Advertisement

பேரன்பு பிரவாகம் -28

அத்தியாயம் -28(1)

டீலக்ஸ் வார்டில் மலரை விட்ட பிரவாகன், “இங்கேருந்து கிளம்புறேன்னு எதுவும் கிறுக்குத் தனம் செய்யாத. ஏழு கார்ட்ஸ் இருக்காங்க. இந்த ஃப்ளோர் விட்டு எங்கேயும் போக முடியாது உன்னால” என்றான்.

எதிர்த்து பேச சக்தியின்றி படுக்கையில் சுருண்டு விட்டாள். அவளை கவலையாக பார்த்தவன் மருத்துவரை வரும் படி சொன்னான்.

வாந்தி எடுத்து எடுத்து அவளுக்கே அவள் மீது வாடை வீசுவது போலிருக்க குளிக்க நினைத்து குளியறை பக்கமாக பார்த்தவள் எழ முடியாமல் படுத்தே இருந்தாள்.

அவளிடமே பார்வையை வைத்திருந்தவன், “மலரை குளிக்க வச்சு அழைச்சிட்டு வாங்க த்தை” என விமலாவிடம் சொன்னான்.

“ட்ரெஸ் மட்டும் மாத்திக்கட்டும் மாப்ள, எழுந்தாலே ஒரு பக்கமா சாயுறா. நாளைக்கு குளிக்கட்டும்” என்றார் விமலா.

“இல்லயில்ல… குளிக்கட்டும்” மலரின் மனதை அறிந்தவன் உறுதியாக சொன்னான்.

 விமலா கைத்தாங்கலாக மகளை அழைத்து செல்ல பார்த்தார். இவன் தூக்க வர, “நானே நடப்பேன்” என வீம்பாக கூறி மல்லுகட்டி அம்மாவுடன் நடந்து சென்றாள். நான்கடி நடந்தவள் விமலா மீது சாய அவராலும் நிலையாக நிற்க முடியவில்லை.

மலரை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன், “அவங்களையும் கீழ தள்ளி பேஷண்ட் ஆக்கலாம்னு பார்த்தியா?” எனக் கடிந்தான். அவனை தள்ளி விட்டு இவள் நடக்க நினைக்க முடிந்தால்தானே? அவனே தூக்கிக் கொண்டு போய் குளியறையில் விட்டான்.

“அத்தையால முடியுமா? அவங்கள விட இங்க நான் இருக்கிறது பெட்டர் இல்ல?” பிரவாகன் நல்ல எண்ணத்தில்தான் கேட்டான். அவன் கைப்பிடியில் இருந்து கொண்டே வேகமாக கோப்பையில் தண்ணீரை எடுத்தவள், “தலைல ஊத்தி விட்ருவேன், போங்க வெளில” என சீறினாள்.

“நாம ஹாஸ்பிடல்ல இருக்கிறதை மறந்திட்டேன்னு நினைக்கிறேன். ஹனிமூன்ல இப்படி விளையாடுனது அப்புறம் மறந்து போயிட்டோம்ல? வீட்டுக்கு போனதும் இந்த விளையாட்ட நாம வச்சுக்கலாம்” என பிரவாகன் சொல்ல அவள் முகத்தை சுருக்கினாள்.

“உடம்புல ஒண்ணும் இல்லாம ஆல்ரெடி மூஞ்சு சின்னதா போய்த்தான் இருக்கு. சீக்கிரம் குளி. விளையாட்டு பேச்ச எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, விமலா வந்து விட்டார்.

அவள் அமர்வதற்கு வசதி செய்து கொடுத்து விட்டு குளியறையிலிருந்து வெளியே வந்தவன் அறையிலேயேதான் இருந்தான். எங்கே விழுந்து விடுவாளோ, அத்தையால் சமாளிக்க இயலாமல் போய் விடுமோ என்ற பயம் அவனுக்கு.

ஆனால் அப்படி எதுவும் அசம்பாவிதம் ஆகவில்லை. அவள் குளித்து ஆடை மாற்றி வரவும் தனலக்ஷ்மி வந்து பார்த்தார். ட்ரிப்ஸ் போட சொல்ல அவளது கையில் இருந்த நரம்பு ஊசி செயல் இழந்திருந்ததால் வீங்க ஆரம்பித்து விட்டது.

 வேறு நரம்பு ஊசி போட்டு பழையதை அகற்றி விட்டனர். வீங்கியிருந்த கையில் செவிலியர் மருந்து தடவி விட அந்த கையை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு வருடி விட்டான்.

மகளுக்கு கொஞ்சமாக கஞ்சி புகட்டினார் விமலா. அவளது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. ஓங்கரித்து கொண்டு வாந்தி செய்ததில் அவளது கண்கள் கலங்கிப் போயின.

அவளது வாயை கொப்புளிக்க செய்து டிஸ்யூ வைத்து வாயை சுத்தம் செய்து விட்டான். அத்தனை ஊழியர்கள் இருக்க, அவளது அம்மாவும் உடன் இருக்க அவனே எல்லாம் செய்தான்.

மலருக்கே சங்கடமாகிப் போக, “நீங்க போங்க” என்றாள்.

காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளை படுக்க வைத்தவன் மருத்துவரிடம், “எப்போதான் இவளால சாப்பிட முடியும் டாக்டர்?” என ஆதங்கமாக கேட்டான்.

“நாளைக்கு பார்க்கலாம் சார், இன்னிக்கு இதுக்கு மேல எதுவும் சாப்பிட கொடுக்க வேணாம். லெட் ஹெர் டேக் ரெஸ்ட்” எனக் கூறி சென்று விட்டார்.

மலர் அரைத் தூக்கத்தில் இருக்க செல்வமும் பரத்தும் வந்தனர். அவனுக்கு குறைந்த செலவில் எங்கு சீட் கிடைக்கும் என ஆராய்ந்து அவனை மருத்துவம் படிக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் விமலாவும் பரத்தும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, செல்வமும் பிரவாகனும் அறையில்தான் இருந்தனர்.

பரத்தை தன் கல்லூரியில் சேர்த்து விடும் படி சொல்லிக் கொண்டிருந்தான் பிரவா. வேண்டாம் என மறுத்து கொண்டிருந்தார் செல்வம்.

“ஏன் வேணாம்னு சொல்றீங்க? என்கிட்டேருந்து இதை சலுகையா ஏன் பார்க்கணும் நீங்க? உங்களுக்கு என் மாமனாரா இல்லாம கூட உரிமை இருக்கு மாமா” என்றான் பிரவா.

அவசரமாக மலரை பார்த்தவர், “அது பத்தி எப்பவும் பேசக்கூடாதுன்னு நீங்கதான் உறுதியா சொன்னீங்க மாப்ள. அதுவும் இங்க வச்சு நாம பேச வேணாம். பகல்ல பார்த்து பேசணும், இரவுல பேசவே கூடாது” என்றார்.

பிரவாகனும் அவர்கள் அதுவரை பேசிக் கொண்டது சம்பந்தமாக பின் பேசவில்லை. மலரை பற்றி மட்டுமே பேசிக் கொண்டனர்.

பிரவாகனின் வீட்டிலிருந்து அனைவருக்கும் சாப்பாடு வந்தது. மலருக்கு ஒரு வாய் கொடுத்து பார்த்தார் விமலா. மலருமே முயற்சி செய்து பார்க்கலாம் என சாப்பிட்டாள். ஆனால் அவளால் முடியவில்லை.

மற்றவர்களுக்கும் சாப்பிடவே மனமில்லை. பிரவாகன் இரண்டு முறை அழுத்தி சொல்ல மறுக்க முடியாமல் சாப்பிட்டனர். அவனுமே அரை வயிற்றுக்கு சாப்பிட்டுக் கொண்டான்.

மலருடன் தான் தங்கிக் கொள்வதாக சொன்ன பிரவாகன் அனைவரையும் கிளம்ப சொன்னான்.

விமலா அதற்கு ஒத்துக் கொள்ளாமல் பார்க்க, “பகல்ல நீங்கதான் கூட இருக்க போறீங்க அத்தை. என்னால பகல்ல இவ கூட இருக்க முடியாது, நைட் நான் பார்த்துக்கிறேன், மார்னிங் கார் அனுப்புறேன் வந்திடுங்க” என சொல்லி அனுப்பி வைத்து விட்டான்.

இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ட்ரிப்ஸ் வேண்டாம், நன்றாக உறங்கட்டும் என மருத்துவர் சொல்லியிருக்க ட்ரிப்ஸ் கழட்டி விட்டனர். அவள் ஓய்வறை செல்ல இவன்தான் உதவினான்.

ஓய்வறை சென்ற வந்தவளுக்கு அதிக நேரம் படுத்தே இருந்ததில் ஒரு மாதிரி இருக்க, சோஃபாவில் அமர்ந்து சோஃபாவின் திண்டில் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

அவளருகில் அமர்ந்தவன் அவளை நிமிர்த்தி தன் மார்பில் சாய்த்துக் கொண்டான். விலகவெல்லாம் முனையவில்லை அவள்.

அவள் படித்த சமயத்தில் இது போல தீவிர வாந்தியால் சிரம பட்ட ஒரு கர்ப்பிணியை பார்த்திருக்கிறாள். சிகிச்சைக்காக வாரக் கணக்கில் மருத்துவ மனையில் இருப்பாள், டிஸ்சார்ஜ் ஆகி சென்ற சில நாட்களில் மீண்டும் அட்மிட் ஆவாள். ஏழு மாதங்கள் வரை இப்படித்தான் தொடர்ந்தது. எட்டாவது மாதத்தின் ஆரம்பத்தில் குறை பிரசவம் ஆனது.

தாயையும் சேயையும் காப்பாற்றி விட்டார்கள் என்றாலும் அவர்களுக்கு மிகுந்த சிரம காலம்தான். அது போலவே தனக்கும் ஆகுமோ, அதிலும் இரட்டைக் குழந்தைகள், இப்படி இருந்தால் எப்படி என் குழந்தைகளுக்கு ஆகாரம் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணியவளுக்கு அழுகையாக வந்தது.

“என்ன நினைச்சு இப்போ இந்த அழுகை?” என அவன் கேட்டதற்கு அவள் பதில் சொல்லவில்லை.

“எது நினைச்சு அழுதாலும் சரி… இது அவசியமே இல்லாத அழுகை. ஐ பிராமிஸ் யூ, உனக்கும் நம்ம பேபிஸ்க்கும் எதுவும் ஆக விட மாட்டேன்” என்றான்.

மெல்லிய குரலில் நிறுத்தி நிறுத்தி தன் மனக் கவலையை அவனிடம் சொன்னாள்.

“ம்ம்… அது எப்படி வாமிட் நிக்காம இருக்கும்னு நானும் பார்க்கிறேன்” என அவன் சொல்ல, விலுக் என நிமிர்ந்தவள் கண்டனமாக பார்த்தாள்.

“வாட்? உன்னை எப்படி சரியாக்குறேன்னு மட்டும் பாரு” என்றான்.

பிரவாகன் மீது கோவமாக இருப்பது நினைவுக்கு வர அவனிடமிருந்து விலகினாள். தன்னை ட்ரஸ்ட்டீ பதவியிலிருந்து நீக்கியவனுடன் தனிமையில் பேசாமல் இருந்து வந்த தான் இன்று அதை மீறி விட்டது புரியவும் தன்னை தானே நொந்து கொண்டாள்.

“சரி சரி வா, நீ எப்பவும் போல பேசாமலேயே இரு. நீ என்கிட்ட இப்ப பேசினதை நான் மறந்திட்டேன்” என சொல்லி அவளை இழுத்தான்.

உச்சு கொட்டியவள் படுக்கைக்கு செல்ல எழுந்தாள். அவளை படுக்கையில் விட்டவன் அவள் உறங்கும் வரை துணையாக அவளருகில் அமர்ந்தான்.

“பகல்ல பார்த்து பேசணும் நைட்ல பேச கூடாது அப்படி ஏதோ அப்பா சொன்னாங்கல்ல… என்ன பேசிக்கிடீங்க ரெண்டு பேரும். எனக்கு எல்லாம் நார்மல்தானே? எதையும் மறைக்கிறீங்களா ரெண்டு பேரும்?” திடீரென மலர் கேட்க, தன் அதிர்ச்சியை மறைக்க வெகுவாக பாடு பட்டான் பிரவாகன்.

“என்ன? எதுவா இருந்தாலும் சொல்லுங்க” என்றாள்.

அவளது பேச்சில் குழம்பியது போல காட்டிக் கொண்டவன், “என்ன ஏதேதோ சொல்ற? கனவு எதுவும் வந்ததா?” எனக் கேட்டான்.

மலர் யோசிக்க அவளுக்கு சரியாக புரியவில்லை. அப்பா அப்படி பேசியது போலதான் இருந்தது. ஆனால் சரியாக நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. முகத்தை சுளித்துக் கொண்டே இன்னும் யோசித்தாள்.

“எதுக்கு ஸ்ட்ரெயின் பண்ற மலர்? கனவுதான் கண்டிருப்ப, கன்ஃப்யூஸ் பண்ணிக்காத” என்றான்.

கனவுதான் போல என மலரும் நம்பி விட்டாள்.

அவள் உறங்கியதும் இன்னொரு படுக்கையில் படுத்தவனுக்கு உறக்கம்தான் வரவில்லை. உண்மை தெரிய வந்தால் மலர் கண்டிப்பாக கோவம் கொள்வாள். சண்டை போடுவாள். முன்னர் எல்லாம் அப்படி ஆனாலும் அவளை எதிர்கொள்ள தயாராகவே இருந்தான். இப்போது நினைத்து பார்க்கையில் பயமாக இருந்தது.

 அவளது கோவத்தை வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள தயாராக இல்லாதவன் அந்த விஷயம் அவளுக்கு தெரியாமலே போய் விடட்டும் என நினைத்துக் கொண்டான். மெல்ல மெல்ல அவனும் உறங்கிப் போனான்.

விடியற்காலையில் விமலா வந்து விடவும் பிரவாகன் வீட்டுக்கு சென்று விட்டான்.

காலையில் பிரவாகன் வரும் போதே அக்குபஞ்சர் மருத்துவருடன்தான் வந்தான். அவரது பரிந்துரை படி வாந்தி வருவதை தடுக்கும் பிரஷர் பாயிண்ட் இருக்கும் மணிக்கட்டு பகுதியில் பேண்ட் அணிவிக்க பட்டது.

முதல் நாள் விட சற்றே முன்னேற்றம் இருப்பினும் வாந்தி சுத்தமாக நிற்கவில்லை. பிரவாகனால் அவளுடனே இருக்க முடியவில்லை. அவனுக்கு அவனது பணிகள் காத்திருந்தன.

ஆனாலும் சில நிமிட இடைவெளி கிடைத்தாலும் அவளை பற்றி அறிந்து கொண்டான்.

மதியம் போல அவன் அவளை பார்க்க வருகையில் காய்கறி சாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்பாடா, ஏதோ சாப்பிடுகிறாள் என பிரவாகன் நினைக்க, அவளது வயிற்றில் எதுவும் தங்கவில்லை. அவளது தொண்டை புண் ஆகிப் போனதில் லேசாக இரத்தம் வேறு வர ஆரம்பித்தது.

பதற்றம் கொண்ட பிரவாகனோ மருத்துவர்கள், ஊழியர்கள் என அனைவரையும் படுத்தி வைத்து விட்டான். மெல்ல சரியாகும், இவ்வளவு பயப்படும் அளவுக்கு எதுவுமில்லை என மருத்துவர்கள் எடுத்துக் கூறியும் அவன் சமாதானம் ஆகவில்லை.

மலரின் பயத்தை பகிர்ந்து கொண்டான். அப்படியெல்லாம் மிகவும் அரிதாகத்தான் நடக்கும், சரியாகி விடும் என சொன்னார்கள். ஆனாலும் மலருக்கு அவளது வாந்தி நிற்கவே இல்லை.

அன்று இரவும் அவன்தான் அவளுடன் தங்கியிருந்தான். இலவச மருத்துவமனை நினைத்து கவலை கொண்டு அதன் காரணமாக ஹார்மோன்ஸ் ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறதோ என நினைத்தவன் படுத்திருந்தவளின் அருகில் அமர்ந்து கொண்டு அது பற்றி பேசினான்.

“கிஷோர் உன்கிட்ட பேசினார்தானே? இன்னும் அங்க சரத், கோதண்டம் அவங்க இடத்துல கிருஷ்ணகுமார், கிஷோர் சேஞ்ச் பண்ணனும் அதானே? அங்க எல்லாத்தையும் சரி பண்ணிட்டு கண்டிப்பா செய்றேன் மலர். நம்பு” என்றான்.

“நிஜமா?” எனக் கேட்டாள்.

“உடனே அங்க எல்லாத்தையும் சரி பண்ண முடியாது மலர். கணக்கெல்லாம் நான் பார்க்க போறதில்லை, ஆளுங்க வச்சு செய்ய சொல்றேன்னாலும் அது இப்போ அவ்ளோ ஈஸி கிடையாது. கண்டிப்பா சில மாதங்கள் டைம் தேவை படும். ட்ரஸ்ட் தனிச்சையா செயல் படுற மாதிரி செய்வேன்” என்றவனின் கண்களைதான் பார்த்திருந்தாள்.

முன்னரும் இந்த மாற்றங்கள் கொண்டு வர ஒரு வருட கால அவகாசம் கேட்டான்தான். ஆனால் அப்போது அவளால் நம்பமுடியவில்லை. இப்போது அவன் சொல்வதை நம்பும் படிதான் அவளது மனம் சொன்னது.

அவனை நம்புவதாக மேலும் கீழுமாக தலையை அசைத்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement