Advertisement

பேரன்பு பிரவாகம் -32

அத்தியாயம் -32(1)

அன்றைய இரவில் விஷ்ணுவும் மிருணாளினியும் அவசரமாக கோவை வந்தடைந்தனர். மாலையில் கோயிலுக்கு சென்று விட்டு தேவகி திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார்.

தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாக சொல்லி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லி விட்டனர். அவசரத்தில் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர். பெரியளவில் வசதிகள் இல்லாத சின்ன மருத்துவமனை அது.

அன்பு மருத்துவமனை அழைத்து செல்லலாம் என கூறினாள் மிருணா. விஷ்ணு யோசனையாக, “அங்க கிடைக்கிற ஃபெஸிலிடீஸ் யோசிச்சு பாருங்க விஷ்ணு, வேணும்னா பே பண்ணியே ட்ரீட்மெண்ட் பார்க்கலாம், அங்கேயே போய்டலாம்” என்றாள்.

விஷ்ணுவுக்கும் இப்போதிருக்கும் மருத்துவமனையை விட வேறு எங்கும் அழைத்து செல்லத்தான் எண்ணம். ஆனால் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் இங்குள்ள கிளைக்கு அழைத்து சென்றால் அவன் கிளைம் செய்து கொள்ளலாம் என்பதால் அங்கு அழைத்து செல்ல தயாரானான்.

விஷயமறிந்து பிரவாகன் வந்து விட்டான். அவன் மருத்துவ மனையில்தான் அனுபவம் வாய்ந்த மருத்துவர் இருக்கிறார், வீடும் பக்கம் என சொல்லி அங்கு அழைத்து வர சொன்னான்.

விஷ்ணு தயங்க கோபால், ஹரி போன்றோர் பிரவாகனின் யோசனையே சரி என்றனர். கட்டணத் தொகையை எந்த சமரசமும் இல்லாமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டளை போட்டான் விஷ்ணு.

“இதெல்லாம் டிஸ்கஸ் பண்ற நேரமா விஷ்ணு? டிஸ்சார்ஜ் ஆகும் போது நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி பார்த்துக்கலாம், இப்ப கிளம்புங்க” என்றான் பிரவா.

இப்படியாக அன்பு மருத்துவமனைக்கே தேவகி அழைத்து செல்ல பட்டார். காலையில் அறுவை சிகிச்சை என முடிவாகியிருந்தது.

அப்போதே நள்ளிரவை தாண்டியிருக்க தங்கையை தன்னுடன் அழைத்து செல்வதாக கூறினான் பிரவாகன்.

ஸ்வேதா இரண்டாவது முறையாக கரு தரித்திருக்கிறாள். முதல் குழந்தையே சின்ன குழந்தை. ஆகவே அதை காரணம் காட்டி அவள் வரவில்லை. ஸ்ரீதரின் குடும்பம் நாளை பகலில்தான் வருகிறார்கள்.

செவிலியர்கள் இருந்தாலும் உறவில் யாராவது நெருங்கிய பெண் அம்மாவுக்கு துணையாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த விஷ்ணு மனைவியை பார்த்தான். ஆனால் இரு என அவனாக சொல்லவில்லை.

“விஷ்ணு கூடவே இருக்கேன் ண்ணா” என்றாள் மிருணா.

“உன் கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு. நல்லா தூங்கிட்டு காலைல வரலாம். இங்க விஷ்ணுவுக்கும் எந்த வேலையும் இல்லாம எல்லாத்தையும் என் ஸ்டாஃப்ஸ் பார்த்துப்பாங்க” என்றான் பிரவா.

மிருணாவுக்கு இருக்க கூடாது என்றில்லை. இரு என ஒரு வார்த்தை கணவன் சொல்லியிருந்தால் இருந்திருப்பாள். இருக்க வேண்டும் என இயல்பாக தோன்றவில்லை.

“சரி நான் காலைல வர்றேன் விஷ்ணு” என்ற மிருணா அவளது கணவனை ஏமாற்றம் கொள்ள செய்தாள். வேறு எதுவும் சொல்லாமல் போய் வா என அனுப்பி வைத்து விட்டான். ஆனால் மனைவி மீது மிகுந்த அதிருப்தி.

விஷ்ணுவும் கோபாலும் அங்கேயே தங்கிக் கொள்ள, காலையில் வருவதாக சொல்லி புறப்பட்டு விட்டான் ஹரி.

அடுத்த நாள் தேவகிக்கு அறுவை சிகிச்சை நடப்பதற்குள் மருத்துவமனை சென்று விட எண்ணி மிருணா கிளம்பியிருக்க, தான் அழைத்து செல்கிறேன் என சொல்லி தங்கையை நிறுத்தி வைத்து விட்டான் பிரவா.

சற்று நேரத்தில் வந்து விடுவேன், எதுவும் வேண்டுமா என கேட்க விஷ்ணுவுக்கு அழைத்தாள். அவன் அழைப்பை எடுக்காமல் துண்டித்து விட்டான்.

பிரவாகன் கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நாத்தனாரிடம், “உங்கண்ணா எப்ப போனாலும் ஒண்ணுமில்ல அண்ணி, நீங்க அங்க நேரத்துக்கு இருக்கணுமா இல்லயா?” எனக் கேட்டாள் மலர்.

“அங்கதான் அண்ணா எல்லாத்துக்கும் அரேஞ்மெண்ட்ஸ் பண்ணிட்டாரே அண்ணி?” எனக் கேட்டாள் மிருணா.

“ஆன்ட்டிக்கு பயம் இருக்காதா? நீங்க கூட இருந்தா மாரல் சப்போர்ட் தானே? அண்ணா கூட டாக்டரா இருந்தாலும் நடக்க போறது மேஜர் சார்ஜரி, அவரை எப்படி விட்டுட்டு வரலாம் நீங்க?” எனக் கேட்டாள் மலர்.

வயதுதான் ஆகிறது, இன்னும் பொறுப்பு வரவில்லை என அரசியும் கடிந்து கொண்டார்.

மிருணாவின் முகம் விழுந்து விட்டது. “நான் இவ்ளோ டீப்பா திங்க் பண்ணலை அண்ணி. அண்ணா அவர் வசதி படி வரட்டும், நான் உடனே கிளம்பறேன்” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரவாகன் வந்து விட்டான்.

தேவகிக்கு விபத்து நடந்த விஷயம் இரவில் பிரவாகன் கிளம்பி செல்லும் போதுதான் மலருக்கும் தெரியும். அரசிக்கு காலையில்தான் தெரியும். செல்வத்திற்கும் இரவில்தான் தெரிந்திருக்க மகளிடம் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என இருந்து விட்டார். இல்லையென்றால் அப்போதே மிருணாவிடம் பேசி அங்கேயே இருக்கும் படி ஆலோசனை தந்திருப்பாள் மலர். அல்லது தன் அம்மாவையாவது உடனிருக்கும் படி கேட்டு கொண்டிருப்பாள்.

பிரவாகன் இரவில் மீண்டும் வீடு வந்த போது மிருணாவும் வந்திருக்கிறாள் என தெரிந்து, “அவங்கள ஏன் அழைச்சிட்டு வந்தீங்க? ஆன்ட்டி கூட யாராவது ஃபீமேல் இருக்கணும்தானே?” எனக் கேட்டாள்தான் மலர்.

“மிருணாவுக்கு என்ன தெரியும்? நல்ல டயர்ட்ல வேற இருக்கா. அவங்களுக்கு எல்லா வகையிலும் ஸ்பெஷல் கேர் கிடைக்கும்” என்றவனிடம் என்ன சொல்வாள். காலையிலும் விரைவாக செல்லாமல் மிருணா தாமத படுத்திக் கொண்டிருக்க இப்போது எடுத்து சொல்லி விட்டாள்.

மதியம் போல் வந்து பார்க்கலாம் என அம்மாவிடம் சொல்லி தங்கை மற்றும் மனைவியுடன் மருத்துவமனை புறப்பட்டான் பிரவாகன்.

தங்கையின் முகக் கலக்கத்தை கண்டவன் என்னவென கேட்க, மலர் சொன்னதை சொல்லி, “நான் அங்க இருந்திருக்கணும் ண்ணா, ஐ டிட் அ ப்ளண்டர்” என்றாள் மிருணா.

“என்ன பெரிய ப்ளண்டர்? விஷ்ணுகிட்ட சொல்லிட்டுதானே வந்த?” என தங்கையிடம் கேட்டவன், “கண்டதையும் சொல்லி அவளை ஏன் அப்செட் பண்ற மலர்? அங்கதானே போறோம்” என மலரையும் கடிந்து கொண்டான்.

“ஆன்ட்டிக்கு பெரிய அடி, படுக்கையில இருக்காங்க, அவங்களுக்கு பொண்ணுங்க கிடையாது, மருமகள் யாராவது கூட இருக்கணும்தானே? அவங்க மனசு கஷ்ட படாதா? ஆபரேஷனுக்கு போற நேரம் அண்ணி கூட இல்லைனா அண்ணா கூட ஃபீல் பண்ணுவார்” என்றாள் மலர்.

“எஸ் அண்ணா, நைட்டே எனக்கு தோணாம போய்டுச்சு” என்றாள் மிருணா.

பிரவாகன் அமைதியாக இருந்திருக்கலாம். உடனடியாக மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு தான் வந்து சேரும் வரையிலும் தேவகியை அறுவை சிகிச்சை அரங்கம் அழைத்து செல்ல வேண்டாம் என கூறி விட்டான்.

“என்ன செய்றீங்க நீங்க? எதுக்காக ஆபரேஷனை டிலே பண்ண சொன்னீங்க?” என கடிந்தாள் மலர்.

 எப்படி விஷ்ணுவை எதிர் கொள்ள போகிறோம் என அதையே எண்ணி கலங்கி கொண்டிருந்த மிருணாவும், “ஏன் ண்ணா?” என சலிப்பாக கேட்டாள்.

“நீ ரீச் ஆகறதுக்குள்ள அவங்க ஓ டி போனா நல்லா இருக்காதுன்னு ஃபீல் பண்றதானே? ஜஸ்ட் டுவெண்ட்டி மினிட்ஸ் போயிட போறோம்” என சொல்லி விட்டான்.

மருத்துவமனையில் எதற்கும் யாரின் உதவியும் இல்லாமல் எல்லாம் நடந்தேறினாலும் தேவகி மிகவும் பயந்து போயிருந்தார். உடல் துடைத்து ஆடை மாற்றும் சமயம் எல்லாம் அத்தனை கனிவாக செவிலியர்கள் செய்தாலும் தெரிந்தவர்கள் உடன் இல்லாமல் அவருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

ஆடை மாற்றிய பின் அம்மாவை கலங்கிய கண்களுடன் கண்ட விஷ்ணுவுக்கு அவரின் மன நிலை புரிய, மனைவி மீதுதான் கோவமாக வந்தது. “என்னம்மா நீ… நான்தான் இருக்கேன்ல?” எனக் கேட்டான்.

அவருக்கு அதீத பயம். பெரிய மகன் பேரப் பசங்களை எல்லாம் பார்க்க முடியவில்லை என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டார். தொலைவிலிருந்து வர வேண்டாமா? குழந்தைகளை மருத்துவமனைக்கு எப்படி அழைத்து வருவது என்றெல்லாம் பேசி சமாதானம் செய்தான்.

“மிருணா ஏன் வரலை?” என அவர் கேட்க என்ன பதில் சொல்வான்.

“வருவா ம்மா” என்றான்.

எல்லாம் தயார் நிலையில் இருந்தும் தேவகி இன்னும் அழைத்து செல்லப் படவில்லை. என்னவென விஷ்ணு கேட்க, எம் டி வந்த பிறகுதான் அழைத்து செல்வோம் என பதில் வர அவனுக்கு அப்படியொரு கோவம். ஊழியர்களிடம் கோவப்பட்டு என்ன பிரயோஜனம் என்பதால் அமைதி காத்தான்.

அண்ணன் அண்ணியோடு மிருணாளிணி வந்து சேர்ந்த பின்னர்தான் ஸ்ரீதர் அவன் மனைவியோடு வந்தான். இப்போதும் ஸ்வேதா வரவில்லை, ஹரி மட்டும் வந்திருந்தான்.

எதுவும் பேசி அம்மாவின் பயத்தை அதிகரிக்க செய்ய கூடாது என்பதற்காகவே மிருணாவிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை விஷ்ணு. அனைவரும் தேவகியை திடப் படுத்துகிறோம் என ஏதேதோ பேச மலர்தான், “ஓ டி ஷிஃப்ட் பண்ணுங்க” என சொல்லி தேவகியை அழைத்து செல்ல வைத்தாள்.

அறுவை சிகிச்சை அரங்கத்தின் வெளியில் நின்றிருந்த விஷ்ணுவிடம், “டோண்ட் ஒர்ரி விஷ்ணு. நீங்க வேணா ரூம்ல ரெஸ்ட் எடுங்க” என்றான் பிரவா.

“இல்ல நான் இங்கயே இருந்துக்கிறேன்” என சொல்லி விட்டான்.

“மிருணா நீ என் கூட வா, ஆபரேஷன் முடிஞ்சதும் வரலாம்” என தங்கையை பிரவா அழைக்க, கணவனை முறைத்தாள் மலர்.

இப்போது சுதாரித்திருந்த மிருணா வரவில்லை என சொல்லி விட்டாள். தங்கையை வற்புறுத்தா விட்டாலும் மனைவியை அங்கு இருக்க அனுமதிக்கவில்லை பிரவா. சிகிச்சை முடிந்ததும் வந்து பார்க்கலாம் என சொல்லி மலரை அழைத்து சென்று விட்டான்.

விஷ்ணுவின் அருகில் போய் மிருணா நிற்க, அவன் கண்டு கொள்ளவே இல்லை.

“அத்தைக்கு சரியாகிடும் விஷ்ணு” என அவள் சொல்ல அவன் பதில் பேசவே இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement