Advertisement

பேரன்பு பிரவாகம் -3

அத்தியாயம் -3(1)

அம்மாவை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து செல்ல வந்திருந்தாள் கீர்த்தி. என்ஜினீயரிங் படித்திருக்கும் கீர்த்தி திருமணத்திற்கு பின் கொஞ்ச காலம் கழித்து கணவனோடு அவனது தொழிலை பார்க்கலாம் என இருந்தாள்.

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள். குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் வேறு போனதில் யாரை நம்பியும் விட மனமில்லாமல் குழந்தைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்து விட்டாள். அவர்கள் பள்ளி செல்ல ஆரம்பித்த வயதில் இரண்டாவதாக கர்ப்பம் தரிக்க, பின் குழந்தைகள் மட்டுமே முதன்மை என தீர்மானித்து விட்டாள்.

மஹிமா, மஹிஷா என இரட்டை பெண் குழந்தைகள் அவர்களுக்கு பின் ஹ்ருதிக் என்ற ஆண் குழந்தை. மூவரையும் கண்ணும் கருத்துமாக வளர்ப்பதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாகத்தான் அவ்வப்போது கணவனின் தொழிலில் ஏதாவது பங்கெடுத்துக் கொள்கிறாள்.

அரசியுடன் இருபத்திநாலு மணி நேரமும் கேர் டேக்கர் ஒருவர் உடனிருப்பார். மருத்துவமனை சென்றால் பிரவாகனும் அவருக்கு துணையாக இருப்பான் என்றாலும் முடிந்த வரை கீர்த்தியும் வந்து விடுவாள். கேர் டேக்கரை உடன் வர வேண்டாம் என சொல்லி விட்டு அம்மாவும் மகளுமாக வந்திருந்தனர்.

சிறப்பு வாயில் வழியாக செல்லலாம் என கீர்த்தி சொன்னதற்கு மறுத்த அரசி, “வந்தே பல நாள் ஆகிப் போச்சு. மெயின் என்ட்ரன்ஸ் வழியாவே போவோம்” என சொல்ல முதன்மை வாயில் வழியாகவே வந்தனர்.

பார்மசியில் சரத் யாரையோ சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை கண்ட அரசி கீர்த்தியை பார்த்தார்.

“சரத் இங்க மெடிகேஷன் ஸேஃப்டி கண்ட்ரோல் டீம் ஹெட். ஏதோ பிராப்லம் போல” என்றாள்.

“என்னன்னு பாரு கீர்த்தி. எதுவா இருந்தாலும் இப்படியா எல்லாரும் பார்க்க சத்தம் போடுறது?” அதிருப்தியாக சொன்னார்.

“நான் போய் கேட்டா ஃபேமிலி பிராப்லம் ஆக்கிடுவான்” என கீர்த்தி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவளது கைபேசிக்கு அழைத்தான் பிரவாகன்.

அம்மாவோடு வந்து விட்டதாக தம்பிக்கு சொன்னவள் சரத் பற்றியும் கூறினாள். தனது அறையில் இருந்தவாறே கண் காணிப்பு கேமரா மூலம் கவனித்த பிரவாகன், “நீங்க வாங்க, நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி வைத்து விட்டான்.

உடனடியாக தன் உதவியாளன் தமனை அழைத்த பிரவாகன், “மெயின் எண்ட்ரன்ஸ்ல உள்ள பார்மசில ஏதோ ப்ராப்லம். அட்மினிஸ்ட்ரேஷன்ல யாரு இப்போ டியூட்டினு பாரு, ஃபைவ் மினிட்ஸ்ல அங்க எல்லாம் கிளியர் ஆகியிருக்கணும்” என கட்டளையிட்டான்.

“இப்போதான் கால் பண்ணினாங்க சார், சரத் சார்கிட்ட இருந்த கீய டாக்டர் அன்புமலர் மிஸ் யூஸ் பண்ணியிருக்காங்க” என்றான் தமன்.

“மிஸ் யூஸ்னா?” என பிரவாகன் கேட்க தனக்கு பகிரப் பட்ட தகவலை சொன்னான் தமன்.

அப்பட்டமான எரிச்சலையும் கோவத்தையும் பிரவாகன் தன் முகத்தில் காட்ட, “வேற பிராப்லம் வராம இருக்க ஃப்ரீ பிளாக்லேர்ந்து பேஷண்ட் வெல்ஃபேர் ஃபண்ட்லேர்ந்து அந்த மெடிசின் வாங்க பட்டதா ரெகார்டு பண்ணிக்க சொல்லிட்டார் டீன். காலைல என்கொயர் பண்றதா சொல்லி அமைதியா இருக்க சொல்லிட்டார்” என விவரம் சொன்னான் தமன்.

“தென் இப்போ எதுக்கு அந்த சரத் கத்திட்டு இருக்கான்?”

“என்கிட்ட கேட்காம எப்படி கப்போர்ட் ஓபன் பண்ணினன்னு பார்மசிஸ்ட் கூட சண்டை போட்டுட்டு இருக்கார் சார். அட்மினிஸ்ட்ரேஷன் ஆளுங்க சொல்லியும் காம் ஆக மாட்டேங்குறாராம். உங்க ரிலேட்டிவ்ங்கிறதால யாராலேயும் கண்ட்ரோல் பண்ண முடியலை சொல்றாங்க” என்றான் தமன்.

ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்த பிரவாகன், “சரத்தை உடனே இங்க வர சொல்லு. வந்து வெயிட் பண்ணிட்டே கூல் ஆகட்டும்” என்றவன், “மெடிசின் திருடின டாக்டர் பேர் என்ன?” எனக் கேட்டான்.

“அன்புமலர்” என தமன் சொல்லவுமே யாரென புரிய கட்டுக்கடங்காமல் கோவம் கொண்டான் பிரவாகன்.

“நான் திரும்ப இங்க வரும் போது அந்த அன்புமலரும் இங்க இருக்கணும்” என கோவமாக சொல்லி விட்டு அம்மாவை காண்பதற்காக எழுந்தவன், “ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல வெயிட் பண்ண வைக்காத. சரத்தோட அட்ராசிட்டி எதையும் நான் பார்க்க விருப்ப படல” என சொல்லி வெளியேறினான்.

சரத்தை வரவழைத்து விட்ட தமன் மலரும் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறாள் என உறுதி படுத்திக் கொண்டு அவளையும் வரவழைத்து சரத் காத்திருந்த அறைக்கு பக்கத்து அறையில் காத்திருக்க செய்தான்.

அரசியை அவரது வீட்டுக்கே சென்று கூட மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்தான். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. இதை சாக்கிட்டாவது இங்கு வந்து செல்லலாம் என நினைத்து அவரே வந்து விடுவார்.

இன்னும் எவ்வளவு நேரம் என சலித்துக் கொண்டே சரத் காத்திருக்க ஒரு மணி நேரம் சென்ற பின்னர்தான் மருத்துவரிடம் அம்மாவை காட்டி விட்டு பிரவாகன் அவனது அம்மா மற்றும் அக்காவோடு அங்கு வந்தான்.

உறவினன் என்பதால் “என்னப்பா எப்படி இருக்க?” என நலம் விசாரித்தார் அரசி.

பவ்யமாக பதில் சொன்ன சரத் அவரையும் நலம் விசாரித்தான். பிரவாகன் கண்டு கொள்ளாமல் அறைக்கு சென்று விட அவனது அக்காவும் அம்மாவும் கூட தொடர்ந்து செல்ல அப்படி செல்ல முடியாமல் மீண்டும் வெளியில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான் சரத்.

“என்னப்பா ஏன் அப்படி சத்தம் போட்டுட்டு இருந்தானாம்?” என அரசி விசாரிக்க, பிரச்சனைகள் பற்றி அம்மாவிடம் சொல்ல விருப்ப படாதவன் “விசாரிக்கணும், வெயிட் பண்ணட்டும் கொஞ்ச நேரம்” என்றான்.

“கூப்பிட்டு கேளு, என்னன்னு நானும் தெரிஞ்சிக்கிறேன்” என்றார் அரசி.

“ம்மா, வேணாம் பிரவா பார்த்துப்பான்” என்றாள் கீர்த்தி.

பிரவாகனுக்கும் அவர்கள் முன்னிலையில் விசாரிக்க விருப்பமில்லை. ஆனால் அக்கா சொன்ன தொனி உறுத்த, “ஏன், இப்பவே கேட்டா என்ன?” எனக் கேட்டான்.

“உனக்கு தெரியாது பிரவா. இவனுக்கு ஈகோ அதிகம். என் முன்னாடி அவன் தப்ப பத்தி கேட்டா அத வச்சு வீட்ல பாலிடிக்ஸ் பண்ணுவான். எதுக்கு தொல்லை?” என்றாள் கீர்த்தி.

“இவனுக்கெல்லாம் போய் பயப்படுறியா? இரு நீ. அப்படி என்ன பாலிடிக்ஸ் பண்றான்னு எனக்கு சொல்லு. நான் பார்த்துக்கிறேன்” என்ற பிரவாகன் அவர்களை வைத்துக்கொண்டே சரத்தை உள்ளே அழைத்தான்.

சரத் நடந்தவற்றை சொல்ல அப்போதுதான் விஷயம் தெரியும் என்பது போல காட்டிக் கொண்டான் பிரவாகன்.

“கீயை இப்படித்தான் அடுத்தவங்க எடுக்கிற அளவுக்கு அஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணுவீங்களா?” என கடிந்து கொண்டான்.

சரத் சங்கடமாக பார்க்க, “அந்த டாக்டர்… அதான் மலர்னு சொன்னானே, வர சொல்லு பிரவா” என்றார் அரசி.

பிரவாகன் தமனை பார்க்க அடுத்த பத்து நிமிடங்களில் அங்கு இருந்தாள் அன்புமலர். அதற்குள் கண்காணிப்பு கேமரா துணையோடு சற்று நேரம் முன்பு அவள் பார்மசி வந்து சென்றதை எல்லாம் பார்த்திருந்தனர்.

புதிதாக இரண்டு பெண்களை அங்கு பார்த்து விட்டு பிரவாகனின் கோவத்தை எதிர் கொள்ள தக்க படி தன்னை தயார் செய்து நிமிர்ந்து நின்றாள் மலர்.

“ஒரு டாக்டர் செய்ற வேலையா இது?” எடுத்த உடன் சீறினான் பிரவாகன்.

“ஒரு உயிரை காப்பாத்த அப்படி செய்தேன். இப்ப அந்த பேஷண்ட் ப்ளீடிங் ஸ்டாப் ஆகியிருக்கு. ஷீ இஸ் ஸேஃப் நவ்” என்றாள் மலர்.

“பேஷண்ட்டோட டாக்டர் அமைதியா இருக்கும் போது நீங்க செஞ்சது அதிக பிரசங்கி தனம். திருட்டு” என்றான் பிரவாகன்.

இந்த வார்த்தையை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் அந்த நேரம் எதிர் கொள்ள முடியாமல் அதிர்வும் முகக் கன்றலுமாக நின்றிருந்தாள் மலர்.

“பிரவா இவங்க டாக்டர் டா” மெல்லிய குரலில் கீர்த்தி சொல்ல, அரசியும் பார்வையால் மகனுக்கு கண்டனம் தெரிவித்தார்.

யார் பேச்சையும் கண்டு கொள்ளாமல் மலரையே கோவமாக பார்த்துக் கொண்டிருந்தான் பிரவாகன்.

தன்னை திடப்படுத்திக் கொண்டவள், “எதையும் யோசிச்சு செய்ற அளவுக்கு அவகாசம் இல்லை சார். திருட்டுங்கிறது யாருக்கும் தெரியாம பிளான் பண்ணி செய்றது. கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் தெரிய வரும்னு நல்லா தெரிஞ்சுதான் அப்படி செஞ்சேன். நான் திருடல, வேற வழி இல்லாம பிராப்பர் சேனல் மூலமா மெடிசின் வாங்கறதுக்கு உண்டான டைம் இல்லாம பண்ணிட்டேன்” என்றாள்.

“பேஷண்ட் வெல்ஃபேர் ஃபண்ட் பத்தி தெரியும்தானே?” கோவம் குறையாமல் கேட்டான்.

இலவச பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருந்துகள் தேவைப்படும் நேரங்களில் நோயாளிகள் நல சேவை நிதியை பயன் படுத்திக் கொள்ளலாம். பிரச்சனை என்னவென்றால் இது பற்றி அங்கு யாருக்கும் தெரியாது. தெரியப்படுத்தப் படவில்லை என்று கூட சொல்லலாம்.

“சார் அதுக்கு ஃபார்ம் ஃபில் பண்ணனும், அதுல தர்மேந்திரன் சார் சூப்பரிண்ட்டெண்ட் ரெண்டு பேரோட சைன் வேணும்”

“அப்போ அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கிறது தெரியும்?”

“இப்பதான் சீனியர் டாக்டர் சொல்லி கமலவேணி மேடமுக்கு தெரிய வந்தது. எனக்கும் இப்போதான் தெரியும்” என்றாள்.

“என்ன பிரவா இது? டாக்டர் கமலவேணியே பல வருஷமா இங்க இருக்காங்களே. இது பத்தி அவங்களுக்கே தெரியாதா?” அதிருப்தியாக கேட்டார் அரசி.

“யார் மேலம்மா தப்பு? ஏன் தெரிஞ்சுக்காம விட்டாங்க?” அதற்கும் கோவப்பட்டான் பிரவாகன்.

“எல்லாருக்கும் தெரியப்படுத்த வேண்டியது யாரோட வேலை சார்? பேஷண்ட் வெல்ஃபேர் ஃபண்ட்லேர்ந்து ஃபண்ட் குறைஞ்சுக்கிட்டே இருக்கு. குறையற பணம் எந்த பேஷண்ட்டுக்காகவும் உபயோக படுத்த படலைங்கிறதுதான் உண்மை” என மலர் சொல்ல அரசியும் கீர்த்தியும் அதிர்ச்சியாக பிரவாகனை பார்த்தனர்.

“அந்த ஃபண்ட் பத்தி இப்போதான் தெரியும். அதுக்குள்ள அது தவறா பயன்படுத்த படுறது வரை தெரிஞ்சுக்கிட்டீங்களா? ரொம்ப ஃபாஸ்ட்தான் நீங்க” நக்கலாக சொன்னான் பிரவாகன்.

இது பற்றி சொன்ன சீனியர் மருத்துவர்தான் தவறான உபயோகம் பற்றியும் கூறியிருந்தார். தான் சொல்லி அவருக்கு தர்மேந்திரன் மூலம் பிரச்சனை வருமோ என பயந்தவள் அமைதி காத்தாள்.

“ஆதாரமில்லாத குற்ற சாட்டுக்களை சொல்ல வேணாம் டாக்டர் மலர். உங்க இமாஜினேஷனை எல்லாம் கேட்க டைம் இல்லை என்கிட்ட. வேலைக்கு சேர்ந்த நாலைஞ்சு மாசத்துல எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஹைபரா பிஹேவ் பண்ணாதீங்க” என மீண்டும் சீறினான்.

“எல்லாம் இல்லாட்டாலும் அங்க நிர்வாகம் சரியில்லைனு எனக்கு தெரியும். அதுக்குத்தான் நான் உங்ககிட்ட நேத்து பேசினேன். நீங்கதான் கண்டுக்கவே இல்லை” என்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement