Advertisement

அத்தியாயம் -27(2)

மாப்பிள்ளையின் கோவத்தை பார்த்திருந்த செல்வமும் விமலாவும் அவனை அணுகவே தயங்கி நின்றனர். அரசியும் கீர்த்தியும் வந்து சேர அவர்களை பார்த்ததும் சற்றே தெம்பாக உணர்ந்தனர்.

மலரின் பெற்றோருக்கு பழச்சாறு வரவழைத்து பருக வைத்த கீர்த்தி, தம்பியிடம் சென்று பழச்சாறு கிளாசை நீட்டினாள்.

“வேணாம் க்கா. நீ குடி”

“ஏது நீ காலி வயிறா இருந்தா அவ வாமிட்டிங் ஸ்டாப் ஆகிடுமா? நீ இன்னும் சாப்பிடலைன்னு அம்மா சொன்னாங்க, பிடி இதை” என கீர்த்தி அதட்ட, அவளிடமிருந்து தள்ளி சென்று நின்று கொண்டான்.

கிளாசை தன் கையில் வாங்கிக் கொண்ட பத்மநாதன் அவனிடம் சென்றார்.

“அங்க ஸ்டாப்ஸ் ஜே சி ஐ ட்ரைனிங் டெமோ அது இதுன்னு ஓவர் ஒர்க் பிரஷர்ல டீமோட்டிவேட் ஆகியிருக்காங்க. ஆஃப்டர்நூன் அவங்ககிட்ட நீ மோடிவேஷனல் ஸ்பீச் கொடுக்கிறதா ஏற்பாடு ஆகியிருக்கு பிரவா. ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற? மலர் மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கேன், ஈவ்னிங் நல்லாகி எழுந்து உட்கார்ந்திடுவாங்க, நீ என்ன இப்படி இருக்க? மலரை மயக்கம் போட்டு விழ வச்ச பிரவா எங்க?” அறிவுரை, கிண்டல் என கலந்து பேசி அவன் கையில் கிளாசை திணித்தார்.

“நான் என்ன ஸ்பீச் கொடுக்க அங்கிள்? இங்க ஒரே ஒருத்திய என்ன பேசியும் மசிய வைக்க முடியலை என்னால” இயலாமையோடு சொன்னான்.

“ஒரு முடிவோடதான் மலர் உள்ள படுத்திருக்காங்க. சமாளிக்க எனர்ஜி வேணும்ல உனக்கு, சாப்பிடு பிரவா”

பாதி கிளாஸ் பழச்சாறை பருகியவன், “நாலு லேடி டாக்டர்ஸும் இவ்ளோ நேரம் என்னதான் அங்கிள் பண்றாங்க?” என எரிச்சலாக கேட்டவன் உள்ளே செல்ல முனைய, அவனை தடுத்து விட்டு அவரே சென்றார்.

முழுதாக ஒரு நிமிடம் கூட இவனால் காத்திருக்க முடியாமல் இவனும் உள்ளே சென்று விட்டான்.

மலருக்கு ஸ்கேன் செய்ய பட்டுக் கொண்டிருக்க பத்மநாதன் ஸ்கிரீனுக்கு வெளியேவே நின்றிருந்தார். இவனை கண்டதும், “இன்னும் ஸ்கேன் பண்ணி முடியலை போல பிரவா” என்றார்.

ஸ்கிரீனை தாண்டிக் கொண்டு மலரின் தலை மாட்டில் போய் நின்று கொண்டவன் அப்போதுதான் ஸ்கேன் செய்ய ஆரம்பித்திருப்பதாக கூறிய கமலவேணியை அதிருப்தியாக பார்த்தான்.

ஸ்கேன் மெஷினுக்கு மின் இணைப்பு கொடுக்க மலரின் படுக்கைக்கு அருகில் பிளக் பாயிண்ட் இல்லை. தலைமை செவிலியர் அவரது சொந்த உபயோகத்திற்கு வைத்திருந்த எக்ஸ்டன்ஷன் போர்ட் எடுத்து வர தாமதமாகி விட்டது. இதை கமலவேணி சொல்ல என்ன சொல்வான் அவன்?

 ஸ்கேன் செய்து கொண்டே தனலக்ஷ்மியும் அஸினா பேகமும் மருத்துவ சொற்கள் வைத்து அதிர்ச்சி கலந்து உரையாடிக் கொள்ள ஜர்னாவும் கமலவேணியும் அவர்களின் உரையாடலை அதிர்ச்சி கலந்த பார்வையோடு கவனித்தனர்.

அல்லு கழண்டு விட்டது என சொல்வார்களே… பிரவாகனுக்கு அப்படித்தான் இருந்தது. மலருக்கா அல்லது அவனது வாரிசுக்கா யாருக்கு என்ன என மொத்தமாக பயந்து போனான்.

தலையை மெல்ல உயர்த்தி பார்த்த மலர் முடியாமல் மீண்டும் படுக்க, மற்ற மருத்துவர்கள் ஒரு சேர பிரவாகனை பார்த்து புன்னகை செய்தனர்.

குழம்பிப் போனவன், “ஐயோ தெய்வங்களா… என்னன்னு சொல்லிட்டு சிரிங்க” என்றான்.

பிரவாகன் கையை பிடித்துக்கொண்ட ஜர்னா, “மலருக்கு ட்வின் ப்ரெக்னன்ஸி பிரவா” என்றார்.

அவர் சொன்ன செய்தியை கிரகிக்க பிரவாகனுக்கு சில நொடிகள் பிடித்தன. அவனது உடல் பரவசமாக சிலிர்க்க மானிட்டரை பார்த்தான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் தன்னுடைய உயிரின் இரண்டு பிரதிகள் அங்கு தெரிவதாக உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

ஜர்னாவின் கையை இன்னும் இறுக பற்றிக் கொண்டவன், “நிஜமாவா ஆன்ட்டி?” எனக் கேட்டான். ஆம் என்றார்.

மலரால் அவளது உணர்வுகளை வெளிப் படுத்த முடியவில்லை. மாணவியாக இருக்கும் காலத்திலேயே இப்படி இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள் என பிரசவம் நடந்தால் ஆர்வமாக இருப்பாள். கீர்த்தியிடம் கூட இரண்டு குழந்தைகள் பிரசவித்தது வளர்த்தது பற்றிய அனுபவங்களை ஆர்வமும் ஆசையுமாக கேட்பாள்.

 கடவுளுக்கு நன்றி சொன்னவள் தன் குழந்தைகளை நல்ல படியாக ஈனற்றெடுக்கும் வலிமையையும் தனக்கு தரும் படி வேண்டிக் கொண்டாள்.

“ஹார்ட் பீட் கேட்குறீங்களா மலர்?” என அஸினா பேகம் கேட்க, ஆம் என்பதாக கண்களால் சொன்னாள் மலர்.

அஸினாபேகம் மானிட்டர் பக்கம் திரும்ப, திடீரென பவர் கட் ஆனதால் மானிட்டர் அணைந்து போனது.

சட்டென அங்கு ஒரே நிசப்தம். மின் விசிறி, ஏர் கூலர் எல்லாம் நின்று போக, சரியான வெளிச்சமும் இல்லை. வேறு ஒரு கர்ப்பிணி பெண் வாந்தி எடுக்க அதன் தாக்கத்தில் மலரும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

கடுங்கோபம் கொண்ட பிரவாகன் கமலவேணியிடம் சத்தம் போட்டான்.

எவ்வளவுதான் பொறுமையாக போவார் அவரும்? அவருக்கும் கோவம் வந்து விட்டது.

“ஐ சீ யூ, ஆபரேஷன் தியேட்டர், காஸுவாலிட்டி இந்த மூணு இடத்துல மட்டும்தான் பவர் பேக் அப் இருக்கு. மத்த படி வார்டுக்கு ஒரு பாயிண்ட் பவர் இல்லைனாலும் ஒர்க் ஆகுற மாதிரி கனெக்ஷன் கொடுக்க பட்டிருக்கும். ஜெனரேட்டர் எத்தனை தேவை படும்னு கூட லிஸ்ட்ல மென்ஷன் பண்ணியிருக்கோம். நீங்க ஷவுட் பண்ண வேண்டியது என்கிட்ட இல்ல. பழைய ஆளுங்க மோசம்னா புது ஆளுங்க இன்னும் மோசமா இருந்தா, நாங்க என்ன பண்ண முடியும்? இங்க நான் டாக்டர், என் வேலை சம்பந்தமா மட்டும் பேசுங்க சார்” என்றார்.

வேணியின் தோளை பிடித்த ஜர்னா அவரை சமாதானம் செய்ய பின்னர்தான் நிதானத்திற்கு வந்தார்.

அங்கிருந்த நான்கைந்து கர்ப்பிணி பெண்கள் வெட்கையில் உள்ளே இருக்க முடியாமல் வயிற்றை தள்ளிக் கொண்டு வெளியே செல்ல நடந்தனர். படுக்கையில் இருந்த ஒரு பெண்ணுக்கு அவளது அம்மா விசிறி வைத்து விசிறி விட்டுக் கொண்டிருந்தார்.

இந்தளவுக்கு சீர் கெட்ட நிலையில் இருக்கும் என பிரவாகனும் நினைக்கவில்லை.

யாரையும் இது பற்றி சொல்ல விட்டால்தானே அவனுக்கு தெரிய வரும்? பத்மநாதன் கொடுத்த ரிப்போர்ட்டை கூட பார்க்கவில்லையே அவன். அப்போதே அத்தியாவசியமானவற்றை செய்து கொடுங்கள் என தர்மேந்திரனிடம் சொன்னான்தான். ஆனால் நடந்ததா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளாமல் விட்டான்தானே?

மலர் பல முறை அவனது சித்தப்பா, ஏகாம்பரம் ஆகியோரை பற்றி கூற வரும் போதெல்லாம் வீட்டில் மருத்துவமனை பற்றி பேச வேண்டாம் என கடிந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. தன் குற்றத்தை தன் மனதிற்குள்ளாக கூட ஒத்துக் கொள்ள அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை.

காற்றில்லாமல் வெப்பத்தை உணர்ந்தவன் தாடையை தடவிக் கொண்டே மலரை பார்க்க அவள் முகம் கழுத்தெல்லாம் வியர்வையில் நனைந்திருந்தது.

மருத்துவர்கள் மலரை பரிசோதனை செய்வதால் நாம் உள்ளே போனால் தொந்தரவாக இருக்கும் என சொல்லி கீர்த்தி யாரையும் உள்ளே செல்ல விடவில்லை.

“எம் பேர் சொல்லி கூப்பிடுவார் மேடம் எம் டி சார். ஈவ்னிங்குள்ள இன்வெர்ட்டர் ஏசி எல்லாம் ஃபிட் ஆகிடும்னு சொல்லுங்க மேடம். என்னால முடியலை” என்ற தமனை பாவமாக பார்த்தாள் கீர்த்தி.

பிரவாகன் தன் கைக்குட்டை எடுத்து மலரின் வியர்த்திருந்த நெற்றியில் ஒற்றி எடுக்க மின்சாரம் வந்து விட்டது.

“மலருக்கு இந்த டென்ஷன்தான், இதுதான் ஸ்ட்ரெஸ் ஆகுது, அதனால கூட ஹார்மோன்ஸ் லெவல்ஸ் இம்பேலன்ஸ் ஆகலாம். மலருக்கான ட்ரீட்மெண்ட் எங்க கைல மட்டும் இல்ல சார், உங்க கையிலேயும் இருக்கு” என கமலவேணி சொல்ல, “எக்ஸாட்லி!” என்றார் தள்ளி நின்றிருந்த பத்மநாதன்.

அனைவரையும் பார்வையால் அளந்த பிரவாகன் இறுதியாக மலரை பார்க்க, அவளும் இவனைத்தான் கோவமாக பார்த்திருந்தாள்.

“பேபிஸ் ஹார்ட் பீட்ஸ் கேட்கலாமா?” சூழலின் கனத்தை குறைக்க முற்பட்டார் தனலக்ஷ்மி.

“எஸ் எஸ், பேரென்ட்ஹூட் இப்போலேருந்து என்ஜாய் பண்ண ஸ்டார்ட் பண்ணட்டும் இவங்க” என உற்சாக படுத்தினார் ஜர்னா.

ஒரு கை காட்டி தடுத்தவன், “என் குழந்தைங்க துடிப்ப என் வைஃப் கேட்கும் போது அவ அதை முழுசா அனுபவிக்கனும். இப்போ வேணாம்” என்றான்.

அனைவரும் அவனை குழப்பமும் கேள்வியுமாக பார்க்க, “வாமிட் ஸ்டாப் பண்ண என்ன செய்யணுமோ செய்யுங்க. ஸ்கேன் மெஷின் இந்த வார்டுலேயே இருக்கட்டும்” என்றவன் மலரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். அவள் முகம் திருப்பிக் கொண்டாள்.

“ஈவ்னிங்குள்ள வாமிட்டிங் சப்சைட் ஆகிடும்னு நம்புவோம். அப்புறம் மலருக்கு பிடிச்சதா சாப்பிட கொடுத்து பார்க்கலாம்” என்றார் தனலக்ஷ்மி.

சரி என்றவன் மருத்துவர்களுக்கு பொதுவாக நன்றி தெரிவித்து, மலரிடம் பின்னர் வருவதாக சொல்லி அங்கிருந்து வெளியேறினான்.

பிரவாகன் வெளியில் வரவும் அனைவரும் அவனை பிடித்துக்கொண்டு மலரை பற்றி கேட்டனர். அவன் பின்னால் வந்த பத்மநாதன் விஷயத்தை சொன்னார். அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

விமலாவை மலருடன் இருந்து பார்த்துக் கொள்ளும் படியும் செல்வத்தை கிளம்பும் படியும் சொல்லி விட்டான். அம்மா மற்றும் அக்காவை கூட அவளை ஒரு முறை பார்த்து விட்டு கிளம்புங்கள் என கூறி விட்டான்.

 மலரை கவனிக்க அனுபவம் வாய்ந்த செவிலியர், பாதுகாவலர்கள் என எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு தமனை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement