Advertisement

அத்தியாயம் -30(3)

செல்வம் நம்பவில்லை, நேரம் அப்போதே இரண்டை தாண்டி இருந்தது. நன்றாக இருப்பதாகத்தான் சொல்லி விட்டேனே, உறக்கத்தை கெடுத்து கொண்டு வருவாரா? வேண்டுமானால் காலையில் சீக்கிரமாக வந்து பார்ப்பார் என்றார்.

ஆனால் மலர் சொன்னது போலதான் நடந்தது. சில நிமிடங்களில் அங்கு வந்து நின்றான் பிரவாகன். ஆப்பிள் துண்டுகள் இருந்த தட்டை ஓரமாக வைத்து விட்ட மலர் ஆயாசமாக சுவரை பார்த்தாள்.

“இப்ப நல்லா இருக்கா மாப்ள” என செல்வம் சொல்லும் போதே பசி தீராததன் காரணமாக அவளுக்கு மீண்டும் உமட்ட, என்ன செய்வதென தெரியாமல் மனைவியை அழைக்க உள்ளே ஓடினார் செல்வம்.

மலரின் பெற்றோர் வருகையில் அறைக்கு அழைத்து போயிருந்தான் பிரவாகன். அவன் சட்டையை கண்டதுமே அவன் மேலே வாந்தி செய்து விட்டாள் என்பது இவர்களுக்கு புரிந்தது. மலர் படுத்திருக்க சுடு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் விமலா.

உபயோகம் செய்யாமல் இருந்த புதிய டி ஷர்ட் கொண்டு வந்து பிரவாகனிடம் கொடுத்தார் செல்வம். அவன் மாற்றிக் கொண்டு வர, மலர் பழங்கள் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

“நல்ல தூக்கத்துல எனக்கு தெரியலை மாப்ள, இனிமே நான் இவ ரூம்லேயே இருந்துக்கிறேன்” என்றார் விமலா.

“எதுக்கு சிரமம் அத்தை உங்களுக்கு? நான் நாளைக்கே அழைச்சிட்டு போயிடுறேன்” என பிரவாகன் சொல்ல, அவன் சொன்ன தொனியில் அவர்களால் அவனை எதிர்த்தோ மறுத்தோ பேச முடியாமல் போனது.

மகளின் மனநிலை தெரிந்த காரணத்தால், “இனிமே இப்படி ஆகாது மாப்ள, ஒரு வாரமாவது இங்கேயே இருக்கட்டும்” என்றார் செல்வம்.

“சில விஷயங்கள்ல நான் ரிஸ்க் எடுக்கிறது இல்ல மாமா. நாளைக்கு ஈவ்னிங் வர்றேன்” என முடிவு போல அறிவித்து விட்டு சென்று விட்டான்.

விமலா அதிர்ந்து போய் பார்த்திருக்க, “நீதான அவருக்கு சப்போர்ட் பண்ணின?” எனக் கேட்டார் செல்வம்.

“ஏன் தாலி பிரிச்சு கோர்த்த அன்னைக்கு நீங்க சப்போர்ட் பண்ணலையா? இவ உடனே நம்மள கூப்பிட்ருந்தா இப்படி சொல்லிட்டு போவாரா? ஹாஸ்பிடல்ல நம்மள விட அவர்தான் படாத பாடு பட்டார், அதான் கூட்டிட்டு போறேன்னு சொல்றார். நாளைக்கு நல்ல விதமா எடுத்து சொல்லலாம்” என்றார் விமலா.

அதற்கு பதிலாக செல்வம் ஏதோ பேச விமலா பதில் பேச, “விடுங்க, நான் போறேன். தூங்க போங்க” என முடித்து வைத்தாள் மலர்.

சொன்னது போலவே மறுநாள் மாலையில் வந்து மனைவியை கையோடு அழைத்தும் சென்று விட்டான் பிரவாகன்.

மலர் வீடு வந்த பின்னர்தான் திருமணம் ஏன் என்ற காரணம் அரசிக்கும் அவர் மூலமாக கீர்த்தி, மிருணா, விஷ்ணு போன்றோருக்கும் தெரிய வந்தது. மனைவியின் அண்ணன் மீது விஷ்ணுவுக்கு கடுமையாக கோவம் வந்தது. மலரிடம் கைப்பேசி வாயிலாக பேசினான். விஷ்ணுவிடம் பெரிய குறையாக இதை சொல்லாமல் சரியாகி விடுவேன் எனும் ரீதியிலேயே பேசி கைப்பேசியை வைத்தாள் மலர்.

கீர்த்தி வீடு தேடி வந்து தம்பியிடம் ‘திருமணத்தை தவிர வேறு வழியே உனக்கு தெரியவில்லையா?’ எனக் கேட்டு சண்டையிட்டாள். மிருணாவும் கைப்பேசி வாயிலாக அண்ணனிடம் பேசினாள்.

தான் செய்தது ஒன்றும் அத்தனை பெரிய இமாலய தவறில்லை என அனைவருக்கும் இறுமாப்போடு பதில் சொல்லி அவனது வேலைகளை கவனிக்க சென்று விட்டான்.

நொந்து போன அரசி மருமகளிடம் மகன் சார்பாக மன்னிப்பு கேட்க, மலர் பதறி விட்டாள்.

“ஐயோ அத்தை! நீங்க என்ன செய்வீங்க? உங்க மகன் யார் பேச்சையும் கேட்க மாட்டார்னு எனக்கு நல்லாவே தெரியும். இன்னொரு முறை மன்னிப்பு அது இதுன்னு எல்லாம் சொல்லி என்னை சங்கடம் செய்யாதீங்க அத்தை” என்றாள்.

“நீ அவனை விட்டு போறேன்னு எல்லாம் முடிவெடுத்திடாதம்மா. யார் சொல்லியும் நடக்காத ஒண்ணை உனக்காக அவன் செய்யலையா? அதை போல உனக்காக அவன் குணமும் மாறும். பொறுமையா இரும்மா, நீதான் என் நம்பிக்கை” என்றார் அரசி

“நான்தான் வந்திட்டேனே” என சொல்லி சென்று விட்டாள் மலர்.

 ஓரமாக நின்று பார்த்திருந்த கீர்த்திக்கு மலரை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.

“மலரோட பக்கத்திலேருந்து நாம பார்க்கணும் மா. போய்டாத போய்டாதன்னு அதையே சொல்லாத. அவளும் ஒரேடியா அவனை விட்டு போக நினைக்கல, ஆனா இத கடந்து வர வேணாமா? அதுக்கு கூட டைம் கொடுக்காம அழைச்சிட்டு வந்திட்டானே?” என்றாள் கீர்த்தி.

“அவன் செஞ்சது சரிதான் கீர்த்தி. இந்த நேரம் இவங்க பிரிஞ்சு இருக்கிறது சரி கிடையாது. நான்தான் இருக்கேன்ல, நான் மலரை கவனிச்சுக்கிறேன்” என்றார் அரசி.

“உனக்கே உடம்பு முடியலை, அங்க இருந்தா அவங்க அம்மா பார்த்துப்பாங்க.. ஏதோ நைட்ல அசந்து தூங்கிட்டாங்க, அதுக்காக இவ மேல அக்கறையே இல்லைனு அவன் சொல்லி கூட்டிட்டு வந்தது டூ மச்! நான் இன்னொரு நாள் வர்றேன்” என சொல்லி சென்று விட்டாள் கீர்த்தி.

மலரை கவனித்துக் கொள்ள யாருக்கும் எந்த சிரமமும் இல்லாமல் அவளுக்காகவே பிரத்யேக கவனிப்பாளர்களை நியமித்து விட்டான் பிரவாகன்.

****

அன்று அதிகாலையிலேயே விஷ்ணுவை எழ சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தாள் மிருணா.

“நான்தான் சொல்றேன்ல… உனக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ், அதான் வரலை. சும்மா படுத்தாத மிரு” சலிப்போடு சொல்லி புரண்டு படுத்தான் விஷ்ணு.

“ஹண்ட்ரெட் பெர்சண்ட் கேரண்டி இல்லைன்னு சொன்னீங்கதானே? ஒரு வேளை அப்படி ஆகியிருந்தா?”

“ஆகியிருந்தா என்ன? பெத்து கொடு வளர்த்துக்கிறேன்” என அவன் சொல்ல, அவன் கண்களை திறக்க சொல்லி அவனை உலுக்கி எடுத்து விட்டாள்.

“என்ன மிரு உன் பிராப்லம்? என்னை நம்பாம ஒரு வாரமா நச்சு பண்ணுகிட்டு இருக்க. அப்படியே நீ ப்ரெக்னன்ட்னே வச்சுக்குவோம், என்ன செய்யலாம்னு இருக்க?”

“என்ன விஷ்ணு இப்படி கேட்குறீங்க? என் ஃப்ரெண்ட் சாய் தெரியும்தானே? அவனும் அவன் வைஃப் ரூபாவும் குழந்தை பெத்துக்கிட்டு எவ்ளோ கஷ்ட படுறாங்க. இன்னும் பாப்பாவை க்ரட்ச்ல விடுறாங்க. எனக்கு அப்படிலாம் என் குழந்தையை கஷ்ட படுத்தற ஐடியா இல்ல. என் பாப்பாக்கு எல்லாமே நான்தான் செய்வேன்”

“உன்னை செய்ய வேணாம்னு நான் சொன்னேனா?” இரவில் தாமதமாக வந்தவனை எழுப்பி விட்டு இல்லாத ஒரு விஷயத்தை தம் கட்டி அவள் பேசிக் கொண்டிருப்பதில் அவனுக்கு எரிச்சலாக வந்தது.

“நான்தான் இப்போ குழந்தை வேணாம்னு ஸ்ட்ரிக்ட்டா சொன்னேன்ல?”

“நமக்கு எது சூட் ஆகுமோ அப்படித்தான் நாமளும் பாதுகாப்பா இருக்கோம். பெர்மனெண்ட் ஃபேமிலி பிளானிங் கூட ஃபெயில் ஆக சான்ஸ் இருக்கு. இப்போ நீ ப்ரெக்னண்ட் இல்லை, அப்படி இருந்தா பெத்துக்கலாம். இப்ப ஆள விடு” என்றவன் மீண்டும் படுத்து விட்டான்.

“அதெல்லாம் முடியாது. என் பேஷனை நான் விட்டு தர முடியாது. ப்ரெக்னண்ட் ஆனா எப்படி என்னால என் வேலைய பார்க்க முடியும்?”

அவளை கோவமாகவும் அழுத்தமாகவும் பார்த்தவன், “இப்ப நீ ப்ரெக்னண்ட்னே வச்சுக்குவோம், அடுத்து என்ன செய்றதா இருக்க?” எனக் கேட்டான்.

பதில் சொல்ல தெரியாமல் அவனை பார்த்தவள், ஒரு நிமிடத்திற்கு பிறகு “நமக்கு இப்ப வேணாம்னுதானே இருந்தோம்?” எனக் கேட்டாள்.

“ஸோ…”

மிருணா எச்சில் கூட்டி விழுங்க, அவளை கூர்மையாக பார்த்திருந்தவன், “உன்கிட்டருந்து இப்படி ஒரு மௌனத்தை நான் எதிர்பார்க்கல” என அதிருப்தியாக சொல்லி, உடனே எழுந்து தயாராகி வெளியில் சென்று விட்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கர்ப்பம் இல்லை என்பதை சோதனை மூலமாக அவளுக்கு சொன்னவன் அடுத்த வார்த்தை பேசவில்லை. ஏதாவது பேசுவான் என அவன் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டு அவன் பின்னாலேயே வளைய வந்தாள் மிருணா.

காந்திமதி வந்து சமையல் முடித்து விட்டு சென்றதும் அமைதியாக சாப்பிட்டார்கள்.

“விஷ்ணு… நான் தப்பா எதுவும் சொல்லலை, அது அப்படி இருக்குமோன்னு ஷாக்ல…” அடுத்த வார்த்தை வராமல் திணறினாள்.

“நான் ஹாஸ்பிடல் கிளம்பறேன், நைட் வர இன்னிக்கும் லேட் ஆகும், நீ தூங்கிடு, நான் ஸ்பேர் கீ வச்சிருக்கேன்” என அவளது முகத்தை பாராமல் சொன்னவன் கிளம்பி விட்டான்.

அவனது கோவ முகத்தை தாள முடியாமல் பாரமான மனதோடு மிருணாவும் புறப்பட்டு சென்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement