Advertisement

அத்தியாயம் -32(2)

தயங்கி தயங்கி, “சாரி விஷ்ணு, எனக்கு அத்தை கூடத்தான் இருக்கணும்னு தோணாம போய்டுச்சு. நீங்களும் எதுவும் சொல்லலை… சாரி” என்றாள்.

“என்ன மிருணா… நாலு வயசு பாப்பாவா நீ? பேஸிக் விஷயம் கூட உனக்கு நான் சொல்லி தரணுமா? நீ எதுவும் பேசாம கொஞ்ச நேரம் என்கிட்டேருந்து தள்ளி நில்லு, தட்ஸ் பெட்டர்” என்றான்.

இவர்கள் மெதுவாக பேசிக் கொண்டாலும் தர்ஷிணி காதை தீட்டிக் கொண்டு இவர்களைத்தான் கவனித்திருந்தாள். மிருணாவுக்கு குற்ற உணர்ச்சியிலும் விஷ்ணுவின் கோவத்திலும் அழுகை வருவது போலிருந்தது.

தர்ஷிணி அருகில் வந்து, “என்ன மிருணா ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு முடியலையா?” விஷயத்தை கறக்க முயற்சி செய்தாள். அவளின் உள் நோக்கம் புரியாமல் “அது…” என வாயை திறந்தாள் மிருணா.

“ஒண்ணுமில்ல அண்ணி, எங்க பெர்சனல். உங்களை அண்ணா கூப்பிடுறான் பாருங்க, போய் என்னன்னு கேளுங்க, போங்க” என கடினக் குரலில் விஷ்ணு சொல்ல மிருணாவும் ஓர்ப்படியிடம் வேறு எதுவும் சொல்லாமல் சுதாரித்து விட்டாள். முகத்தை சுளித்துக் கொண்டே அகன்று விட்டாள் தர்ஷிணி.

“ரொம்ப சாரி விஷ்ணு. வேணும்னு…”

“ப்ளீஸ் மிரு, அம்மா வர்ற வரை கொஞ்சம் அமைதியா இரு. இங்க இருக்க கஷ்டம்னா அதான் உன் அண்ணன் கூப்பிட்டாரே… போ அவர்கிட்ட” என்றான்.

இப்போது எதுவும் இவனிடம் பேசக்கூடாது என முடிவு செய்து அமைதியாக இருந்து கொண்டாள் மிருணா.

*****

அதிக வேலைப் பளு காரணமாக அதிகளவில் ஊழியர்கள் வேலையை விட்டு சென்றிருந்தனர், கணிசமான எண்ணிக்கையில் வேலையை விட விண்ணப்பமும் செய்திருந்தனர். அது சம்பந்தமாக நிர்வாக அதிகாரிகளுடன் பிரவாகனுக்கு கலந்துரையாடல்.

புதிய ஆட்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு ஜே சி ஐ க்காக பயிற்சி கொடுத்து தயாராக்குவது குறைந்த கால கட்டத்தில் நடக்காத காரியம், அப்படியே செய்தாலும் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளதாக நிர்வாகிகள் கூறினார்கள்.

வேலையை விட்டு செல்ல விண்ணப்பித்தவர்களிடம் கலந்து பேசி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது எனவும் மற்ற ஊழியர்களிடமும் விரிவான ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என முடிவானது.

பிரவாகனுக்கு சற்று சோர்ந்த மனநிலை. தேவகிக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதால் அவரை பார்க்க செல்ல வேண்டும் என்பதற்காக கணவனின் அறைக்கு வந்தாள் மலர். அவனது வாட்டம் கண்டு என்னவென விசாரிக்க அவனும் சொன்னான்.

“நிஜம்தானே… அவங்களுக்கு ஓவர் ஒர்க் லோட் ஆகுது. என்ன பேசி எவ்ளோ ஆஃபர்ஸ் கொடுத்தாலும் கொஞ்ச நாள்ல திரும்பவும் பிரஷர் ஹேண்டில் செய்ய முடியாம வேலைய விட்டு போகத்தான் நினைப்பாங்க” என்றாள் மலர்.

பிரவாகன் யோசனையாக, “நிதானமா யோசிச்சு சொலூஷன் என்னன்னு பாருங்க. இப்ப வாங்க ஆன்ட்டிய பார்த்திட்டு வரலாம்” என்றாள்.

தேவகி டீலக்ஸ் வார்டின் உள் அறையில் இருக்க, அவரை கவனிக்க இரண்டு பிரத்யேக செவிலியர்கள் மற்றும் இரண்டு சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர். மற்றவர்கள் ஹாலில் இருந்தனர்.

விஷ்ணுவிடம் “எல்லாம் ஓகேவா?” என விசாரித்தான் பிரவாகன்.

தனியே பேச நினைப்பது போல யார் கவனத்தையும் கவராமல் தள்ளி சென்றான் விஷ்ணு. பிரவாகனும் அவனது எண்ணம் புரிந்தவன் போல அவனுடன் சென்றான்.

தனிமை கிட்டியதும் தன் அம்மாவின் சிகிச்சையை தள்ளிப் போட்டதை சுட்டிக் காட்டி அதிருப்தி தெரிவித்தான் விஷ்ணு.

“ஓ கமான் விஷ்ணு, ஜஸ்ட் தேர்ட்டி மினிட்ஸ் டிலே ஆச்சு. மிருணா அவங்கள பார்க்கணும்னு நினைச்சா, சின்ன விஷயம்” என்றான்.

“உங்க வீட்ல யாருக்கும் முடியலைன்னா கூட இப்படித்தான் சில நிமிஷம்தானேன்னு ட்ரீட்மெண்ட் டிலே பண்ண ஒத்துப்பீங்களா? சின்ன விஷயம்தான், என் அம்மா அவ்ளோ பயந்து போயிருந்தாங்க, தேர்ட்டி மினிட்ஸ் அதிகமா கலங்கிட்டாங்கதானே? இப்படிலாம் ஏதாவது நடக்கும்னுதான் இங்க வர யோசிச்சேன் நான். நிறைய ஃபெஸிலிட்டி பண்ணி கொடுத்திருக்கீங்க, அதுக்கெல்லாம் கடமை பட்டிருக்கேன். அதுக்காக இது போல விஷயங்களை சகிச்சுக்க முடியாது” என்றான் விஷ்ணு.

“இவ்ளோ நீளமா பேசுற அளவுக்கான விஷயமே இல்லை விஷ்ணு”

“உங்களுக்கு அப்படி தெரியலாம். என் அம்மா…” என ஆரம்பித்த விஷ்ணு, இவனுக்கு சொன்னாலும் புரியாது என்பதால் மேலும் தன் மற்றும் தன் அம்மாவின் உணர்வுகளை புரிய வைக்க முயலாமல், “நடந்ததை விடுங்க, இனிமே இப்படியான செயல்கள் நடக்கிறதை நான் விரும்பல, அதை சொல்லத்தான் தனியா அழைச்சிட்டு வந்தேன்” என்றான்.

“சொல்லிட்டீங்கல்ல? வாங்க போலாம்” என அலட்சியமாக பிரவா சொல்ல, “நீங்க இதை சீரியஸா எடுக்கலைன்னா கண்டிப்பா நான் எங்க அம்மாவை வேற ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போய்டுவேன். டோண்ட் ப்ளே வித் மை எமோஷன்ஸ்” என்றான் விஷ்ணு.

“ஏன் சரியான ஆங்கிள்ல பார்க்க மாட்டேங்குறீங்க விஷ்ணு. என் தங்கை முன்னாடியே வரலைனா அத வச்சு உங்களுக்குள்ள பிராப்லம் வராதா? அத அவாய்ட் பண்ணத்தான் அப்படி செய்தேன்”

“மாமியாருக்கு முடியலைன்னா அவங்க கூட இருக்கணும்னு என் மனைவிக்கு நான் புரிய வைப்பேன். எங்க எல்லா சண்டையையும் உங்களால தீர்த்து வைக்க முடியாது. எங்க பிராப்லம்ஸ் ஹேண்டில் செய்ற அளவுக்கு எங்களுக்கு மெச்சூரிட்டி இருக்கு”

“என்ன பேசிட்டு இருக்கீங்க? என்ன புரிய வைக்க போறீங்க மிருணாவுக்கு? உங்கம்மா கூட இவ இருந்து என்ன செய்ய முடியும்? சில மாசங்களுக்கு உங்கம்மா பெட்லதான் இருந்தாகனும். மிருணாவால அவங்களுக்கு சர்வீஸ் செய்ய முடியாது. கூடவே இருக்க மாதிரி ஹோம் நர்ஸ் அரேஞ் பண்ணி தர்றேன்” என்றான்.

“என் மனைவிக்கு என்ன வரும் வராது, அவளால என்ன செய்ய முடியும் முடியாதுன்னு எங்க கன்வீனியன்ஸ் பார்த்து நாங்களே பேசி முடிவெடுத்துக்கிறோம். ஒரு வேளை உங்க யோசனை தேவைப்பட்டா கேட்டுக்கிறோம். இப்ப வாங்க போலாம்” என்ற விஷ்ணு நிற்காமல் சென்று விட்டான்.

பிரவாகனுக்கு பயங்கர எரிச்சல், ஆனாலும் தங்கைக்காக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே தேவகியுடன் யார் இருப்பது என்ற பேச்சுதான் துவங்கியிருந்தது. பிள்ளைகள் பள்ளியில் படிக்கிறார்கள், அவர்களை விட்டு வந்து நான் தங்க முடியாது என சொல்லி விட்டாள் தர்ஷிணி. ஸ்வேதாவாலும் பார்த்துக் கொள்ள முடியாது என்றான் ஹரி.

“யார் தங்குறீங்க, பார்த்துக்கிறீங்கன்னு யாரையும் நான் கேட்கல. அம்மாவை பீஸ்ஃபுல்லா இருக்க விடுங்க. கிளம்பனும்னா கிளம்புங்க” என்றான் விஷ்ணு.

“அதெப்படி என்ன செய்ய போறேன்னு தெரியாம நாங்க எப்படி போறது? எங்களுக்கும் அக்கறை இருக்கு” என்றாள் தர்ஷிணி. அவளது அம்மாவுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள், சந்திரா நன்றாக ஏற்றி விட்டிருந்தார். மாமியாரின் பொறுப்பை மிருணாவை ஏற்றுக்கொள்ள சொல்லி பேசி அவளுக்கு ஏதாவது கலகம் செய்ய வேண்டும்.

அவள் அப்படி பேசுவதை காண காண மலருக்கு நல்ல கோவம். ஆனால் அவர்களின் குடும்ப விஷயத்தில் தான் எதுவும் பேச முடியாதே என நினைத்து ஓரமாக நின்றிருந்தாள்.

தனது இரு அண்ணன்களையும் பொதுவாக பார்த்த விஷ்ணு, “அம்மா என் பொறுப்பு, நான் பார்த்துக்கிறேன். தேவையில்லாம இங்க எந்த சச்சரவும் வேணாம்” என சொல்லி உள்ளே சென்று அம்மாவின் அருகில் அமர்ந்து விட்டான்.

மிருணாவும் உள்ளே செல்ல போக, “நீதான் பார்த்துக்கணும் மிருணா. வாய தொறந்து சொன்னீனா நாங்க நிம்மதியா கிளம்புவோமா இல்லயா?” எனக் கேட்டாள் தர்ஷிணி.

தங்கை எதுவும் பேசுவதற்கு முன், “எக்ஸ்கியூஸ் மீ…” இடையிட்டான் பிரவாகன்.

‘உன்னிடம் எனக்கென்ன பயமா?’ என்பது போல பார்த்த தர்ஷிணி, “நான், ஸ்வேதா, மிருணா மூணு பேருக்குமே இவங்க மாமியார்தான். முன்னாடி எத்தனையோ முறை இவங்களுக்கு முடியாம போனப்போ எல்லாம் நான் கூட இருந்து பார்த்திருக்கேன். இப்ப என்னாலேயும் ஸ்வேதாவாலேயும் வர முடியாத நிலை. உங்க தங்கைக்கும் பொறுப்பிருக்கு” என்றாள்.

“இவ ஸ்டேட்டஸ் தெரியாம பேசாதீங்க” என சற்றே கோவமாக சொன்னான் பிரவா.

“என்ன பெரிய ஸ்டேட்டஸ்?” என நொடித்தாள் தர்ஷிணி.

“பெரிய ஸ்டேட்டஸ்தான். அவளுக்கு வேலை செய்ய அத்தனை பேர் இருந்தாங்க என் வீட்ல. அவ யாருக்கும் சேவகம் செய்ய மாட்டா” என சீறினான் பிரவா.

“நீங்க பேசாதீங்க, அண்ணா பார்த்துப்பார்” என கணவனை அடக்க பார்த்தாள் மலர்.

மிருணாவுக்கு என்ன பேச என தெரியவில்லை. இன்னும் கணவன் சரியாக பேசவில்லையே என அதிலேயே உழன்று கொண்டிருந்தாள்.

கோபாலை அழைத்துக் கொண்டு ஹரி தள்ளி சென்று விட, தன் மனைவியை அடக்க பார்த்தான் ஸ்ரீதர். தர்ஷிணி மசிந்து கொடுத்தால்தானே?

“உங்க தங்கச்சிக்கு அத்தனை பேர் சேவகம் செஞ்சாங்கன்னா அது உங்க வீட்ல. இப்ப எங்க வீட்டு மருமகளா என்ன செய்யணுமோ செஞ்சுதான் ஆகணும். அவ சென்னைல சும்மாதான் இருக்கா. அத்தை கூட இருந்து அவதான் பார்க்கணும்” என்றாள் தர்ஷிணி.

“உங்க வேலை மட்டும்தான் நீங்க பார்க்கணும், என் தங்கை என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு ஆர்டர் போடுற ரைட்ஸ் உங்களுக்கு இல்ல” என அழுத்தமான குரலில் சொன்னான் பிரவா.

“நான் இந்த வீட்டோட மூத்த மருமக, அத்தைக்கு முடியலைங்கிறப்போ எல்லாத்தையும் என்ன ஏதுன்னு நான்தான் பார்க்கணும்” என மல்லுக்கு நின்றாள் தர்ஷிணி.

விஷ்ணு தலையிடாமல் போனால் தன் கணவன் கோவத்தில் வேறு ஏதேனும் பேசி குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஆகி விட போகிறது என பயந்து போன மலர் விஷ்ணுவை அழைத்து வந்தாள்.

சரியாக அந்த சமயம், “நீங்கதான் மூத்த மருமக, உங்களுக்குத்தான் எல்லா கடமையும். அஃப்கோர்ஸ் மூத்த மகன் உங்க ஹஸ்பண்ட்தான். என் மாப்பிள்ளைய விட அவருக்குத்தான் எல்லா கடமையும். பில் உங்க ஹஸ்பண்ட் செட்டில் செய்யட்டும், உங்க மாமியாரை நீங்க இங்க இருந்து பார்த்துகிட்டாலும் சரி, உங்க கூட அழைச்சிட்டு போய் பார்த்துகிட்டாலும் சரி” என்றான் பிரவாகன்.

“திஸ் இஸ் த லிமிட்! என் குடும்ப விஷயத்துல மூக்கை நுழைச்சது போதும், கிளம்புங்க இங்கேருந்து” என கோவமாக சொன்னான் விஷ்ணு.

“அண்ணா!” என அதிர்ந்தாள் மலர்.

“என்ன நடந்ததுன்னு தெரியாம அண்ணாவை அவமான படுத்தாதீங்க விஷ்ணு. லெட் மீ எக்ஸ்பிளைன்” என்றாள் மிருணா.

“எனஃப் மிருணாளினி. உன் அண்ணனை கூட்டிகிட்டு கிளம்பு இங்கேருந்து” என மனைவியிடமும் கோவப்பட்டான் விஷ்ணு.

கோவம் கொண்ட பிரவாகன் தங்கையின் கையை பிடித்து இழுக்க, கலக்கமாக விஷ்ணுவை பார்த்தாள் மிருணா.

நொடியில் சுதாரித்த மலர் கணவனிடமிருந்து நாத்தனாரின் கையை பிரித்து விலக்கி விட்டு, “அண்ணாகிட்ட அண்ணி பேசிப்பாங்க, நாம அப்புறம் வரலாம். ப்ளீஸ் வாங்க” என கணவனை இழுத்தாள்.

அவன் அனைவரையும் கோவமாக பார்த்துக் கொண்டே ‘வர முடியாது’ என்பது போல நிற்க, “ப்ளீஸ்… நான் சொல்றதை கேளுங்க. வாங்க ப்பா” கெஞ்சலாக சொல்லி கணவனுடன் வெளியேறினாள் மலர்.

கண்ணீர் வழிய மிருணா தன் கணவனை பார்க்க, அவன் மீண்டும் தன் அம்மாவின் அருகில் போய் அமர்ந்து விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement