Advertisement

அத்தியாயம் -31(3)

விஷயத்தை சொன்னான் தமன்.

“இவ்ளோ சீக்கிரம் எழுந்து நடமாடுறானா? என்னத்தய்யா கவனிச்சீங்க அவனை? கேம்பஸ் உள்ள எப்படி வந்தான்?” என சீறினான் பிரவாகன்.

ஆள் அடையாளம் தெரியாமல் உள்ளே விட்டு விட்டனர், மேடம் பாதுகாப்பு வட்டத்தில்தான் இருந்தார் என தமன் சமாதானம் செய்ய, “என்ன கேட்டாலும் ஏதாவது ஒரு ஸ்டோரி சொல்லு, உங்களையெல்லாம் அப்புறம் கவனிக்கிறேன், வை” என சொல்லி கைப்பேசியை வைத்தவன் இப்போது மனைவியை பார்த்தான்.

அவள் இன்னும் எதுவும் பேசாமல் எப்படி பேச்சை தொடங்க என பார்த்திருக்க, எதற்காக வந்திருக்கிறாள் என இப்போது தெரிந்து விட்டாலும் அவனும் வேண்டுமென்றே அழுத்தமாக அமைதியாக இருந்தான்.

சில நிமிடங்களுக்கு பின் அவனாகவே, “என்ன மலர்… என்கிட்ட எதுவும் வாய தொறந்து கேட்க அவ்ளோ ஈகோவா உனக்கு?” எனக் கேட்டான்.

“என்ன கேட்டு வந்திருக்கேன்னு உங்களுக்கு தெரியும்தானே?” என்றாள்.

“சென்ஸோட யோசிக்கணும். என் இடத்துல ஒருத்தன் என் பொண்டாட்டிய அடிக்க வந்திருக்கான். அவனை கேம்பஸ் உள்ள விட்டவனுங்களுக்கே இருக்கு என்கிட்டேருந்து. நீ என்னடான்னா காமெடி பண்ணிகிட்டு… போ வேற வேலை இருந்தா போய் பாரு” என்றான்.

“ப்ளீஸ்… கன்சிடர் பண்ணக்கூடாதா? குருவோட வைஃப் குழந்தைலாம் ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. வெளிலதான் வெயிட் பண்றாங்க. ஒரு தடவ அவங்க முகத்தை பார்த்திட்டு அப்புறம் முடியாதுன்னு சொல்லுங்க” என்றாள்.

“ஏய் இந்த எமோஷ்னல் ட்ராமாலாம் எனக்கு அலர்ஜி மலர். ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க?”

“ப்ச்… தப்பு செஞ்சவங்க திருந்தி வரும் போது அவங்களுக்கு இன்னொரு சான்ஸ் தந்தா கண்டிப்பா இன்னொரு முறை அப்படி செய்ய மாட்டாங்க, ரொம்ப ட்ரூவா இருப்பாங்க. குருவுக்கும் ஒரு சான்ஸ் தாங்க”

“எந்த ரீசனுக்காக அவன் வேலை போச்சுன்னு எல்லாருக்கும் தெரியும், திரும்ப சேர்த்தா ஒரு பயலுக்கு பயம் இருக்காது. என்ன வேணா செஞ்சிட்டு கால்ல விழுந்தா மன்னிச்சு விட்ருவாங்கனு அசட்டை ஆகிப் போகும். இதுக்கு மேல இத பத்தி பேசாத. எனக்கு நிறைய வேலை இருக்கு மலர்” என அவன் முடிவாக சொல்ல, அவளின் முகம் மொத்தமாக சுண்டி போனது.

“ஹேய்! சுமமா கண்ட கண்ட ரீசனுக்காக மூஞ்ச தொங்க போடாத. தமனை விட்டு அவங்கள வெளில போக சொல்றேன், அப்புறமா கிளம்பு நீ. கண்டவங்கள உன்னை பார்க்க அலோ பண்றதுக்குத்தான் கார்ட்ஸ் போட்டு வச்சிருக்கேனா… எவன் இன்னிக்கு டியூட்டில இருக்கிறது?” எரிச்சலாக கேட்டுக் கொண்டே இண்டர்காம் பேசியை கையில் எடுத்தான்.

“பேஷண்ட்னு நினைச்சு விட்ருப்பாங்க. நான் சொல்லித்தான் என்னை பார்க்க அலோ பண்ணினாங்க, விடுங்க” என்றாள்.

“என்ன நீ… என்னை தவிர எவன் எந்த மிஸ்டேக் பண்ணினாலும் விடு விடுங்கிற? நான் மட்டும் உனக்கு தொக்கா?”

“எவன் என்ன பண்ணினா எனக்கென்ன? உங்களை அப்படி விட முடியாது” என மலர் சொல்ல அவளையே பார்த்த படி இருந்தான்.

“மத்தவங்களும் நீங்களும் ஒண்ணா எனக்கு? உங்களோட எந்த செயலா இருந்தாலும் அது நல்ல விதமாவோ கெட்ட விதமாவோ என்னைத்தான் அதிகம் அஃபெக்ட் பண்ணும், புரிஞ்சதா?” எனக் கேட்டாள்.

“எப்படியோ நான் உனக்கு ஸ்பெஷல்னு உனக்கு புரிஞ்சா சரி”

“ஆமாமாம் ரொம்ப ஸ்பெஷல்! பேச்ச மாத்த வேணாம். இது…”

“அந்த பேச்சு எடுக்காத!” உறுதியாக சொன்னான்.

எழுந்து கொண்டவள் பார்வையால் கெஞ்சினாள்.

“டூ மினிட்ஸ் டைம் தர்றேன் உனக்கு, நான் கன்வின்ஸ் ஆகுற மாதிரி ஏதாவது ஒண்ணு… ஒரே ஒரு ரீசன் சொல்லு, அவனுக்கு திரும்பவும் வேலை கொடுக்கிறேன்” ‘எது சொல்லியும் என்னை ஏற்றுக்கொள்ள செய்ய முடியாது’ என்ற பொருளில் சொன்னான்.

மலர் அதிகம் யோசிக்கவெல்லாம் இல்லை. சட்டென, “எந்த ரீசனும் வேணாம், எனக்காக செய்ங்க” என்றாள்.

இப்படி ஒன்றை எதிர்பாராதவன் தலையை பின்னுக்கு இழுத்து “ஹான்?” எனக் கேட்டான்.

“நான் உங்ககிட்ட கேட்கிறேன், எனக்காக குருவுக்கு வேலை கொடுங்க” என்றாள்.

இது சரி கிடையாது எனும் விதமாக உதடுகளில் சிரிப்பு நெளிய தலையை மறுப்பாக அசைத்தான்.

“நான் கேட்டும் செய்ய மாட்டீங்களா?”

“உம்மேல நான் வச்சிருக்க அஃபெக்ஷனை மிஸ்யூஸ் பண்ற மலர்” என்றான்.

“வேற எப்படியும் உங்களை சம்மதிக்க வைக்க முடியாதுங்கும் போது நான் என்ன செய்ய?”

“அதே போல கொஞ்ச மாசத்துக்கு முன்னால எங்கிட்டேயும் வேற ஆப்ஷன் இல்லை, உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டேன். அத தப்புன்னு நீ ஏன் சொல்ற?”

“லவ்னு சொல்லி மிரட்டி என்னை கல்யாணம் பண்ணி… தலையை சுத்தி மூக்க தொட்டு என் மனசை உடைச்சதுக்கு பதிலா நேரடியா விஷயத்தை சொல்லி உங்க ஸ்டைல்ல ஆள் வச்சு மிரட்டி இடத்தை எழுதி வாங்கியிருக்கலாம்” என்றாள்.

பிரவாகன் ஒரு வினாடி திகைத்து விழித்தான். செல்வம்தான் வாரிசு என தெரிந்த உடன் இவளை மணந்து காரியத்தை சாதிக்கத்தான் திட்டமிட்டான். தாடையை தடவிக் கொண்டவன், “பதில் தெரியலை மலர், அதனால இந்த கொஸினை பாஸ்(pause) பண்றேன்” என்றான்.

இப்போது திகைத்து விழிப்பது மலரின் முறையானது.

தமனை உள்ளே வர செய்தான் பிரவாகன். அவனிடம் மலரை அடிக்க வந்தவனை மலரின் கண்களில் படாத படி மெடிக்கல் காலேஜ் அல்லது அங்குள்ள ஹாஸ்டலில் ஏதேனும் வேலை கொடுத்து அனுப்பும் படி உத்தரவிட்டான்.

மலரின் முகம் மலர்ந்து போக, “என்ன சார் இது? மேடம்தான் சொல்றாங்கன்னா… அவன் டேஞ்சரான ஆள் சார், உங்க சித்தப்பா கூட இன்னும் கான்ட்டாக்ட்ல இருக்கானோ என்னவோ? ரிஸ்க் எடுக்க வேணாம் சார்” என்றான் தமன்.

தர்மேந்திரன் செய்த குளறு படிகளை ஒன்று விடாமல் ஆராய சொல்லியிருந்தான் பிரவாகன். குன்னூரிலிருந்தும் எங்கேயும் போய் விடாத படி கெடுபிடியில் வைத்திருந்தான். ஆகவே அவர் ஏதாவது திட்டமிட்டு யாருக்கும் ஆபத்தை உண்டாக்கலாம் என எதிர்பார்த்து தனக்கு நெருக்கமானவர்களை கண்காணிப்பில் வைத்து அவனும் கவனமாக இருந்தான்.

பிரவாகன் எதுவும் சொல்வதற்கு முன், “இதென்ன தமன்… சாமி வரம் கொடுத்தா கூட பூசாரி விட மாட்டார்னு சொல்றது போல இருக்கு. அந்த பொண்ணு வெளில உட்காரந்திருக்கு பார்த்தீங்கதானே? குருவையும் நான் பார்த்தேன், நிஜமா வருந்துறான், இனிமே தப்பு செய்ய மாட்டான்” என்றாள் மலர்.

தமன் தன் முதலாளியை பார்க்க, “அதான் மேடம் சொல்லிட்டாங்களே… ம்ம்… செஞ்சிடு” என்றான்.

“சரியா வரும்ங்களா சார்? மத்தவங்களுக்கு பயம் விட்டு போய்டும் சார்” என்றான் தமன்.

“ஏன் இவர்கிட்ட வேலை செய்றவங்க எல்லாம் ஒழுங்கா வேலை செஞ்சா போதாதா? இவரென்ன பேயா இல்லை பிசாசா? ஏன் இவருக்கு பயப்படணும்? சும்மா இப்படி இவரை ஏத்தி விடாதீங்க தமன்” என்றாள் மலர்.

“மேடம்… நான் ஏத்தி விடுறேனா!” எனக் கேட்ட தமன் பிரவாகனை பார்க்க, அவன் மோவாயிலும் வாயிலும் சேர்த்த படி கை வைத்துக்கொண்டு சன்னமாக சிரித்துக் கொண்டிருந்தான்.

“போங்க சார் உங்க ரெண்டு பேர் இடையிலேயும் வரவே கூடாது” என சலிப்பாக சொன்ன தமன், முதலாளி இட்ட உத்தரவை நிறைவேற்ற வெளியே சென்றான்.

“நான் அந்த பொண்ணை வர சொல்றேன், உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல நினைக்கலாம் அந்த பொண்ணு” என்றாள் மலர்.

விளையாட்டாக அவளை நோக்கி கைகளை குவித்தவன், “ஐ டோண்ட் வாண்ட் மலர். இது அந்த பொண்ணுக்காக இல்லை, உனக்காக… ஸோ, நீயே அந்த தேங்க்ஸையும் வாங்கிக்கோ” என்றான்.

“தேங்க்ஸ்!” என்றாள் மலர்.

காதில் சுண்டு விரல் கொண்டு குடைந்தவன், “போடி…” என்றான்.

அவனருகில் வந்தவள் அவனை மென்மையாக அணைத்து, “இது உங்களுக்கு நான் சொல்றது, நிஜமா தேங்க்ஸ்!” என சொல்லி விலகினாள்.

“அதிசயமான பொண்ணுதான் நீ. நானும் நிஜமாதான் போடின்னு சொன்னேன். இது என் ஆஃபீஸ் ரூம்னு மறந்து போகுது, என் வேலை கெடுது” என்றவன் விலகியிருந்தவளை தன்னை நோக்கி இழுத்து, குறும்பாக சிரித்து பின் விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement