Advertisement

பேரன்பு பிரவாகம் -29

அத்தியாயம் -29(1)

மலரின் கொள்ளுதாத்தா ஜமீன்தாராக இருந்தவர். இலவச மருத்துவமனைக்காக அவர் இடத்தை தானமாக வழங்கிய பின்னர்தான் அவருக்கு குழந்தை பிறந்தது. அப்படி தானம் கொடுத்த புண்ணியத்தால்தான் தனக்கு வாரிசு ஏற்பட்டிருக்கிறது என நம்பியவர் அந்த இடத்தை திரும்ப பெறவெல்லாம் ஒரு போதும் நினைக்கவில்லை.

சேதுராமர் காலத்தில் ஓலை மற்றும் ஓட்டு கட்டிடங்கள் அமைத்து வைத்தியம் பார்க்க பட்ட காரணத்தால் அவ்வளவு பெரிய இடம் தேவையாக இருந்தது. அவரது மகன் அதாவது அரசியின் அப்பா காலத்தில் அடுக்கு மாடி கட்டிடமாக இலவச மருத்துவ மனை உருவெடுக்க, மீதமிருந்த இடத்தில்தான் கட்டணம் செலுத்தி பார்க்கும் மருத்துவமனையும் இன்ன பிற கல்லூரிகளும் கட்டப் பட்டன.

மருத்துவக் கல்லூரியை மட்டும் அந்த இடத்திற்கு எதிரில் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி கட்டியிருந்தனர்.

பொதுவாக தானமாக கொடுத்து விட்ட இடத்தை திரும்ப பெற இயலாது. ஆனால் ஜமீன்தார் தான் கொடுத்த இடம் வருங்காலத்திலும் தவறாக பயன் படுத்த பட்டு விடக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு சட்ட நுணுக்கம் அறிந்த வக்கீல் உதவியோடு பத்திரத்தை உருவாக்கியிருந்தார்.

அதன் படி இலவச மருத்துவமனைக்கு மட்டுமே இடம் உபயோகப் படுத்த பட வேண்டும். சேதுராமரின் மகன் வியாபார நோக்கத்தில் மருத்துவமனை கட்டிய போது அவரது செல்வாக்கை கொண்டு இந்த இட விஷயம் ஒன்றுமே இல்லை என்பது போல செய்திருந்தார்.

இலவச மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது. இடம் அந்த மருத்துவமனையை கொண்டு என்பதால் மாதம் ஒரு பெரும் தொகையை இலவச சிகிச்சைக்கு வழங்கி விடலாம் என அவருக்கு அவரே நியாயம் கற்பித்துக் கொண்டார்.

மகேந்திரன் பொறுப்புக்கு வந்து சில காலம் ஆன பிறகுதான் அவருக்கும் சிக்கல் என தெரிய வந்தது. அண்ணன் மூலமாக தர்மேந்திரனுக்கும் தெரிந்து போனது. ஜமீன்தாருக்கு வாரிசு இருப்பதே யாருக்கும் தெரியவில்லை. அவரை பற்றிய வேறு எந்த தகவலும் மகேந்திரனுக்கு கிடைக்கவும் இல்லை. ஆகையால் பின்னாளில் எதுவும் பிரச்சனை வராது என விட்டு விட்டார்.

ஜே சி ஐ அங்கீகாரம் பெற முயன்ற போது இப்படி இட சிக்கல் இருப்பது பெரும் வில்லங்கமாக அமையும் என்பதாலும் பிற்காலத்தில் தனது வாரிசுகளுக்கு தொல்லையாக இருக்கலாம் என்பதாலும் தன் காலத்திலேயே சரி செய்து விட நினைத்தான் பிரவாகன். மீண்டும் பத்திரம் பற்றி ஆலோசனை நடந்தது.

இலவச மருத்துவமனை அல்லாமல் கட்டணம் செலுத்தி பயன் பெறும் மருத்துவமனை கட்டப் பட்டுள்ளதால் நிபந்தனையை மீறியதாகி விட்டது. ஜமீன்தாரின் வாரிசுகள் யாராவது இருந்தால் அவர்களிடம் உரிய பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கியது போல பத்திரம் செய்து கொள்ளலாம் என யோசனை கூறினார் வக்கீல்.

அவருக்கு வாரிசுகள் இல்லை என தான் கேள்வி பட்டதை கூறினான் பிரவாகன். நேரடி வாரிசு இல்லை என்றாலும் அவர் பரம்பரையில் அவர் சொத்துக்களுக்கு உரிமை பட்ட யாரையாவது வைத்து செய்து கொள்வோம் என வக்கீல் கூற ஜமீன்தாரரின் வாரிசை தேடும் படலம் துவங்கியது.

ஆடிட்டோரியத்தில் மலர் மயங்கி விழுந்த அன்றுதான் ஜமீன்தாருக்கு செல்வம்தான் நேரடி வாரிசு என தெரிய வந்தது. மலரை பற்றி தெரிய வரவில்லை என்றால் பணம் கொடுத்து தன் காரியத்தை சாதித்திருப்பான் பிரவாகன். சமரசத்துக்கு மலர் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டாள், இடம் பற்றிய விஷயம் துளி கசிந்தாலும் அதனையே பெரிது படுத்தி விடுவாள்.

இந்த மருத்துவ நிறுவனத்துக்கு இத்தனை வருடங்களாக இருந்து வரும் நற்பெயர் நாசமாகி விடும் அபாயம் உள்ளது என்பதால் இடத்தை பற்றி மலரின் தந்தையிடம் நேரடியாக பேசி சமரசம் செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட்டவன் மலரை மணந்து கொள்ளும் முடிவை எடுத்தான்.

தன் மகளின் கணவன் கேட்டால் செல்வத்தால் மறுக்க முடியாதே.

அப்படித்தான் யாருக்கும் தெரியாமல் தன் மாமனாரிடம் மட்டும் விஷயத்தை சொன்னான். இடத்துக்கு இன்றைய மதிப்பு என்ன என மதிப்பீடு செய்து பணத்தை கொடுத்து விடுவதாகவும் சொன்னான். நல்ல காரியத்துக்காக வழங்க பட்ட இடத்திற்கு இத்தனை வருடங்கள் கழித்து பணம் பெறுவதா என தயங்கிய செல்வம் அந்த பணத்தை இலவச மருத்துவமனையின் ட்ரஸ்ட்டுக்கே கொடுத்து விடும் படி சொன்னார்.

“உங்க தாத்தா சொத்து மாமா, அவர் வாரிசு இல்லைங்கிறதால தானமா எழுதி வச்சிட்டார். பணத்தை ஏன் ட்ரஸ்ட்டுக்கு கொடுக்க சொல்றீங்க?” எனக் கேட்டான் பிரவாகன்.

“மனசறிஞ்சு எந்த தப்பும் நான் செய்ததில்லை மாப்ள, அப்படியும் என் மனைவியை இழந்தேன். பணத்துக்கு பெருசா தட்டுப்பாடு இல்லாம நிறைவான நிலைலதான் கடவுள் வச்சிருக்கார், அது போதும். என் தாத்தா கொடுத்தது கொடுத்ததாவே இருக்கட்டும்” என சொல்லி விட்டார் செல்வம்.

மலர் இதை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ள மாட்டாள், இந்த விஷயம் கொண்டு எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம், ஆகையால் அவளுக்கு தெரிய வரவே வேண்டாம் என கேட்டுக் கொண்டான் பிரவா. செல்வமும் ஒத்துக் கொண்டார்.

பத்திரப் பதிவு அலுவலகத்தில் இதற்கான வேலை நடந்த அன்று தன் சொந்த வேலையாக அங்கு வந்திருந்த தர்மேந்திரனின் மச்சினர் இவர்களை பார்த்து விட்டு தர்மேந்திரனிடம் சொல்லி விட்டார்.

மலரை காதல் கொண்டு மணந்து கொள்ளவில்லை தன் அண்ணன் மகன், வலுவான வேறு காரணம் ஏதோ இருக்கிறது என ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்த தர்மேந்திரன் பத்திரப் பதிவு அலுவலக ஊழியர் ஒருவர் மூலமாக விஷயத்தை தெரிந்து கொண்டார்.

பிரவாகன் அவரை குன்னூர் அனுப்பி வைத்த பிறகு, இதுவரை சுருட்டிய சொத்துக்களோடு பாதுகாப்பாக எங்கேயாவது சென்று விடலாம் என திட்டமிட்டு அதற்காக நல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அனைத்தையும் சரி செய்து தருவதாக மலரிடம் சொல்லியிருந்தவன் கணக்கு வழக்குகளை நேர் செய்யும் பணியை ஆரம்பிக்க சொல்லியிருந்தான். ஏகாம்பரம் மூலமாக மருத்துவ மனையில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு உடனுக்குடன் தெரிந்து கொண்டுதான் இருந்தன.

தன் பித்தலாட்டத்தின் முழு விவரங்களையும் பிரவாகன் அறிந்து கொண்டால் தன்னை சும்மா விட மாட்டான் என பயந்து போனார் தர்மேந்திரன். ஆகவே தற்காலிகமாக அவனது கவனத்தை திசை திருப்ப என்ன செய்யலாம் என யோசித்து புதிய சிம் கார்டு வாங்கி அந்த எண்ணிலிருந்து மலருக்கு விவரமாக செய்தி அனுப்பி விட்டார்.

யார் தனக்கு இந்த செய்தியை அனுப்பியது என தெரியா விட்டாலும் செய்தியின் உண்மைத் தன்மையை அவளால் சந்தேகிக்க முடியவில்லை. மிகவும் சரியாக இருந்தது. உடனே கணவனை கேள்வி கேட்க வந்து விட்டாள்.

தன் கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்ட மலர், “பெனிஃபிட்ஸ் இல்லாம எதுவுமே செய்ய மாட்டீங்கல்ல?” எனக் கேட்டாள்.

“என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா மலர்?” கெஞ்சலாக கேட்டான் பிரவாகன்.

“இதோ புரிஞ்சு போச்சே… அவசரம் அவசரமா என் கூட வாழ நினைச்சதுக்கு பின்னால கூட என்ன காரணம் இருக்கோ?” என்றாள்.

“மலர்!” என உறுமியவன் பின் நிதானித்து, “என் மனைவி கூட நார்மல் லைஃப் லீட் பண்ண நினைச்சது தவிர வேற எந்த காரணமும் இல்லை மலர். இந்த நேரத்துல உன்கிட்ட கோவ பட மாட்டேங்கிறதை புரிஞ்சுக்கிட்டு அளவுக்கதிகமா பேசுற நீ” என்றான்.

“தப்பு பண்ணினது நீங்க. சுயநலமா… சொல்லப் போனா கிரிமினலா யோசிச்சு பக்கா பிளான் போட்டு டாட்டூ ட்ராமா எல்லாம் பண்ணி என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க. என்கிட்டேருந்து மறைச்சு எங்கப்பாகிட்டேருந்து உங்க காரியத்தை சாதிச்சுகிட்டீங்க. இத எப்பவும் எனக்கு தெரிய படுத்தாம என்னை முட்டாளாவே வச்சிருக்கலாம் நினைச்சுருக்கீங்க. உங்களுக்கு கோவம் வேற வருமா?” தொடர்ந்து பேசியதில் லேசாக மூச்சு வாங்கியது அவளுக்கு.

“எனக்காக வேணாம். நீ நல்லா பார்த்துப்பேன்னு உன்னை நம்பி ரெண்டு உயிர் வந்திருக்கே, அவங்களுக்காக தண்ணி குடிச்சிட்டு உட்கார் மலர்” என்றான்.

“எனக்கு வேணும்னா நானே குடிச்சிப்பேன். உங்க அக்கறை நீங்களே வச்சுக்கோங்க” என சிடு சிடுத்தாலும் தண்ணீர் குடித்து தன்னை நிதானம் கொள்ள செய்து அமர்ந்து கொண்டாள்.

“நான் என்ன செஞ்சிருக்கணும்னு நினைக்கிற? இந்த இன்ஸ்டிடியூஸனோட இடத்துல பிரச்சனைனு வெளில தெரிஞ்சா அதோட கான்சீக்குவென்ஸஸ் என்னவா இருந்திருக்கும் தெரியுமா? அதுதான் எல்லா நியூஸ்சேனல்ஸ்லேயும் ஹெட் லைன்ஸ் ஆகியிருக்கும். நான் பக்கா பிஸ்னெஸ் மேன்தான், ஒத்துக்கிறேன். எஸ் வரி ஏய்ப்பு செய்றேன். எவன் செய்யலை இங்க? ஆனா அடுத்தவன் சொத்துக்கு ஆசை படறவன் இல்லை”

“ஜமீன்தாரோட வாரிசை கண்டுபிடிச்சு லீகலா என்ன செய்யணுமோ அதைத்தான் செய்ய நினைச்சேன். ஆனா உன்கிட்ட அது எந்த அளவு பாஸிபில்? கோ ஆபரேட் பண்ணியிருப்பியா? ஜான்சி ராணி மாதிரி போர்க்கொடி தூக்கியிருப்ப”

“எங்கப்பா செத்து போனதும் இங்க இருக்கிறவனுங்க எனக்கு அடங்காம ஆளுக்கொரு பக்கம் இழுத்துக்கிட்டு போனாங்க. எல்லாரையும் கட்டி இழுத்து என் லகான்ல வச்சுக்க என்ன பாடு பட்டேன்னு எனக்குதான் தெரியும். இது ஒண்ணும் சீட்டு கட்டு மாளிகை இல்லை சரிஞ்சா உடனே சரி பண்ண. என் நிறுவனத்தை காப்பாத்திக்க எனக்கு சரின்னு பட்டத செஞ்சேன், அதனால உனக்கெந்த பாதிப்பும் கிடையாதுங்கிறத மறந்திடாத” என்றான்.

“என் விருப்பம் இல்லாம என்னை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பே இல்லைதான்” என வெறுப்போடு சொன்னாள்.

“ஓ கமான் மலர்! பழச விடு. கல்யாணம் பண்ணி உன்னை நல்லா வச்சுக்கலையா நான்? இன்னிக்கு உனக்கு எம்மேல விருப்பம் இருக்கா இல்லயா?”

“அதனாலதான் உங்க துரோகத்தை தாங்க முடியலை”

“துரோகமா? நான்சென்ஸ்! நான் செஞ்சத ஏன் தாங்க முடியலை? நான் லவ்னு சொன்னாலும் அதனால கல்யாணம் நடக்கலைன்னு உனக்கு முன்னாடியே டவுட் இருந்தது. அந்த காலத்துல பெரிய பெரிய ராஜாக்கள் கூட எதிரி நாட்டோட சமரசம் ஆகவும் நட்பு நாட்டோட உதவியை வாங்கி அவங்க படையை பலப் படுத்திக்கவும் அந்தந்த நாட்டு இளவரசிய கல்யாணம் பண்ணிப்பாங்க”

 “சில விஷயங்களை சால்வ் பண்ண கல்யாணம் செய்துக்கிறதை நம்ம முன்னோர்கள் செஞ்சிருக்காங்க. இப்ப கூட சொத்து வெளில போயிட கூடாது, பல வருஷ குடும்ப பகை இத்தோட முடியட்டும்னாலும் ஏதோ ரீசனுக்காக கல்யாணத்தை அதுக்கு ஆப்ஷனா எடுக்கிறாங்கதானே? நானும் அதைத்தான் ஃபாலோ பண்ணினேன்”

“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்க. ராஜாக்களோட அந்தப்புரமே பல நாட்டு இளவரசிகளால நிறைஞ்சு போயிருக்கும். உன் புருஷன் அப்படி இல்லை மலர். எனக்கு எப்பவும் நீ ஒருத்திதான் மகாராணி” என்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement