Advertisement

அத்தியாயம் -31(2)

“என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேட்க கூட பொறுமை இல்லை”

“என்ன புதுசா சொல்லிட போறீங்க? ஹாஸ்பிடலே போகக் கூடாது, ஜெயில்ல இருக்க மாதிரி வீட்லேயே இரு, இதானே?”

“ஓஹோ… எந்த நாட்டுல இவ்ளோ ஸோஃபெஸ்டிகேட்டடா ஜெயில் இருக்கு?”

“உலகத்துல இல்லாத ஒண்ணை உங்களாலதான் உருவாக்க முடியுமே… இதோ எனக்கு உருவாக்கி வச்சிருக்கீங்களே… ஹச் னு தும்மினா கர்சீப் நீட்டலாம், ஹ னு ஏதாவது பேச ஆரம்பிச்சாலே தும்மல் வருதான்னு வந்து நின்னா இரிடேட் ஆகாதா?”

“உனக்காக நம்ம குழந்தைகளுக்காக…”

“ஸ்டாப்! நீங்க இல்லாத நேரம் ரூம் லாக் பண்ணிட்டு தூங்க முடியலை. இத குடி அத குடின்னு டைம் டேபிள் போட்டு புனல் வச்சு ஊத்தாத குறையா எனக்கு கொடுக்கிறாங்க. நிம்மதியா தும்ம கூட முடியலை, எனக்கே தெரியாம ஏதாவது பக்கம் திரும்பினா கூட என்ன வேணும்னு ரெண்டு பேர் வந்து நிக்கிறாங்க. என் பிரைவேசி மொத்தமா போச்சு. எனக்கு என்னை பார்த்துக்க தெரியாதா? இந்த கேர் டேக்கர்ஸ் தொல்லை தாங்க முடியல” அவன் முகத்தை பாராமல் பொரிந்தாள்.

மலர் வளர்ந்த சூழல் வேறு. இப்படி அவளை தனியாக விடாமல் கவனிப்பு என்கிற பெயரில் எந்நேரமும் ஆட்கள் உடனிருப்பதை தொல்லையாகத்தான் உணர்ந்தாள்.

“நீ ஏன் தொல்லைனு நினைக்கிற?”

“வேற எப்படி நினைக்க?” என எரிச்சலாக கேட்டவள், “அத்தைய பார்த்திட்டு வரேன்” என சொல்லி சென்று விட்டாள். உறங்கும் முன் அரசியை ஒரு முறை பார்த்து வருவதை சமீபத்திலிருந்து வழக்கமாக்கியிருந்தாள்.

அடுத்த நாளில் இருந்து மருத்துவமனை செல்லப் போகும் விஷயத்தை மாமியாரிடம் சொன்னாள். அவருக்கும் மலரின் மனநிலை புரிந்திருக்க மறுப்பு சொல்லாமல் சம்மதித்தார்.

மலர் அவரிடம் பொதுவாக பேசி விட்டு கிளம்ப எத்தனிக்க அவளை விடாமல் உட்கார சொன்னார்.

“எப்பவும் ஏதோ போலவே இருக்க கூடாது. இந்த நேரத்துல மனசை மகிழ்ச்சியாவும் அமைதியாவும் வச்சுக்கணும்” என்றார்.

“அதுக்குத்தான் அத்தை முயற்சி செய்றேன்” என்றாள்.

“அவன் கல்யாணம் பண்ணின விஷயத்தை இன்னும் விடலையா நீ? உன்னையும் என் பேர பசங்களையும் நல்லா பார்த்துப்பான்” என்றார்.

“என் கவலையே அதுதான் அத்தை. பசங்களையும் அவரை போலவே பணம் இருந்தா எல்லாம் சாதிச்சிக்கலாம்ங்கிற மெண்டாலிட்டியோட வளர்க்க போறார். என்னால என்ன செய்ய முடியும்? வேடிக்கைத்தான் பார்க்க முடியும்” விட்டேற்றியாக சொன்னாள்.

“பிரவா பிறந்து நாலு வருஷத்துல மிருணா வந்திட்டா. என்னால அதிக நேரம் அவனுக்கு கொடுக்க முடியலை. அவனோட அப்பா எனக்கு கஷ்டம் தரக் கூடாதுன்னு அவன் பொறுப்பை அவரே எடுத்துக்கிட்டார். அவன் அப்பா மாதிரிதான் இவனும். உன்னை போல நான் சிந்திக்கல, அவரும் அன்பால குளிப்பாட்டினார். அதனாலதான் அவர் போனதை என்னால ஏத்துக்க முடியலை” என்றவரின் கண்கள் கலங்க ஆதரவாக அவரது கையை தட்டிக் கொடுத்தாள் மலர்.

“சரியையும் தப்பையும் அவங்க அவங்க வளர்ற சூழல்தானே மலர் தீர்மானிக்குது? என் மகனுக்கு சப்போர்ட் பண்றேன்னு நினைக்காத. நான் பொதுவா சொல்றேன். அவனோட நீயும் சேர்ந்துதான் பசங்களை வளர்க்க போற. நீ நினைச்ச மாதிரி தாராளமா வளர்க்கலாம். பெத்த அம்மாகிட்ட கூட அடங்கி போகாத உன் வீட்டுக்காரன் உன்கிட்ட வேற மாதிரிதான் நடக்கிறான். நீ நினைச்சா அவனும் மாறுவான்” என்றார்.

அவளுக்கோ உள்ளுக்குள் அலுப்பாக வந்தது. என்ன சொன்னாலும் இவர் மகனிடம் எடுபடாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்ல மனமில்லாமல் அவரை ஒத்து ஏதோ பேசி அவளறைக்கு திரும்பினாள்.

அடுத்த நாள் மருத்துவமனை வந்தவளுக்கு அங்கு நடந்த நடக்கும் நடக்க போகும் மாற்றங்கள் பற்றி விளக்கினான் கிஷோர். இப்போதும் பணம் செலுத்தி சிகிச்சை தரும் மருத்துவமனையோடு இதை ஒப்பிட முடியாது. ஆனால் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற பட்டிருந்தன. மலருக்கு ஆனந்தமாக இருந்தது.

“ஒரு பெரிய அமௌன்ட் ட்ரஸ்ட்க்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்கார் எம் டி. நம்ம சோர்ஸ் மூலம் தெரிஞ்சுகிட்டேன்” என கிஷோர் கூற இடத்திற்கான பணம் என புரிந்து கொண்டாள்.

“உன்னாலதான் மலர் எல்லாம். எவ்ளோ பெரிய விஷயத்தை அசால்ட்டா நடத்தி வச்சிருக்கேன்னு உனக்கு புரியுதா? எம் டி ய கல்யாணம் பண்ணினதும் நீ மாற வாய்ப்பிருக்குன்னு எல்லாம் யோசிச்சிருக்கேன். ஆனா சாதிச்சிட்ட” என்றான்.

“நான் என்ன செஞ்சேன்? அவர்தான் செஞ்சார்” என்றாள்.

“உனக்காக நீ கேட்டுகிட்டதுக்காக செஞ்சிருக்கார் எம் டி. நீதான் காரணம்” என்றவன் சில விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்கள் வந்தடைய போகும் தகவலையும் சொன்னான்.

தனக்காகத்தான் இதை செய்தான் என்பதில் மலருக்கும் மாற்று கருத்து இல்லையே. இத்தனை அதி வேக மாற்றங்களில் கணவனை நினைத்து அவள் நெகிழ்ந்து போயிருக்க,யாரோ ஒரு பெண் கைக்குழந்தையோடு இவளை பார்க்க வந்திருப்பதாக செய்தி வந்தது.

கிஷோர் சில நாட்களாக நோயாளிகளை பார்ப்பத்தில்லை. அவனுக்கென ஒரு அலுவலக அறை ஏற்படுத்திக் கொண்டு அங்குதான் மலருடன் பேசிக் கொண்டிருந்தான். ஆகவே வந்திருப்பது யாரென இருவருக்குமே யோசனையானது. உள்ளே அனுப்பும் படி சொன்னாள் மலர்.

மலரை அடிக்க வந்து பணி நீக்கம் செய்யப் பட்ட தர்மேந்திரனுடைய ஆள் குருவின் மனைவிதான் இந்த பெண். குருவுக்கு இங்கு வேலை பறி போனதோடு மட்டுமில்லாமல் வேறெங்கும் கூட வேலை கிடைக்கவிடாத படி செய்து விட்டார்கள், குடும்பம் வறுமையில் தத்தளிப்பதாக கண்ணீரோடு சொன்னவளை பார்க்க மலருக்கு பரிதாபமாக இருந்தது.

அவளுக்கு என்ன பதில் சொல்வது என மலர் சங்கடமாக பார்க்க, “உங்க ஹஸ்பண்ட் செஞ்ச வேலை அப்படிம்மா. எம் டி யே நேரடியா டிஸ்மிஸ் பண்ணியிருக்கார், மேடமால என்ன செய்ய முடியும்?” எனக் கேட்டான் கிஷோர்.

தன் குழந்தையை இறுக்கி பிடித்துக்கொண்டு கெஞ்சலாக பார்த்த அந்த பெண்ணை காண காண மலரால் பொறுக்க முடியவில்லை. கைப்பையிலிருந்து பணம் எடுத்து வைத்துக் கொள்ளும் படி கொடுத்தாள்.

பணத்தை வாங்க மறுத்து விட்ட அந்த பெண், “அவருக்கு வேலைக்கு மட்டும் ஏற்பாடு செஞ்சு தாங்க மேடம். அவருக்கு கல்யாண வயசுல ஒரு தங்கச்சி இருக்குதுங்க. கிடைக்கிற சம்பளம் குடும்பம் நடத்ததான் சரியா இருக்கு. அந்த புள்ளைக்கு நல்ல விதமா கல்யாணம் பண்ண எந்த வகையிலாவது பணம் சேர்க்க நினைச்சிட்டார். பணத்துக்கு ஆசை பட்டுதான் புத்தி கெட்டு போய் அப்படி நடந்துகிட்டார். இப்ப உணர்ந்திட்டாருங்க, இனிமே எந்த தப்பும் செய்ய மாட்டார்” என்றாள்.

மலர் கிஷோரை பார்க்க, “சான்ஸ் ரொம்ப கம்மி மலர். ஆனா நீ தலையிட்டா ஏதாவது நடக்க வாய்ப்பிருக்கு” என்றான்.

மலருக்கும் அதே யோசனைதான். இவளே நேரடியாக பிரவாகனிடம் பேசினால் அன்றி குருவை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது என்பது சாத்தியமே இல்லாத காரியம்.

இப்போது அவள் சுமூகமாக இல்லையே அவனிடம். எனவே எதுவும் சலுகை கேட்டு பேசத் தயங்கினாள். இன்னொரு முறை அந்த குழந்தையின் முகத்தை பார்த்தாள். ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஏக்கத்தோடு நின்றிருந்த அந்த பெண்ணையும் பார்த்தாள். தான் சொல்லியும் மறுத்தால் இவர்களின் நிலையை எடுத்து சொல்லலாம் என்றெண்ணி இவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு கணவனை காண புறப்பட்டாள்.

தூரமாக மலரை அடிக்க வந்த குரு நின்றிருந்தான். மலரை கண்டதும் அவளை காண முடியாமல் குற்ற உணர்ச்சியில் பார்வையை தழைத்துக் கொண்டான். அவனது உடல்மொழியே மலருக்கு பல கதைகள் சொல்லியது.

பிரவாகனின் அறைக்கு வெளியில் பலர் காத்துக் கொண்டிருக்க அந்த பெண்ணை அமர சொன்னவள் பிரவாகனை காண வேண்டும் என தமனிடம் தெரிவித்தாள்.

பிரவாகன் அலுவல் சம்பந்தமாக ஏதோ காணொளி அழைப்பில் இருப்பதாக சொன்ன தமன், “உங்களை அடிக்க வந்தவன் மேடம், இது தேவையான்னு யோசிச்சுக்கோங்க. சார் ஒத்துப்பார்னு நம்பிக்கை இல்லை” என்றான்.

“நான் இன்னும் விஷயத்தை உங்ககிட்ட சொல்லவே இல்லை தமன்”

“உங்களை சுத்தி எது நடந்தாலும் உடனே உடனே அப்டேட் ஆகிடுமே மேடம்” என தமன் சொல்ல, அவனை விளையாட்டான கண்டிப்போடு பார்த்தாள்.

“உள்ள போங்க மேடம்”

“அவர் ஃப்ரீ ஆனதும் சொல்லுங்க தமன்”

“அட போங்க மேடம், உங்களை வெயிட் பண்ண வச்சு என் வேலைக்கு ஆப்பு வச்சிடுவீங்க போலயே… என் பொண்டாட்டியும் இப்படி நியாயம் கேட்டு வந்து நிப்பா உங்ககிட்ட. உள்ள போய் எங்க எம் டி கண்ணு முன்னாலேயே வெயிட் பண்ணுங்க” என விளையாட்டாக சொல்லி மலரை புன்னகை முகமாகவே உள்ளே அனுப்பி வைத்தான்.

மலர் உள்ளே வரவும் கனிணி திரையை விட்டு இரண்டு நொடிகள் பார்வையை விலக்கி ‘என்ன?’ என்பது போல புருவம் உயர்த்தினான்.

‘நீங்கள் பேசுங்கள் நான் காத்திருக்கிறேன்’ என சைகை செய்தவள் ஸோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கழிந்த பின் அழைப்பை முடித்துக் கொண்டவன் அவள் பக்கம் பார்க்க, இவனிடம் எப்படி இந்த சகாயத்தை கேட்பது என தயக்கமும் குழப்பமுமாக அவனையே பார்த்திருந்தாள்.

அவளையே கூர்ந்து பார்த்தவன் தமனுக்கு அழைத்து, “என்ன மேட்டர் மேன்?” எனக் கேட்டான். இவன் கலந்துரையாடலில் இருந்த காரணத்தால் குரு பற்றிய செய்தி இன்னும் இவனை அடைந்திருக்கவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement