Advertisement

பேரன்பு பிரவாகம் -33

அத்தியாயம் -33(1)

“என்னை எதுக்கு அழைச்சிட்டு வந்த? மிருணா தனியா நிக்குறா? அந்த லேடி என்ன அவ்ளோ திமிரா பேசுது? பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்கை பார்க்கிற விஷ்ணுவோட அண்ணன் ஒரு இர்ரெஸ்பான்ஸிபில் ஸ்பெசிமன்” தனது அலுவலக அறையிலிருந்த பிரவாகன் எரிச்சலாக சொன்னான்.

“அண்ணியை அண்ணா பார்த்துக்குவார். அவங்க ஃபேமிலி அது, நீங்க பேசியிருக்கவே கூடாது” என்றாள் மலர்.

“ஓய் என்ன அவங்க ஃபேமிலி? மிருணா யாரு? பார்த்து பார்த்து செல்லமா நான் வளர்த்த பொண்ணு அவ, கல்யாணம் ஆகிடுச்சுன்னா என் தங்கை என் ஃபேமிலி இல்லைனு ஆகிடுவாளா? அவளை யாரும் அதிகாரம் பண்றதை பார்த்துகிட்டு நான் சும்மா நிக்கறதுன்னா அவளுக்கு அண்ணன்னு ஒரு உறவு இருக்க தேவையே இல்லை. அரகண்ட் லேடி! ஹௌ கேன் ஷீ ட்ரீட் மை பிரின்ஸஸ் லைக் தட்? மிருணா ஒண்ணும் அந்த லேடிக்கு அடிமை இல்லை. தொலைச்சி கட்டிடுறேன்!”

“கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன்” அவன் வாயில் கை வைத்து மூடினாள் மலர்.

அவன் முறைக்க, “அண்ணிக்கு ஏதும் பிரச்சனை, அண்ணாவால கூட சரி பண்ண முடியலைன்னாதான் நீங்க இன்டர்ஃபியர் ஆகணும். நீங்க சொல்ற மாதிரி தேவைக்கு முன்னாடி ஓடிப் போய் எது செஞ்சாலும் மதிப்பிருக்காது” என்றாள்.

அவள் கையை விலக்கி விட்டவன், “யாருதான் மதிக்கிறீங்க என்னை? நீ, உன் அண்ணன் எல்லாரும் எங்க இருக்கோம் யாரை பேசுறோம்னு தெரியாம இன்சல்ட் பண்றதுல சளைச்சவங்க கிடையாது. உங்களுக்கெல்லாம் டோர் மேட் மாதிரி தெரியறேன்ல? தூசு மாதிரி இதெல்லாம் தட்டி விடுறேன்னா காரணம் நீயும் மிருணாவும் எனக்கு அவ்ளோ முக்கியம்ங்கிறதாலதான். என் பொறுமை எல்லை கடந்தா…” ஒரு விரல் காட்டி எச்சரித்தான்.

“நானும் சரி அண்ணாவும் சரி இன்டென்ஷனோட உங்களை அவமான படுத்தல”

“ம்ம்… என் முதுகுக்குபின்னால கைகொட்டி சிரிக்கிறவங்க ஒவ்வொருத்தர்கிட்டயா போய் சொல்லிட்டு வா”

“உங்களால பிரச்சனை வரக்கூடாதுன்னுதானே சொல்றேன்? புரியாம ஏதேதோ பேசாதீங்க”

“அத்தனை பேர் முன்னாடி மிருணா கண் கலங்கி நிக்குறா, அவ மாமனார் கூட ஒதுங்கி போய் வேடிக்கை பார்த்தார். நானும் வேடிக்கை பார்க்கணும்னு சொல்றியா? மிருணா கலங்குறாங்கிறது போதும் நான் தலையிட. அந்த விஷ்ணு என்னடான்னா அவ்ளோ ஈஸியா எங்களை போன்னு சொல்றார். எப்படி அழ விடலாம் மிருணாவை? உன் பேச்ச கேட்டு வந்திருக்க கூடாது நான்” என்றவன் வெளியேற போனான்.

அவனை விடாமல் பிடித்துக் கொண்டவள், “சத்தியமா உங்களோட முடியலைங்க என்னால. இப்ப அங்க நீங்க போகக் கூடாது. அண்ணாவை பத்தி எனக்கு தெரியும், அண்ணிய அவர் பார்த்துக்குவார். மீறி போனீங்க…” என மிரட்டினாள்.

“என்னடி செய்வ?”

“நீங்க போகக் கூடாது!”

“என்ன… என்னை உன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்னு நினைக்கிறியா?”

“ஆமாம் அப்படியே இவர் என் இஷ்டத்துக்கு ஆடிட்டாலும்…”

“மனசாட்சியோட பேசு மலர். உன் இஷ்ட படிதான் எல்லாம் நடக்குது”

“அப்படியா? அப்ப போகாதீங்க, அமைதியா உட்காருங்க. லஞ்ச் வந்திடுச்சு. சாப்பிடுங்க” என்றாள்.

மலர் கர்ப்பம் அடைந்ததிலிருந்து மதிய உணவு நேரத்தில் தன்னிடம் வரவழைத்து விடுகிறான் பிரவா.

“அங்க மிருணா…” என இவன் ஆரம்பிக்க, “எல்லாருக்கும் கொடுத்து விட்ருப்பாங்க அத்தை, நான் கேட்கிறேன்” என்றவள் உடனே மாமியாருக்கு அழைத்து பேசி அவர்களுக்கும் உணவு சென்றிருப்பதை உறுதி செய்து கொண்டாள்.

தேவகியை பார்க்க தானும் கீர்த்தியும் வருவதாக சொன்ன அரசியிடம், மாலையில்தான் தேவகி ஆன்ட்டி கண் விழிப்பார் அப்போது வாருங்கள் என சொல்லி வைத்து விட்டாள்.

பிரவாகன் கண்களை மூடி நெற்றியை அழுத்திக் கொண்டு ஏதோ யோசனையாக அமர்ந்திருந்தான். இவள் மீண்டும் சாப்பிட அழைத்தாள்.

“பசிக்கல, நீ சாப்பிட்டு கிளம்பு” என்றான்.

“பசிக்கிறப்ப சொல்லி அனுப்புங்க” என்றவள் வெளியேற தயாராக, “சரியான இம்சை மலர் நீ. வா” என சொல்லி எழுந்து கொண்டான்.

“யாரு நான் இம்சை?”

“அப்புறம் நானா?” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான்.

“போதும், நான் ஏதாவது சொல்லி அதுக்கு பக்கம் பக்கமா விளக்கம் கொடுப்பீங்க, எனக்கு பசியில வயித்த புரட்டுது” என கூறிக் கொண்டே உள் அறைக்கு சென்று சாப்பாடு எடுத்து வைத்தாள்.

அவளை அமர வைத்து, “பசிக்க ஆரம்பிக்கும் போதே சொல்ல மாட்டியா?” கடிந்து கொண்டவன் அவனே சாப்பாடு பரிமாறினான்.

*****

கண்களை துடைத்துக் கொண்ட மிருணா கணவனிடம் செல்லாமல் ஹாலிலேயே அமர்ந்து விட்டாள்.

‘பேசாம இருக்கணும்’ என்ற ஸ்ரீதரின் எச்சரிக்கையை மீறி, “பெரிய இடத்து பொண்ணுன்னா நம்ம வீட்டுக்கு மருமகதானே? இவ அண்ணன் என்னடான்னா ஒரு பொண்ணுகிட்ட பேசுறோம்னு இல்லாம ரௌடி மாதிரி பேசுறாரு… இவளும் வேடிக்கை பார்க்கிறா?” என்றாள் தர்ஷிணி.

“என் அண்ணனை மரியாதை இல்லாம ஏதாவது பேசுனீங்க நான் சும்மா இருக்க மாட்டேன்” என்ற மிருணாவுக்கு மீண்டும் அழுகை வந்து விட்டது. தனக்காக பேசிய அண்ணனை விஷ்ணு வெளியே போக சொன்னதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“பார்த்தீங்களா எப்படி பேசுறான்னு? என்னை எதிர்த்து பேசிட்டு இவ கண்ணீர் வடிக்குறா… பார்க்கிறவங்களுக்கு நான்தான் கொடுமை காரின்னு ப்ரொஜக்ட் பண்ண பார்க்கிறா, சரியான…”

“அண்ணி!” என்ற விஷ்ணுவின் அதட்டலில் தர்ஷிணியின் பேச்சு பாதியில் நின்றது.

கணவனை பார்த்த மிருணா கோவமாக தலையை தாழ்த்திக் கொண்டாள்.

“பாரு விஷ்ணு… உன் வைஃப்…” தர்ஷிணி பேசிக் கொண்டிருக்க, “என் வைஃப்தான் அண்ணி, நீங்க அவளை கை காட்டி பேச வேணாம். ஒரு வார்த்தை கூட அவளை பத்தி அதிகப் படியா வரக்கூடாது, சொல்லிட்டேன்” என்றான்.

தர்ஷிணி கணவனிடம் முறையிட்டு சீற, கண்டு கொள்ளாத விஷ்ணு மனைவியின் அருகில் போய் அமர்ந்து அவள் கையை பிடித்துக்கொண்டான்.

அவள் தன் கையை அவனிடமிருந்து உருவிக் கொள்ள முயல, விட்டு விட்டவன் அப்பாவை பார்த்து, “அம்மா பக்கத்துல போய் உட்காருங்க ப்பா, கண் முழிக்க லேட் ஆகும்தான், சப்போஸ் முன்னாடியே விழிச்சிட்டாங்கன்னா நாம யாராவது இருக்கணும் பக்கத்துல” என்றான்.

“என் அக்கா சாப்பாடு கொடுத்து விட்ருக்காங்க, நானும் ஹரியும் சாப்பிட்டோம், நீங்களும் சாப்பிடுங்க” பொதுவாக சொன்ன கோபால் மனைவியிடம் சென்று விட்டார்.

“ச்சீ… யாருக்கு வேணும் இவங்க வீட்டு சாப்பாடு, நாம வெளில போய் சாப்பிட்டுக்கலாம்” என்றாள் தர்ஷிணி.

“டேய்… நான் நைட் வர்றேன், அம்மாவை பார்த்துக்க” என தம்பியிடம் சொன்ன ஹரி, அண்ணனை பார்த்து தலையசைத்து விட்டு புறப்பட்டு விட்டான்.

“அத்தைய இங்க சேர்த்ததே தப்பு. உங்களால மெடிக்ளைம் பண்ணிக்க முடிஞ்ச ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தா நாமளே பே பண்ணியிருக்க மாட்டோமா? இந்த மெடிக்கல் மாஃபியாவோட ஹாஸ்பிடல்லயா சேர்க்கணும்?” விடாமல் பேசினாள் தர்ஷிணி.

பொறுமை இழந்த மிருணா, ஆத்திரமாக ஏதோ பேசப் போக அவளது கையை அழுந்த பிடித்து அவளை பேச விடாமல் தடுத்து விட்டான் விஷ்ணு.

“எவ்ளோ கொழுப்பு இருந்தா என்கிட்ட எகிறி பேசுவார் இவ அண்ணன்…” இடைவிடாமல் பொறுமினாள் தர்ஷிணி.

“போதும் அண்ணி. இங்க நம்ம குடும்பம் மட்டும் இல்ல. கொஞ்சம் கூட மேனர்ஸ் கிடையாதா உங்களுக்கு? சாப்பிடணும்னு சொன்னீங்களே… போங்க” என்றவன் அண்ணனை அழுத்தமாக பார்த்தான்.

“நான் மட்டும் வந்திருக்க வேண்டியதுடா, தெரியாம ஏழரையையும் கூட இழுத்துக்கிட்டு வந்திட்டேன். அம்மா கண் தொறந்ததும் பார்த்திட்டு அழைச்சிட்டு போயிடுறேன், அதுவரை பொறுத்து போடா” என்ற ஸ்ரீதர் மனைவியின் முறைப்பை பொருள் செய்யாமல் அவளை இழுத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.

பெருமழை விட்டது போன்ற அமைதி.

“உன் அண்ணன் பேசினது தப்பில்லையா?” என மனைவியிடம் நிதான குரலில் கேட்டான் விஷ்ணு.

“உங்கண்ணிக்கு பதில்தான் சொன்னார். என்ன நடந்ததுன்னு முழுசா கேட்கணும்தானே?”

“ம்ம்… சொல்லு” என்றான்.

எல்லாம் சொல்லியவள், “இவ்ளோ மோசமா பேசுவாங்கன்னு நினைக்கல நான். அப்படியொரு ஹார்ஷ் டோன்ல பேசினாங்க. மாமா கூட கண்டுக்காம ஓரமா போயிட்டார். உங்களுக்கு ஒரு தங்கை இருந்திருந்தா வேடிக்கை பார்த்திட்டு நிப்பீங்களா? என் அண்ணன் குணத்துக்கு கொஞ்சம் பொறுமையாதான் பேசியிருக்கார். அண்ணி இருந்ததால போச்சு, இல்லைனா…” என்றாள்.

“என்ன செஞ்சிருப்பார்?” சின்ன சிரிப்புடன் கேட்டான்.

“கிண்டலா? என்ன வேணா செஞ்சிருப்பார்? அவர் செய்றது எல்லாம் நம்மால பிரிடிக்ட் பண்ண முடியாது” என்றாள்.

“அடேயப்பா! இவ்ளோ விளம்பரம் ஓட்டுவியா அவருக்கு?” பொய்யாக வியந்தான்.

“பேசாதீங்க, என்னை போன்னு சொன்னீங்க” என சொல்லி முகத்தை சின்னதாக்கினாள்.

“சாரி…”

“என் அண்ணனையும் சொன்னீங்க”

“நான் அவர்கிட்ட பேசுறேன், சாரி கேட்கிறேன்”

உடனே அப்படி சொல்வான் என எதிர்பார்க்காதவள் வியப்பாக பார்க்க, “அவரோட இடம்னாலும் ஹாஸ்பிடல்தானே இது? உள்ள பேஷண்ட், ஸ்டாஃப்ஸ் எல்லாரும் இருக்காங்க. எல்லாத்துக்கும் பதில் கொடுத்திட்டே இருக்கணுமா என்ன? அம்மா ஆபரேஷனை டிலே பண்ணினது, நாங்க தனியா பேசினது எல்லாம் வேற மைண்ட்ல ஓடிட்டு இருந்தது. அந்த நேரம் அண்ணிகிட்ட அவர் பேசுன பேச்சுல சுள்ளுன்னு கோவம் வந்திடுச்சு” என விளக்கினான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement