Advertisement

பேரன்பு பிரவாகம் -36

அத்தியாயம் -36(1)

அகிலா தன் மகளை பள்ளியில் சேர்த்து விட்ட கையோடு தனக்கென ஒரு வேலை தேடிக் கொண்டாள். பிரவாகன் அவன் சொன்னது போலவே அகிலாவின் பெயரில் பெரிய பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டான். அங்குதான் வசிக்கிறார்கள்.

முன்பெல்லாம் மாமனார் மாமியார் எதற்காகவும் பேசினால் கொஞ்சம் பொறுத்து போவாள் அகிலா. இப்போது அப்படி கிடையாது, உடனுக்குடன் பதிலடி தருகிறாள்.

 என்ன இப்படி பேசுகிறாய் என அவளது மாமியார் ஏதாவது ஆரம்பித்தால், “என்ன செய்ய… என் குணமெல்லாம் உங்களுக்கு பெருசா தெரியலையே … அப்ப நான் ஏன் பொறுத்து பொறுத்து போகணும்? எனக்கு வசதி கூடவும் மண்டைக்கனமும் கூடிப் போச்சுன்னு என் முதுகுக்கு பின்னால பேசிக்கோங்க. கவலையே இல்லை” என பதில் தந்தாள்.

தங்கள் மகனிடம் அவர்கள் குறை சொன்னால் அவளை ஒன்றும் பேசாதீர்கள் என பெற்றோருக்குத்தான் அறிவுரை வழங்கினான் விமல்.

முன்பிருந்த பிணைப்பு கணவன் மனைவிக்குள் இல்லை. ஏன் இப்படி செய்தாய் என ஏதாவது அவள் கேட்டால் இவனும் எதாவது சொல்லி சமாதானம் செய்யலாம். அப்படி எதையும் அவள் கேட்கவில்லை.

 இப்படி மனைவி வீட்டில் இக்கட்டு கொடுத்து சொத்து பெற்றது பெரும் தவறு என உண்மையாகவே அவன் புரிந்து கொள்ள வேண்டும். அதை அகிலாவும் உணர வேண்டும், அதுவரை அவர்களின் உறவில் சுமூக நிலை ஏற்பட போவதில்லை.

*****

தர்மேந்திரன் தான் சுருட்டிய பணத்தை கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகள் வாங்கியிருந்தார். இவ்வளவு மூலதனம் எங்கிருந்து என கேள்வி எழுமேயானால் அதற்கு தகுந்த பதில் இல்லை அவரிடம். ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி மகள்களை அவர்களது குடும்பத்தோடு வெளிநாட்டில் குடியேற்றி விட்டவர் தானும் தன் மனைவியோடு வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நல்ல சந்தர்ப்பம் அமையும் முன் திடீரென அமலாக்க துறையினரால் கைது செய்யப் பட்டு விட்டார். இதன் பின்னணியில் பிரவாகன் இருக்கிறான் என்பதை கண்டறிய அவருக்கு அதிக அறிவோ அவகாசமோ தேவையாக இருக்கவில்லை.

தான் மாட்டிக் கொண்டதால் இலவச பிரிவில் நிர்வாகம் சரி கிடையாது, நிறைய குளறுபடிகள் நடக்கின்றன, அனைத்தும் பொய் கணக்கு என வாக்குமூலம் கொடுத்து விட்டார்.

தன் சித்தப்பா மாட்டிக் கொண்டால் இப்படி செய்யக் கூடும் என்பதை பிரவாகன் கணித்தே வைத்திருப்பான் என்பதை மறந்து போனார். அவன் எதிர்பார்த்ததுதான் என்பதால் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை.

தர்மேந்திரன் என்ன செய்தாலும் எதிர் கொள்ள பிரவாகன் தயாராகவே இருந்தாலும் அவன் நினைத்து பார்த்ததை விட அதிகளவில் இடையூறு ஏற்பட்டதுதான்.

தர்மேந்திரன் அவரது மச்சினரை கொண்டு இலவச மருத்துவமனை அவர் நிர்வாகம் செய்த போது எவ்வாறெல்லாம் சீர் கெட்டு இருந்ததோ அப்படித்தான் இப்போதும் இருப்பதாக செய்திகளை சமூக வலைதளங்களில் பரவ செய்தார்.

தானமாக வழங்க பட்ட இடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் அமைத்து பொருளீட்டிக் கொள்கிறான் என்ற செய்தியும் சேர்ந்து பரவியது. மலரின் தாத்தாதான் இடம் கொடுத்தது என்பது வெளிவரவில்லை.

பிரவாகனின் நிறுவனம் மீடியாக்களில் மிகப்பெரிய பேசும் பொருளாகி விட்டது. ஜே சி ஐ குழு வரப் போகும் சமயம் பார்த்து இப்படியெல்லாம் நடப்பது சாதகமில்லை என கவலை கொண்டார் பத்மநாதன். இவற்றை எல்லாம் தவிர்க்கதானே தர்மேந்திரன் ஏகாம்பரம் போன்றோரை வெளியில் விடாமல் வைத்திருந்தான்.

தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்பதால் அரசியல் பிரமுகர்களையும் அதிகாரிகளையும் வெறும் பணம் கொடுத்து செயல் படாமல் இருக்க வைக்க முடியவில்லை. ஐந்து அதிகாரிகள் கொண்ட குழு இலவச மருத்துவமனையில் ஆய்வு நடத்துவதற்காக நியமிக்க பட்டது.

யோசனையாக இருந்த பிரவாகனை வருத்தமாக பார்த்தான் தமன்.

“சரியான சமயம் பார்த்து யாரும் ஹெல்ப் பண்ண மாட்டேங்குறாங்களே ஸார்?” என்றான் தமன்.

“எலெக்ஷன் டைம் இல்லயா தமன்?”

“எவ்ளோ பணம் அழுதிருக்கோம் ஸார்?”

தலையாட்டிக் கொண்ட பிரவாகன், “என்ன இப்போ? கமிட்டிதானே அமைச்சிருக்காங்க? வரட்டும் பார்த்துக்கலாம். சமாளிக்க முடியாத விஷயம் இல்ல இது” என்றான்.

“ஆனா இந்த டைம்ல இதெல்லாம் பெரிய தலைவலிதானே ஸார்?”

“பார்த்துக்கலாம், விடு” சாதாரணமாக சொல்லி விட்டான்.

எதுவும் தன்னை பாதிக்கவில்லை எனதான் காட்டிக் கொண்டான்.

புதிதாக நியமனம் செய்ய பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க பட்டுக் கொண்டிருந்தது. ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்த ஊழியர்களுக்கும் இப்போது பயிற்சி பெறும் ஊழியர்களுக்கும் இடையில் பிரிவினைவாதம் எழுந்து விட்டது. ஒற்றுமை குலைய ஆரம்பித்தது. தினம் ஏதாவது புதுப்பிரச்சனை எழ நிர்வாகிகளின் விழிகள் பிதுங்க ஆரம்பித்து விட்டன.

என்னவோ தனக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்பதை உள்ளூர உணர்ந்தான் பிரவாகன். தான் தூக்கி நிறுத்தியிருக்கும் கோட்டையில் விரிசல் விழ ஆரம்பித்து விட்டது என்பது புரிகிறதுதான். இப்போதே சரி செய்யா விட்டால் ஆபத்து. ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது, என்ன முடிவுகளை எடுத்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்பதில் மனதுக்குள் கொஞ்சமாக தடுமாறினான்.

தன்னிடம் காட்டிக் கொள்ளா விட்டாலும் உள்ளுக்குள் வெகுவாக வருந்துகிறான், சோர்வாக இருக்கிறான் என்பதை மலரால் உணர முடிந்தது.

“ஏங்க இப்படி? மனசு விட்டு பேசுங்க” என சொல்லி பார்த்து விட்டாள்.

சரியானதும் இவளிடம்தான் மனம் திறக்க போகிறான், ஆனால் இப்போது தன் வருத்தங்களை இவளிடம் கொட்ட விரும்பாமல், “இப்படி ஆகுறது எல்லாம் நார்மல். சீக்கிரம் சரியாகிடும்” என சொல்லி விட்டான்.

மருத்துவமனையில் இப்படி சிக்கல்கள் இருக்க, கல்லூரியில் வேறு விதமாக பிரச்சனைகள் முளைக்க ஆரம்பித்தன.

சரத்தின் பணி நீக்கம், குகனின் தனிக் குடித்தனம் போன்றவற்றால் அதிருப்தியில் இருந்தார் சிதம்பரம். இனியும் இங்கு வேலை செய்யலாகாது என முடிவு செய்து விட்டவர் வேறொரு மருத்துவக் கல்லூரியில் அவருடைய பணிக்கு ஏற்பாடு செய்து கொண்டார்.

தானாக வெளியேற்றுவதை காட்டிலும் அவரே செல்வது நல்லதுதான் என நினைத்த பிரவாகனும் கண்டு கொள்ளாதது போலவே இருந்து கொண்டான்.

இங்கிருந்து செல்லப் போகிறோம் என்பதில் சிதம்பரத்துக்கு அவரது பணியில் அசட்டை வந்து விட்டது. கல்லூரி நிர்வாகத்தை திறம் பட கையாளவில்லை.

கல்லூரியின் தரத்தின் ஸ்திரத் தன்மை குறைய ஆரம்பித்தது. மாணவர்கள் சொல்லும் குறைகள் கண்டுகொள்ள படவில்லை. பேராசிரியர்கள் முன் வைக்கும் யோசனைகள் செயல் படுத்த படவும் இல்லை. நிர்வாகத்தில் ஒழுங்கு இல்லாமல் ஏனோ தானோ என்றானது.

ராகிங் பிரச்சனை ஒன்றை சிதம்பரம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட அது பூதாகரமாகி விட்டது. பேராசியர் ஒருவர் சீனியர் மாணவர்களை கண்டிக்க அவரிடம் மாணவர்கள் துவேஷம் பாராட்ட என பிரச்சனை ஆரம்பமானது.

ஒரு கட்டத்தில் மாணவர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார் பேராசியர் என குறை சொல்லி பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர் மாணவர்கள். அந்த பேராசியருக்கு ஆதரவாக நின்றனர் மற்ற பேராசியர்கள். மாணவர்கள் மத்தியில் எழுந்த கிளர்ச்சியை சமாளித்து அவர்களை அமைதியடைய செய்வதற்குள் பிரவாகனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

அதில் பேராசியர்கள் பக்கம் அவன் பேசவில்லை என அவர்களுக்கு மன சுணக்கம். சுமூகமாக முடித்து வைப்பது ஒன்றும் பிரவாகனால் முடியாத காரியம் இல்லை. ஆனால் நேரம் செலவிட வேண்டும்.

நிஜமாக அவனுக்கு இருபத்திநான்கு மணி நேரம் போதவில்லை. மருத்துவமனை விவகாரங்களே அவனது நேரத்தை மொத்தமாக ஆக்ரமித்து வைத்திருக்க கல்லூரி விஷயத்தை மெதுவாக பார்க்கலாம் என நினைத்து விட்டு வைத்திருந்தான்.

ஆகவே எல்லா பக்கங்களில் இருந்தும் பிரவாகனுக்கு நெருக்கடி. அவனது உறங்கும் நேரம் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் முகத்திலும் செயல்களிலும் எந்த கலக்கமும் இல்லை, என்ன நடந்தாலும் சமாளிப்பேன் எனும் இறுமாப்பு மட்டும் சற்றும் குறையவில்லை.

மலருக்கு வளைகாப்புக்கு நாள் குறித்தாகி விட்டது. பிரச்சனை என்னவென்றால் அந்த நாள்தான் இலவச மருத்துவமனை, ட்ரஸ்ட் ஆகியவற்றை ஆய்வு செய்ய கமிட்டி வருகிறது. வளைகாப்பு வளர்பிறை முகூர்த்த நாளில் செய்ய வேண்டும் என பார்த்து ஆஸ்தான ஜோதிடரிடம் கேட்டுஅரசியால் குறிக்கப் பட்ட நாள்.

குறித்த நாளை மாற்ற வேண்டாம் என சொல்லி விட்டான் பிரவாகன்.

மலரின் புண்ணியத்தால் இலவச பிரிவு இப்போது தொண்ணூறு சதவீதம் நேர்மையாக செயல் படுகிறது. மிச்சமிருந்த பத்து சதவீத குளறுபடிகளை கூட அவனது ஆடிட்டர் மற்றும் வக்கீல் குழுவோடு இணைந்து சரி செய்து கொண்டிருந்தான் பிரவாகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement