Advertisement

பேரன்பு பிரவாகம் -31

அத்தியாயம் -31(1)

மலரும் பிரவாகனும் ஒரு வீட்டில்தான் இருக்கிறார்கள், ஒரே அறையைத்தான் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அவளுக்கு எந்த உடல் உபாதை என்றாலும் அவன்தான் கவனித்துக் கொள்கிறான். அவளை அணைத்துக் கொண்டுதான் உறங்குகிறான். மலர்தான் அவனுக்கு உணவு பரிமாறுகிறாள்.

ஆனால் மலரின் பேச்சு வெகுவாக குறைந்து விட்டது. அது அவனுக்கு வலி என்றாலும் காட்டிக் கொள்ளாமல் அவளுக்கும் சேர்த்து வைத்து அவனே பேசுவான். அவ்வளவு பேசினாலும் தான் தவறு செய்து விட்டேன் எனும் ரீதியில் எதுவும் இருக்காது. இயற்கையாகவே அவனுக்கு அப்படி தோன்றவில்லை என்பதுதான் நிஜம்.

அவளுக்கு விஷயம் தெரியாத போது தெரிந்து விடுமோ என பயந்தவனுக்கு விஷயம் தெரிந்த பின் இனி பிரச்னை இல்லை என்பது போன்ற ஆசுவாச நிலை.

கடந்த சில நாட்களில் அவளது மனம் கொஞ்சம் திடமாகியிருந்தது. கல்யாணத்தின் காரணம் காதல் இல்லை என்பது ஆரம்பத்தில் தெரிந்தாலும் போக போக அவனது காதலை நம்பி அவளும் காதலிக்க, திடீரென அப்படி இல்லை எனும் ஏமாற்றத்தை ஏற்க முடியவில்லை. ஆனால் தனக்கு இதுதான் அமைப்பு என தெளிவாகியிருந்தாள்.

அன்று இரவு ஓய்வறை சென்றவள் வெளி வர சற்றே தாமதமாகி விட்டது. அவன் கதவை தட்ட போவதற்குள் அவளே கதவை திறந்தவள் அவனை ஆயாசமாக பார்த்தாள்.

“டைம் ஆகவும் என்னவோன்னு நினைச்சிட்டேன் மலர்” என்றவன் கண்களில் நிஜமான பயம் தெரிந்தது.

அதிகமாக அவனிடம் பேசா விட்டாலும் தன்னை முன்னிட்டு அவன் அப்படி தவிப்பதை அவள் விரும்பவில்லை.

“நான் இப்பலாம் பெட்டராதான் இருக்கேன், ஏன் இவ்ளோ பயம் உங்களுக்கு?”

“பயமில்லை, நீதான நீ படிச்சப்ப பார்த்த பேஷண்ட் கதையெல்லாம் சொல்லி வச்ச. அதான் அலர்ட்டா இருக்கேன்” என்றான்.

“விட்டா ரெஸ்ட் ரூம் உள்ளேயும் என் கூடவே வருவீங்க, வழி விடுங்க” என்றவள் ஏதோ மேகஸின் கையிலெடுத்து கொண்டு சோஃபாவில் அமர்ந்து விட்டாள்.

அவளருகில் அமர்ந்தவன், வழக்கம் போல அவள் வயிற்றில் கை வைத்து அழுத்திக் கொடுக்க, “ஓவரா தெரியலையா உங்களுக்கு? சும்மா என்ன இப்படி?” என்றாள்.

“அது அப்படித்தான்” என்றவன் அவளது வயிற்றில் முத்தமிட்டு பின் அவளுக்கும் முத்தமிட்டு விலகினான்.

அவளால் புத்தகத்தில் கவனம் வைக்க முடியவில்லை. ஆனாலும் பார்வையை அங்குதான் வைத்திருந்தாள்.

“இன்னும் எவ்ளோ நாள் இப்படி என்கிட்ட வார்த்தையை எண்ணி எண்ணி பேசுவ? இப்படியே இருந்திட்டு போ, என் பசங்க என்கிட்ட கோச்சுக்கவே மாட்டாங்க” என்றான்.

அவளிடம் பதில் இல்லாமல் போக, இவனது முகமும் சுண்டிப் போனது. ஆனால் நொடி நேரம்தான், “எப்ப பேபிஸ் மூவ்மெண்ட்ஸ் நாம தெரிஞ்சுக்கலாம்?” எனக் கேட்டான்.

“இன்னும் நாள் இருக்கு” என்றவள் அவன் அவளை விட்டு செல்லாமலே இருக்கவும், “நான் தூங்க லேட் ஆகும், நீங்க போங்க” என்றாள். அவனோ அவளை சற்று நெருங்கி அமர்ந்து கொண்டான்.

“நான் எம் பி ஏ முடிச்சதுமே அப்பா கூட போக ஆரம்பிச்சிட்டேன். என்ன ஏதுன்னு நான் முழுசா கத்துக்குறதுக்குள்ள அப்பா என்னை விட்டு போயிட்டார். அவரோட லாஸ்ட் மினிட்ல போறோம்னு அவருக்கு பயமே இல்லை, அவரால பேச முடியலை. ஆனா என்னை அவ்ளோ நம்பிக்கையா பார்த்தார்”

“நான் அவர் கையை புடிச்சப்போ என் கையை அவரும் அழுத்திப் புடிச்சுகிட்டார். என்னை பார்த்து ஸ்மைல் பண்ணினார். அவரோட லாஸ்ட் ஸ்மைல், அவர் கண்ணை நான்தான் க்ளோஸ் பண்ணினேன். என்னை பார்த்த படிதான் அவர் அவரோட கண்ணை மூடினார். திடீர்னு ஒரு நாள் அவர் இடத்தை என்கிட்ட கொடுத்திட்டு எல்லாம் என் பையன் பார்த்துப்பாங்கிற நிம்மதியோட போயிட்டார் மலர்” என்றான்.

இப்படி இவன் பேசி மலர் பார்த்ததே இல்லை. இவனால் யாரிடமும் மனம் திறக்க கூட முடியுமா?

அவனது குரலில் சிறு பிசிறு கூட இல்லை, தொண்டை கமறவில்லை. கண்கள் கலங்கவில்லை. முகத்திலும் கலக்கம் தெரியவில்லை. ஆனால் தன் அப்பாவை அதிகமாக நேசித்திருக்கிறான், அவரை இப்போது வெகுவாக மிஸ் செய்கிறான் என்பதை மலரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இடையிடாமல் அவனது பேச்சுக்கு காது கொடுத்தாள்.

“அப்பா எங்களை எப்பவும் ஹேப்பியா வச்சுப்பார். எதுவும் வேணும்னு கேட்கிறதுக்கு முன்னாடி எல்லாமே கிடைச்சிடும். அக்காக்கு மேரேஜ் ஆகிடுச்சு, அக்கா வீட்ல சந்தோஷமா இருக்கணும். அம்மாக்கு உடம்பு முடியலை, அப்பா இழப்பிலேருந்து மீண்டு வரணும். மிருணா சின்ன பொண்ணு, படிச்சிட்டு இருந்தா. அவளை செட்டில் பண்ணணும்”

“அப்பா போனதும் ஹாஸ்பிடல் காலேஜ்னு எல்லா இடத்திலேயும் பெரிய போஸ்ட்ல இருக்கிறவங்க பாலிடிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க இஷ்டத்துக்கு என்னை வளைச்சு குளிர் காய நினைச்சாங்க. ஒர்க்கர்ஸ்குள்ள ஒற்றுமை போய் திடீர்னு கோபுரம் சரிய ஆரம்பிச்ச நிலை. நிறைய கஷ்ட பட்டேன், சமாளிச்சு நிலையா நின்னுட்டேன். ஆனாலும் எல்லாமே என் அப்பா தூக்கி நிறுத்தினது. அத சரியாம பாதுக்காக்கணும், அவ்ளோதான் என் மைண்ட்ல இருந்தது”

 “ஈவன் மிருணா கூட எனக்கு வளர்ந்த குழந்தை. எல்லாத்திலேயும் ஏதோ பொறுப்பு மட்டும்தான் பிரதானமா நிக்கும். நின்னு ரசிச்சு செய்யவோ பார்க்கவோ எதுவுமே இல்லை. என் தங்கை கல்யாணம் கூட…” என்றவன் விரக்தியாக புன்னகை செய்தான்.

மலர் ஏதோ சொல்லப் போக, “முடிஞ்சத பேசி யாரையும் அதுக்கு ப்ளேம் பண்றத என்னிக்குமே நான் செய்றது கிடையாது மலர். அடுத்து என்னன்னுதான் பார்ப்பேன். நீ காரணம் இல்லைனு சமாதானம் வேணாம். லீவ் தட்” என்றவன் மீண்டும் அவள் வயிற்றில் கை வைத்து அழுத்தி கண்களை மூடிக் கொண்டான்.

“இது… இவங்க என் பசங்க மலர்” எனும் போது அவனது குரலில் அத்தனை மென்மை, அத்தனை கனிவு.

 கண்களை திறந்தவன் நன்றாக சாய்ந்து நேராக பார்த்தான். அவன் சிந்தனை வேறு ஏதோ கற்பனை உலகிற்கு சென்றிருந்தது.

“குழந்தைங்க உருவாகுறதே அழகான பிராசஸ் மலர்… நான் செக்ஸ் பத்தி சொல்லலை. அஃப்கோர்ஸ் அதுவும் அழகான விஷயம்தான், என்னை மறந்து நான் இளைப்பாற என்னையும் தாங்க எனக்கே எனக்குன்னு ஒருத்திங்கிறது எல்லாம் வாவ் ஃபீல்தான். பட் பேபீஸ்… மில்லியன்ஸ் ஆஃப் ஸ்பெர்ம்ஸ்ல ஒண்ணு உயிரா உருவாகுதுற எல்லாம்… நீ வளர்த்திட்டு வர்றது என் உயிர் மலர்.” என்றான்.

மலர் அவனையே பார்த்திருக்க, அவனும் அவள் பக்கமாக திரும்பி, “இட் ஈஸ் அ டிவைன் ஃபீலிங் மலர். உனக்குள்ள இவங்க வந்த அன்னிலேருந்து கூடவே இருந்து பார்க்கிறேன். யூ க்நொவ்… ஐ ஃபீல் யுவர் ப்ரெக்னன்ஸி. உண்மையை சொல்லனும்னா வீ ஆர் ப்ரெக்னண்ட். நீ சுமக்கிற, நானும் உன்னோட இந்த கஷ்டம் சந்தோஷம் எல்லாத்தையும் சமமா ஃபீல் பண்றேன்” என்றான்.

அவளுக்கு என்ன சொல்ல என தெரியவில்லை. மனம் லேசாக கலங்கி போனது. மூச்சை உள் இழுத்து கண்களை கலங்க விடாமல் பாதுகாத்தாள்.

“நீயும் நானும் வேற இல்ல, பட் நாம வாழ நமக்கு ஹோல்ட்(பற்று) நம்ம பசங்கதானே மலர்? முதல் தடவ உனக்கு ஸ்கேன் பண்ணும் போது என்ன தெரிஞ்சது… ஒண்ணும் புரியலை எனக்கு… ஆனாலும் என் ஹார்ட் ஃபுல் ஆன ஃபீல் அன்னிக்கு. அவங்கள கைல ஏந்த போற நாளை ஆசையா எதிர் பார்த்திட்டு இருக்கேன் மலர்” என அவன் சொல்ல தன்னையறியாமல் அழுது விட்டவள் அவனை பார்த்து புன்னகை செய்தாள்.

“ஆ ஊ ன்னா எப்படித்தான் உனக்கு அழுகை வருதோ…” என்றவன் அவளை தோள் சாய்த்துக் கொண்டே எப்படியெல்லாம் என் குழந்தைகளை வளர்ப்பேன் என அவனது கனவுகளை விவரிக்க ஆரம்பித்தான்.

‘ஐயோ ஆரம்பிச்சிட்டானே!’ என நினைத்தவள் அவன் பேசிக் கொண்டே போக மொத்தமாக பயந்து போனாள். அன்பு பாசத்தோடு கண்டிப்பும் குழந்தைகளுக்கு அவசியம். அவர்களையும் சுதந்திரமாக வாழ விடாமல் கைக்குள் வைத்துக்கொண்டால் தனியாக எப்படி உலகத்தை எதிர் கொள்வார்கள்? அவர்களின் தனித்துவம் எப்படி வெளிப்படும்?

அவனிடமிருந்து விலகியவள் “அன்பையும் பாசத்தையும் ஒரு அளவோடு கொட்டி வளருங்க, பணத்தை கொட்டி எல்லாம் செய்றது இல்ல அன்பு. எல்லாத்திலேயும் வின் பண்றது இல்லை உண்மையான வின்னிங், அதுக்கான பிராஸஸே வெற்றிதான். அவங்க லைஃப அவங்க வாழட்டும்” என்றாள்.

இத்தனை நாட்களில் அவள் பேசிய நெடிய வாக்கியம்.

புன்னகைத்தவன் “அன்பை காட்ட பணம்தான் முக்கிய தேவை. ஒரு பொம்மை வாங்கித் தரணும்னாலும் ஓசியில கிடைக்காது. எல்லாத்தையும் எப்படி வெற்றியா மாத்திக்கிறதுங்கிற பிராஸஸை நான் சொல்லி தருவேன் என் பசங்களுக்கு. ஃபெயிலியர்ங்கிற வார்த்தையே அவங்க டிக்ஸனரில இருக்க போறதில்லை” என்றான்.

“இப்போதைக்கு இது போதும். குழந்தை வளர்ப்ப பத்தி இவங்க பொறந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்” இந்த பேச்சு வளர்ந்தால் கண்டிப்பாக சண்டையில் முடியும் என்பதால் அந்த உரையாடலுக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தாள்.

மனம் விட்டு அவளிடம் பேசியிருந்ததில் பிரவாகனுக்கு நல்ல உணர்வு. அவள் தோள் மீது சாய்ந்து கொண்டான்.

“நான் நாளையிலேருந்து ஹாஸ்பிடல் வர்றேன்” என்றாள்.

மசக்கை பயப்படும் படி கஷ்ட படுத்தவில்லை என்றாலும் அவளுக்கு தொந்தரவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. ஆகையால் அவன் யோசனையாக அவளை பார்த்தான்.

“எங்க இருந்தாலும் இப்படித்தான் இருக்க போகுது, வீட்லேயே அடைஞ்சு கிடக்க முடியாது” என்றாள்.

“சரி வா, ஆனா உன் உடம்பு ஒத்துழைக்கலைன்னா…” அவன் வாக்கியத்தை நிறைவு செய்யும் முன் “சரி” என்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement