Advertisement

அத்தியாயம் -28(2)

“நீ ரிலாக்ஸா இருக்கணும். இன்னும் என்ன வேணும் உனக்கு சொல்லு, செஞ்சு தர்றேன்” என்றான்.

“ட்ரஸ்ட் மெம்பர்ஸ் எல்லாரும் உங்க ஆளுங்க” என்றாள்.

“நல்லதுதானே? நான் சொல்றது செய்வாங்கதானே?”

அவள் முறைக்க, “இன்னும் அவங்க பதவிக்காலம் மிச்சமிருக்கு. முடியட்டும், மாத்திடலாம்” என்றான்.

அவனை இமைக்காமல் அவள் பார்க்க, “சொடக்கு போடுற நேரம் கொடுத்து செய் செய்னு சொல்லக்கூடாது. ஒண்ணு ஒண்ணா செய்வேன். ஆனா செய்வேன்” என்றான்.

படுத்திருந்தவள் எழ முயன்றாள். அவனே கை கொடுத்து எழுப்பி விட்டான். மெல்ல அவனை அணைத்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அவளை தன் அணைப்பில் வைத்திருந்தவன் படுக்க வைப்பதற்காக அவளை விலக்க, அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு விலகினாள்.

“பார்டா… டாக்டர் அம்மணி முத்தமெல்லாம் கொடுக்கிறாங்க” என்றான்.

அவள் சிரிப்புடனே, “தேங்க்ஸ் சொன்னேன்” என சொல்லி படுத்துக் கொண்டாள்.

அவளது கன்னத்தை செல்லமாக கிள்ளியவன் அவளது தோளில் தட்டிக் கொடுக்க உறங்கி விட்டாள்.

 மலருக்கு அப்படியொரு நிம்மதியான உறக்கம். விடிந்தும் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளாக எழட்டும் என சொல்லி விட்டு அவனது வீடு சென்றவன் ஒரு மணி நேரத்தில் தயாராகி வர அவளோ இன்னும் உறக்கத்தில்தான் இருந்தாள்.

அவள் எழுந்ததும் சொல்லும் படி விமலாவிடம் சொல்லி விட்டு தன் வேலைகளை பார்க்க கிளம்பி விட்டான். அவள் எழுந்து விட்டதாக செய்தி கிடைத்த போது நகர முடியாத படி வேலைகள் அவனை ஆக்ரமித்திருந்தன.

மாலை போல அவன் அவளை காண சென்ற போது பழத் துண்டுகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இவன் பயத்தோடு பார்த்திருக்க நல்ல வேளையாக அவளது உடல் ஏற்றுக் கொண்டது.

ஆனால் அதிகம் சாப்பிட முடியவில்லை. கொஞ்சமாக என்றாலும் சாப்பிட்டாளே என சற்றே நிம்மதியாக இருந்தது இவனுக்கு.

இரண்டு நாட்களில் நன்றாக முன்னேறி விட்டாள். இன்னும் வாந்தி மாத்திரையின் உதவி தேவைப் படுகிறதுதான். வெறும் வயிற்றில் உமட்டிக் கொண்டு இருக்கிறதுதான். ஆனால் சாப்பிட முடிந்தது. இன்னும் ஒரு நாள் பார்த்து விட்டு வீடு சென்று விடலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

மலருக்கு பழங்கள் எடுத்து கொடுத்து கொண்டிருந்தார் விமலா.

“இது ஏதோ திராட்சையாம், உனக்காக ஸ்பெஷலா வாங்கியிருக்காராம் மாப்ள” என சொல்லிக் கொண்டே பெரிய அளவில் சிவந்த நிறத்தில் இருந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொடுத்தார்.

“இது திராட்சையா!” வியப்போடு கிண்ணத்தை கையில் வாங்கியவள் ஒரு பழத்தை எடுத்து ருசித்து பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மாவுக்கு ஒரு பழம் கொடுத்தாள். அவரும் அதன் சுவை பற்றி சிலாகிக்க தமன் ஒரு பையுடன் வந்தான்.

இங்கு வந்த பின் நலம் விசாரிக்க வரவே இல்லை, நேரமே கிடைக்கவில்லை என சொல்லிக் கொண்டே, “உங்களுக்கு பிடிச்ச மேங்கோஸ் மேடம்” என சொல்லி பையை விமலாவிடம் கொடுத்தான்.

“உங்க பாஸ் எங்க?” என விசாரித்தாள் மலர்.

“மெடிக்கல் காலேஜ்ல அட்மிஷன்ஸ் ஸ்டார்ட் ஆக போகுதே. சார் ரொம்ப பிஸி” என்றான்.

“ஹ்ம்ம்… இதென்ன திராட்சை? எந்த ஊர்லேருந்து வரவழைச்சார்?” எனக் கேட்டாள்.

“சார் சொல்லலையா?”

“எப்படியும் காஸ்ட்லியா இருக்கும், என்கிட்ட சொன்னா ஏடாகூடமா சொல்வேன்னு தெரிஞ்சிருக்கும். ஆனா நல்லா இருக்கு தமன். அவர் ஃப்ரீ டைம்ல வர சொல்லுங்களேன். இன்னிக்கு அவரை பார்க்கவே இல்லை” என்றாள்.

“சொன்னா உடனே வருவார், சொல்லவா மேடம்?”

“ஃப்ரீ டைம்லன்னு சொன்னேனே…” என்றவள் பழக் கிண்ணத்தை வைத்து விட்டாள்.

“எனக்காக சாப்பிடாம வைக்குறீங்களா? ப்ளீஸ் சாப்பிடுங்க… உங்களுக்கு ஒரு வாய் சாப்பாடு செலுத்த முடியாதான்னு எங்க எம் டி அவ்ளோ பாடு பட்டிருக்கார்” என்றான்.

 அவள் அவனுக்கும் கொடுக்க வேண்டாம் என மறுத்து விட்டான். அவன் சொன்னதற்காக ஒரு பழம் எடுத்து சாப்பிட்டவள் நன்றாக இருப்பதாக மீண்டும் சொன்னாள்.

“நீங்க சாப்பிட்டிட்டு இருக்கிறது ரூபி ரோமன் திராட்சை மேடம், இம்போர்டட் ஃப்ரம் ஜப்பான், நான் கொடுத்த பேக்ல இருக்கிறது தையோ நோ தமாகோ மாம்பழம் ஃப்ரம் ஜபல்பூர்” என்றான்.

விமலா மோவாயில் கை வைத்து அதிசயமாக பார்க்க, மலருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“நம்ம ஊர் நெல்லிக்காய்ல இல்லாத சத்து இதுல எல்லாம் இருக்கா தமன்? இந்த ஐடியாலாம் அவருக்கு எங்கேருந்து கிடைக்குதுன்னு தெரியலை” என்றாள்.

“எங்க ஸாருக்கு பிடிச்ச பழம் என்னன்னு நீங்க சொல்லுங்க” எனக் கேட்டான்.

“ஸ்பெஸிஃபிக்கா அப்படி எதுவும் இல்ல, வீட்ல நான் தர்ற எல்லா ஃப்ரூட்ஸும் பிடிக்கும் அவருக்கு” என்றாள்.

“தெரியலைங்கிறத பாலிஸ்டா சொல்றீங்களா மேடம்?” என அவன் கேட்க, ஆம் என்பது போல சிரித்தாள்.

“நீங்க ஏன் காஸ்ட்லி ஃப்ரூட்ஸ்னு நினைக்குறீங்க? ஸாருக்கு நிக்க நேரம் இல்ல, மூளைக்குள்ள என்னென்ன ஓடும்? ஆனாலும் உங்களுக்கு பிடிச்சது என்னன்னு யோசிச்சு அதுல தி பெஸ்ட் வாங்கி கொடுத்திருக்கார். அவர் அன்பை பாருங்க மேடம்” என்றான்.

“ஏன் தம்பி இது விலையெல்லாம் எவ்ளோ இருக்கும்?” எனக் கேட்டார் விமலா.

“அடிச்சு கேட்டா கூட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க சார். என் மகனுக்கு தர சொல்லி வேற கொடுத்திருக்கார்” என்றான்.

“உங்க பாஸுக்கு என் அளவுக்கு உங்க மேலேயும் அன்புன்னு சொல்லுங்க” என்றாள் மலர்.

“அட நீங்க வேற மேடம், நான்தான் இதெல்லாம் வரவச்சது. நீங்க மட்டும் சாப்பிட்டு என் கண்ணு பட்டு உங்களுக்கு வயித்து வலி வந்திடும்னு பயந்து போயிருப்பார்” என தமன் சொல்ல சிரித்தாள் மலர்.

“உங்க உடம்ப நல்லா பார்த்துக்கோங்க மேடம். உங்களுக்கு ஒண்ணுன்னா நான்தான் படாதபாடு பட வேண்டியிருக்கு” என தமன் சொல்ல, விமலாவும் இவன் பட்ட பாடுகளை எடுத்து சொன்னார்.

மனமாற நன்றி சொன்னாள் மலர். நேற்று வந்திருந்த கிஷோர் இலவச பிரிவில் வாங்க பட்டிருப்பவை பற்றியும் ஆர்டர் கொடுக்க பட்டிருப்பவை பற்றியும் சொன்னானே. மலருக்கு சாதித்து விட்ட உணர்வெல்லாம் இல்லை. ஆனால் பெரிய பாரம் அகன்று மனம் அமைதியாக நிறைவாக இருந்தது.

இரவில் அவளுக்கு துணையாக தங்க வந்த பிரவாகனிடம் இது போல் எல்லாம் பழங்கள் வாங்க வேண்டாம் என முடிவாக கூறி விட்டாள்.

அவளை முறைத்தவன், “உனக்கு எதைத்தான் நான் ஆசையா செய்றது மலர்?” எனக் கேட்டான்.

“அதான் செய்திட்டு இருக்கீங்களே, செய்ய போறதா சொல்லியிருக்கீங்களே… அது போதும். இதோ என் கூட இருக்கணும்னு வந்திருக்கீங்களே… இட் மீன்ஸ் அ லாட்” என்றாள்.

“எனக்கு போதாது மலர். நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு உனக்கு உணர்த்தணும். இவன் சரியான இடியட்னு நீ நினைச்சாலும் பரவாயில்ல, நான் இப்படித்தான் ஏதாவது செய்வேன்” என்றான்.

அவன் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

“லவ்… குட் ஃபீல் ங்க. உனக்கு உடம்பு முடியலையா? நீ நல்லாக உன் கூட சேர்ந்து நானும் உன் சிக்னெஸோட போராடுறேன்னு எனக்கு துணையா நிக்கிறதுல தெரியாதா உங்க லவ்? எந்த நேரத்துல எனக்கு முடியலைன்னாலும் நீ தனியா கஷ்ட படாதேன்னு உடனே ஓடி வந்து என்னை தாங்குறதுல என்னால தெரிஞ்சிக்க முடியாதா உங்க லவ்வை?” எனக் கேட்டாள்.

கண்கள் ஒளிர சிரித்தவன், அவளது கையை பற்றிக் கொண்டு, “தென் ஷோ மீ யுவர் லவ்?” என சொல்லி கண்கள் சிமிட்டினான்.

“நீங்க ஏதாவது நல்லது செய்யும் போது, எனக்கு முடியாம இருந்தப்பவும் கிஸ் கொடுக்கிறது லவ் இல்லயா? தப்பு செய்யும் போது டோஸ் விடுறதும் கூட லவ்தான். நான் என் லவ்வ காட்டிட்டுத்தான் இருக்கேன்” என்றாள்.

அவளின் பதிலில் சிரித்து விட்டான் பிரவா. அவள் கனிவாக அவனை பார்த்திருந்தாள்.

“கொள்கை கருத்துலன்னு வேறுபாடு இருக்கிறவங்க லவ்வோட லைஃப் கொண்டு போறது சவாலான விஷயம். ஆனா அவ்ளோ கஷ்டம் இல்லை, உங்களை மாத்த முடியும்னு இப்ப முழுசா நம்புறேன்” என்றாள்.

தன் சிரிப்பை நிறுத்தியவன், “என்ன நான் மாறணும்? ஆம் பெர்ஃபெக்ட்” என்றான்.

இப்போதிருக்கும் இனிய மன நிலையை கெடுத்துக் கொள்ள விரும்பாதவள் அதற்கு மேல் அவனிடம் வாதிடவில்லை.

அவளை உறங்க சொல்லி எழுந்து கொண்டான்.

தான் நன்றாக இருப்பதாகவும் நரம்பு ஊசியை நீக்கி விடுமாறும் சொன்னாள். அவன் போய் செவிலியரை அழைக்க இரவு நேரத்தில் தேவை பட்டால் என்ன செய்வது என தயங்கினார். பின் மருத்துவருக்கே அழைத்து கேட்டவன் நரம்பு ஊசியை எடுக்க வைத்து விட்டான்.

சிறு விஷயம் கூட அவன் பார்த்து பார்த்து செய்வது அவளது மனதிற்கு இதமாக இருந்தது.

இருவரும் அவரவர் படுக்கைகளில் படுத்துக் கொள்ள திடீரென, “என்னை எதுக்காக மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க?” எனக் கேட்டாள்.

“போடி!” என்றான்.

“ப்ச் நிஜமா லவ்வா?”

“இன்னொரு முறை இந்த கேள்வி கேட்காத. என்ன வேணா நினைச்சுக்க. என் வைஃப் எண்னை லவ் பண்றா, நான் நிம்மதியா தூங்க போறேன். உன் ஹஸ்பண்ட் லவ் பத்தி யோசிச்சு நீயே மண்டைய உடைச்சுக்கோ” என்றான்.

“நான் இன்னிக்கு என்ன ஸ்டோரின்னு கேட்கல. மேரேஜ்க்கு முன்ன உள்ள ஸ்டோரி என்ன?”

“என்னை நம்ப மாட்டியா நீ?”

“ஒரு நாள் தெரிய வரும். அன்னிக்கு பார்த்துக்கிறேன் உங்களை” என்றாள்.

பிரவாகன் மௌனமாகி விட அவள் உறங்கத் தொடங்கி விட்டாள்.

அடுத்த நாள் டிஸ்சார்ஜ் ஆகி விட்டாள். ஒரு வாரம் அவளது பிறந்த வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு வரும் படி சொல்லி அனுப்பி வைத்து விட்டான்.

நான்கு நாட்கள் கடந்த பின் ஒரு முன் மாலை பொழுதில் அவனது அலுவலக அறைக்கு வந்து நின்றவளை பார்த்து அவன் புன்னகை செய்ய, அவளோ அவனை ஆத்திரமாக பார்த்திருந்தாள்.

ஏதோ சரியில்லை என உணர்ந்தவன் எழுந்து வந்து அவளது தோளை தொட, வேகமாக தன் தோளை குலுக்கி அவனது கையை உதறி விட்டவள், “எதுக்காக என்னை கல்யாணம் பண்ணுனீங்க?” என அழுத்தமான குரலில் கேட்டாள்.

பிரவாகன் தமனை பார்க்க அவன் ‘தனக்கொன்றும் தெரியாது’ என தலையாட்டினான்.

“நீ முதல்ல உட்கார்” அவள் கையை பிடித்து அவன் அழைக்க, மீண்டும் அவனது கையை உதறி விட்டவள், “யூ சீட்!” என கத்தினாள்.

பிரவாகன் தமனை பார்க்க அவன் உடனே வெளியேறினான்.

“அடுத்தவங்க முன்னாடி மரியாதையா பேசணும்னு எத்தனை தடவ உனக்கு சொல்றது மலர்?” என கடினமாக கேட்டான்.

அவள் வெறுப்பும் கோவமுமாக அவனை பார்க்க, “உனக்கு என்ன தெரியும்? அதை சொல்லு முதல்ல” என்றான்.

“ஏன் நான் சொல்றத வச்சு புதுசா ஏதாவது ரீல் விடலாம்னு நினைச்சீங்களா?” எனக் கேட்டாள்.

“நான் யாரையும் ஏமாத்த நினைக்கல, நாம பொறுமையா பேசலாம். குடிக்க ஏதாவது வரவைக்கிறேன்” என்றான்.

அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிய, “உன்னை பத்தி தெரிஞ்சும் உன்னை நம்பினேன் நான். அதான் உண்மை தெரிஞ்சதும் ஏத்துக்க முடியலை” என கலங்கிய குரலில் சொன்னாள்.

“எமோஷனல் ஆகுற அளவுக்கு எதுவும் இல்லை மலர். அப்ப என் நிலை அப்படி”

“என்ன பெரிய நிலைமை?”

“இடத்தை தானமா எழுதி கொடுத்த உன் கொள்ளு தாத்தா ஃப்யூச்சர்ல பிராப்லம் வர்ற மாதிரி பத்திரத்துல சில கண்டிஷன்ஸையும் சேர்த்து எழுதி வச்சிருந்தார். அவருக்கு நேரடி வாரிசு இருக்கும்னு எனக்கு தெரியாது. அவரோட வம்சாவழில யாரையாவது தேடி கண்டு பிடிக்கத்தான் ட்ரை பண்ணினேன்…” அவன் பேசுகையில் இடையிட்டாள் மலர்.

“எங்கப்பாதான் நீங்க தேடிட்டு இருந்தது. நீங்க சொல்றதை அவரை கேட்க வைக்க நான் பகடைக்காய், இடப் பிரச்சனை சரி செய்றதுக்காக நீங்க மேற்கொண்ட மிஷன்தான் நம்ம கல்யாணம், பிரமாதம்!” சீறினாள் மலர்.

எப்படி இவளை சமாளிக்க போகிறோம் என மனதிற்குள் பயந்தாலும் வெளியில் அழுத்தமாக தன்னை காட்டிக் கொண்டு நின்றிருந்தான் பிரவாகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement