Advertisement

பேரன்பு பிரவாகம் -34

அத்தியாயம் -34(1)

விமலின் பெற்றோர் பேராசை கொண்டவர்கள்தான். திருமணத்தின் போதே எக்கசக்கமாக கேட்டு வாங்கியிருந்தனர். இப்போது இடம் பற்றி தெரிய வரவும் அகிலாவுக்கு ஒன்றுமே செய்யாமல் சின்ன மாப்பிள்ளைக்கு கொடுத்து விட்டார் சம்பந்தி என குற்றம் சொல்ல விமலும் வேடிக்கை பார்த்தான்.

தானமாக கொடுத்த இடத்தில் இப்போது ஏதோ பத்திர சிக்கல் என சரி செய்திருக்கிறார்கள், என் தங்கையின் கணவரும் அதற்குரிய பணத்தை இலவச மருத்துவமனைக்கு வழங்கி விட்டார் என அகிலா விளக்கம் கொடுத்தும் ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

ஏற்கா விட்டால் போங்கள், ஒரு நயா பைசா என் அப்பா தர மாட்டார் என சொல்லி விட்டாள் அகிலா.

விமலின் பெற்றோர் அவனது பையனிடம் நயமாக பேசி பிரவாகனிடமிருந்து பெரும் தொகையை கறக்க பாடம் எடுக்க, அவனும் மனைவியிடம் பேச ஒரு கட்டத்தில் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஆகி விட்டது.

கோவம் கொண்ட அகிலா குழந்தையோடு பிறந்த வீடு வந்து விட்டாள். கைப்பேசி வாயிலாக சம்பந்தியிடம் செல்வம் நியாயம் கேட்க, அகிலாவுக்கு உரிய பங்கு கொடுக்கா விட்டால் உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள் என சொல்லி விட்டார் விமலின் அப்பா.

ஏதாவது பணம் தேற்றலாம் என விமல் நப்பாசை கொண்டானே தவிர அகிலாவை அனுப்பும் எண்ணம் கிடையாது. அப்பா பேசியது பிடிக்கா விட்டாலும் அவர்களை எதிர்த்தும் பேச முடியாமல் இருந்தவன் மனைவி பிரிந்து சென்று விடுவாளோ என பயம் கொண்டு கோவைக்கு விரைந்தான்.

விமான பயணம் மூலம் கோவை வந்தடைந்த விமல் மாமனார் வீடு வர, பிரவாகன் மலர் இருவரும் அங்குதான் இருந்தனர்.

விமலை தன் வழியில் பிரவாகன் சரி செய்ய நினைக்க, எடுத்து சொல்லி புரிய வைப்பேன் என சொல்லியிருந்தாள் மலர்.

கணவனை முறைத்து விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் அகிலா.

இது தவறு, இப்படி செய்யக் கூடாது என எடுத்து சொன்னாள் மலர். செல்வமும் மூதாதை கொடுத்த தானத்திற்கு இப்போது பணம் பெற்றால் பாவம் என எடுத்து சொன்னார்.

“அந்த இடத்தை மலர் வீட்டுக்காரர் அடைஞ்சுகிட்டார்தானே? என் அப்பாம்மா பணத்துக்கு ஆசை படல. நீங்க உங்க ரெண்டு மகளையும் சமமா நினைக்காம பார பட்சம் காட்டுறதா சொல்றாங்க, அதுவும் நியாயம்தானே? நான் அகிலாவுக்குத்தான் நியாயம் கேட்கிறேன்” என்றான்.

பிரவாகன் நமட்டு சிரிப்போடு மலரை பார்க்க, விமலை கோவமாக பார்த்தவள், “அவ்ளோ நியாயவாதியா நீங்க? அப்போ அகிலாவை இங்க வீட்டோட வச்சுக்கோங்கன்னு எங்கப்பாகிட்ட சொன்ன உங்கப்பாகிட்ட போய் நியாயம் கேளுங்க மாமா” என்றாள்.

“மெயின் பிரச்சனைய விட்டுட்டு எங்கப்பாவை ஏன் இழுக்குற மலர். உனக்கு இடம் கொடுத்த மாமா அகிலாவுக்கு ஒண்ணும் செய்யலையே” என்றான் விமல்.

 “நல்லா கேட்டுக்கோங்க மாமா, அந்த இடத்துக்கு உண்டான பணம் ட்ரஸ்ட்டுக்கு கொடுத்தாச்சு. நீங்க நம்பலைனா ஆதாரம் காட்டுறேன் நான்” என்றாள் மலர்.

“அப்படி பணம் போடுறாப்ல போட்டு பின்னாடி பொய் கணக்குல நீங்களே எடுக்கிறது எல்லாம் நடக்கிறதுதானே மலர்?” என விமல் கேட்க, மலர் பதில் சொல்லப் போக, அவளை தடுத்த பிரவாகன், “என்ன எதிர்பார்க்குறீங்க நீங்க?” எனக் கேட்டான்.

“மலருக்கு கொடுத்ததுல சரி சமமா எல்லாம் பங்கு கேட்கல. எங்களுக்கு சொந்த வீடுன்னாலும் அபார்ட்மெண்ட் ஃபிளாட். தனி பங்களா வாங்கணுங்கிறது எங்க கனவு” என்றான் விமல்.

சில கோடிகள் பெறுமானம் உள்ள சொகுசு பங்களா வாங்கி தருவதாக சொன்ன பிரவாகன், “மலரோட அக்கா பேர்லதான் சொத்து இருக்கும்” என்றான்.

யார் பெயரில் இருந்தால் என்ன என நினைத்த விமல் நன்றி சொல்ல, வேகமாக வெளியில் வந்த அகிலா தன் கணவனை அருவருப்பாக பார்த்துக் கொண்டே இதற்கு ஆட்சேபனை தெரிவித்தாள். இவருக்கும் இவர் குடும்பத்துக்கும் தான் ஒரு பொருட்டே அல்ல, இனியும் இவருடன் சேர்ந்து வாழ பிரிய படவில்லை என்றாள் அகிலா.

அவளது பெற்றோர் அவளை சமாதானம் செய்தனர். பிரவாகன் சலுகை சொல்லாமல் இருந்திருந்தால் விமல் இறங்கி வந்திருப்பானோ என்னவோ, இப்போது அவன் பக்கம் நியாயம் என்பது போலவே பேசினான்.

பெரிய மாப்பிள்ளையின் செயலில் செல்வத்துக்கு மிகுந்த அதிருப்தி. அதற்கென மகளை திருமண வாழ்விலிருந்து விலக்கு பெற செய்வதும் ஏற்புடையதாக இல்லை. மலர் கோவமாக பேச, விமலா அவளை அடக்கி பெரிய மகளோடு அறைக்குள் அனுப்பி வைத்தார்.

“பெரிய மாப்ள கேட்கிறதுக்கு உண்டான பணத்த ட்ரஸ்ட்டுக்கு நீங்க கொடுத்த பணத்திலேருந்து எடுத்து செய்ய முடியுங்களா மாப்ள?” தயங்கி தயங்கித்தான் கேட்டார் விமலா.

“நான் பார்த்துக்கிறேன் அத்தை” என சொல்லி விட்டான் பிரவாகன்.

எங்கே அகிலா கோவம் குறையாமல் இங்கேயே இருந்து விடுவாளோ என பயந்த விமல, இப்போதே பேருந்தில் சென்னை கிளம்புகிறோம் என்றான். தன் மகள் ஒரு வாரம் இருந்து விட்டு வரட்டும் என சொல்லி விட்டார் செல்வம்.

பிரவாகன் சென்ற பிறகு தான் இங்கு இருந்தால் மனைவியையும் அவளது தங்கையையும் தன்னால் சமாளிக்க முடியாது என்றெண்ணி விமல் மட்டும் அங்கிருந்து கிளம்பினான்.

வழியனுப்பி வைத்து விட்டு வருவதாக சொல்லி விமலின் தோள் மீது கை போட்டுக் கொண்டு அவனுடனே வீட்டை விட்டு வெளியே வந்தான் பிரவாகன்.

“நீங்க ஒருத்தர்தான் நியாயவாதியா இருக்கீங்க சகல” என முகஸ்துதி செய்தான் விமல்.

“ஆமாம், என் நியாயத்துக்கும் லிமிட் இருக்கு. இன்னொரு முறை மலரோட அக்காவுக்கு ஏதாவது பிரச்சனைன்னு தெரிஞ்சா…” என சிரித்துக்கொண்டே சொன்ன பிரவாகன் சட்டென கடினமாக பார்த்தான்.

விமலின் முகமும் மாற, “உன் வைஃபோட ஒழுங்கா குடும்பம் பண்ண இதுதான் லாஸ்ட் சான்ஸ். இன்னொரு சான்ஸ் எல்லாம் தர மாட்டேன். உன் அப்பாம்மா இனி மலரோட அக்காகிட்ட சவுண்ட்டா ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது, சொல்லி வை. மலரோட அக்காவுக்கு எந்த பிரச்சனைனாலும் என்ன நடக்குது ஏன் நடக்குதுன்னு எதுவும் உனக்கு புரியாது. ஆனா உன்னை சுத்தி வில்லங்கமா நிறைய நடக்கும், தூக்கம் தூர ஓடி போயிடும். ஜாக்கிரதை!” என்றான் பிரவாகன்.

“என்ன இன்டைரக்டா மிரட்டுறீங்களா?” உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் சிலிர்த்துக் கொண்டான் விமல்.

“எனக்கு மிரட்டுறதை எல்லாம் இன்டைரெக்டா செஞ்சு பழக்கம் இல்லை, டைரெக்ட் மிரட்டல்தான் இது. செய்றேனா இல்லையான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கிறியா?” பிரவா கேட்ட தொனியில் விமலின் தொண்டை வறண்டு போனது.

நக்கலாக சிரித்த பிரவா, “கண்ணுல பயம் தெரியுது, ம்ம்… இந்த பயம் இப்படியே இருக்கட்டும். இப்ப போயிட்டு வாங்க சகல” என்றான்.

வெளிறிப் போன முகத்துடன் வெளியேறினான் விமல்.

அறையிலிருந்த வந்த அகிலா எதற்கு விமல் சொன்னதற்கு ஒத்துக் கொண்டீர்கள் என பெற்றோரிடம் கேட்க, அவளுக்கு ஆதரவாக மலரும் பேசினாள்.

பிரவாகன் உள்ளே வரும் போது மகள்கள் இருவருக்கும் ஒரு சேர பொதுவாக, “கெட்டவன் ஆகுற வாய்ப்பு கிடைக்காத வரை எல்லாரும் நல்லவங்கதான். அப்படி வாய்ப்பு வந்தும் ஒருத்தன் மாறாம இருக்கான்னா அவன்தான் நல்லவன். ஆனா இங்க சந்தர்ப்பவாதிங்கதான் அதிகம். பெரிய மாப்ளயும் சந்தர்ப்பவாதின்னு நிரூபிச்சிட்டார். சும்மா நீதி நேர்மைனு பேசாம உங்க வாழ்க்கைய வாழுங்க” என்றார் விமலா.

திருமண வாழ்விலிருந்து வெளியே வா என அக்காவிடம் மலரால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

இதுநாள் வரை விமலின் பெற்றோர்தான் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள், விமல் எதிர்த்து பேச மாட்டான், ஆனால் மனைவியிடம் தனிமையில் சமாதானம் செய்வான். அகிலாவே சொல்லியிருக்கிறாள். இப்போது பெரும் பணம் எனவும் விட மனம் வரவில்லை போலும். மாமாவா இப்படி என மனதிற்குள் ஆதங்க பட்டாள் மலர்.

கணவனிடமிருந்து எந்த சலுகையும் தனக்காக தன்னை சார்ந்தவர்களுக்காக இதுவரை பெற வில்லை. இப்போது அக்காவின் வாழ்க்கைக்காக கோடிக் கணக்கில் கொடுக்க தயாராகி விட்டான் பிரவா.

 ட்ரஸ்ட்டுக்கு கொடுத்த பணத்திலிருந்து எடுத்தால் கணக்கு வழக்கில் மீண்டும் குளறுபடி ஆகும், அவன் அப்படி எடுக்கவும் நினைக்க மாட்டான். அவன் முகத்தை அவளால் காண முடியவில்லை.

செல்வமும் மிகுந்த சங்கடத்தோடு பிரவாகனை பார்த்தார்.

“இதுல நீங்க வருத்த பட எதுவும் இல்ல மாமா. ஒரு வாரத்துல அண்ணிய சென்னைக்கு அனுப்பி வைங்க” என்ற பிரவாகன், மனைவியிடம் “கிளம்பலாம் மலர்” என்றான்.

வீடு வந்து சேரும் வரையில் அவள் எதுவுமே பேசவில்லை. அவளை வீட்டில் விட்டு விட்டு அவன் மீண்டும் மருத்துவ மனைக்கு திரும்புவதாகத்தான் இருந்தது. அவளின் சோர்ந்த முகம் அவனது மனதை உறுத்த அவளோடே இறங்கிக் கொண்டான்.

தோட்டத்தில் அவளை அமர வைத்தவன், “உன் அக்கா லைஃப்ல இனி எந்த பிராப்லமும் வராது மலர், இன்னும் என்ன?” எனக் கேட்டான்.

அவள் பதில் தராமல் அவனை பார்க்க, “இப்பவும் நீ என்கிட்ட உன் குடும்பத்துக்காக எதுவும் கேட்கல. உன்னை கலயாணம் பண்ணினப்பவே உன்னை சேர்ந்தவங்க என்னையும் சேர்ந்தவங்க ஆகிட்டாங்க. இது நானா செஞ்சது. டோண்ட் ஃபீல் கில்டி” என்றான்.

“இப்படி வில்லா வாங்கி தர்றேன்னு சொன்னதுக்கு அவரை மிரட்டவே செய்திருக்கலாம்” என்றாள் மலர்.

“ஓய் என்ன?” என அவன் கேட்க, “ப்ச்… மாமா இப்படி நடப்பார்னு நினைக்கவே இல்ல” என்றாள்.

“விடு. அதான் சரியாகிடுச்சே. அதுக்காக மிரட்டல் அது இதுன்னு நீ பேசலாமா? என்ன இருந்தாலும் என் சகல, மரியாதையோட நடத்திடுவோம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு நாங்களும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கனும்ல…” என்றவனை அவள் சந்தேகமாக பார்க்க அவன் நமட்டு சிரிப்பு சிரித்தான்.

“என்ன சிரிப்பு? இனி மாமா எப்படி அகிலாவை தாங்கினாலும் அக்காவால முழுசா ஏத்துகிட்டு அவரோட ஒன்றி வாழ முடியுமா? பொம்பளைங்க மனசை புரிஞ்ச புருஷன் உலகத்திலேயே கிடையாது போல” என்றாள்.

“என்ன நீ ஒட்டு மொத்தமா இப்படி சொல்ற? ஏன் நான் இல்ல?” எனக் கேட்டான்.

“யாருமே இல்ல. நீங்க விஷ்ணு அண்ணா என் அப்பா யாருமே இல்ல. நாம ரெண்டு பேருமே ஆப்போசிட் கருத்து உள்ளவங்க. என் மேல உள்ள அன்புல எனக்காக எல்லாம் செய்வீங்க, இப்போ அக்காவுக்கு செய்றது கூட எனக்காக. நானும் உங்க மேல அன்பு வச்சிருக்கேன். ஆனாலும் என் மனச நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களா? நிதானமா கம்போஸ்டா நேர்மையா இரக்கம் உள்ளவனா ஒருத்தனைத்தான் கல்யாணம் செய்யணும்னு ஆசை எனக்கு. ஆனா நீங்க?அட்லீஸ்ட் இப்போவாவது உங்களை நீங்க மாத்திக்க நினைக்குறீங்களா?” எனக் கேட்டாள்.

“நான் கூடத்தான் என் வைஃப் என்னை மட்டும் பார்த்துகிட்டு வாயே பேசாதவளா வீட்டோட இருக்கணும்னு நினைச்சேன்”

“ஆஹா இவரைதான் கட்டணும்னு நாங்க ஹங்கர் ஸ்டரைக் பண்ணி கட்டிக்கிட்டோம். உங்க ஆசைப்படி வாய் பேசாத எவளையாவது கட்டிக்க வேண்டியதுதானே?”

“யாருடி நீ… முழுசா பேசி முடிக்கிறதுக்கு முன்ன பட் பட்னு வெடிக்கிற? அது… அப்படி நினைச்சேன் ஒரு காலத்துல. அப்புறம்தான் ஒரே மாதிரி உள்ளவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா போர்னு புரிஞ்சுது. என் கூட நீ மல்லு கட்டுறதும் உன் கூட நான் மல்லு கட்டுறதும் இன்ட்ரெஸ்டிங்கா இல்ல உனக்கு? நினைச்சதெல்லாம் நடந்திட்டே இருந்தா சலிப்பு வந்திடும், கிக் இல்லாம போயிடும், க்யூட்டா யாராவது எதிர்த்து நிக்கும் போதுதான் மெஷின் மனுஷன் விலகி, நமக்குள்ள இருக்கிற உயிருள்ள மனுஷன் வெளில வருவான். தட் கீப்ஸ் அவர் லைவ்ஸ் அலைவ் (அது நம் வாழ்க்கையை உயிரோட்டமாக வைக்கிறது)” என்றான்.

“என்ன சொல்ல வர்றீங்க? என்ன சொன்னாலும் மாற மாட்டீங்க அதானே?”

“உருண்டையா இருக்கிற உலகத்த சதுரமா மாற சொல்லாத, தட்ஸ் நாட் ஃபேர் அண்ட் ஆம் ஆல்வேஸ் பெர்ஃபெக்ட்” என பிரவா சொல்ல பக் என சிரித்து விட்டாள்.

“இதே மோட்ல இரு, நான் மிருணாவை பார்க்க போகணும்” என சொல்லி எழுந்து கொண்டான்.

“பிரச்சனை எதுவும் பண்ணாதீங்க”

“மலர்! பிரச்சனைய சால்வ் பண்ண போறேன் நான்” என்றவன், “ஹஸ்பண்ட்ங்கிற ஒரே காரணத்துக்காக நான் என்ன செஞ்சாலும் தப்புங்கிறாடா இவ” என அவள் காதில் விழும் படி சொல்லிக் கொண்டே சென்று விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement