Advertisement

அத்தியாயம் -3(2)

மலர் அறைக்குள் வந்த நொடியிலிருந்து அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி. இப்படி பிரச்சனைகள் வரும் என தெரிந்தும் யாரோ ஒரு பெண்ணுக்காக இத்தனை பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட மலர் மீது அவளுக்கு கோவம் ஏற்படவில்லை. மாறாக மதிப்பு ஏற்பட்டது. பார்வைக்கு சிறு பெண்ணாக தெரிந்தவள் மீது சொல்லத் தெரியாத வாஞ்சை பிறந்திருந்தது.

எப்போதுமே மருத்துவமனை நிர்வாகத்தில் கீர்த்தி தலையிட்டது இல்லை. அவளது புகுந்த வீட்டிலிருந்து மூவர் இங்கு பணி செய்தாலும் யாருக்காகவும் எந்த சலுகையும் கேட்டு இதுவரை தம்பியிடம் கேட்டதில்லை. கேட்டால் பிரவாகன் செய்வானாக இருக்கும். ஆனால் அப்படி தான் தலையீடு செய்வது சரியில்லை என ஒதுங்கியேதான் இருப்பாள்.

இன்று மலர் விஷயத்தில் கீர்த்தியால் அப்படி ஒதுங்கி இருக்க முடியவில்லை. தம்பியின் கோவம், பிடிவாதம், வீம்பு அனைத்தையும் அறிந்திருந்தவள் மலருக்காக தன்னால் எதுவும் செய்ய இயலுமா என யோசித்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா பேசின நீ?” என மலரிடம் அரசி கேட்க, இவரிடம் சொல்லலாமா வேண்டாமா என தெரியாமல் பார்த்தாள் அவள்.

“பிரவாகனோட அம்மா இவங்க, நான் அவன் சிஸ்டர். உங்க பக்கம் என்னன்னு சொன்னாதானே அம்மா ஏதாவது ஹெல்ப் பண்ண முடியும்? அம்மா என்ன செய்ய முடியும்னு நினைக்காதீங்க, அவங்க வார்த்தைக்கு மதிப்பு இல்லாம போகாது” என்றாள் கீர்த்தி.

“அக்கா இதெல்லாம் அவசியமா இப்போ?” பிரவாகன் கடிய அண்ணியை விசித்திரமாக பார்த்தான் சரத்.

கீர்த்தி சொன்ன விதத்தில் முகம் மலர்ந்த மலர் முந்தைய தினம் பிரவாகனிடம் இலவச பிரிவில் குறைகள் என சொன்னவற்றை பட படவென ஒப்பித்தாள்.

“பிரச்சனைய வேற பக்கம் டைவெர்ட் பண்ணிட்டு இருக்காங்க சார்” என்றான் சரத்.

“இல்லை மேடம். அங்க எமர்ஜென்சி ட்ரக்ஸ் நிறைய இருக்கிறது இல்லை. எக்யூப்மெண்ட்ஸ் ஷார்ட்டேஜ் கூட இருக்கு. உங்களுக்கு நேரம் இருந்தா ஒரு முறை… ஒரே ஒரு முறை அங்க வந்து பாருங்க மேடம்” என அழைப்பு விடுத்தாள்.

நேரம் இரவு எட்டு ஆகியிருக்க, “ம்மா நீங்க கிளம்புங்க. நான் டீல் பண்ணிக்கிறேன்” என மலரை எரிச்சலாக பார்த்துக் கொண்டே சொன்னான் பிரவாகன்.

“நீ என்னடா செய்ய போற இப்போ?” எனக் கேட்டார் அரசி.

“மெடிசனுக்கு உண்டான பணத்தை இவங்ககிட்டேர்ந்து ரெகவர் பண்ணனும். சரத் எக்ஸ்ப்ளனேஷன் லெட்டர் தரட்டும். மலரை டிஸ்மிஸ்தான் செய்யணும், போனா போகுதுன்னு டூ வீக்ஸ் சஸ்பெண்ட் மட்டும் பண்ண போறேன்” என்றான்.

மலரின் முகத்தை பார்த்தார் அரசி. பிரவாகன் சொன்னது பற்றி கவலை கொள்ளாமல் நின்றிருந்தாள் மலர்.

“பேஷண்ட் வெல்ஃபேர் ஃபண்ட்லேர்ந்து ரெகவர் பண்ணிக்க பிரவா. இல்லைனா கூட வேற ஏதாவது செய். இவங்ககிட்டேர்ந்தும் எக்ஸபிளனேஷன் லெட்டர் மட்டும் வாங்கிட்டா போதாதா? எதுக்கு சஸ்பென்ஷன் எல்லாம்?” எனக் கேட்ட கீர்த்தி அம்மாவையும் பேசும் படி ஜாடை காண்பித்தாள்.

“ஆமாம் பிரவா, எந்த பேஷண்ட்டுக்காக டாக்டர் அப்படி செய்தாங்களோ அவங்க இவங்க ரிலேடிவ் கிடையாது. இவங்க எண்ணத்துல தப்பு இல்லைடா” என்றார் அரசி.

தனது முடிவுகளை மறுத்தோ அல்லது அது சரியில்லை என விமர்சித்தோ யார் சொன்னாலுமே பிரவாகனால் ஏற்க முடியாது. அடுத்தவர்கள் முன்னிலையில் அம்மாவை கடியவும் வழியில்லை. அக்காவின் போக்கு கூட இவன் எதிர்பாராதது.

“ரெண்டு பேரும் கிளம்புங்க, டைம் ஆகிடுச்சு” என பிரவாகன் சொன்னதில் அவர்கள் கிளம்பியே ஆக வேண்டும் எனும் செய்தி அப்பட்டமாக தெரிந்தது.

 “ப்ளீஸ் மேடம் அங்க வாங்க. அட்லீஸ்ட் மெட்டர்னிடி பிளாக் மட்டுமாவது வந்து பார்த்திட்டு போங்க” என அவசரமாக அரசியிடம் சொன்னாள் மலர்.

இப்போது என்ன செய்வது என குழப்பமாக மகளின் முகத்தை பார்த்தார் அரசி.

“உனக்கு முடியும்னா போலாம்மா” என்றாள் கீர்த்தி.

“ம்மா!” கண்டனமாக அழைத்தான் பிரவாகன்.

“நீயும் வா பிரவா. இவங்க இவ்ளோ சொல்லும் போது என்ன ஏதுன்னு கண்டுக்காம அலட்சியம் செய்றது முறையில்லை” என்றாள் கீர்த்தி.

சரத் முன்னிலையில் அக்காவின் வார்த்தையை கேட்காமல் விட்டால் அவளுக்கு இறக்கமாகி போய் விடும் என பிரவாகனுக்கு தோன்றியது. வேறு வழியின்றி அவர்களோடு இலவச பிரிவு செல்ல முடிவெடுத்தவன், சரத்திடம் இது சம்பந்தமான விளக்க கடிதத்தோடு டீனை நாளை பார்க்க சொல்லி விட்டான். அவனும் மலரை வெளிப்படையாக கோவ பார்வை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

சரத்தின் கோவ பார்வையை அசாத்தியமாக எதிர் கொண்ட மலரை மெச்சுதலோடு கீர்த்தி பார்க்க, தன் முன்னால் சரத் இப்படி நடந்ததில் பிரவாகனுக்கு பிடித்தமின்மைதான் என்றாலும் மலரை பற்றி ‘அசட்டு துணிச்சல்காரி’ என குறையாக நினைத்தான்.

பிரதான கட்டிடத்தில் இருந்து வெளியே வந்ததும் அவர்கள் செல்ல பேட்டரி கார் வந்து நின்றது. பிரவாகன், கீர்த்தி, அரசி மூவரும் ஏறிக் கொள்ள, நடக்க தயாரானாள் மலர்.

“இடமிருக்கு, நீயும் வாம்மா” என மலரையும் அழைத்தார் அரசி.

பிரவாகனின் சிடு சிடுக்கும் முகத்தை கண்ட மலர் வேண்டாம் என மறுக்க, அரசி விடுவதாக இல்லை.

பிரவாகன் தமனை பார்க்க உடனே இன்னோரு பேட்டரி கார் வந்து நின்றது.

“அதுல என் பி ஏ கூட வருவாங்க” அம்மாவிடம் சொன்னவன் பேட்டரி காரை இயக்கும் படி உத்தரவிட்டான்.

மலரும் தமனும் இன்னொரு பேட்டரி கார் மூலமாக இலவச பிரிவுக்கு வந்தனர்.

இலவச மருத்துவமனையின் முதல் தளத்தில் இருந்தது மகப்பேறு வார்டு. அங்கு செல்வதற்கு முன் தரை தளத்திலேயே தனது அதிருப்தியை பார்வையால் மகனுக்கு காட்டினார் அரசி.

எதுவும் சொல்லாமல் அழுத்தமாக இருந்தான் பிரவாகன். லிஃப்ட் ஆபரேட்டர் ஓடி வந்தார். ரிஷப்ஷனில் இருந்த யாரோ அவசரமாக தர்மேந்திரனுக்கு அழைக்க போக அம்மாவிடம் கிசு கிசுப்பாக ஏதோ சொன்னாள் கீர்த்தி. உடனடியாக மகனிடம் கண்களால் ஏதோ கட்டளை இட்டார் அரசி.

பிரவாகன் தமனை பார்க்க, “யாருக்கும் கால் பண்ணாதீங்க” என தடுத்து விட்டான்.

மலரை விசாரிக்க அழைத்திருந்த காரணத்தால் கமலவேணி கூட இன்னும் கிளம்பவில்லை. அவருக்கான ஓய்வெடுக்கும் அறையில் இருந்தவர் அரசியின் வருகை பற்றி அறிந்து உடனே வார்டுக்கு வந்தார். மலர் யாருக்காக மருந்து எடுத்தாளோ அந்த பெண்ணின் குழந்தை அங்குதான் இருந்தது

கமலவேணியை அரசிக்கு நன்றாகவே தெரியும். அந்த பெண்ணின் தற்போதைய நிலை பற்றி விவரம் சொன்ன கமலவேணி, “மலர் செஞ்சதுல வேறெந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்.

“இந்த குழந்தையோட அம்மா இனி பொழைசுக்குவாங்கதானே?” எனக் கேட்டார் அரசி.

“ஆமாம் மேடம், இனி ஆபத்தில்லை” என்றார் கமலவேணி.

பிரவாகன் எதிலும் பட்டுக் கொள்ளாமல் வேடிக்கை போல பார்த்திருந்தான். அவன் என்ன நினைக்கிறான் என மலரால் கணிக்க முடியவில்லை.

பிரசவமான பெண்ணின் தாயார் குழந்தையை பார்த்துக் கொண்டு அங்குதான் இருந்தார். அரசி அருகில் வந்து நின்று கைகள் குவித்தார். படுக்கையில் இருந்த குழந்தையை பார்த்த அரசிக்கு மனம் உருகியது. கீர்த்திக்கும் அப்படித்தான் இருந்தது.

குழந்தை விழித்துக் கொண்டு அழ கையில் தூக்கிய அதன் பாட்டி அரசியிடம் காட்டி, “நீங்களே ஒரு பேர் வைங்க ம்மா” என்றார்.

அக்குழந்தைக்கு ‘சேதுராமன்’ என தன் தாத்தாவின் பெயரை சூட்டிய அரசி வார்டை கண்களால் ஒரு முறை அளந்து விட்டு புறப்படலாம் என்றார்.

தரை தளம் வந்த பின் கமலவேணியை பார்த்து, “பிரவாவை அவன் சித்தப்பாகிட்ட பேச சொல்றேன். என்னென்ன ரிகுயர்மெண்ட்ஸ் வேணும்னு லிஸ்ட் ரெடி பண்ணி வைங்க” என்றார்.

சரி என்ற கமலவேணி மலரையும் அரசியையும் மாறி மாறி பார்க்க சிரித்த அரசி, “இனிமே இப்படியெல்லாம் நடக்க கூடாதுன்னு சொல்லுங்க. தவறான எக்ஸாம்பிள் ஆகிட கூடாது பாருங்க. இந்த முறை எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டான் பிரவா” என உறுதி அளித்தார்.

“ம்மா டைம் ஆகுது” என பிரவாகன் சொல்ல கிளம்பி விட்டார் அரசி.

கீர்த்தியை அவளது வீட்டுக்கு போக சொல்லி விட்டு தன்னுடனே அம்மாவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

“உன்னை நினைச்சு ரொம்ப பயந்து போயிருந்தேன் மலர். உன் லக்தான் இன்னிக்கு அரசி மேடம் இங்க வந்தது” என்றார் கமலவேணி.

“எப்படியோ இங்க நல்லது நடக்க போகுது. பேஷண்ட்ஸுக்கு விடிவு வந்தா சந்தோஷம்தான் மேடம்” என்றாள் மலர்.

கமலவேணியும் ஆமோதிப்பாக சிரித்தார்.

வீடு வந்த பின் இரவு உணவுக்கு பின் தர்மேந்திரனிடம் நாளை பேச வேண்டும் என்றார் அரசி.

“ஹாஸ்பிடல் சம்பந்தமான்னா வேணாம் மா” என்றான் பிரவாகன்.

“நீயே பார்த்துக்கிறியா?”

“என்ன பார்க்கணும் ம்மா? ஏற்கனவே நிறைய ஃபெசிலிட்டீஸ் செய்து கொடுத்துக்கிட்டுதான் இருக்கோம். அப்பா இருந்தப்பவே ஃப்ரீ பிளாக்கை சித்தப்பா பொறுப்புல விட்டாச்சு. உனக்காக வேணும்னா இன்னும் கூடுதலா ஃபண்ட்ஸ் அங்க ரிலீஸ் பண்றேன். ரெஸ்ட்டா இருக்கிறது விட்டுட்டு அலட்டிக்காதம்மா” என்ற மகனை அதிர்ச்சியாக பார்த்தார் அரசி.

அம்மாவை பேசவே விடாமல், “நீ ஒரு விஷயம் சொல்லும் போது எதிர்த்து பேசக்கூடாதுன்னு அமைதியா இருந்தேன். மலரை அப்படி சும்மா விட்டது சரி கிடையாதும்மா” என்றான்.

“டேய் பிரவா! அந்த பச்சக் குழந்தை முகத்தை பார்த்து கூட உன்னால எப்படி இப்படி பேச முடியுது?”

“அவ்ளோ இரக்கம் இல்லாதவன் இல்லம்மா உன் பையன். எமெர்ஜென்ஸின்னு பிராப்பரா சொல்லி மெடிசினுக்கு அரேஞ் பண்ணியிருக்கலாம். அத விட்டுட்டு… மலர் செய்ததை ஈஸியா விட முடியாதும்மா” என்றான்.

“நான் சொல்லிட்டேன்டா” என்றவரை ஆழ்ந்து பார்த்தவன், “ஆல்ரைட், இந்த முறை உனக்காக விடுறேன். தூங்கும்மா, குட் நைட்” என சொல்லி உடனே அங்கிருந்து சென்று விட்டான்.

அரசியால் மகனிடம் வேறெதுவும் பேச முடியாமல் போனது. ஆனால் கவலையாக இருந்தது. சிறு பிள்ளை அல்லவே அறிவுரைகள் சொல்லி திருத்த. எல்லாம் பிரவாகன் பெயரில் எப்போதோ மாற்றியாகி விட்டது. மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தமாக தன் பேச்சு இனி மகனிடம் எடுபட போவதில்லை என்ற உண்மை புரிய மனம் கசப்பாக உணர்ந்தது.

‘வர முடியாது என்ற என்னை எப்படியோ அங்கு வரவழைத்து விட்டாளே! என் அம்மா அக்காவையே என் முடிவுகளுக்கு எதிராக இயங்க வைக்கிறாள். எத்தனை நெஞ்சழுத்தம் அவளுக்கு? பார்த்துக் கொள்கிறேன்’ தன்னங்கங்காரத்தில் மலரின் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டான் பிரவாகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement