Advertisement

அத்தியாயம் -26(2)

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மிருணாவை கவலையாக பார்த்தார் தேவகி.

“இப்பவே செவன் தேர்ட்டி ஆகிடுச்சு, இதுக்கு மேல என் ஹெல்ப் வச்சுகிட்டு இவ்ளோவையும் எப்படி செய்ய முடியும் அத்தை?” எனக் கேட்டுக் கொண்டே கைப்பேசி எடுத்தாள் மிருணா.

“எதுக்குமா போன்? யூ டியூப் பார்த்து செய்ய போறியா? நான் சொல்லி தர்றேம்மா” என்றார் தேவகி.

“நாளைக்கு ஈவ்னிங் ரிஷப்ஷன், இப்படி ஒவ்வொரு வேளைக்கும் சாப்பாட்டுக்கு சண்டை போட்டுட்டு இருப்பாங்களா இவங்க? ஸ்டவ் ஆப் பண்ணிடுங்க” என மிருணா சொல்ல, தேவகி குழப்பமாக பார்க்க, அவளே உருளைக்கிழங்கு வெந்து கொண்டிருந்த அடுப்பை அணைத்து விட்டாள்.

“என்னென்ன ஐயிட்டம் எவ்ளோ வேணும்னு சொல்லுங்க, நான் ஆர்டர் பண்றேன் அத்தை” என்றாள்.

“அம்மாடி! எல்லா நேரமும் இப்படி ஆர்டர் பண்ண முடியுமா?”

“இன்னிக்கு நைட் டின்னர், நாளைக்கு பிரேக் ஃபாஸ்ட் அண்ட் லஞ்ச், அவ்ளோதானே அத்தை? நீங்க என்ன வேணும்னு சொல்லுங்க” என இவள் கேட்டுக் கொண்டிருக்க விஷ்ணு வந்தான்.

அவனுக்கு நடந்தது தெரிய வர, “இவங்க இங்க கெஸ்ட்டா. வேணும்னு செய்றாங்க. ஈஸியா என்னம்மா செய்ய முடியும்?” எனக் கேட்டான்.

உருளைக்கிழங்கு வெந்து விட்டதாகவும் குருமாவுக்கு தேவையான மற்ற காய்கள் கூட நறுக்க பட்டு விட்டதாகவும் தேங்காய் மட்டும் அரைக்க வேண்டும் என சொன்னார் தேவகி.

அம்மாவை குருமா வைக்க சொன்னவன் பிசைந்து வைக்க பட்டிருந்த சப்பாத்தி மாவை குளிர் சாதன பெட்டியில் எடுத்து வைத்து விட்டான்.

“என்னடா வெறும் குருமாவ எடுத்து குடிச்சு வயித்த நிரப்பிக்கணுமா? சப்பாத்தி மாவை வெளில வை, நான் ஒண்ணு தேய்ச்சு காட்டுறேன், மிருணா தேக்கட்டும்” என்றார் தேவகி.

“ம்மா… அவளுக்கு இதெல்லாம் வராது. அப்படியே கத்துக்கிட்டு செய்யலாம்னாலும் உனக்கு அப்பாக்கு எனக்கு செய்வா. நான் ஹெல்ப் பண்ணுவேன். அண்ணிங்களுக்கு முடியலைன்னா அவங்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன்னு அவ மறுக்க போறதில்ல. ஆனா இன்னிக்கு செய்ய மாட்டா. உன் மத்த ரெண்டு மருமகளுங்களுக்கும் வேலையாள் இல்ல என் வைஃப்” பேசிக் கொண்டே இட்லி ஊற்ற தயார் பட்டான்.

“சரி, மிருணா செய்ய வேணாம், நான் செய்றேன். குருமா வச்சதே சப்பாத்திக்குத்தான் டா” என்றார் தேவகி.

“நான் வேணும்னா சப்பாத்தி போட ட்ரை பண்றேன் விஷ்ணு, பாவம் அத்தை தனியா எப்படி செய்வாங்க?” உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொண்டே கேட்டாள் மிருணா.

“குருமா ரெடி ஆனதும் எடுத்திட்டு போய் டைனிங் டேபிள்ல வை மிரு, போதும்” அழுத்தமாக அவன் கூற, அவளும் சரி என தலையாட்டிக் கொண்டாள்.

அம்மாவை கோவமாக பார்த்தவன், “இட்லிக்கு குருமா தொட்டு சாப்பிட்டா தொண்டைக்குள்ள போகுமா போகாதான்னு இன்னிக்கு டெஸ்ட் பண்றேன்” என சொல்ல, தேவகியும் மகனது வழிக்கே வந்து விட்டார்.

சென்னை வெயில், மிருணாவின் படப் பிடிப்பு அனுபவங்கள், தேவகி அவரது இளமை காலத்தில் முந்தானை முடிச்சு படப்பிடிப்பு பார்த்தது என சுவாரஷ்யமாக கதைகள் பேசிக் கொண்டே மூவரும் ஆளுக்கொரு வேலையாக பார்த்தனர்.

 நாற்காலி ஒன்றை எடுத்துப் போட்டு அம்மாவை அமர செய்த விஷ்ணு அவனே குருமாவை கிளறி விட்டான்.

பேச்சு சுவாரஷ்யத்தில் தான் அமர்ந்திருப்பதே தேவகிக்கு தெரியவில்லை. கணவனை மெச்சுதலாக பார்த்த மிருணா அத்தைக்கு தெரியாமல் உதடுகள் குவித்து ரகசிய முத்தம் அனுப்பி வைத்தாள்.

கன்னங்கள் பூரிக்க சத்தமில்லாமல் சிரித்தான் விஷ்ணு.

 குருமா தயாராகி விட இரண்டு ஈடு இட்லிகளும் தயாராக இருந்தது.

அம்மாவையும் மனைவியையும் கையோடு டைனிங் ஹால் அழைத்து சென்றவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த கோபாலையும் அழைத்தான்.

“எங்கடா என் அக்கா மாமா யாரையும் காணோம், அவங்க இல்லாம நாம மட்டும் சாப்பிடறதா?” எனக் கேட்டவர் அக்காவை அழைக்க திரும்பினார்.

“வேணும்னே வெளில வராம ரூம்ல ஒளிஞ்சிட்டு இருக்காங்க. அவங்க பொண்ணு இந்த வீட்டு மூத்த மருமக கவனிப்பாங்க அவங்கள. நீங்க உட்காருங்க” என விஷ்ணு அதட்டல் போட, அமர்ந்து விட்டார் கோபால்.

தேவகி மற்ற இரு மருமகள்களின் அறைகளை கவலையாக பார்த்துக் கொண்டே சாப்பிட, “எல்லாருக்கும் சேர்த்துதான் குருமா இருக்கு. அவங்க வயித்த அவங்க பார்த்துப்பாங்க. சாப்பிட்டு முடிச்சதும் நீ பாட்டுக்கு ரூம் போற, படுக்கிற, பூகம்பமே வந்தாலும் வெளில வரக்கூடாது, வந்தேன்னு தெரிஞ்சது…” மிரட்டினான் விஷ்ணு.

சாதுவான கடைக்குட்டி பையனின் மிரட்டலுக்கு பயந்து தலையாட்டிக் கொண்டார் தேவகி.

“அப்பா உங்களுக்கும்தான், வேணும்னா நீங்க வந்து உங்க அக்கா மாமாவையெல்லாம் தாங்குங்க. அம்மாவை இழுத்து விட்டீங்க… என் கூட சென்னை அழைச்சிட்டு போயிடுவேன். வயசான அம்மா அவங்களுக்கெல்லாம் சமைச்சு போடணுமா? மாமியார்னு மரியாதை வேணாம், கொஞ்சமாவது ஹுமானிடி வேணாம்” பொரிந்தான் விஷ்ணு.

“மெதுவாடா, அவங்க காதுல விழ போகுது” என்றார் தேவகி.

“விழட்டும், அவங்கள சொல்லி பிரயோஜனம் இல்ல மா. உன் பசங்க கூட ரூமை விட்டு வெளில வரலை பாரு, நான் போனதும் உன்கிட்ட வந்து மாத்தி மாத்தி குறை சொல்லி உன் மனசையும் நோகடிப்பாங்க”

“விடுங்க விஷ்ணு, எப்பவாவது வர்றோம், ஏதாவது பேசி பிரச்சனை ஆகிட போகுது” என்றாள் மிருணா.

“எல்லாம் இவனை சொல்லணும் மா. உன் அண்ணன் உனக்கு செய்றதை வாங்கிக்கிட்டா உனக்கு ஒரு வேலையும் இருக்காது. எனக்கும் வசதி பெருகும். வீட்டு வேலைக்கு ஆள் போட்ட மாதிரி சமையலுக்கும் ஆள் போட்ருவேன் நான்” என்றார் கோபால்.

“இந்த முறை உங்களுக்கு கான்ட்ராக்ட் கிடைச்சது எனக்கு தெரியாதுன்னு நினைக்குறீங்களா? நார்மலா அப்ளை பண்ணி நேர்மையா கிடைச்சா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. பித்தலாட்டம் பண்ணி அடுத்த முறையும் கான்ட்ராக்ட் வாங்கினீங்கன்னு தெரிஞ்சா…” என சொல்லி நிறுத்தினான் விஷ்ணு.

“என்னடா… என்ன செய்வ?” கோவமாக கேட்டார் கோபால்.

“எங்க கம்ப்ளைண்ட் செய்யணுமோ அங்க செய்வேன், உங்களுக்கு மட்டுமில்ல மிருணாவோட அண்ணனுக்கும் தலைவலியாகிப் போகும், சொல்லிட்டேன்” என எச்சரித்தான்.

“டேய்…” கோபால் அதிர்ந்தார்.

தேவகியும் மிருணாவும் கவலையும் பயமுமாக விஷ்ணுவை பார்க்க, “சாப்பிடுங்க ப்பா. நேர்வழில எப்படி ஸ்டோரை முன்னுக்கு கொண்டு வரலாம்னு திங்க் பண்ணுங்க” என அமைதியாக சொன்னான்.

மேலும் மகனிடம் வாக்குவாதம் செய்து அவனை தூண்டி விட விரும்பாமல் கோபாலும் அமைதி காத்தார்.

சாப்பிட்டு முடித்தவுடன் விஷ்ணு தன் அம்மாவை அறைக்கு செல்ல சொல்ல, அழுத பிள்ளையோடு அறையிலிருந்து வெளி வந்தாள் ஸ்வேதா.

உணவு மேசையில் கேஸராலை திறந்து பார்த்தவள், “குழந்தைக்கு ஒரு இட்லி கூட இல்லை. இதுக்குத்தான் நான் இங்க வர்றதே இல்லை” என ஆரம்பித்தாள்.

அதே நேரம் தர்ஷிணியும் தன்னிரு குழந்தைகளோடு வெளியே வந்து, “உங்க பேர பசங்களுக்கு பசிக்குதாம் அத்தை, என்ன இருக்கு?” என கேட்டாள்.

தேவகி என்ன சொல்ல என பார்க்க அவளும் உணவு மேசையில் வெறும் குருமா மட்டும் இருப்பதை கண்டு விட்டு, “எப்பவாவது வர்ற பேர பசங்களுக்கு இதான் உங்க கவனிப்பா?” என கோவமாக கேட்டாள்.

“அம்மா, நீ ரூம் போ” என்றான் விஷ்ணு.

“ஏன் அவங்களை போக சொல்ற? என் புருஷனுக்கும் இவங்கதான் அம்மா. புது மருமகளை மட்டும் உட்கார வச்சு சாப்பாடு போடுறாங்க. நான் மட்டமா போயிட்டேனா?” என தர்ஷிணி கேட்க, “ஒரு நாள் கூட என் கூடவும் இவங்க உட்கார்ந்து சாப்பிட்டதில்லை” என்றாள் ஸ்வேதா.

ஹாலில் கலவரம் நிலவ, ஸ்ரீதரும் ஹரியும் வந்து சேர்ந்தனர். அவர்களும் அம்மாவை குறை பேச, நீட்டி முழக்கி கொண்டு வந்து சேர்ந்தார் சந்திரா. பேச்சோடு பேச்சாக விருந்துக்கு வராமல் அவமானம் செய்து விட்டனர் எனவும் கூறினார்.

அம்மாவை வலுகட்டாயமாக அழைத்து சென்று அறையில் விட்ட விஷ்ணு, தன் அண்ணன்களிடம் வந்து நின்றான்.

நீ செய்வது சரியில்லை என தம்பியை குறையாக அவர்கள் பேச, “அம்மாவுக்கு அறுபது வயசுக்கு மேல ஆகுது. அவங்களால முடிஞ்சத அவங்க செஞ்சு வச்சிட்டாங்க. நானும் என் வைஃபும் எங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணி நாங்க சாப்பிட்டிட்டோம். பிள்ளைங்களுக்கு எப்ப பசிக்கும்னு அண்ணிங்களுக்கு தெரியாதா? நம்ம அம்மாவை நாமளே மதிக்கலைனா அவங்க எப்படி மதிப்பாங்க? நீங்க சொல்ற குறைய கேட்கவாவது அம்மா நல்லா இருக்க வேணாமா?” எனக் கேட்டான் விஷ்ணு.

விஷ்ணுவின் இரண்டு சகோதரர்களுக்கும் சுருக் என தைக்க, தம்பியிடம் எதுவும் பேச முடியாமல் நின்றனர்.

 “குழந்தைங்கள நான் பார்த்துக்கிறேன். அண்ணிங்க சாப்பாடு ரெடி பண்ணுவாங்க, அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்ற விஷ்ணு, ஸ்வேதாவின் அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு ஸ்ரீதரின் பிள்ளைகளையும் தன்னிடம் வர சொன்னான்.

தர்ஷிணி அவனிடம் செல்ல விடாமல் பிள்ளைகளை ஆளுக்கொரு பக்கமாக பிடித்துக்கொள்ள, எரிச்சலாக பார்த்த விஷ்ணு வெளியே சென்று விட்டான். மிருணாவும் அவனோடு சென்று விட்டாள்.

சிறிது நேரத்தில் ஸ்ரீதரின் பிள்ளைகளும் அவர்களாகவே சித்தப்பா சித்தியை தேடிக் கொண்டு வந்து விட்டனர்.

தர்ஷிணியும் ஸ்வேதாவும் முட்டி மோதிக் கொண்டே அவர்களது கணவர்களையும் வசை பாடிக் கொண்டு இட்லியும் தோசையுமாக தயார் செய்தனர்.

சின்ன அண்ணனின் மகனை கால்களில் தூக்கி நிறுத்தியவன், “சாஞ்சாடம்மா சாஞ்சாடும்மா சாயக் கிளியே அஞ்சாடு” என பாடி விளையாட குழந்தை உற்சாகமாகி விட்டது.

அது முடிய “பருப்பு கடைஞ்சு, நெய் ஊத்தி…” என பாடி குழந்தைக்கு கிச்சு கிச்சு மூட்டி விளையாட கணவனை விட்டு மிருணாவின் கண்கள் அகலவில்லை.

 க்யூப்ஸ் வைத்துக்கொண்டு விளையாடிய ஸ்ரீதரின் பிள்ளைகளும் இடையிடையே சித்தப்பாவிடம் ஏதேதோ கேள்விகள் கேட்க அவர்களுக்கு தக்க படி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement