Advertisement

அத்தியாயம் -29(2)

சலிப்பு கலந்த கோவத்தோடு பார்த்தவள், “எப்படிங்க உங்களால இவ்ளோ கேவலமா உங்க செயலை ஜஸ்டிஃபை பண்ணிக்க முடியுது?” எனக் கேட்டாள்.

“கேவலம்னு உனக்கு தோணினா நான் என்ன பண்ணுவேன்? நான் செய்றது எனக்கு சரிதான். திரும்ப திரும்ப சொல்றேன்… ஆம் ஆல்வேஸ் பெர்ஃபெக்ட் மலர்!” என்றான்.

இவனோடு வாதிட்டு பிரயோஜனம் இல்லை என தெரிந்த பின் அந்த முட்டாள்தனத்தை செய்ய விரும்பாதவளாக போதும் என்ற படி தலையை இட வலமாக அசைத்தாள்.

“என்ன செய்யணும் நான்? இடத்துக்கு உண்டான பணத்தை தர்றேன்னுதான் உன் அப்பாகிட்ட சொன்னேன். அவர்தான் ட்ரஸ்ட்க்கு கொடுக்க சொல்லிட்டார். வேணும்னா உன் அக்காவுக்கும் தம்பிக்கும் லைஃப் டைம் செட்டில்மெண்ட் செய்யலாமா?” எனக் கேட்டான் பிரவாகன்.

ட்ரஸ்ட்டுக்கு பணம் செலுத்தும் சமயம் எனக்கு தெரிய வரும், ஏன் எப்படி என்ற என் கேள்விகள் கேட்பேன். உண்மை தெரிய வரலாம் எனதான் டிரஸ்ட்டில் இருந்து தன்ன நீக்கியிருக்கிறான் என இப்போது புரிய வெறுமையாக தனக்கு தானே சிரித்துக் கொண்டாள்.

அவளது எண்ணவோட்டம் புரிந்தவன் போல, “ஹலோ ஹலோ ஓவர் திங்கிங் பொண்டாட்டி! பணம் ட்ரஸ்ட்க்கு கொடுக்கிறேனா இல்லையான்னு கூட உன் அப்பா செக் பண்ண போறதில்லை. ஆனாலும் கொடுக்கதான் நினைச்சேன். ஏமாத்த நினைக்கல, ஏன்னா எனக்கு அடுத்தவன் காசு தேவையில்லை. ஐ ஹேவ் மை ஓன் எதிக்ஸ் (எனக்கென நெறிமுறைகளை கொண்டுள்ளேன்). ட்ரஸ்ட்டீயா நீ வேணாம்னு சொன்னதுக்கு பிரைமரி ரீசன் உன் ஹெல்த் அஃபெக்ட் ஆக கூடாதுங்கிறதுதான்” என்றான்.

அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள், “தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்செர்ன்” என சொல்லி எழுந்து வாயில் பக்கம் நடந்தாள்.

“இப்படி போனா என்ன அர்த்தம்? வா ரிலாக்ஸ் ஆகு. நானே கொண்டு போய் விடுறேன்” என்றான்.

நின்று அவனை கடினமாக பார்த்தவள், “என்னை நீங்க எந்த பர்பஸுக்காக கல்யாணம் பண்ணினீங்களோ அது நிறைவேறிடுச்சுதானே? அப்புறமும் நமக்குள்ள என்ன இருக்கு?” எனக் கேட்டாள்.

“என்ன இருக்கா? பாதியில விடற எண்ணத்தோட உன் கழுத்துல தாலி கட்டலை நான்”

“அப்படியா? எம்மேல கரை புரண்டு ஓடுன உங்க காதலால கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?”

“எதுக்கு பண்ணிக்கிட்டேனோ… இப்போ கரை காணாத காதல்தான். ஏன் உனக்கு தெரியாதா?”

“நிஜமா அதுக்கு பின்னால கூட எதுவும் காரணம் வச்சிருப்பீங்களோன்னு பயமா இருக்கு. ‘ஓ’ ன்னு கத்தி சண்டை போடணும்னு இருக்கு. செஞ்ச தப்பை ஒத்துக்காம எப்படி இப்படி இறுமாப்பா பேச முடியுதுன்னு உங்க சட்டையை புடிச்சு உலுக்கணும்னு உள்ளுக்குள்ள கொதிக்குது. ஆனா அப்படிலாம் எமோஷனல் ஆகாம என் பிள்ளைங்களுக்காக நான் அமைதியாதானே இருந்தாகணும்?” எனக் கேட்டவள் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

அவள் எப்படி இங்கு வந்தாள் என அவனுக்கு தெரியவில்லை. தனியாக விட மனமில்லாமல் அவனும் வெளியேறினான். அவள் லிஃப்ட்டை அடையும் முன் வேகமாக நடந்து வந்து அவளோடு இணைந்து கொண்டான். அவள் எரிச்சலாக பார்க்க அவன் கண்டு கொள்ளவே இல்லை.

திருமணத்திற்கு பின் அவளும் அவன்பால் ஈர்க்க பட்டது, அவனோடு கூடியிருந்த பொழுதுகள், அவனது அக்கறை, அவர்களது சண்டைகள், அவனது சமாதானங்கள் என எல்லாம் நினைவில் ஓடியது. கொள்கை அளவில் வேறுபட்டு நின்றாலும் தன்னை தாங்குகிறான் என ஒருவித பெருமை அவளுள் இருந்ததை நினைக்க நினைக்க அவள் மீதே அவளுக்கு கோவமாக வந்தது.

திருமணத்திற்கான இவனது காரணத்தில் அவனது அன்பு, அக்கறை எல்லாம் அடி பட்டு போனது போலிருந்தது.

லிஃப்ட் தரை தளம் வரவும் விறு விறு என நடந்து சென்றாள். அமைதியாக அவனும் அவளை பின் தொடர்ந்தான். வழியில் பார்த்த ஊழியர்கள் அவனுக்கு வணக்கம் செய்ய எதையும் கவனிக்கவில்லை அவன். அவனது முழுக் கவனமும் அவள் மீது மட்டுமே.

“ரெண்டு பேருக்குள்ள அப்படி என்னதான் சண்டை?”, “தெரியலை. வசதி பணம்னு எல்லாம் இருக்கு. அப்படியும் மேடம் சண்டை போடுறங்கன்னா என்ன விவகாரமோ? டாக்டர் தாரிகாவைதான் எம் டி சார் கல்யாணம் பண்றதா இருந்தது. அப்புறம் என்ன ஆச்சோ? அதான் பிரச்சனையா இருக்கும்” யாரோ இரண்டு வார்டு செகரெட்டரி பெண்கள் கிசு கிசுப்பாக பேசிக் கொண்டனர். பிரவாகன் காதில் விழா விட்டாலும் மலரின் காதில் இந்த பேச்சு விழ ஒரு நொடி நின்று விட்டாள்.

இப்படியொரு பேச்சு இன்றுதான் எழுகிறதா? இல்லை பரவலாக பேசிக் கொள்கிறார்களா என அவளுக்கு தெரியவில்லை. ஆனால் கேட்க சகிக்கவில்லை. தங்களை கோவமாக பார்க்கும் எம் டியின் மனைவியை கண்டு அந்த வார்டு செகரெட்டரிகள் பயத்தோடு பார்த்தனர்.

அவளது பின்னால் வந்து கொண்டிருந்தவன் அவள் பக்கத்தில் வந்து நின்று, “என்ன மலர்?” எனக் கேட்டான்.

ஒன்றுமில்லை என தலையாட்டியவள் அவனோடு சேர்ந்து நடப்பது போலவே ஆனால் சிறிதளவு இடைவெளி விட்டு நடந்தாள்.

திடீரென அவளிடம் எதையோ மாற்றத்தை உணர்ந்தவன், “என்ன மலர்?” என மீண்டும் கேட்டான்.

இல்லாத ஒரு விஷயம் பரவுவதை விரும்பவில்லை மலர். அதே சமயம் அந்த பெண்கள் பேசிக் கொண்டது பற்றி இவனிடம் சொல்லவும் பிரியப் படவில்லை. அவள் பேசாமல் போக அவனும் விட்டு விட்டான்.

அவள் தன்னுடைய ஸ்கூட்டரில் வந்திருந்தாள். பார்த்ததுமே இவனுக்கு பயங்கர கோவம். திருமணம் என முடிவானதிலிருந்து காரில்தான் அவளது பயணம். நான்கு நாட்கள் முன்பு வரை மருத்துவமனையில் இருந்தவள், ஆறு நாட்களுக்கு முன் தனியாக நடக்க கூட கஷ்ட பட்டவள் இப்படி வந்ததில் அவனுக்கு மிகுந்த அதிருப்தி.

“தெரிஞ்சுதான் இப்படி செய்றியா மலர்?” என கோவத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.

திடீரென திருமணம் ஏன் என்ற செய்தி தெரிய வரவும் ஒரு வேகத்தில் கிளம்பி வந்து விட்டாள். மலர் கடந்த இரண்டு நாட்களாக நன்றாகத்தான் இருந்தாள். ஆகவே வேண்டுதல் என சொல்லி பரத்தை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சியில் இருக்கும் கோயிலுக்கு சென்றிருந்தார் விமலா.

 ‘ஏதாவது என்றால் அப்பாவையோ அல்லது தேவகி ஆன்ட்டியையோ அழைத்துக் கொள்வேன்’ என மலர் சொல்லியிருந்தாள். விமலாவுக்கு மலர் இப்படி புறப்பட்டு வந்த விஷயமே தெரியாது.

“வா வீட்ல விடுறேன்” என சொல்லி அவளின் கையை பிடித்தான். உதற போனவள் சுற்றம் உணர்ந்து, மெல்ல அவனது கையை விலக்க முனைந்தாள்.

“எம்மேல உள்ள கோவத்துல ரிஸ்க் எடுக்காத. ப்ளீஸ் வா. இல்லைனா எப்படி உன்னை அழைச்சிட்டு போகணும்னு தெரியும் எனக்கு” என்றான்.

அவன் முகத்தை பாராமல் திரும்பிக் கொண்டவள், “டிரைவரை எடுக்க சொல்லுங்க காரை. உங்களோட வர மாட்டேன் நான்” என்றாள்.

அவள் சொன்ன படியே அனுப்பி வைத்தவன் அவனது மாமனாருக்கு அழைத்து விஷயத்தை சொன்னான். மகளுக்கு எப்படி தெரிய வந்தது என அவருக்கும் தெரியவில்லை.

“எப்படி தெரிஞ்சதுன்னு கேட்க கூப்பிடல மாமா. அவ கூட இருங்கன்னு சொல்ல கூப்பிட்டேன். என்னால பகல்ல டைம் ஒத்துக்க முடியலை, அவளுக்கு கிடைக்க வேண்டிய கேர்ல எந்த காம்ப்ரமைஸும் இருக்க கூடாதுன்னு நினைச்சு உங்களையெல்லாம் நம்பித்தானே அவளை அங்க அனுப்பினேன்? கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க மாமா. ஸ்கூட்டர்ல தனியா புறப்பட்டு வந்திருக்கா இங்க” என்றான்.

“எனக்கு தெரியாது மாப்ள. நான் வீட்டுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கேன், நான் பார்த்துக்கிறேன்” என உறுதி தந்தார் செல்வம்.

இருக்கின்ற வேலைப் பளுவில் மலரின் கோவத்தை நினைத்து பிரவாகனுக்கு சலிப்பாக வந்தது. சாமான்யமாக அவள் சமாதானம் ஆகப் போவதில்லை என்பது புரிய நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான். இன்னும் கொஞ்சம் நிதானமாக அவளை கையாள வேண்டும் என இவன் நினைத்துக்கொண்டிருக்க தமன் வந்து நின்றான்.

“எப்படிங்க சார் மேடத்துக்கு தெரிஞ்சது? சத்தியமா நான் இல்லைங்க சார்” என்றான்.

பிரவாகன் அமைதியாக நிற்க, “நீங்களே சொல்லிடுங்கன்னு எத்தனை முறை சொன்னேன் சார்?” எனக் கேட்டான்.

“குன்னூர்ல ஒரு நரி இருக்குல்ல… அது வேலையாதான் இருக்கணும். அடுத்து விழற அடியில இனி அந்தாள் என் பக்கம் கூட திரும்ப கூடாது” என்ற பிரவாகன் கோவமாக சென்றான்.

வீடு வந்த மலர் அவளது அறைக்குள் அடைந்து கொண்டாள். பின்னர்தான் பரத்தும் விமலாவும் வந்தனர். அவள் உறங்குவதாக நினைத்துக்கொண்டனர்.

செல்வமும் வந்தார். பரத் அவனது நண்பனை பார்த்து வருவதாக சொல்லி வெளியில் கிளம்பி சென்றான்.

இனியும் மனைவியிடம் மறைக்க கூடாது என நினைத்த செல்வம் விமலாவிடம் அனைத்தையும் சொல்லி மகள் மருமகன் மீது கோவமாக இருப்பதாகவும் கூறினார்.

கணவர் சொன்னதை கேட்டு முதலில் அதிர்ந்தவர் பின் நிதானமாக யோசித்து விட்டு, “மாப்ள மலரை விரும்பித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டார்? இல்ல இடத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?” எனக் கேட்டார்.

“அத எப்படி நான் மாப்ளகிட்ட கேட்க முடியும்? அவர் வந்து என்கிட்ட பேசினப்போ பத்திர விஷயம் பத்தி சொல்லி ‘மலருக்கு தெரிய வேணாம், அவ புரிஞ்சுக்காம ஃப்ரீ பிளாக் ஹாஸ்பிடல், ட்ரஸ்ட் எல்லாத்தையும் இதோட சம்பந்த படுத்துவா. ஒரு வருஷத்துல எல்லாத்தையும் நான் செய்யதான் போறேன், ஆனா இட விஷயம் உடனே கிளியர் ஆகணும் எனக்கு’ ன்னு சொன்னார். எங்க தாத்தாதான் இடம் கொடுத்தார்னு கல்யாணத்துக்கு அப்புறம்தான் அவருக்கு தெரிய வந்திருக்கும்னு நான் நினைச்சுகிட்டேன்” என்றார் செல்வம்.

“மலர்கிட்ட பேசினாதான் என்னன்னு தெரிய வரும்” என விமலா கவலையாக சொல்ல, “கல்யாணமே அதுக்காகத்தான் பண்ணியிருக்கார்” என்றாள் பின்னால் நின்றிருந்த மலர்.

இருவரும் மகளை வருத்தமாக பார்க்க, அவர்களின் அருகில் வந்தமர்ந்தவள், “பரத்தை சென்னைலதானே படிக்க வைக்க போறோம்? நாமளும் அங்கேயே போய்டலாமா ப்பா? எனக்கு நிம்மதி வேணும், என் குழந்தைகள நல்ல படியா பெத்தெடுக்கணும், என்னை இங்கேருந்து அழைச்சிட்டு போய்டுங்க ப்பா” என்றாள்.

மலரின் இந்த வேண்டுகோளில் விமலாவும் செல்வமும் உச்ச பட்சமாக திகைத்துப் போனார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement