Advertisement

பேரன்பு பிரவாகம் -30

அத்தியாயம் -30(1)

சென்னைக்கு அழைத்து செல்லுங்கள் என்ற மலரை அதிர்ச்சியாக பார்த்திருந்தனர் அவளது பெற்றோர்.

அவர்கள் எதுவும் சொல்வதற்கு முன் பிரவாகனின் கார் வருவது தெரிய, “நான் தூங்கிட்டேன்னு சொல்லிடுங்க” என சொல்லி உள்ளே சென்று விட்டாள் மலர்.

மாப்பிள்ளையை வரவேற்று உபசரித்தனர் செல்வமும் விமலாவும். சம்பிராதயமாக அவர்களிடம் இரண்டு நிமிடங்கள் பேசியவன் மலரை பார்க்க எழுந்தான்.

 சென்னைக்கு சென்று விடலாம் என மலர் சொன்னதை பகிர்ந்தார் விமலா. பிரவாகனின் முகம் இறுக்கமாக, ‘இப்போது போய் அதை ஏன் சொன்னாய்?’என கண்டிப்பது போல மனைவியை பார்த்தார் செல்வம்.

“உங்களால அவளை சமாதானம் செய்ய முடியுமா? எப்படியும் மாப்பிள்ளைக்கு தெரியத்தானே போகுது? அவர் பார்த்துக்குவார்” என விமலா சொல்ல, மலரின் அறைக்கு சென்று விட்டான் பிரவா.

சுவரப் பக்கம் பார்க்க படுத்திருந்த மலருக்கு அவன் உள்ளே வந்ததை உணர முடிந்தது. அவனிடம் பேசவே பிடிக்கவில்லை. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“நீ தூங்கிறதுக்கும் தூங்குற மாதிரி நடிக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாமதான் உன் கூட வாழ்ந்திட்டு இருக்கேன்னு நினைச்சியா?” அலட்சியமாக கேட்டுக் கொண்டே நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு சட்டமாக அமர்ந்து கொண்டான்.

அவள் திரும்பாமல் வீம்பாக அப்படியே படுத்திருந்தாள். அரை மணி நேரம் தாண்டிய பிறகு மலரால் ஒரே பக்கமாக படுக்க முடியாமல் உடல் வலித்தது. இன்னும் பத்து நிமிடங்கள் சமாளித்து பார்த்தவள் முடியாமல் திரும்பி படுத்து போர்வை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

“எனக்கு முக்கியமான எதையும் என்ன செய்தும் என் கூட தக்க வச்சுப்பேன், எந்த காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு இட விஷயத்துலேயே நீ உணர்ந்திருப்ப மலர். எந்த நம்பிக்கையில என்னை விட்டு உன்னை போக விடுவேன்னு நினைச்ச?” என நிதானமாக கேட்டான்.

அவன் என்ன பேசினாலும் மௌனம் சாதித்து திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தவள் போர்வையை விலக்கி எழுந்தமர்ந்தாள்.

 தளர்வாக அமர்ந்திருந்தவன் கால்களை தரையில் ஊன்றி நாற்காலியின் முன்னிரு கால்களையும் உயர்த்தி பின் மீண்டும் தரையில் பதித்து என செய்து கொண்டிருந்தான்.

எரிச்சல் படர அவள் பார்க்க புருவங்கள் உயர்த்தி, “ஹ்ம்ம்… எப்படி சென்னை போவ மலர் என்னை விட்டு?” எனக் கேட்டான்.

“நான் நிம்மதியா இருக்கணும். நான் போகத்தான் போறேன்” என அழுத்தமாக சொன்னாள்.

“ஆம் சாரி மலர். இப்போ டைட் ஷெட்யூல், ஸோ உன்னை சென்னை அழைச்சிட்டு போறது இப்ப என்னால முடியாது. கொஞ்ச நாள் ஆனதும் அழைச்சிட்டு போய் சென்னையை நல்லா சுத்தி காட்டுறேன்” நாற்காலியில் ஆடிக் கொண்டே சொன்னான்.

“உங்ககிட்ட பேச விருப்பமில்ல எனக்கு”

“ம்ம்… பேசாத. ஆனா என் பசங்கள என்கிட்டருந்து பிரிக்கிற உரிமை உனக்கில்ல”

“குழந்தைங்க பிறக்கட்டும், வந்து பாருங்க. அதுவரை என்னை ஆள விடுங்க”

“குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வரவா? என்னிக்கு எம்புள்ளைங்க உன் வயித்துல வந்திடுச்சோ அன்னிக்கே அவங்கள கவனிச்சுக்கிற பொறுப்பு எனக்கு வந்தாச்சு. டே பை டே என் பசங்க வளர்றது என் கண்காணிப்புலதான் நடக்கும். நீ கேட்ட எல்லாத்தையும் செஞ்சு தர்றேன், செய்றத்துக்கும் ரெடியா இருக்கேன். அதுக்காக உன்னையவே அனுப்புவேன்னு நினைச்சியா?” எனக் கேட்டவன் மெல்லிய சத்தத்தில் சிரித்தான்.

“நான் போவேன், என்ன செய்ய முடியும் உங்களால?”

“உன்னை போக விடாம தடுக்க என்ன வேணா செய்ய முடியும் மலர். உன் தம்பி சென்னைல படிக்க போறானா? இங்க அவ்ளோ பெரிய காலேஜ் கட்டி வச்சிருக்கேன், என் மச்சான் ஏன் எங்கேயோ போகணும்? அவன் மெடிசின் கனவு நினைவாகனும்னா அன்பு மெடிக்கல் காலேஜ்ல படிச்சாதான் ஆச்சுன்னு செய்ய முடியாதா என்னால?”

“ச்சீ… மிரட்டி மிரட்டி உங்க காரியத்தை சாதிச்சுக்கிறத விடவே மாட்டீங்களா?”

“எமோஷனலா என்னை லாக் பண்ணி உனக்கு வேண்டியதை நீ சாதிச்சுக்கல? உனக்கு தெரிஞ்ச வழிய நீ கையில எடுக்கிற, எனக்கு தெரிஞ்சத நான் செய்றேன்”

“ஓ பரத் இங்கேயே படிக்கட்டுமே? நானும் சென்னை போகல” மலர் சொல்ல, “குட்!” என்றான் பிரவாகன்.

“குஜராத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம்னு எங்கேயாவது போறேன். உங்களை விட்டு எவ்ளோ தூரம் போக முடியுமோ அவ்ளோ தூரம்…” மலர் பேசிக் கொண்டிருக்க சத்தமாக சிரித்தான் பிரவா.

மலர் பேச்சை நிறுத்தி விட்டு அவனை பார்க்க, “உன்கிட்ட கோவ படாம நிதானமாதான் உன்னை ஹேண்டில் செய்யணும்னு முடிவு பண்ணியிருக்கேன் மலர். எம்மேல கோவம்னா கூட இருந்து சண்டை போடலாம். என் மண்டைய கூட உடைக்கலாம். என்னை விட்டு போறதுங்கிறது உன் சக்திக்கு மீறின விஷயம். ஒன் வீக் இங்க இரு, நெக்ஸ்ட் வீக் நம்ம வீட்டுக்கு போலாம். உன் டூ வீலர் இங்க இருந்தாதானே அதுல ஏறுவ? இனிமே அது இங்க இருக்காது. உன் யூஸ்’க்காக ஒரு கார் டிரைவரோட எனி டைம் வீட்டுக்கு வெளில நிக்கும்” என்றவன் நாற்காலியின் ஆட்டத்தை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

“யூ கன்னிங் மான்ஸ்டர்!”

தோள்களை குலுக்கிக் கொண்டே எழுந்தவன் அவளருகில் சென்று, “பீ காம் அண்ட் கூல்” என சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டு அடி வயிற்றில் கை வைத்து லேசாக அழுத்தி, “அம்மாவை படுத்தாம சமத்தா இருங்கடா கண்ணுங்களா” என்றான்.

அவன் கையை விலக்கி விட்ட மலரின் கண்கள் கலங்கிப் போயிருக்க, அவளது ஒற்றைக் கன்னத்தை தாங்கிப் பிடித்தவன், “அந்த இட விஷயத்தை மறந்திடு. என்ன குறை வச்சிருக்கேன் உனக்கு? இதுக்கு மேல பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கன்னு எனக்கு தெரியலை. என்ன எதிர் பார்க்கிற என்கிட்டேருந்து?” எனக் கேட்டான்.

“உங்களுக்கு புரிய வைக்கிற தெம்பு என்கிட்ட இல்ல. உங்க எல்லா செயலுக்கு பின்னாலேயும் ஏதாவது காரணம் இருக்கு. இதனால என்ன யூஸ் அதனால என்ன யூஸ்னு அது மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியும். வேல்யூஸ் தெரியலை உங்களுக்கு, என் எமோஷன்ஸ் புரியலை”

“உனக்குத்தான் என்னை சரியா புரிஞ்சுக்க தெரியலை. இந்த இடம் போல வேற இடம் என்னால வாங்க முடியாதா? உன் சொத்து மேல ஆசைப்பட்டு கல்யாணம் செய்துக்கல. வளர்த்து நிறுத்தியிருக்க இன்ஸ்டியூஷன் காப்பாத்ததானே இப்படி செஞ்சேன்?”

“ம்ம்… உடனே நான் அதை ஏத்துக்கணுமா? என் ஃபீலிங்ஸ் புரியலையா உங்களுக்கு?”

“சும்மா நீ பேசுறதுதான் சரின்னு பேசி கடுப்பேத்திட்டு இருக்க கூடாது. ஏன்… கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் என்னை ட்ரஸ்ட்ல மெம்பர் ஆக்குங்கன்னு நீ கண்டிஷன் போடல? நீ ஆசையா பேசிட்டு என்கிட்ட வந்தா எனக்கு மட்டும் ‘ஐயையோ ஃப்ரீ பிளாக் சம்பந்தமா அடுத்து என்ன ஆப்லிகேஷனோட வர்றளோ’ன்னு தோணாதா? என்னை நோக்கி கை காட்டுறதுக்கு முன்னாடி உன்னை பார்த்துக்க” என்றான்.

“நான் நல்ல விஷயத்துக்காக…”

அவளை பேச விடாமல், “அப்ப நான் என்ன கெட்ட விஷயத்துக்காகவா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? என் ஸ்தாபனத்தை நம்பி ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் இருக்காங்க” என்றான்.

“இப்படித்தான் சுத்தி வளைச்சு உங்களை நியாய படுத்திக்க பார்ப்பீங்க, தப்புன்னா தப்புன்னு ஒத்துக்கிற மெண்டாட்டிலிட்டி கூட கிடையாது உங்களுக்கு. என் செயலை உங்க செயலோட கம்பேர் பண்ணாதீங்க”

“என்னடி இப்போ? என்னை அவாய்ட் பண்ணி என்னை கஷ்ட படுத்தி பார்க்கணும் உனக்கு, அவ்ளோதானே? ட்ரஸ்ட்லேருந்து விலக்கினப்புறம் அப்படித்தானே செஞ்சிட்டு இருந்த. அப்படி இருந்துக்க, என்னை விட்டு போகணுங்கிற எண்ணத்தை அடியோட மறந்திடு, உன் கற்பனையில கூட அப்படி நடக்காது”

“ப்ரொஃபஷனலா தோல்வியே பார்க்காதவன் பெர்சனல் லைஃப்ல மட்டும் தோத்து போவேன்னு நினைச்சியா? நல்லா சாப்பிட்டு நிம்மதியா தூங்கு. நான் வந்தா எப்பவும் போல முறைச்சிக்கிட்டு திரி” என்றவன் அவளது கன்னத்தில் லேசாக தட்டிக் கொடுத்து விட்டு வெளியேறி விட்டான்.

இனி இங்கு கார் எப்போதும் இருக்கும் என்ற விஷயத்தை மலரின் பெற்றோரிடம் சொன்னவன் கிளம்ப போக, “இந்த இடத்துக்காகத்தான் மலரை கல்யாணம் செய்துகிட்டீங்களா மாப்ள?” என வருத்தமாக கேட்டார் செல்வம்.

அவரை ஆழ்ந்து பார்த்தவன், “ஆமாம் மாமா. இல்லைனு பொய் சொல்ல மாட்டேன். அதனால என்ன கெட்டது நடந்து போச்சு? என்னை விட எந்த விதத்துல நல்ல பையனா அவளுக்கு உங்களால பார்த்திருக்க முடியும்? அவளை அடிச்சு கொடுமை படுத்தினேனா மனம் நோகடிக்கிற மாதிரி தப்பா பேசுறேனா… இல்லை இத கொண்டு வா அத கொண்டு வான்னு சீரவரிசை கேட்டு உங்ககிட்ட அடிச்சு தொறத்தினேனா?”

“லிட்ரலி என் கண்ணுக்குள்ள வச்சு பார்க்கிறேன் உங்க மகளை. இனியும் பார்ப்பேன். நான் இந்த உலகத்துல இருக்கிற வரைக்கும் அவ ஆசைப் பட்டு நடக்காத விஷயம்னு ஒண்ணு இருக்க போறதே இல்லை. சொல்லுங்க என்ன அவளை நினைச்சு வருத்தம் கவலை உங்களுக்கு? வேற என்ன தெரியணும் மாமா உங்களுக்கு?” மெதுவான குரலில் என்றாலும் அழுத்தமாக கேட்டான்.

இதென்னடா இப்படி பேசுகிறார் என பார்த்தார் செல்வம்.

விமலா சங்கடமாக பார்த்திருக்க தன் நெற்றியை நீவி விட்டுக் கொண்ட பிரவாகன், “சாரி மாமா. நான் என்ன செஞ்சிருக்கணும்னு நீங்க சொல்லுங்க?” எனக் கேட்டான்.

நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவர், “அவ மனசை இது ஆழமா பாதிச்சிருக்கு. அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க மாப்ள” என்றார்.

“தாராளமா எடுத்துக்க சொல்லுங்க மாமா. ஆனா என்னை விட்டு போறதுக்கு எல்லாம் என்னால அனுமதிக்க முடியாது. என் காலேஜ் விட்டுட்டு பரத்தை எங்கேயோ படிக்க வைக்க போறீங்க? இது எனக்கு எவ்ளோ பெரிய அவமானம்னு உங்களுக்கு தெரியுமா? உங்க பொண்ணு கொள்கை நேர்மைனு இருக்கான்னு காரணம் சொல்லாதீங்க? யாருமே என்னை புரிஞ்சுக்கலைனா நான் என்ன செய்வேன்?”

“அடடா உட்காருங்க மாப்ள. ஏன் இப்படி ஏதோ போல பேசுறீங்க?” பதறிய செல்வம், “குடிக்க ஏதாவது கொண்டு வா விமலா” என மனைவியிடம் சொன்னார்.

அகல போன விமலாவை தடுத்தவன், “அவளுக்கு சொல்லி புரிய வைங்க. அடுத்த வாரம் வர்றேன் நான்” என சொல்லி சென்று விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement