கிட்ட பேசுற மலர்?” சாதாரணமாக கேட்டவனை கோவமாக பார்த்தவள், “எனக்கு தெரியும், அப்படி ஒண்ணும் எந்த ஷாக்கும் தாங்க முடியாத ஆள் இல்ல நான். வாங்க கிளம்பலாம்” என்றாள்.

“நீ வந்து என்ன செய்ய போற? ரெஸ்ட் எடு, நான் போயிட்டு வர்றேன். கேர் டேக்கர் கூட இருக்க சொல்றேன்” அவள் மறுக்க முடியாத படி சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

முதல் வருடத்தில் பயிலும் என் ஆர் ஐ மருத்துவ மாணவி விடுதியில் தற்கொலை முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தாள்.

“ஸ்லீப்பிங் பில்ஸ் எடுத்திருக்காங்க. லேட்டாதான் அட்மிட் பண்ணியிருக்காங்க பிரவா. வெண்டிலேட்டர் சப்போர்ட்ல இருக்காங்க” என்றார் மருத்துவர் ஜர்னா.

“வெளிப்படையா சொல்லுங்க ஆன்ட்டி, பிழைப்பாளா இந்த பொண்ணு?” எனக் கேட்டான் பிரவா.

அருகில் நின்றிருந்த மயக்க மருந்து நிபுணரின் முகத்தை பார்த்தார் ஜர்னா. செயற்கை சுவாசம் எந்த அளவு முன்னேற்றம் தருகிறது என்பதை அவர் சொல்ல, கேட்டுக் கொண்ட ஜர்னா, “வாய்ப்பு குறைவு பிரவா” என்றார்.

“வாய்ப்பு குறைவுன்னா… கொஞ்சம் வாய்ப்பு இருக்குன்னுதானே அர்த்தம்? ப்ரொவைட் ஹெர் த பெஸ்ட் ட்ரீட்மெண்ட். நாளைக்கு நீங்க பாசிட்டிவா சொல்லணும் ஆன்ட்டி” என்றான்.

“நீ சொல்லாமலே ட்ரை பண்றேனே பிரவா, பார்க்கலாம்” என்றார்.

தமனை பார்த்தவன், “நாளைக்கு நைட் இவ பேரென்ட் ரீச் ஆகிடுவாங்க. டேக் கேர் ஆஃப் தெம்” என்றான்.

“எம் எல் சி (medico legal case / மருத்துவ சட்ட வழக்கு) போடல இன்னும், சென்ஸிடிவ் விஷயம். இப்பவே ஹாஸ்டல்ல ரகளை ஆகிட்டு இருக்கு. வெளில தெரியாம வைக்க முடியாது போல” என்றான் தமன்.

“எம் எல் சி ரெய்ஸ் பண்ண வேணாம், பார்த்துக்கலாம். நான் ஐ ஜி கிட்ட பேசுறேன். எந்த மீடியாவும் இத பத்தி பேசாத படி ஆஃப் பண்ணி வை” என பிரவா சொல்ல, கவலையாக பார்த்தான் தமன்.

“கண்டிப்பா இந்த பொண்ணுக்கு எதுவும் ஆகாது. என் இன்ட்யூஷன் சொல்லுது. சூசைட் அட்டெம்ப்ட் காரணம் என்னன்னு தெரிஞ்சதா?” என கேட்டான்.

பேராசியர்கள் சிலர் விசாரித்துக் கொண்டிருப்பதாக சொன்னான் தமன். சிதம்பரம் இன்னும் வந்து சேரவில்லை. அவருக்கு தகவல் எப்பொழுதோ கொடுத்து விட்டதாக தெரிந்தது.

“குட், அவரை வீட்லேயே ரெஸ்ட் எடுத்துக்க சொல்லிடு. பொறுப்பில்லாத டீன் அப்படிங்கிற பேர் காலத்துக்கும் அவர் பேர் பின்னாடியே வரணும். இங்க எப்படி வேணா இருந்திட்டு இன்னொரு காலேஜ்ல போய் நிம்மதியா குப்பை கொட்டலாம்னு கனவு காண்றாரா? அவ்ளோ ஈஸி இல்லை இந்த பிரவாகன்னு அவருக்கு புரியனும், என்ன செய்யணுமோ செய்” கோவத்தை அடக்கிக் கொண்டு சொன்னான்.

இரவு நேரத்தில் என்ன பெரிதாக விசாரிக்க முடியும்? விசாரித்த வரை அந்த பெண் ஏன் இப்படி செய்து கொண்டாள் என நிஜமான காரணம் தெரியவில்லை.

காலை பத்து மணிக்கு பிரவாகனின் இல்லத்திலேயே முக்கிய உறவுகளை அழைத்து வளைகாப்பு நடக்க இருந்தது. அரசியின் காதுக்கு எதுவும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் மலர்.

சிதம்பரத்தை பணி நீக்கம் செய்ததும் விடிவதற்கு முன்னரே குகனுக்கு அழைத்து குறை சொல்ல ஆரம்பித்து விட்டார் அவனது அம்மா. இந்த நேரத்தில் அப்பா செல்லாமல் இருந்தது தவறு என்ற குகன் அழைப்பை துண்டித்து விட்டு கீர்த்தியிடம் விஷயத்தை சொன்னான்.

“உங்க வீட்டு பஞ்சாயத்தை பொறுமையா பேசலாம். நீங்க என் தம்பிகிட்ட போங்க, நான் மலர் கூட இருந்தாகனும்” என சொல்லி உடனே செயல்பட்டாள் கீர்த்தி.

“காலேஜ் விஷயம் எல்லாம் எனக்கு என்ன தெரியும் கீர்த்தி?” என தயங்கினான் குகன்.

“எல்லாம் அவன் பார்த்துப்பான். ஆனா கூட நிக்க வேணாமா நீங்க? அவன் என்ன சொல்றானோ அத செய்யுங்க” என கீர்த்தி சொல்ல அவனும் புறப்பட தயாரானான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement