Advertisement

அத்தியாயம் -26(3)

பிள்ளைகளுக்கு தெரியாமல் விஷ்ணுவின் இடுப்பில் முழங்கை கொண்டு இடித்தவள், “எப்ப பேபி பெத்துக்கலாம்னு ஆசை பட வைக்குறீங்க. வெரி பேட் விஷ்ணு” என ரகசிய குரலில் சொன்னாள்.

“இப்ப இப்படி சொல்வ? போன முறை ரெண்டு நாள் பீரியட்ஸ் தள்ளி போனதும் ‘நிஜமா நீ டாக்டர்தானே? உன்னை நம்பினேனே… இப்ப இன்னும் வரலை, என்னை மோசம் பண்ணிட்டியே’னு புலம்பி என் உயிரை வாங்குவ. தள்ளி உட்கார்” என அவனும் ரகசிய குரலில் சொன்னான்.

“ஹப்பா… ரொம்பத்தான்!” செல்ல சலிப்போடு தள்ளி அமர்ந்தவள், “பசங்களுக்கும் சேர்த்து இட்லி செய்திருக்கலாம் விஷ்ணு” என்றாள்.

“அண்ணிங்க வேணும்னு செய்றாங்க மிரு, ஒரு நாள்தானே? விளையாடுறதுல பசியெல்லாம் மறந்திட்டாங்க. இட்லியும் தோசையும் ரெடி பண்ண எவ்ளோ டைம் ஆக போகுது, விடு” என சொல்லி விட்டான்.

இப்படியாக ஒரு வழியாக இரவு உணவு நடந்தேறியது.

காலையில் முதல் இரண்டு மருமகள்களும் மாமியாரிடம் முகம் கொடுக்கா விட்டாலும் ஆளுக்கொரு வேலை செய்தனர்.

தம்பியின் கேள்வியில் கொஞ்சம் போல அவனது அண்ணன்களுக்கு உரைத்திருக்க தங்கள் மனைவிமார்களிடம் இரவே சாமியாடி இருந்தனர். அதனால்தான் இந்த அளவாவது வேலை செய்தனர்.

மிருணாவும் மாமியாரிடம் கேட்டு கேட்டு ஏதோ உதவிகள் செய்தாள். வரவேற்புக்கு தயாராக வேண்டும் என்பதால் மதிய உணவு ஆர்டர் செய்து விட்டான் விஷ்ணு.

மாலையில் ஆடம்பரமான மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அத்தனை அமர்க்களமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தான் பிரவாகன். என் பிறந்த வீட்டினருக்கும் ஆசையிருக்கும், அவர்களின் மகிழ்ச்சிக்காக செய்கிறார்கள், எதுவும் பேசக்கூடாது என கணவனிடம் முன்னரே மிருணா சொல்லியிருக்க, விஷ்ணுவும் எந்த முக சுணக்கமும் காட்டவில்லை.

பல நாட்களுக்கு பின் மலரை நேரில் கண்ட விஷ்ணு அவளிடம் அக்கறையாக பேசினான். அவளும் முகம் மலர்ந்து பேச, தன்னை இன்னும் தவிர்த்துக் கொண்டிருக்கும் மனைவியை தூரத்திலிருந்து ஏக்கமாக பார்த்திருந்தான் பிரவாகன்.

“என்னங்க சார்… அடிக்காமலே வலிக்க வைக்கிறாங்களா மேடம்?” எனக் கேட்டான் தமன்.

“வலியா? எனக்கா? போ மேன்…” அலட்சியமாக சொன்னான் பிரவா.

“ஒத்துக்க மாட்டீங்களே சார். பார்த்துங்க சார்… தாங்க முடியாத அளவுக்கு வலிக்க வச்சிட போறாங்க”

தன் நெஞ்சை தொட்டு தடவிக் கொண்ட பிரவா, “இங்க இருக்கிறது எதையும் தாங்கும் ஹார்ட்” என்றான்.

“அப்ப வலிக்குதுன்னு ஒத்துக்குறீங்க?” என தமன் கேட்க அவனை முறைத்தான்.

“உங்களுக்குத்தான் எல்லாத்துக்கும் லிமிட்ஸ் இருக்குமே. எதையும் தாங்கும் உங்க ஹார்டு ஹார்ட்’டோட (hard heart – கடின இதயம்) பெயின் டாலரன்ஸுக்கும் லிமிட்ஸ் இருக்கும்ல சார்?” கிண்டலாக கேட்டான் தமன்.

 அவன் முதுகில் விளையாட்டாக தட்டிய பிரவா, “உனக்கு அதிக இடம் கொடுத்திட்டேன். வாய குறைச்சிட்டு கெஸ்ட்ஸ கவனி மேன்” என சொல்லி அங்கிருந்து அப்புற படுத்தினான்.

நிகழ்ச்சி முடியவும் பெண்ணுக்கு சீர்வரிசை தருவது சம்பந்தமாக விஷ்ணுவிடம் மகனை பேச விடாமல் தானே பேசினார் அரசி.

“இத வச்சுத்தான் உங்க பொண்ணுக்கு புகுந்த வீட்ல மரியாதைனு நீங்களும் நினைக்குறீங்களா அத்தை?” என கேள்வி கேட்டான் விஷ்ணு.

“அதிகமா எதுவும் செய்யலை தம்பி, ஒரு பொண்ணுக்கு பிறந்த வீட்லேருந்து என்ன செய்யணும்னு முறை இருக்கோ அது மட்டும்தான்” என சொல்லி அவனை சம்மதிக்க வைத்தார்.

இதென்ன அள்ளி தருவீங்கன்னு பார்த்தா கிள்ளி தர்றீங்க க்கா?” என அரசியிடம் வாய் விட்டே கேட்டார் சந்திரா.

இவர் பேசுவது தன் மகனுக்கு தெரிந்து விடக்கூடாதே என அரசி சங்கடமாக பார்க்க, அங்கிருந்த மலர், “எங்கண்ணன் இத கூட வேணாம்னுதான் சொன்னாங்க. மனைவியோட மதிப்பு தெரிஞ்சவர். நீங்க புரியாம எதுவும் பேசாதீங்க” என சொல்லி மாமியாரை அங்கிருந்து அழைத்து சென்று விட்டாள்.

நல்ல விதமாகவே விஷ்ணுவும் மிருணாவும் அவர்களின் வீடு சென்றனர். அடுத்த நாள் சென்னையும் சென்று விட்டனர்.

*****

அன்று காலையில் எழுந்ததிலிருந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் மலர். வெறும் வயிற்றில் இப்படி உமட்டல் லேசான வாந்தி இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று என்னவோ அதிகமாக இருந்தது.

உதவிக்கு வந்த பிரவாகனை தள்ளி நிறுத்தியவள் அவளே அவளை பார்த்துக் கொண்டாள். அவளோடு மல்லுக் கட்டாமல் அருகில் மட்டும் நின்று கொண்டான்.

வாந்திக்கான மாத்திரை எடுத்துக் கொண்டவள் வயிற்றுக்கு உணவை செலுத்த அதையும் வாந்தி எடுத்தாள்.

“இன்னிக்கு உனக்கு வாமிட் அதிகமா இருக்கு. வீட்ல ரெஸ்ட்டா இரு” என பிரவாகன் சொன்னதை காதில் வாங்காமல் இருந்தாள்.

அம்மாவை விட்டு அவளை வீட்டிலிருக்கும் படி சொல்ல சொன்னான். அவரிடமும், “இல்லத்த, இங்க இருந்தாதான் வாமிட்டிங் சென்ஸ் இருந்திட்டே இருக்கும். வேலை பார்த்துட்டு இருந்தா ஒண்ணும் செய்யாது” எனக் கூறி விட்டாள்.

மருத்துவமனை வந்தவளுக்கு எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு மசக்கை படுத்தி எடுத்தது. அரை நாளில் வாந்தி எடுத்து எடுத்தே சோர்ந்து விட்டாள்.

மதிய உணவு முடித்த மறு நிமிடமே வாந்தி செய்த மனைவியை தாங்கிப் பிடிக்க வந்து விட்டான் பிரவாகன்.

மலரை பரிசோதித்த கமலவேணி அவளை வீடு சென்று ஓய்வெடுக்கும் படி அறிவுறுத்தினார். அவளது பிறந்த வீட்டில் அவனே அழைத்து சென்று விட்டு வந்தான்.

இரண்டு நாட்கள் அங்குதான் இருந்தாள். இரவு அவளை பார்க்க அவன் செல்லும் போது உறங்கி போயிருப்பாள். சில நிமிடங்கள் வெறுமனே அவளை பார்த்திருந்து விட்டு கிளம்பி விடுவான்.

மூன்றாவது நாள் காலையில் மலர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல் வர, காலை உணவுக்காக அமர்ந்தவன் சாப்பிடாமல் உடனே மருத்துவமனை புறப்பட்டு விட்டான்.

மருத்துவமனை வந்த பின்னர்தான் மலர் இலவச பிரிவில் அனுமதிக்க பட்டிருக்கிறாள் என்ற விஷயம் அவனுக்கு தெரிய வந்தது. ‘அங்கு ஏன் சென்றாள்?’ என்ற கோவத்தோடு இலவச பிரிவுக்கு விரைந்தான்.

கர்ப்பிணிகளின் வார்டில் இருந்தாள் மலர். பெயட் பிளாக் வார்டுக்கும் இங்குள்ள வார்டுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்.

படுக்கை விரிப்புக்கு மேல் டிஸ்போஸல் ஷீட் போடப் பட்டிருக்க அதில் படுத்திருந்தாள் மலர். இடது கையில் நரம்பு ஊசி போடப்பட்டு சலைன் ஏறிக் கொண்டிருந்தது.

மலருக்கு அதிகாலையில் ஆரம்பித்த வாந்தி நிற்கவே இல்லை. மிகவும் களைத்து விட்டாள். கமலவேணிக்கு அழைத்து ஆலோசனை கேட்க, மருத்துவமனை வரும் படி அறிவுறுத்தியவர் அவரும் வந்து விட்டார்.

நீர் சத்து குறைவாக இருப்பதால் ட்ரிப்ஸ் போட வேண்டும், பெய்ட் பிளாக்கில் வி ஐ பி அறையை தயார் படுத்த சொல்கிறேன் என கமலவேணி கூற, மறுத்த மலர் இங்கேயே சிகிச்சை தரும் படி பிடிவாதம் செய்து இங்கேயே இருந்து கொண்டாள்.

விமலாவும் செல்வமும் உடன் இருந்தனர். மனைவியின் உடல்நிலை பற்றி கமலவேணியிடம் கேட்டான் பிரவாகன்.

“த்ரீ டேஸ்ஸா வாமிட் ஸ்டாப் ஆகல. ப்ரெக்னன்ஸில வாமிட்டிங் நார்மல்னாலும் வெகு சிலருக்கு இப்படி அதிகமா இருக்கும். டீஹைட்ரேட் ஆகியிருக்காங்க, ட்ரீட் பண்ணனும், வாமிட் குறைஞ்சு ஆகாரம் எடுத்துக்கிற நிலைக்கு வந்ததும் வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்” என்றார்.

“ஓகே டாக்டர், ட்ரிப்ஸ் டிஸ்கனெக்ட் பண்ணுங்க, மலரை அங்க ஷிஃப்ட் பண்ணிடலாம்” என்றான் பிரவா.

தான் முன்னரே சொன்னதையும் மலர் மறுத்து விட்டதையும் சொன்னார் கமலவேணி.

 “காலையிலேருந்து இவ தலை எழும்பல. எங்கேயும் போக தெம்பில்லாம வேணாம்னு சொல்லிட்டா. மதியம் போல கொஞ்சம் இவ தெளிஞ்சதும் அங்க அழைச்சிட்டு போலாமே மாப்ள. தூங்குறவளை ஏன் எழுப்பனும்? நைட் கூட சரியா தூங்கல மாப்ள” என்றார் விமலா.

“அவளா நடக்க போறா அத்தை? நான் பார்த்துக்கிறேன்” என மாமியாரிடம் சொன்னவன், “இவளை ரெடி பண்ணுங்க டாக்டர், நான் ஷிஃப்ட் பண்ணிக்கிறேன்” என்றான்.

சரி என்ற கமலவேணி செவிலியரிடம் டிரிப்ஸை நிறுத்த சொல்ல, விழித்துக் கொண்டாள் மலர்.

மலரின் அருகில் சென்றவன், “எப்படியிருக்கு மலர்?” என தவிப்பாக கேட்டான்.

பேச வாய் திறந்தாலே வாந்தி வந்து விடுவது போல அவளது நிலை இருக்க கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவன் அவளின் தலை கோதி கொடுக்க மூடியிருந்த அவளது விழியோரம் கண்ணீர் வடிந்தது.

 “நத்திங் டூ ஒர்ரி மலர் , நாம பெய்ட் பிளாக் போயிடலாம்” என்றான்.

சலைனின் இணைப்பை செவிலியர் துண்டிக்க போக, கையை விருட் என மலர் இழுத்துக் கொள்ள, வேகத்தில் சலைன் இணைப்பு தானாகவே துண்டிக்க பட்டு விட்டது. செவிலியர் கையிலிருந்த நரம்பு ஊசியின் சின்ன மூடியும் தவறி கீழே விழுந்து உருண்டு ஓடி விட்டது.

மலரின் கையிலிருந்த நரம்பு ஊசியின் வெளிப்பகுதி மூடப் படாமல் போக, அங்கிருந்து இரத்தம் வெளி வர ஆரம்பித்தது. வேகமாக செயல்பட்ட கமலவேணி மேற்கொண்டு இரத்தம் வெளி வராமல் மலரின் கையை அழுத்திப் பிடிக்க, வேறு மூடி கொண்டு வந்து நரம்பு ஊசியின் வழியை அடைத்தார் செவிலியர்.

பிரவாகனின் முன்பு மலரை கடிய முடியாமல் நின்றிருந்தார் கமலவேணி. விமலா கணவரை கவலையாக பார்க்க, “மலர்… என்னடா ம்மா?” என மென்மையாக கடிந்தார் செல்வம்.

தன் கையை உயர்த்தி பார்த்த மலர் செவிலியரை பார்த்து, “ட்ரிப்ஸ் கனெக்ட் பண்ணுங்க சிஸ்டர்” என பலஹீனமான குரலில் சொன்னாள்.

செவிலியர் கமலவேணியை பார்க்க, அவரோ பிரவாகனை பார்த்தார்.

மனைவி மீது கோவம் ஏற்பட்டாலும் இந்த நிலையில் கடினமாக பேச மனமில்லாதவன், “நீ நடக்க வேணாம், பத்திரமா உன்னை அங்க அழைச்சிட்டு போறேன். கோ ஆபரேட் பண்ணு மலர்” என்றான்.

கணவனை பாராமல் முகத்தை திருப்பிக் கொண்டவள், “இல்ல, நான் அங்க வரலை. வேணி மேடம் நல்லாத்தான் ட்ரீட் பண்ணுவாங்க. இங்கேயே இருக்கேன்” என சின்ன குரல் என்றாலும் அடமாக சொன்னாள்.

“சரி, வேணி மேடமே ட்ரீட் பண்ணட்டும். இவங்க அங்க வருவாங்க” என்றான்.

மேற்கொண்டு பேச சக்தியில்லாமல் ‘வேண்டாம்’ என மறுப்பாக தலையசைத்தாள்.

பிரவாகன் அவளை முறைத்துக் கொண்டே, “மலர்!” என அதட்ட, நிதானமாக அவன் முகத்தை பார்க்க திரும்பினாள்.

குரலை செருமி கோவத்தை உள் இழுத்துக் கொண்டவன், “ஸ்ட்ரெச்சர் எடுத்திட்டு வர சொல்லியிருக்கேன். அங்க போய் நாம பேசலாம்” என்றான்.

சக்தியை திரட்டி தலையை இட வலமாக ஆட்டிய மலரின் கண்களில் அந்த நிலையிலும் கோவம் தெரிந்தது.

‘நீ என்ன சொன்னாலும் இங்கிருந்து நகர மாட்டேன்’ எனும் செய்தி தாங்கி அவனை பார்த்திருந்த மலர், ‘என்னை சாதாரணமாக எடை போட்டாயா?’ எனும் மறைமுக செய்தியையும் அவனுக்கு கடத்தினாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement