Advertisement

அத்தியாயம் -30(2)

கணவரை விமலா கடிந்து கொள்ள, “மலருக்கு கஷ்டமா இருக்காதா? நீ என்ன அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க? லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு நான் நினைச்சிட்டு இருந்தேன், எனக்கே அதிர்ச்சியா இருக்கும் போது மலருக்கு இருக்காதா?” எனக் கேட்டார்.

“லவ் பண்ணி கல்யாணம் நடக்கலன்னு அவ்ளோ வருத்தமா உங்களுக்கு? அப்படி பார்த்தா நான்தான் அதிகம் வருத்த படணும்? கல்யாணம் ஆகி கூட எம்புருஷன் என்னை லவ் பண்ணல” என வெடித்தார் விமலா.

“விமலா! அமைதியா பேசு. நான் என்ன சொன்னா நீ என்ன சொல்ற? நாமளே மலரை புரிஞ்சுக்கலைனா அவருக்கு எப்படி புரியும்?” எனக் கேட்டார்.

“மலர் என்ன கஷ்டபடுறா அவர்கிட்ட? ஹாஸ்பிடல்ல என்ன கூத்து கட்டி அடிச்சா? ஹவுஸ்கீப்பர்ஸ் வரை வேடிக்கை பார்த்தாங்க. என்னடா இது எம் டி வைஃப் இப்படி சண்டை போடுறாங்களேன்னு ஆளாளுக்கு பேசினாங்க. ஆனாலும் மாப்ள உங்க பொண்ணை எப்படி தாங்கினார்? ஒவ்வொரு முறை அவ வாந்தி எடுத்தப்பவும் அவர் துடிச்ச துடிப்பும் தவிப்பும் பார்த்தீங்கதானே? அதெல்லாம் பொய்யா?”

“அகிலாகிட்ட பேசி பாருங்க, அவ்ளோ செஞ்சு கட்டிக் கொடுத்தோம். அவங்க மாமியார் வீட்ல எப்படில்லாம் குறை சொல்றாங்க, அவ வீட்டுக்காரர் அம்மாவை எதுவும் சொல்லாம எப்படி வேடிக்கை பார்ப்பார்னு கதை கதையா சொல்வா” குமுறலாக பேசினார் விமலா.

“அதுக்காக என் பொண்ணு கோவமே படக்கூடாது, ஈஸியா ஏத்துக்கணும்னு சொல்றியா?”

“உங்க பொண்ணு… ஹ்ம்ம்…” விரக்தியாக கேட்டவர், “நான் உங்களை ஈஸியா ஏத்துக்கல? அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு வாழல? என் அளவுக்கு அவ்ளோ கஷ்டம் இல்லை நம்ம பொண்ணுக்கு” என்றவரின் குரல் கலங்கியிருந்தது.

“ஏய் பேச்சு வாக்குல என் பொண்ணுன்னு சொல்லிட்டேன். உடனே தப்பா அர்த்தம் கண்டுபிடிச்சி பேசாத” என்றார் செல்வம்.

பெற்றோரின் வாக்குவாதத்தை காதில் வாங்கிக் கொண்டிருந்த மலர் வெளியில் வந்து விட்டாள்.

கணவரை விடுத்து மகளை பார்த்த விமலா, “இன்னிக்கு தேதி வரைக்கும் உங்கப்பா மனசுல என் அக்காதான் வாழ்ந்திட்டு இருக்கா. இப்பவே இப்படினா கல்யாணம் ஆன புதுசுல என் நிலைமை என்னவா இருக்கும்னு நினைச்சு பாரு. உரிமையா ஏதாவது உங்கள சொன்னா கூட அவங்கள திட்டாதன்னு வந்து நிப்பார். உறவுக்காரங்கள பத்தி சொல்லவே வேணாம்”

“அம்மான்னு நீங்க ஏத்துகிட்டாலும் உங்களுக்கு அம்மாவா அப்படி எல்லா முடிவையும் என்னால எடுக்க முடியுதா? உங்க இஷ்டத்தை தான் என் முடிவா மாத்திக்கணும். இல்லைனா ‘ இவ சித்தி… அதான் இப்படி செய்றான்னு’ உன் அப்பா வாயால சொல்லாட்டாலும் மனசுல நினைப்பார்”

 “என்ன தப்பு பண்ணினேன் நான்? இப்போ கூட பரத் இங்க மாப்ள காலேஜ்ல படிக்க வாய்ப்பு இருக்கு, எம்பையன் வீட்லேருந்தே காலேஜ் போகலாம். ஆனாலும் என்னால அழுத்தி சொல்ல முடியுதா? உன்னை வச்சுத்தானே உங்கப்பா முடிவு எடுக்கிறார்? எதுக்காக இவ்ளோ அட்ஜஸ்ட்மெண்ட்டோட நான் வாழணும்?” கண்ணீர் வழிய ஆதங்கமாக கேட்டார்.

மனைவியின் மனம் எப்படியெல்லாம் கஷ்ட பட்டிருக்கிறது என திகைத்துப் போனவராக செல்வம் பார்த்திருக்க, அம்மாவின் அருகில் வந்து அவரை ஆதரவாக பிடித்துக்கொண்ட மலர், “பரத்தை ஊரை விட்டு அனுப்ப நினைக்கல ம்மா நான். அவர் காலேஜ்னா நாம அவர்கிட்டருந்து ஏதோ சலுகை வாங்கின மாதிரி ஆகிடும், அப்படி வேணாம்னுதான்…” என விளக்கம் சொன்னாள்.

“பணம் கட்டி கூட அங்க சேர்க்க வேணாம்னு சொன்னதானே? உரிமையா என்னால அடிச்சு பேச முடியலையே. பெத்த தாயா உள்ள ரோல் ஈஸி மலர், அதை விட உயிர கொடுத்து வளர்த்து, பெத்த தாயோட இடமும் கிடைக்காம ஊர் உலகத்துக்கு பயந்து பார்த்து பார்த்து செய்ற நல்ல மாற்றாந்தாய் ரோல் ரொம்ப கஷ்டம்” என்றார்.

“அம்மா!” அதிர்ந்தாள் மலர்.

மலரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டவர், “என் கதையை விடு. தப்பும் சரியும் சேர்ந்த கலவைதான் மனுஷன். புருஷன் பொண்டாட்டின்னா மனஸ்தாபம் வர்றது சகஜம். விட்டுட்டு போறதுதான் முடிவுன்னா இங்க ஒருத்தியும் புருஷன் கூட குடும்பம் பண்ண மாட்டா. மனசு சரியில்லன்னா சரியாகுற வரை நம்ம வீட்ல இரு. வேற பைத்தியக்காரத்தனமா முடிவு செய்யாத” என்றார்.

“அவர் கூட சண்டை போட்டு போட்டு என் நிம்மதி போகுதும்மா, கொஞ்ச நாளைக்கு இட மாற்றமா போய் இருக்கேன்னு சொல்றது அவ்ளோ பெரிய தப்பா?”

“எதுக்காக சண்டை போடற? உன்னை உள்ளங்கைல் வச்சு தாங்குறவர் கூட எந்த காரணத்துக்காக சண்டை போடற? இதுவரைக்கும் ஹாஸ்பிடல் விஷயமா சண்டை போட்ட, இப்போ பத்திர விவகாரம். உனக்கு அவர்கிட்ட ஒத்து வராத விஷயங்களை பூதக் கண்ணாடி வச்சு பார்க்காம நல்ல விஷயங்களை ஏறெடுத்தாவது பாரு மலர்”

“என் நிலைய உங்களுக்கு எப்படி எக்ஸ்பிளைன் பண்ணுவேன்? எனக்கு தனியா ஓ ன்னு கத்த கூட ஸ்பேஸ் இல்லையா?”

“கத்தலாமே, எனக்கும் ஸ்பேஸ் வேணும், வா ரெண்டு பேரும் சேர்ந்து கத்தலாம்” எரிச்சலாக விமலா சொல்ல, மலரின் முகம் சுணங்கி விட்டது.

“இப்போ அவரை விட்டுட்டு போனா உங்களுக்குள்ள விரிசல் இன்னும் அதிகம்தான் ஆகும். உன்னை கொடுமை படுத்தறவர் கூட சகிச்சுக்கிட்டு வாழுன்னா நான் சொல்றேன்? நடந்ததை நினைச்சு அதையே பிடிச்சு தொங்காத. புள்ள வயித்துல உண்டாகுறதிலேருந்து உன் வயிறு வளருறது புள்ளைங்க அசையுறதுன்னு ஒவ்வொண்ணையும் அனுபவிக்கிற உரிமையை அவர்கிட்டருந்து பறிக்க போறியா? பின்னாடி உன்னையே உன்னால மன்னிக்க முடியாது” என்றார்.

மலர் அமைதியாக நிற்க, பரத் வரும் அரவம் கேட்க அனைவரும் இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டனர். ஆளுக்கொரு மன நிலையில் இருந்தாலும் யாரும் அதற்கு மேல் பேசாமல் சாப்பிட்டு உறங்க சென்றனர்.

மலருக்கு மனம் விட்டுப் போனது போலிருந்தது. இடம்தான் பிரச்னை என்றால் அதற்கும் மிரட்டி காரியத்தை சாதித்து கொண்டிருக்கலாமே, உயிரும் உணர்வும் உள்ள என் வாழ்க்கையோடு விளையாடுவானா? வாழ்வின் பெரும் பங்கு வாழ்க்கை துணையோடுதான், ஏதோ பிரச்னை தீரதான் உன்னை மணந்தேன் என்பது எத்தனை வலி கொடுக்கும்? அதை என்றேனும் மறக்க முடியுமா? அவன் எத்தனை அக்கறை அன்பு காட்டினாலும் நெருஞ்சி முள் போல நெஞ்சை குத்தி கிழிக்குமே.

இன்னுமின்னும் அவன் எது செய்தாலும் இதற்கு பின் என்ன காரணமோ என்ற எண்ணம் எழப் போவதை தடுக்க முடியுமா? இப்படித்தான் என் வாழ்க்கை செல்லும் என்றாலும் அவன் விழுங்க செய்த பாராங்கல் செரிக்க கூட எனக்கு நேரம் கிடையாதா? என்னை ஆசுவாச படுத்திக் கொள்ள உரிமை இல்லையா எனக்கு?

இதோ இப்போது கூட உன் தம்பியை சென்னையில் படிக்க விடாமல் செய்வேன் என மிரட்டல் விடுக்கிறான். விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்றாலும் நான்தான் செய்ய வேண்டும்…

இதை விட விமலாவின் மனக் குமுறல் வேறு பாடாய் படுத்தியது. பெற்ற அம்மாவைவிட உயர்ந்த இடத்திலதானே வைத்திருக்கிறாள், இப்போது கூட தம்பிக்காக தனக்கென இருந்த இடத்தை விற்று கொடுத்து விட்டாள். நான் எங்கு தவறினேன், அவரிடம் ஏன் இவ்வளவு ஆதங்கம்? அம்மாவை கவனிக்க தவறி விட்டேனா? என பலவித சிந்தனைகள்.

தான் இங்கு இருந்தால் அதை முன்னிட்டு அப்பா அம்மாவுக்கு சண்டையாகிப் போகுமோ, தான் இங்கிருந்து புகுந்த வீட்டுக்கே செல்வதுதான் நல்லதா? தன் நிலையை எண்ணி மலருக்கு சுய இரக்கமாக இருக்க கண்ணீர் பெருகியது.

சில நிமிடங்கள் அழுகையோடு படுத்திருந்தவள் முகம் கழுவி வந்தாள். பசி எடுத்ததில் உமட்டிக் கொண்டு வர சத்தம் செய்யாமல் சமையறை சென்று பார்த்தாள். பழங்கள் எடுப்பதற்குள் ஓங்கரித்துக் கொண்டு வந்தது வாந்தி. அறைக்கு ஓடி சென்று தன்னை தானே கவனித்துக் கொண்டவள் பின் மீண்டும் சமையலறை வந்தாள். ஆப்பிள் பழங்களை நறுக்கி எடுத்துக் கொண்டு ஹால் வந்தவள் மருந்தாக நினைத்து சாப்பிட்டாள்.

மீண்டும் அழுகை நிற்காமல் வந்தது. கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டே வெளியில் வந்தார் செல்வம். மகளின் அழுத முகமும் தனியாக அமர்ந்து ஆப்பிள் துண்டுகளை சாப்பிட்டு கொண்டிருப்பதையும் கண்டவர், தொடர்பை துண்டிக்காமலே, “என்னம்மா என்ன ஏன் அழற? என்ன செய்யுது?” எனக் கேட்டார்.

வேகமாக கண்களை துடைத்துக் கொண்டவள் நடந்ததை சொல்லி, “இல்லையே நான் அழலப்பா” எனும் போதே தொண்டை அடைத்துக் கொண்டது.

மகளை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டவருக்கு மாப்பிள்ளை தொடர்பில் இருப்பது நினைவு வர கைப்பேசியை காதில் வைத்தார். தொடர்பு துண்டிக்க பட்டிருந்தது.

மலரின் வீட்டுக்கு வெளியில்தான் ஆட்கள் நிறுத்தி வைத்திருக்கிறானே. நடு இரவில் மலரின் அறையிலும் சமையலறையிலும் மட்டும் விளக்கு எரிகிறது என அவனுக்கு செய்தி சேர்ந்திருக்க மாமனாரை எழுப்பி விட்டு விட்டான்.

மாப்பிள்ளைத்தான் அழைத்து என்னவென பார்க்கும் படி சொன்னதாக செல்வம் சொல்ல, “அச்சோ ஏம்ப்பா, கால் கட் பண்ணிட்டு என்கிட்ட பேசுறதுக்கு என்ன?” என எரிச்சல் பட்டாள்.

“பயந்து போயிருப்பாரோ? இரு திரும்ப கால் பண்றேன்” என்றவர் அவனுக்கு அழைக்க முதல் ரிங்கில் எடுத்தவன், “அவளுக்கு என்ன மாமா, ஹாஸ்பிடல் போலாமா? வெளில கார் இருக்கே, நீங்க கிளம்புங்க நான் நேரா ஹாஸ்பிடல் வர்றேன்” என பட படத்தான்.

“என்னை பேச விடுங்க மாப்ள” என்றவர் விவரம் சொல்ல, “என்ன மாமா நீங்க? அவ கூடதானே இருக்கீங்க? தனியா வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? இவ்ளோ கேர்லெசாவா அவளை கவனிப்பீங்க? எப்படி இருக்கா இப்போ?” என்றான்.

அவனை சமாதானம் செய்து கைப்பேசியை வைத்தவர், ஏன் எங்களை அழைக்கவில்லை என மகளையும் கடிந்து கொண்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்லாமல், “அவர் இங்கதான் வந்திட்டு இருப்பார்” என இறுகிய முகத்தோடு சொன்னாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement