Advertisement

பேரன்பு பிரவாகம் -27

அத்தியாயம் -27(1

இலவச மருத்துவமனை பிரிவிலிருந்து செல்ல மாட்டேன் என மலர் பிடிவாதம் பிடிக்க செய்வதறியாமல் திகைத்து போனான் பிரவாகன்.

தலைமை செவிலியர், கோதண்டம், சரத் போன்றோரும் கூடி விட்டனர். எதற்கு கூட்டம் போடுகிறீர்கள் என சொல்லி சரத்தையும் கோதண்டத்தையும் அங்கிருந்து வெளியேற்றி விட்டான்.

அமைதியாக படுத்திருந்த மலர் திடீரென வாந்தி செய்தாள். அவளை ஆதரவாக பிடித்துக்கொண்டான் பிரவாகன்.

அவளது வயிற்றில் ஏற்கனவே எதுவும் இல்லை. பித்தமாக வெளியே வர சோர்வில் கண்களை மூடிக் கொண்டாள். அவளுக்கு வியர்த்து விட எரிச்சலோடு மேலே பார்த்தான். அரத பழைய மின் விசிறி கர் கர் என சத்தம் செய்து கொண்டே ‘நான் இந்தளவு உழைக்கிறதே பெரிது’ என்பது போல சுற்றிக் கொண்டிருந்தது.

பணிக்கு வந்திருந்த தமன் விஷயம் அறிந்து அங்கு வந்தான்.

மலரின் பிடிவாதம் பற்றி அறியாமல், “ஏன் சார் மேடம் இங்க இருக்காங்க? டீலக்ஸ் வார்டு ஷிஃப்ட் பண்ணலாம் சார், அங்கதான் மேடமுக்கு வசதியா இருக்கும்” என்றான்.

அவனை சுள் என பார்த்த பிரவா, “மை ஃபூட்!” என கத்தினான். தமன் பயந்து போய் ஓரடி பின்னால் எடுத்து வைத்து நின்றான்.

“மலரை படுக்க விடுங்க சார். ட்ரிப்ஸ் கனெக்ட் பண்ணலாம். அங்க ஷிஃப்ட் பண்றது பத்தி ஒன் அவர் கழிச்சு திரும்பி பேசுங்க. இப்ப ட்ரீட் பண்ண அலோ பண்ணுங்க” என கமலவேணி சொல்ல, தன் மேல் சாய்த்து பிடித்திருந்த மனைவியை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான்.

மருத்துவர்கள் தனலக்ஷ்மி, ஜர்னா இருவரையும் இங்கு வரவழைக்கும் படி தமனுக்கு உத்தரவிட்டான். அவன் அலைபேசியில் பேசி விட்டு வைக்க, “உடனே இங்க ஏசி ஃபிட் பண்ணு” என அடுத்த கட்டளை போட்டான்.

“ஏ சி உடனே எப்படிங்க சார் வைக்க முடியும். நான் ஏர் கூலருக்கு ஏற்பாடு பண்றேன். டூ ஹவர்ஸ்ல ஏசி ஃபிட் பண்ணிடலாம்” என்றான்.

“பேசிட்டு இருக்காத, செய்”

“நீங்க டென்ஷன் ஆகாதீங்க சார், ப்ரெக்னன்ஸில வாமிட்டிங் எல்லாம் நார்மல்”

“உன்கிட்ட கேட்டேனா? இன்னும் கொஞ்சம் உமட்டினா அவ குடல் வெளில வந்திடும் போல. நான் பிடிச்சிக்கிறேன், என்னை தள்ள நினைச்சு நெகடிவ் ஃபோர்ஸ் கொடுக்கிறா, ஆனா அவளால முடியலை… நீ…” பிரவாகன் என்ன சொல்லியிருப்பானோ, கைப்பேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக விலகி சென்றான் தமன்.

தனலக்ஷ்மியும் ஜர்னாவும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விரைந்தவன், “என்ன செய்வீங்களோ அவ வாமிட் ஸ்டாப் ஆகணும், மதியம் அவ ஒழுங்கா சாப்பிடணும், வாய தொறந்து தெளிவா பேசணும்” என்றான்.

தனலக்ஷ்மி ஜர்னாவின் முகத்தை பார்க்க, “அப்படிலாம் எந்த ட்ரீட்மெண்ட் கொடுத்தாவது வாமிட் ஸ்டாப் பண்ணலாம்னு செய்ய கூடாது பிரவா. இப்ப என்ன ஸேஃப்னு பார்த்துதான் செய்யணும்” என கொஞ்சம் கண்டிப்போடு சொல்லி விட்டு மலரிடம் சென்றார்.

மலரின் பெற்றோரை வெளியில் அனுப்பி விட்டு மூன்று மருத்துவர்களும் மலரை பரிசோதனை செய்து அவர்களுக்குள்ளாக ஆலோசனை செய்து கொண்டிருக்க பொறுமை இல்லாதவன் உள்ளே சென்று மலரின் பக்கத்தில் நின்றான்.

கழிவறைகளை சுத்தம் செய்து முடித்திருந்த பணியாளர்கள் வார்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். கிருமி நாசினியின் வாடை பலமாக தாக்க, மலர் அனிச்சையாக மூக்கை மூடிக் கொள்ள துப்புரவு பணியாளரை பார்த்து சத்தம் போட்டான்.

சுத்தம் செய்து கொண்டிருந்தவர்கள் தொடர்வதா, விட்டு செல்வதா என பயத்தோடு மேற்பார்வையாளரை பார்த்து நிற்க, அவரிடமும் காச் மூச் என கத்தினான்.

“பிரவா என்ன இது?” என அவனை கடிந்த ஜர்னா, அந்த பணியாளர்களை அங்கிருந்து கிளம்ப சொல்லி விட்டு மேற்பார்வையாளரிடம், கர்ப்பிணிகள் இருக்கும் வார்டில் மட்டும் நல்ல வாசனை கொண்ட கிருமி நாசினி உபயோகிக்கலாமே என்றார்.

மாதத்தின் தொடக்கத்தில் கொடுக்க படும் கிருமி நாசினியை மாத இறுதி வரை வைத்திருந்து பயன்படுத்தவதே போராட்டமாக இருக்கும் போது வாசனையானதுக்கு எங்கு செல்வோம் என கேட்டான் மேற்பார்வையாளர்.

மலரும் காதில் வாங்கிக் கொண்டுதானே இருந்தாள். கணவனை அர்த்தமாக பார்த்து முறைத்தாள்.

‘அமைதியா படுத்திருக்கிறவளை சீண்டி விடுறானே!’ என மனதில் நொந்தவன், “ரொம்ப முக்கியம் இப்ப, கிளம்புய்யா இங்கேருந்து” என சீறினான்.

எங்கே ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என அதற்கும் தன்னை திட்டுவாரோ என பயந்து போன மேற்பார்வையாளர், “சார்… அப்போ க்ளீனிங்?” என்றான்.

பிரவாகன் பற்களை கடித்துக் கொண்டு அவனை பார்க்க, “அப்புறம் செய்யலாம், இப்ப ஏதாவது ரூம் ஸ்பிரே போட்டு விடுங்க” என்றார் ஜர்னா.

“நோ நோ ஆன்ட்டி, மலருக்கு ஸ்பிரே ஸ்மெல் பிடிக்காது” என்ற பிரவா மலரை கவலையாக பார்க்க, மேற்பார்வையாளரை அங்கிருந்து அப்புற படுத்தினார் ஜர்னா.

 கர்ப்ப காலத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பாக என்ன மருந்து கொடுக்கலாம் என மூன்று மருத்துவர்களும் ஆலோசித்து முடிவு செய்தனர். அந்த மருந்தும் இங்கு இல்லாமல் போக பெய்ட் பிளாக்கில் இருந்து வரவழைக்க பட்டு அவளுக்கு கொடுக்க பட்டது.

மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள் வேடிக்கை போல பார்த்திருக்க, அவளுக்கு மறைப்பொதுக்கம் / தனியுரிமை (ப்ரைவசி) அளிக்கும் படி சொன்னான்.

ஸ்கிரீன் கொண்டு வந்து வைத்தனர். அது ஒரு பக்கமாக அறுபட்டு தொங்கிக் கொண்டிருந்தது. பேண்டேஜ் ரோல் எடுத்து அதை இழுத்து கட்டி ஓரளவு சரி செய்தார் மேட்ரன்.

சரியான ஸ்கிரீன் கூட இங்கு இல்லையா என நினைத்த பிரவாகனுக்கு காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாத காரணத்தால் லேசாக தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. அவன் தலையை தடவிக் கொள்ள அவனுக்கு அமர இருக்கை போட்டனர். மலரின் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான்.

 மருந்து கொடுத்து இருபது நிமிடங்கள் கடந்த பின் என்ன சாப்பிடுகிறாய் என மலரின் விருப்பம் கேட்டு மாதுளை பழச்சாறு தருவிக்க பட்டது.

இரண்டு ஸ்பூன் கூட அவளால் பருக முடியவில்லை. உமட்டிக் கொண்டு வர பருக மறுத்தாள்.

“ட்ரை பண்ணு மலர், வாமிட் வந்தா பார்த்துக்கலாம்” என்றவன் அவளை வற்புறுத்த, “கம்பெல் பண்ணாதீங்க” என்றார் தனலக்ஷ்மி.

“என்ன ட்ரீட்மெண்ட்தான் கொடுக்குறீங்க இவளுக்கு?” என அவரிடம் கேட்டான்.

மலரை காண்பதற்காக அப்போதுதான் உள்ளே வந்த பத்மநாதன், “பிரவா என்னப்பா இது?” எனக் கேட்டு அவனை சமாதானம் செய்வது போல தோளில் தட்டிக் கொடுத்தார்.

“இல்ல அங்கிள்…” என பிரவாகன் ஆரம்பிக்க, மலருக்கு மீண்டும் வாந்தி. மலரை ஜர்னா தாங்கியிருக்க இன்னொரு செவிலியர் மலரின் நெஞ்சை வருடி விட்டுக் கொடுத்தார்.

எத்தனை பெரிய மருத்துவ ஸ்தாபனம் வைத்திருக்கிறேன், எத்தனை மருத்துவர்கள்? யாராலும் இவள் உபாதையை குணப் படுத்த இயலாதா என பிரவாகனுக்கு கோவம் கோவமாக வந்தது.

“ஏதாவது செய்யுங்க ஆன்ட்டி” என ஜர்னாவிடம் கொஞ்சம் கோவமாக சொன்னான்.

“பிரவாவை கொஞ்சம் வெளில கூட்டிட்டு போங்களேன் பத்மா சார்” என ஜர்னா சொல்ல, அவனை அங்கிருந்து இழுத்துக் கொண்டு வெளியில் சென்றார் பத்மநாதன்.

 ஏர் கூலர் வைக்கப் பட்டது. ஏசி எங்கு பொருத்தலாம் என எலக்ட்ரிஷியன்கள் குழு ஆய்வு செய்தனர்.

இரத்த பரிசோதனை முடிவுகளில் ஹெச் சி ஜி ஹார்மோனின் அளவு உயர்ந்து காணப் படுவதாகவும் அது கூட இந்த அதிகப் படியான வாந்திக்கு காரணமாக இருக்கலாம் என கூறினார்கள் மருத்துவர்கள்.

“விளையாடுறாங்களா அங்கிள்? முன்னாடி ஹெச் சி ஜி லோ’வா இருக்குன்னு சொல்லி பயமுறுத்துனாங்க? இப்ப அதிகம் ஆகிடுச்சாமாம்?” காய்ந்தான் பிரவா.

“ஹார்மோன் லெவல் கூடி குறைச்சு வந்தா டாக்டர்ஸ் என்ன பண்ணுவாங்க?” என பத்மநாதன் கேட்க, அவரை சலிப்பாக பார்த்து வைத்தான்.

மலருக்கு இன்னும் ஒரு முறை கூட ஸ்கேன் செய்யப்படவில்லை. நாளைக்குத்தான் ஸ்கேன் செய்ய தேதி கொடுத்திருந்தார் தனலக்ஷ்மி. இப்போது இன்றே பார்த்து விடலாம் என முடிவு செய்து பிரவாகனிடம் தெரிவித்தனர்.

“பெட் சைட் ஸ்கேன் பண்ணுங்க” என்றான் பிரவாகன்.

அங்கு ஒரு ஸ்கேன் மெஷின்தான் இருப்பதாகவும் அது கூட அத்தனை துல்லியமான வகை இல்லை, பழைய வெர்ஷன், பெய்ட் பிளாக் ஸ்கேன் சென்டருக்குதான் அழைத்து செல்ல வேண்டும், அல்லது தனலஷ்மியின் ஆலோசனை அறைக்கு சென்றால் கூட போதும் என்றனர்.

“செய்யுங்க, அவளை ஷிஃப்ட் பண்ண அரேஞ் பண்றேன்” என்றான்.

“மலர் ஒத்துக்க மாட்டேங்குறாங்க, இங்க என்ன அவைலபிலிட்டி இருக்கோ அத வச்சு ட்ரீட் பண்ணுங்கன்னு சொல்றாங்க” என்றார் தனலக்ஷ்மி.

கோவமாக மலரிடம் வந்த பிரவா அவளிடம் அந்த கோவத்தை காட்ட இயலாமல் நிதானமாக எடுத்து சொன்னான்.

“போயிட்டு திரும்ப இங்கேயே வந்திடுவேன்” என மெல்லிய குரலில் சொன்னாள்.

“உனக்கு அலைச்சல் மலர், அங்கேயே போய்டலாம்”

“இங்க இருக்க பேஷண்ட்ஸ் மனுஷங்க இல்லயா? நான் இங்கதான்…” தொடர்ந்து பேச முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள். அவள் துவளும் போதெல்லாம் இவனால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை.

“தமன்…” பற்களை கடித்துக் கொண்டு அழைத்தான் பிரவா.

“பெட் சைட் ஸ்கேன்தானே சார்? இதோ இப்ப வந்திடும் சார்” என சொல்லி அதி வேகமாக செயல் பட்டான் தமன்.

பதினைந்து நிமிடங்களில் ஸ்கேன் மெஷின் வர, உடன் ரேடியாலஜிஸ்ட் அஸினாபேகமும் வந்து சேர்ந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement