Advertisement

அத்தியாயம் -34(2)

எது சொன்னாலும் இது இப்படித்தான் என இவன் சொல்வதை கேட்டு கேட்டு அவனுக்கு பழகி விட்டாள் மலர். குணம் மாறுகிறதோ என்னவோ, சில விஷயங்களில் செய், செய்யாதே என தான் சொன்னால் கேட்கிறான்தானே? அந்த மட்டிலும் திருப்தி பட்டுக் கொள்வதுதான் என்ற நிலைக்கு வந்து விட்டாள்.

அரசியும் கீர்த்தியும் அப்போதுதான் தேவகியை பார்த்து விட்டு வெளி வந்தனர். அவர்களை தன் அறைக்கு செல்ல சொன்னவன் மிருணாவையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.

விஷ்ணுவின் திட்டத்தை பற்றி கூறிய பிரவா தங்கையின் அபிப்ராயம் கேட்க, அரசி பயந்து விட்டார். புலம்ப ஆரம்பித்தவரை கீர்த்திதான் சமாதானம் செய்தாள்.

“அவர் சொல்ற படியே நடக்கட்டும் அண்ணா” என்ற தங்கையை கூர்ந்து பார்த்தான் பிரவா. அவள் மீண்டும் ஒரு முறை அதையே சொன்னாள்.

“விஷ்ணு உன் மனசு மாற பேசினது எல்லாத்தையும் மறந்திட்டு உன் விருப்பம் என்னன்னு மட்டும் சொல்லு” என்றான்.

“அத்தை சென்னைக்கு வந்தாலும் என்னால கேர் எடுத்து பார்க்க முடியாது தானே அண்ணா? அப்புறம் அவங்கள போட்டு அலைக்கழிக்கிறதுல என்ன பிரயோஜனம்? இங்கதானே சர்ஜரி ஆனது, ஃபாலோ அப் வந்து போறதுக்கும் இங்க இருந்தாதானே வசதி? டெம்ப்ரரி செபரேஷன்தானே? சமாளிச்சுக்குவேன் அண்ணா” என சொல்லி விட்டாள்.

விடாமல் மீண்டும் மீண்டும் தங்கையிடம் பிரவா பேச இடையிட்டாள் கீர்த்தி.

“ரெண்டு பேருக்கும் சரிங்கிறப்போ நீ பேசாத. ஹஸ்பண்ட் வைஃப் நடுவுல போனா சேதாரம் உனக்குத்தான். அவளை போக விடு” என்ற கீர்த்தி, கலக்கமடைந்த அம்மாவையும் சமாதானம் செய்தாள்.

அதன் படி அடுத்த நாள் சென்னை புறப்பட்டு விட்டாள் மிருணா. சில நாட்களுக்குத்தான் மகன் தன்னுடன் இருக்க போகிறான் என நினைத்துக்கொண்ட தேவகியும் அப்போதைக்கு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

மிருணாவை விட விமான நிலையத்திற்கு பிரவா, விஷ்ணு இருவரும் வந்திருந்தனர். நாகரீகம் கருதி தள்ளி நின்றான் பிரவா. அழவில்லை என்றாலும் விஷ்ணுவின் கையை பிடித்துக்கொண்டு கலங்கிய முகமாக இருந்தாள் மிருணா.

மனைவியை தன் தோளோடு லேசாக அணைத்து ஆறுதல் சொன்ன விஷ்ணு, “இடையில முடிஞ்சா நான் வர்றேன், உனக்கும் முடிஞ்சா நீயும் வா. இப்படி போனீனா என்னால தூங்கவே முடியாது மிரு, சிரிடா” என்றான்.

“முடியாது, தூங்காதீங்க. கெட்ட கெட்ட கனவா வரட்டும். நான் உங்ககிட்ட வர மாட்டேன், என்னை நல்லா மிஸ் பண்ணுங்க” என்றாள்.

“நீ நல்லா தூங்கு, ஹரி அண்ணா, அப்பா யாரையாவது அம்மாக்கு துணை வச்சிட்டு முடிஞ்சப்ப நான் வர்றேன். என்னை நீ மிஸ் பண்ண விட மாட்டேன்” என்றான்.

மிருணா அழுதே விட, நாசூக்காக அவளது கண்களை துடைத்து விட்டவன், “மழலை டாக்டரோட வைஃப் மழலையாகிட்டாங்களா? பீ ஸ்ட்ராங்” என்றான்.

மேலும் அவன் செய்த சமாதானங்களில் சில நிமிடங்களில் தெளிந்தவளாக சிரித்த முகத்தோடு நிமிர்ந்தவள் அண்ணனை அழைத்தாள். பிரவா அவளருகில் வரவும் அவனது தோளோடு சலுகையாக சாய்ந்து விலகியவள், “அத்தைய பார்த்துக்க ண்ணா” என்றாள்.

“உன் மாமியாரோட சேர்த்து உன் ஹஸ்பண்ட்டும் இனிமே என் பொறுப்பு” என பிரவா கிண்டலாக சொல்ல, இடுப்பில் கை வைத்து முறைத்தான் விஷ்ணு.

“சின்ன மாப்பிள்ளைக்கு ஹார்லிக்ஸ் கலந்து தர அத்தையால முடியாதுல்ல… அரை லிட்டர் சூடான பசும் பால்ல ஹார்லிக்ஸ் கலந்து எவரி நைட் விஷ்ணுவுக்கு கொடுத்து விடுறேன்” என்றான் பிரவா.

“அண்ணா… அவர் சீரியஸா எடுத்துப்பார், சும்மா இரு” என்றாள் மிருணா.

“விடு மிரு, இந்த ஓவர் சேட்டைக்குத்தான் என் தங்கை இவரை நீல் டவுன் போட வைக்கிறா, இனிமே ரூம் விட்டு வெளில நிறுத்தி வைப்பா” என்றான் விஷ்ணு.

“என்னதான் பொண்டாட்டி துரத்தினாலும் கதவ உடைச்சாவது உள்ள நுழையற ஆளு நான். உங்கள மாதிரி வைஃப ஐநூறு கிலோ மீட்டர் தூரத்துல விட்டுட்டு தள்ளி வந்து இருக்கிறவன் இல்லை” என்றான் பிரவா.

விஷ்ணு பதில் சொல்லப் போக, அவன் கையை பிடித்த மிருணா, “ப்ளீஸ் ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க, ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது எனக்கு. ஃப்ரெண்ட்ஸுப்பும் வேணாம் எனிமிட்டியும் வேணாம். ஹெல்தியா ஒரு ரிலேஷன்ஷிப் மெயின்டெயின் பண்ணக்கூடாதா?” எனக் கேட்டாள்.

விஷ்ணுவும் பிரவாகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் இணக்கமாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அந்த பார்வையில் இல்லை. சோர்வாக நெடிய மூச்சு விட்ட மிருணா கிளம்பி விட்டாள்.

*****

மகப்பேறு மருத்துவர் தனலக்ஷ்மியின் அறையில் இருந்தனர் மலரும் பிரவாகனும். மலருக்கு ஸ்கேன் செய்யப் பட்டது. குழந்தைகளின் இதயத் துடிப்பை இருவரும் கேட்டனர். ஆலோசனை முடிந்து வெளி வரும் போது பிரவாகனின் காதில் இன்னும் அந்த துடிப்பு கேட்டுக் கொண்டிருப்பது போலவே இருந்தது.

“எவ்ளோ ஒண்டர்ஃபுல் ஃபீல் மலர்? குட்டி குட்டி உருவத்துல குட்டி குட்டி இதயம். அதுல எவ்ளோ கியூட் லப் டப்! பசங்க நம்மகிட்ட பேசுற மாதிரியே இல்ல?” எனக் கேட்டான்.

மலருக்கும் தாயாக இது இனிமைதான் என்றாலும் இவன் அளவுக்கு இல்லை.

“அப்படியா என்ன பேசினாங்க?” எனக் கேட்டாள்.

“என்ன டோன்ல கேட்குற நீ? இன்ட்ரெஸ்ட்டே இல்லாம… போ, உன்கிட்ட சொல்றதுக்கு இல்லை, அது எங்களுக்குள்ள” என்றவன் அனிச்சையாக அவளது வயிற்றை வருட போக, “ம்ம்ம்…” அதட்டலாக உருமி, பொது இடம் என்பதை கண்களால் சுட்டிக் காண்பித்தாள்.

லேசாக அசடு வழிய சிரித்தவன், “ஆம் அவுட் ஆஃப் கண்ட்ரோல்” என்றான்.

“எப்பதான் கண்ட்ரோல்ல இருந்திருக்கீங்க? எல்லாத்துக்கும் ஒரு ரீசன் சொல்லி யார் மனசையும் மாத்திடுவீங்க” என அவள் சொல்ல, அவன் மெலிதாக நகைத்தான்.

“என் மச்சான் இங்கேயே படிக்க போறத பத்தி சொல்றியா?” என அவன் கேட்க அவள் பெரு மூச்செறிந்தாள்.

ஆமாம்… பரத் இங்குதான் படிக்க போகிறான். சென்னை கல்லூரியில் பணம் செலுத்தி சீட் உறுதி செய்து விட்டனர்தான். அகிலாவின் கணவன் அவர்களின் பங்கை அடைந்து கொள்ள, பரத்திற்கும் ஒன்றும் செய்யாமல் விட்டால் சரியல்ல என செல்வத்திடம் பேசினான். அவர் எளிதாக ஒத்துக் கொள்ள வில்லை.

“ஃப்ரீ பிளாக் ட்ரஸ்ட்டுக்கு பணம் போகுதுன்னாலும் அங்க நாங்கதான் கவனிக்கிறோம். பார்க்கிறவங்களுக்கு மலருக்கு செஞ்சதா தோன்றது நார்மல். அத்தைய நினைச்சு பாருங்க, பெருசா என்ன ஆசை படுறாங்க? அவங்க பையன் வீட்ல இருந்து படிக்கணும் அவ்ளோதானே? இடத்தை தானமா கொடுத்த ஜமீன்தாரோட கொள்ளு பேரனுக்கு இங்க படிக்க உரிமை இருக்கு, இங்கதான் படிக்கணும் அவன்” என உறுதியாக சொன்னான்.

விமலாவின் மன வருத்தம் உறுத்த, மாப்பிள்ளையும் வற்புறுத்த சம்மதித்து விட்டார் செல்வம். சென்னை கல்லூரியில் பணம் செலுத்திய விவகாரம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி விட்டான் பிரவாகன்.

இங்கு கட்டணம் செலுத்தியே பரத் பயிலட்டும் என செல்வம் சொல்லி விட மறுத்து ஒன்றும் சொல்ல வில்லை பிரவா, ஆனால் அந்த பணத்தை அவன் எடுத்துக் கொள்ள வில்லை. பரத் பெயரிலேயே போட்டு வைத்து விட்டான்.

இந்த முறையும் எல்லாம் முடிந்த பின்னர்தான் மலருக்கு செய்தி தெரிய வந்தது. அதைக் கொண்டு அவர்களுக்குள் சண்டை சமாதானம் என சென்றது தனிக் கதை.

 மலர் இலவச பிரிவு சென்று விட, அவனும் அவனது பணிகளை பார்க்க சென்று விட்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம் பிரவாகன் முன் பதற்றத்தோடு வந்து நின்றான் தமன். பிரவா புருவங்கள் உயர்த்தி என்ன என கேட்க, “ஃப்ரீ பிளாக்ல மேடமுக்கும் சரத்துக்கும் சண்டை” என்றான்.

“வாட்!” அதிர்ந்து எழுந்தான் பிரவாகன்.

“மேடம் ஸேஃபா இருக்காங்க சார், விஷ்ணு சார் மேடம் பார்க்க போயிருப்பாங்க போல. அவரும் கூடதான் இருந்திருக்கார். அது… விஷ்ணு சார் சரத் சாரை அறைஞ்சிட்டார்” என்றான்.

இலவச பிரிவுக்கு செல்ல விரைந்து கொண்டே தமனை முறைத்தவன், “பிட் பிட்டா ஷாக் கொடுக்கிறியா? ஃபுல்லா சொல்லு மேன்” என சீறினான்.

“சரத் சார் குடிச்சிட்டு வந்திருக்கார், அந்த ஸ்மெல் ஒத்துக்காம மேடம் வாமிட் பண்ணிட்டாங்க” என தமன் சொல்ல, ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்து சரத்தை திட்டிய பிரவாகனின் பற்கள் ஆத்திரத்தில் நெறி பட்டன.

தேவகி அன்று டிஸ்சார்ஜ் செய்ய படுகிறார். வீடு சென்று விட்டால் மலரை பார்க்க எப்போது முடியுமோ என நினைத்த விஷ்ணு ஒரு முறை அவளை பார்த்து வர எண்ணி சென்றிருந்தான்.

 முன்னர் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்ததால் மருத்துவமனை வரும் நேரங்களில் மது அருந்த மாட்டான் சரத். சமீப காலமாக மேற்பார்வையிடும் பணி மட்டும்தான்.

உயரிய பொறுப்பு என்பதால் தலைக்கனம் கூடிப் போய் விட்டது. தன்னை கேள்வி கேட்க யாருமில்லை என்கிற நினைப்பும் அலட்சியமும் சேர்ந்து கொண்டது. சில நாட்களாக அளவாக மது அருந்தி விட்டு வருபவன் இன்று அளவுக்கு மீறி மது அருந்தியிருந்தான்.

 டி எம் ஓ அறையில் தன்னை காண வந்திருந்த விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தாள் மலர். அங்கு வந்த சரத்திற்கு போதையின் காரணமாக விஷ்ணுவை யாரென தெரியவில்லை. தாரிகாவின் இடத்தை பிடித்துக்கொண்டதாக மலர் மீதும் அவனுக்கு காழ்ப்புணர்ச்சி உண்டு.

தன்னிலை இழந்திருந்த சரத் அவனாக ஒரு இருக்கையை இழுத்து போட்டு மலரின் அருகில் அமர்ந்து கொண்டான். பிரவாகன் நியமித்திருந்த மலரின் காப்பாளர்கள் எல்லாம் அறைக்கு வெளியில்தான் இருப்பார்கள். அது மலரின் கட்டளை.

வேலை நேரத்தில் யாருடன் கதை அடித்துக் கொண்டிருக்கிறாய், இவனுடன் கடலை போட்டுக் கொண்டிருப்பது உன் கணவனுக்கு தெரியுமா என்றெல்லாம் அநாகரீகமாக கேட்டான் சரத்.

சரத் போதையில் இருக்கிறான் என்பது மற்ற இருவருக்கும் தெரிந்து போனது. குடித்து வந்ததற்காக அவனை கண்டித்தாள் மலர். அவன் சம்பந்தமே இல்லாமல் வில்லங்கமாக பதில் பேச மதுவின் நெடியில் மலருக்கு வயிற்றை பிரட்டியது. பார்த்திருந்த விஷ்ணு அவனை அப்புற படுத்த பார்க்க அருவருக்க தக்க வகையில் இன்னும் பேசினான் சரத்.

பொறுமை இழந்த விஷ்ணு சரத்தின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை.

பிரவாகனும் தமனும் இலவச பிரிவுக்கு வந்த போது காப்பாளர்களின் பிடியில் இருந்தான் சரத். அறையின் உள்ளே மலர் வாந்தி செய்ததை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்க, அறைக்கு வெளியில் தலையை கையால் தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தாள் மலர்.

ஒரு கையில் தண்ணீர் பாட்டிலுடன் மலரின் பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்ணு இன்னொரு கையால் அவளது கையின் மணிக்கட்டு பகுதியை அழுந்த பிடித்துக் கொண்டிருந்தான்.

பிரவாகனை கண்டதும் காப்பாளர்களின் பிடியிலிருந்த சரத், “யார் டா அவன் என்னை அடிச்சது? உன் அக்காவை வீட்ட விட்டு அனுப்புறேன். என் அண்ணனுக்கு வேற கலயாணம் செய்றேன்” என குழறலாக சொன்னான்.

ஏற்கனவே கோவத்தில் இருந்தாலும் அக்கா கணவனின் தம்பி என்பதால் நிதானமாக கையாள வேண்டும் எனதான் ஒரு ஓரம் எண்ணிக் கொண்டிருந்தான் பிரவாகன். இப்போது இப்படி இவன் பேசி வைக்கவும் கொதிநீரில் வைக்க பெற்ற தெர்மாமீட்டர் போலானான்.

விஷ்ணு வீங்க வைக்காமல் விட்டு வைத்திருந்த சரத்தின் மறு கன்னம் பிரவாகன் கொடுத்த வன்மையான அடியில் சர் என வீங்க ஆரம்பித்திருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement