Advertisement

பேரன்பு பிரவாகம் -35

அத்தியாயம் -35

“ரிலேட்டிவ்ங்கிறதால தப்பான ஆளுக்கு பெரிய பொறுப்ப கொடுத்து உட்கார வைப்பீங்களா?” பிரவாகனிடம் தன் அதிருப்தியை வெளியிட்டான் விஷ்ணு.

“நீங்க சரியான ஆளுதானே? நீங்க வாங்க” என்றான் பிரவா.

“இன்ட்ரெஸ்ட் இல்லைனு முன்னாடியே சொன்னேன். மலரை பார்த்துக்கோங்க, நான் வரேன்” என சொல்லி கிளம்பி விட்டான் விஷ்ணு.

மலர் சோர்வாக இருக்க, வீட்டுக்கு செல்கிறாயா எனக் கேட்டான். மறுத்து விட்டவள் அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள்.

“என்ன செய்ய சொல்ற? ரிலேட்டிவ்ஸ் எல்லாம் காலை சுத்தின பாம்பு, அது பாம்புன்னு எனக்கு புரிஞ்சாலும் எல்லாருக்கும் புரிய வைக்காம விலக்கி விட முடியாது” என்றான்.

“இன்னும் சரத்துக்கு சப்போர்ட் பண்றதா இருக்கீங்களா? என்னென்ன பேசினார் தெரியுமா? எதையும் என் வாயால சொல்ல விரும்பல” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதோ ஏதோ உளறினான் சரத்.

“அவன் வாய்லேயே நாலு போட்டு இழுத்திட்டு போங்க இங்கேருந்து” பிரவா கோவமாக சொல்ல காப்பாளர்கள் செயல் படுத்தினார்கள்.

“இந்தாள் இங்க சூப்பர்வைஸ் பண்ணுவாரா?” கோவமாக கேட்டாள் மலர்.

“என்ன செய்யணும் இப்போ?”

“நியாயமா டிஸ்மிஸ் பண்ணனும்”

“செஞ்சிடலாம்” சாதாரணமாக சொன்னவனை சந்தேகமாக பார்த்தாள்.

“சரத் வைஃப் வந்து அழுதாங்கன்னு சொல்லி திரும்ப நீ இவனை சேர்த்துக்க சொல்லாம இருந்தா சரிதான்” என்றவன், “தமன்…” என அழைத்தான்.

“இனிமே இப்படி நீங்க வேலைய விட்டு அனுப்புறவங்களையும் அவங்க ஃபேமிலி மெம்பர்ஸும் மேடத்தை மீட் பண்ணக் கூடாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டீங்களே சார், நம்ம ஆளுங்க கவனிச்சுப்பாங்க சார்” என்றான் தமன்.

கணவனை முறைக்க முயன்ற மலர் தோற்று எழுந்த சிரிப்பை அடக்க, “உங்களுக்கு நோ சொல்ல முடியலையாம் மேடம், அதான் இந்த ஏற்பாடு” என்றான் தமன்.

“அத இவகிட்டேயே சொல்வியா? காமன் சென்ஸ் குறைஞ்சிட்டே வருதா தமன் உனக்கு?” எனக் கேட்டான் பிரவா.

“நீங்க ரெண்டு பேருமே ரொமன்ஸ் பார்ட்ல வீக்கா இருக்கீங்க, அதான் நான் உங்க எல்லா செயல்களையும் டைஸெக்ட் (dissect) பண்ணாத குறையா பண்ணி விளக்குறேன்” என தமன் சொல்ல, அவன் முதுகில் செல்லமாக அடி வைத்தான் பிரவா.

“எல்லாம் சரி பண்ணிட்டு வரும் போது டாக்டர் கிருஷ்ணா சார் அக்கவுண்ட்ஸ் பக்கம் போய் உங்களுக்கு எதிரா என்ன செய்ய போறார்? அவரை சூப்பரின்டெண்ட்டண்ட் ஆக்குங்கன்னு நான் சொல்றதை கன்சிடர் பண்ணக்கூடாதாங்க?” என்ற மனைவியை பார்த்துக் கொண்டே, “தமன்…” என்றான் பிரவா.

“மேடம் சொல்றதை செய்யணும் அதுதானுங்களே ஸார்?”

“அதேதான்…” மலரை பார்த்துக் கொண்டே பதில் சொன்ன பிரவா, ஒரு பார்வை மூலம் அவளுக்கு கவனம் சொல்லி சிறு தலையாட்டல் மூலமாக கிளம்புவதாக சொல்லி அங்கிருந்து சென்று விட்டான்.

“பார்த்தீங்களா மேடம்? உங்க கடைக்கண் பார்வைக்கே பம்பரம் சுழட்டுற மாதிரி எல்லாத்தையும் மாத்தி சுத்துறார். எங்க பாஸ் பாஸ்தான்” என்றான் தமன்.

“தமன்… கல்யாணம் ஏன் நடந்ததுங்கிற வரை உங்களுக்கு தெரியும். சும்மா முட்டு கொடுக்க கூடாது உங்க பாஸுக்கு” என்றாள் மலர்.

“சாஞ்சு நிக்கிறவங்களுக்குத்தான் முட்டு கொடுக்கணும் மேடம். எங்க எம் டி எப்பவும் ஸ்டெடி. உங்க கல்யாணத்துக்கான காரணம் இடம்னுதான் எல்லாரும் நினைக்குறீங்க, ஆனா உண்மையான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும்” என்றான்.

“அடுத்து என்ன அணு குண்டு தமன்? இன்னும் எதை மறைக்கிறீங்க என்கிட்டருந்து?” பதறி விட்டாள் மலர்.

“கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த ஸாரோட லவ் இன்னும் உங்களுக்கு தெரியாதே மேடம், அதை சொன்னேன்”

“லவ்வா? யாரை லவ் பண்ணினார்? காலேஜ் படிக்கிறப்பவா? என்கிட்ட சொன்னதில்லையே அவர்”

 “தப்பு தப்பாவே நினைக்குறீங்க ஸாரை. அவரோட பிஸி ஷெட்யூல் என்னன்னு என்னை விட யாருக்கும் தெரிய போறதில்லை. அப்படி இருக்கிறப்ப டைம் ஒதுக்கி ஒரு பொண்ணை மட்டும் சீண்டிகிட்டே இருந்தார் எங்க எம் டி. அந்த பொண்ணும் விடாம இவரை சீண்ட இவரும் முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட்ஸ் எல்லாத்தையும் ஹோல்டுல வச்சிட்டு அவங்க இருக்கிற இடத்துக்கு வந்து நிப்பாரு” என்றான்.

மலர் விழிகளை சுருக்கிக் கொண்டு அவனை பார்க்க, “அந்த பொண்ணு யாருன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லீங்களே மேடம்” என்றான்.

“விடுங்க தமன், இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி கற்பனை கதை சொல்ல வேணாம். அவர் சொல்லிட்டு போன வேலைய பாருங்க” என்றாள்.

“உங்கள விட அதிக நேரம் நான்தான் அவரோட இருக்கேன் மேம், அவருக்குள்ள வர்ற சின்ன சேஞ்ச் கூட என் கவனத்திலேருந்து தப்பிக்காது. உங்க மேல கோவம், ஆத்திரம், உங்களை பணிய வைக்கிற பழி உணர்ச்சி இப்படித்தான் மேலோட்டமா தெரியும், ஸார் கூட அப்படி நினைச்சிருக்கலாம். அவர் செஞ்ச எல்லாமே அத்தை பொண்ணுகிட்ட மாமா பையன் செய்ற சீண்டல் மேம்” என்றான்.

“தமன்!” கண்டனமாக அலறினாள் மலர்.

 “இல்லீங்களா மேடம்? ஐசொலேஷன் வார்டுல உங்களுக்கு டியூட்டி கொடுக்க வச்சவர் சம்பந்தமே இல்லாம புதுசா கட்டுற நெகடிவ் பிரஷர் வார்டு பார்க்க வர்றேன்னு வந்து நின்னார். நிஜமான காரணம் உங்களை பார்க்கிறதுதான்” என்றான்.

“நம்பிட்டேன்” என்றாள்.

“நம்புங்க மேம், உங்க வேஸ்ட் மேனேஜ்மெண்ட் கிளாஸ் பார்க்கிற அளவுக்கெல்லாம் அவர்கிட்ட டைம் கிடையவே கிடையாது. அப்படி இருந்தும் உங்க கிளாஸ்ல மணிக்கணக்கா உட்கார்ந்திருந்தார்”

“ஆமாம், என்னை மயக்கம் போட்டு விழ வச்சது எல்லாம் அத்தை பொண்ணு மாமா பையன் விளையாட்டுத்தான்…” எரிச்சலாக சொன்னாள்.

“நீங்க அவ்ளோ வீக்கா இருப்பீங்கன்னு எங்க ஸாருக்கு எப்படி மேடம் தெரியும்?”

“தெரியாதுதான் தமன். இந்த பேச்ச இத்தோட ஸ்டாப் பண்றீங்களா?”

“முடியாது மேம், எங்க பாஸ் மனசை உங்களுக்கு புரிய வைக்காம நான் ஓய மாட்டேன். இந்த இட பிரச்சனை எல்லாம் வரலைனா மனப் பூர்வமா ஆசையாவே உங்க முகத்தை தோள்ல இல்ல மேடம்… நெஞ்சுல டாட்டூ போட்ருந்திருப்பார். பட் விதி சதி பண்ணி ஒரு லவ் மேரேஜை மிரட்டல் மேரேஜா மாத்திடுச்சு” என்றான்.

“நிஜமா அடி வாங்க போறீங்க தமன். விட்டா உங்க எம் டி லைலாவோட மஜ்னு, அமராவதியோட அம்பிகாபதின்னு எல்லாம் கலர் கலரா ரீல் சுத்துவீங்க” என்றாள்.

“லவ் ஃபெயிலியர் ஸ்டோரி எல்லாம் பேசாதீங்க மேடம். எங்க பாஸ் எத தொட்டாலும் வெற்றிதான். கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க மேல எங்க ஸாருக்கு ஒரு இது இருந்தது மேடம். அவரே புரிஞ்சுக்கல, அப்புறம் எப்படி உங்களுக்கு புரிய வைப்பார்? உங்க கூடத்தான் கல்யாணம்ங்கிற அவ்ளோ பெரிய டெஸிஸனை அவ்ளோ ஷார்ட் பீரியட்ல வெறும் இடத்துக்காகத்தான் எடுத்தார்னா எங்கேயோ இடிக்கல மேடம். என் பாஸ் அன்பு மலரோட பிரகாவன் மேடம்” என்றான்.

“ஷ்… முடியலை தமன்!” என்ற மலரோ வெட்கத்தை மறைக்க படாத பாடு பட்டாள்.

“ஸார் செய்ற எல்லாம் உங்க பார்வைக்கு தப்பா தெரியலாம். இவ்ளோ பெரிய நிர்வாகத்தை திறம் பட நடத்தணும்னா சாமம், தானம், பேதம், தண்டம் இது நாலுல ஒரு வழிய உபயோகிச்சுதான் ஆகணும் மேடம். நம்ம ஸாரும் அதைத்தான் செய்றார். பொறுமையா எடுத்து சொல்வார், இல்லயா பணம் கொடுத்து சாதிக்க பார்ப்பார், அப்படியும் இல்லையா மிரட்டல், அதுக்கும் படியலையா அகிம்சைக்கு எதிரான வழி. ஹீ இஸ் அன் எம்பெரர் மேடம்”

“ஆனா அவர் மெத்தட் எல்லாத்தையும் விட்டுட்டு உங்களை கல்யாணம் பண்ணிக்கிற முடிவு எடுத்தார் பார்த்தீங்களா… விருப்பம் இல்லாம அவர் லைஃபை உங்களோட ஷேர் பண்ணிக்க நினைப்பாரா? நீங்க கூட இருந்தீங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா நீங்க எதிர்பார்க்கிறது போலவும் அவர் ஆகலாம். நல்லா பார்த்துக்கோங்க மேடம் எங்க ஸாரை” என நீளமாக பேசி முடித்தான்.

“உங்களை நல்லா ட்ரைன் பண்ணியிருக்கார் என் ஹஸ்பண்ட்”

சிரித்த தமன், “என் பாஸ் அவரோட பாஸா உங்களை ஆக்கிட்டார் மேடம்” என சொல்லி, பிரவாகன் உத்தரவிட்டு சென்றதை செயல் படுத்த ஆரம்பித்தான்.

அன்றைய இரவே தமன் சொன்னதை கணவனிடம் பகிர்ந்த மலர், “அப்படியா? முன்னாடியே எம்மேல உங்களுக்கு எதுவோ இருந்ததா?” எனக் கேட்டாள்.

“ம்ஹூம்? அப்படியா சொன்னான் அவன்? பட் மலர்… உறுதியா எனக்கே தெரியாத ஒரு விஷயத்தை எப்படி ஆமாம்னு சொல்றது? இருக்கலாம்” என்றான்.

“நல்லா யோசிச்சு சொல்லுங்க”

“எதுக்கு யோசிக்கணும்? பழச திரும்பி பார்க்கிறதுல எனக்கு உடன்பாடு கிடையாது. இப்ப என்னன்னு அதைத்தான் பார்க்கணும்” என சொல்லி விட்டான்.

ஆமாம் என கூறாமல் இவன் இப்படி சொல்வதில் மலருக்கு கோவம் வரவில்லை, மாறாக அவனை ரசிக்க தோன்றியது. எப்படி இருந்தால் என்ன, அவனது இப்போதைய அன்பு நிஜமானதுதானே?

“என்ன ஹனி பன் அப்படி பார்க்குறீங்க?” தன்னையே பார்த்திருந்தவளிடம் கேட்டான்.

“உங்கள போய் எனக்கு புடிச்சு போகும்னு யாராவது சொல்லியிருந்தா ஐயோ பாவம் இவருக்கு என்னாச்சோன்னு பரிதாபமா பார்த்திருப்பேன்” என அவள் சொல்ல, சத்தமாக சிரித்தான் பிரவா.

“கிண்டலா இருக்கா? இப்ப கூட இந்தாளை ஏன் எனக்கு பிடிக்குதுன்னு எம்மேலயே எனக்கு கோவம்தான். ஆனாலும் பிடிச்சிருக்குங்கிறத ஒத்துக்கிறேன்” என்றவள் அவனை மெல்ல அணைத்துக் கொண்டாள்.

அவனும் அணைத்துக் கொள்ள, அவன் தோளில் இருந்த தனது முகத்தை தடவி பார்த்தவள், “இது போட்டுக்கும் போது என்ன நினைச்சீங்க?” எனக் கேட்டாள்.

“இந்த குட்டி பட்டாசை எப்படி சமாளிச்சு என் சந்ததியை வளர்க்கிறதுன்னு நினைச்சேன்” என அவன் சொல்ல, அவன் தோளில் வலிக்கும் படி கிள்ளி வைத்தாள்.

“ஷ்… டாட்டூல கிள்ளாத” என்றான்.

“உங்க வீக்னெஸ் நான்தானே?”

“எனக்கு வீக்னெஸ்னு எதுவுமே கிடையாது மலர்” என்ற அவனது பதிலில் முகம் சுருக்கினாள்.

“நீ என்னோட ஸ்டெர்ன்த் மலர்”

“எது சொன்னாலும் ஏதாவது வாயடைக்கிற மாதிரி பதில் எங்கேருந்துதான் உங்களுக்கு வருமோ?” எனக் கேட்டவளிடம் பெருமித சிரிப்பு.

“பேசிட்டே இருக்காத, தூங்கு” என்றவன் அவளை விலக்கி படுக்க சொல்ல, படுக்காமல் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டவள், “கொஞ்ச நேரம்…” என்றாள்.

“கொஞ்ச நேரமா? படு, நைட் முழுக்க இப்படித்தான்” என்றவன் படுத்த பின் அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்து, “ஒரு வேளை முன்னாடியே லவ் இருந்திருக்குமோ? எத பார்த்துடி உன்கிட்ட மயங்கியிருப்பேன்? என்னமோ பண்ணியிருக்க நீ” என்றான்.

“ஆமாம், இவரு குணத்திலேயும் கொள்கையிலேயும் ஒரேயடியா மயங்கி போய் இவரும் என்கிட்ட மயங்க வசிய மருந்து வச்சேன்…” மலர் சிலிர்த்துக் கொள்ள, அவன் விடாமல் நக்கலாக பேச, அவர்களுக்குள் ஒரு செல்ல சண்டை ஆரம்பமானது.

*****

சரத் வேலை நீக்கம் செய்யப் பட்ட காரணத்தால் கீர்த்தியின் வீட்டில் குடும்ப அரசியல் ஆரம்பமானது. தாரிகாவை விடுத்து மலரை பிரவாகன் மணந்து கொண்ட போதே வீட்டு பெண்கள் கீர்த்தியிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்திருந்தனர். இப்போது ஒட்டு மொத்தமாக அவளை தள்ளி வைத்து விட்டனர்.

சரத்தை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ள செய்ய பிரவாகனை வற்புறுத்த வேண்டுமென கீர்த்திக்கு அழுத்தம் கொடுத்தார் சிதம்பரம்.

மருத்துவமனை விவகாரங்களில் இதுவரை தலையிட்டிராத நான் இப்போதும் தலையிட மாட்டேன் என சொல்லி விட்டாள் கீர்த்தி.

கணவனின் தம்பிக்காக இது கூட செய்ய மாட்டாயா என அவளது மாமியார் சண்டை பிடிக்க, “யாரா இருந்தாலும் குடிக்கிறவங்கள சப்போர்ட் பண்ண மாட்டேன், அதிலேயும் டாக்டர் இப்படி செய்யலாமா? இந்த விஷயத்துல என்கிட்ட சண்டை போட்டு அரை இஞ்ச் அளவுக்கு கூட யூஸ் இல்ல. எனக்காகத்தான் என் தம்பி வேலைய விட்டு அனுப்பினதோட நிறுத்தியிருக்கான். இல்லைனா என்ன செஞ்சிருப்பானோ? சரத்துக்கு வக்காலத்து வாங்காம உங்க மகனை திருத்த பாருங்க” என சொல்லி விட்டாள்.

அதன் காரணமாக கீர்த்திக்கு சொந்த வீட்டிலேயே அந்நியமாகிப் போன நிலை. அவளது மன நிலையும் பாதிக்க பட தொடங்கியது. விவரம் தெரிந்த பெண் பிள்ளைகளின் முகத்திலும் கவலையின் சாயல் தெரிய ஆரம்பித்து விட்டது. ஆனால் இப்படி என ஒரு வார்த்தை தம்பியிடம் வாய் திறக்கவில்லை கீர்த்தி.

வீடு வரும் அக்காவின் முக மாற்றத்தை கவனித்து விட்ட பிரவாகன் பிள்ளைகளிடம் பேச்சு கொடுத்து ஓரளவு விஷயத்தை கிரகித்து என்ன நடக்கிறது என கணித்து விட்டான். காலம் தாழ்த்தாமல் குகனை அழைத்து பேசினான்.

அவனது அறிவுரையின் பெயரில் சரியான நேரத்தில் தனிக் குடித்தனம் என்ற மிகச் சரியான முடிவை எடுத்து விட்டான் குகன்.

விட்டுக் கொடுத்து கூட்டு குடும்பமாகவே வாழ்வது எல்லா நேரங்களிலும் புத்திசாலித்தனமான முடிவாக இருப்பதில்லை. விலகி இருந்தால் குறைந்த பட்சம் உறவுகளுக்குள் மனக் கசப்பு இன்னும் இன்னும் வளர்வதை தவிர்த்து விடலாமே.

 குகன் தனியாக சென்றதும் அதை எதிர்பார்க்காத அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஆனால் இனி அவனது முடிவு மாறப் போவதில்லை.

*****

தர்மேந்திரன் செய்திருந்த பித்தலாட்டங்கள் அனைத்தும் பிரவாகனுக்கு தெரிய வர கொதித்து போய் விட்டான். தன்னை இந்தளவு ஒருவன் ஏமாற்றுவதா, நான் ஏமாளியா என்ற எண்ணம் அவனது ஈகோவை பலமாக சீண்டி விட்டது.

சித்தப்பாவை எங்கிருந்தும் நகர முடியாமல், தப்பியோட எதுவும் செய்து கொள்ள முடியாமல் தான் செய்து வைத்திருந்த நெருக்கடிகளை எல்லாம் தளர்த்தி கொள்ள சொல்லி விட்டான்.

தமன் புரியாமல் பார்க்க, “பெருச்சாளி இதான் சான்ஸுன்னு தப்பா ஏதாவது யோசிச்சு தப்பி ஓட நினைக்கும். பொறி வச்சு புடிச்சிடலாம். நம்ம இன்ஸ்டிடியூசன் பேர் கெடாத மாதிரி…” என சொல்லி அலட்சியமாக சிரித்தான் பிரவாகன்.

*****

விஷ்ணு பணி புரிந்த மருத்துவமனையின் இங்குள்ள கிளையில் தேவையான எண்ணிக்கையில் குழந்தை நல மருத்துவர்கள் இருந்த காரணத்தால் மீண்டும் அவனால் இங்கு பணி மாற்றம் செய்து கொள்ள முடியவில்லை. அம்மாவுக்கு உடல்நிலை சரியானதும் மீண்டும் சென்னை செல்ல வேண்டும் என்பதால் வேறு மருத்துவமனைக்கு தற்காலிகமாக பணிக்கு செல்லவும் விரும்பவில்லை.

ஆன்லைனில் மருத்துவர்களின் ஆலோசனை வழங்கும் ஏஜென்சி ஒன்றில் தற்காலிகமாக பணி புரிய வகை செய்து கொண்டான்.

தேவகியும் மகனை மருமகளோடு இருக்கும் படி எத்தனை விதங்களிலோ எடுத்து சொல்லி விட்டார். உதவிக்கு செவிலியர், வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் ஆட்கள் என இருந்தாலும் அம்மாவை விட்டு செல்ல விரும்பாத விஷ்ணு அவன் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து விட்டான்.

அன்று விடியற்காலையில் வந்து நின்ற மிருணாளிணியை விஷ்ணு எதிர்பார்த்திருக்கவில்லை.

பொள்ளாச்சியில் படப் பிடிப்பு நாளையிலிருந்து தொடங்க இருக்க கோவை வந்து விட்டாள். இந்த இரண்டு வாரங்களும் இங்கிருந்துதான் வேலைக்கு செல்ல போவதாக அவள் கூறவும் விஷ்ணுவுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன், “கெட்ட கனவென்ன… கனவே வர்றது இல்லை, ஸ்லீப்லெஸ் நைட்ஸோட போராடிட்டு இருக்கேன்” என ஏக்கமாக சொன்னான்.

அத்தையை பார்த்து விட்டு அறைக்குள் வந்தவளை இறுக அணைத்துக் கொண்டான். மிருணாவை கேட்கவே வேண்டாம். அடுத்த பல நிமிடங்கள் அவர்களுக்குள் பேச்சுக்களே இல்லை.

மிருணாவின் வயிற்றில் தலை வைத்து நேராக படுத்திருந்தவன், “ஒரு மாசத்துக்குள்ள ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிட்டேன் மிரு. என் பிராக்டீஸ் ஸ்டாப் ஆகிடுச்சு, நீ கூட இல்ல. அண்ணிங்க ரெண்டு பேரும் அம்மாவை கண்டுக்குறதே இல்லைங்கிறது ரொம்ப ஹர்ட் ஆகுது. பசங்கள பார்க்க ஆசை படுறாங்க அம்மா, ஹரி அண்ணாவோட பையன் அம்மா கால்ல கட்டெல்லாம் பார்த்து பயந்திடுவானாம், ஸ்வேதா அண்ணி காரணம் சொல்றாங்க. ஸ்ரீதர் அண்ணாவோட பசங்களுக்கு இங்க ஒரு முறை வந்திட்டு போறதுலதான் படிப்பு கெடுதாம்” மனக் கவலைகளை பகிர்ந்து கொண்டான்.

“உங்க அண்ணிங்கள பத்தி அவ்ளோ யோசிக்க வேணாம். அத்தைக்கு நாம இருக்கோம். அதனால அவங்க பேசுறதையும் அவங்கள பத்தி நீங்க பேசுறதையும் விட்ருங்க. கொஞ்ச நாள்ல திரும்ப நீங்க ஹாஸ்பிடல் போக ஆரம்பிச்சிடலாம். அப் அண்ட் டவுன்ஸ் எல்லாம் சகஜம்தானே விஷ்ணு? இந்த பொள்ளாச்சி ஷூட்டிங் பிளான் பண்ணினது இல்ல, ஆனா திடீர்னு இங்கதான்னு முடிவாகிடுச்சு. நாம பிரிஞ்சாலும் ஏதாவது ஒரு நல்லது நமக்கு நடக்குதுதானே?”

“ஒண்ணு நல்லா புரியுது மிரு. நான் லோவா ஃபீல் ஆகணும், அப்போதான் என் மிருவுக்கு மெச்சூரிட்டியா பேச வரும். ரொம்ப நல்லவ நீ” என சொல்லி சிரித்தான்.

அவனை தன் முகம் நோக்கி இழுத்துக் கொண்ட மிருணா, “எஸ், அ குட் ஹஸ்பண்ட் மேக்ஸ் அ குட் வைஃப்” அவனது கண்களை சந்தித்து ஆழமான குரலில் சொன்னாள்.

ஒட்டு மொத்தமாக மிருணாவிடம் ஈர்க்க பட்ட விஷ்ணு ஆசையாக ஆவலாக அவளது இதழ்களை நோக்கி குனிந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement