Advertisement

பேரன்பு பிரவாகம் -26

அத்தியாயம் -26(1)

பிரவாகன் அறைக்கு வந்த போது மலர் குளித்து முடித்து வேறு ஆடை மாற்றி வெளியேற தயாராக இருந்தாள். அவளை வெளியே செல்ல விடாமல் இறுக அணைத்துக் கொண்டவன், “கோவமா இருக்கேன்னு தெரியும், உனக்காகத்தான் நீ எந்த டென்ஷனும் எடுக்க கூடாதுன்னுதான் இப்படி செஞ்சேன்” என்றான்.

அவனை மறுதலிப்பாக அணைத்திராதவள் அவனது அணைப்பில் பொம்மையை போல அடங்கியிருந்தாள். முகமோ இறுக்கமாக இருந்தது.

பிரவாகனுக்கும் அவளது இயந்திர தன்மை புரிய அவள் முகத்தை நிமிர்த்தி, “ஆஸ் அ ஹஸ்பண்ட் உன்னை எப்படி வச்சிக்கிறேன்னு யோசிக்கவே மாட்டியா மலர்?” எனக் கேட்டான்.

அவள் பார்வையை திருப்பிக் கொள்ள, வலிந்து அவளை தன்னை பார்க்க வைத்தான். அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“என்ன இப்போ எம்மேல கோவம்தானே? ம்ம்… நாலு அடி போட்டுக்கோ” என்றவன் அவளது கையை எடுத்து தன் கன்னத்திலும் மார்பிலும் அடிக்க வைக்க, ஜடம் போல இருந்தாள்.

 முரண்டு பிடித்தால் சமாளிப்பான், இப்படி செய்தால் என்ன செய்வான்? நேரம் சென்றால் கோவம் குறையும், என்னுடன் பேசாமல் இவளால் இருக்க முடியாது, அதிகம் வற்புறுத்தி உணர்ச்சி வசப் பட வைக்க வேண்டாம் என கருதி அவளை விட்டான். உடனே வெளியே சென்று விட்டாள்.

இரவு உணவு அனைவரும் சேர்ந்துதான் சாப்பிட்டனர். உணவு மேசையில் கணவனை தவிர்க்காமல் என்ன வேண்டும் என கேட்டு பரிமாறினாள், அவன் ஏதாவது கேட்டால் இயல்பாக பதில் சொன்னாள்.

‘அவ்ளோதான் என் பொண்டாட்டியோட கோவம்’ என மனதிற்குள் சிலாகித்துக் கொண்டான் பிரவா. பின் கீர்த்தி அவளது பிள்ளைகளுடன் அவளது வீடு புறப்பட்டு விட்டாள்.

பிரவாகனும் மலரும் அவர்களது அறைக்கு வர மீண்டும் அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். அவன் என்ன கேட்டாலும் காது கேட்காதது போல இருந்தாள்.

மற்றவர்கள் முன்னிலையில் தன்னிடம் இயல்பாக இருப்பவள் தனிமையில் பேசுவதை தவிர்க்கிறாள் என அவனுக்கு புரிய, எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்து விட்டான். அழுத்தமாகவே இருந்தாள் மலர்.

“நான் இப்படி செஞ்சா அழுவ, நீ மட்டும் என்னை அவாய்ட் பண்ணலாமா?” என கேட்டான்.

அவள் மௌனம் சாதிக்க, எரிச்சலடைந்தவன் படுத்து விட்டான்.

அவள் படுத்த பின் வழக்கம் போல அவளை அணைத்துக் கொண்டான். மறுத்து விலகியெல்லாம் செல்லவில்லை. எதுவோ செய்து கொள் என்பது போல இருந்தாள்.

“உன் நல்லதுக்குதான்னு உனக்கு புரியும், எவ்ளோ நாள் பேசாம இருக்க முடியுதுன்னு பார்க்கிறேன்” என்ற பிரவாகன் சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.

ஆனால் மலரின் பிடிவாதம் அவன் நினைத்து பார்த்திராத அளவுக்கு வலுவாக இருந்தது. அடுத்த நாளும் தனிமையில் அவனிடம் விலகியே நின்றாள். ஒரு நாளில் சரியாகி விடுவாள் இரண்டு நாட்களில் சரியாவாள் என பிரவாகன் நினைத்திருக்க அந்த வாரம் முழுதும் அப்படித்தான் இருந்தாள்.

இலவச மருத்துவமனையிலோ எந்த முன்னேற்றமும் இல்லை. இவள் ட்ரஸ்ட்டியாக பொறுப்பெடுத்து ஆரம்பித்த வேலைகள் புது ஆட்களின் நியமனத்தால் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

கோதண்டம் கணக்கு வழக்கில் மட்டும் கவனம் செலுத்த, சரத்தோ தனக்கு பெரிய பதவி கிட்டி விட்டது என மிதப்பில் திரிந்தான். பெய்ட் பிளாக்கில் மருந்துகளின் பாதுகாப்பு குழுவின் தலைவராக இருந்த சரத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்திருந்தார் பத்மநாதன்.

அவனை அங்கிருந்து நீக்க சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த பிரவாகன் இங்கு அனுப்பி வைத்து விட்டான். இப்போது அங்கு சரத்தின் பொறுப்பில் வேறு ஒரு மருத்துவர் நியமிக்க பட்டு விட்டார்.

சரத் உறவினன் என்பதால் நேரடியாக குறையை சொல்லாமல் இப்படி செய்து விட்டான். இந்த உள் குத்து வேலை சரத்துக்கு தெரியவில்லை.

தினமும் வார்டு ரவுண்ட்ஸ் செல்கிறேன் என செல்பவன் அவனை விட சீனியர் மருத்துவர்களையும் மரியாதையாக நடத்தாமல் அவர்கள் சொல்வது எதையும் காது கொடுத்து கேளாமல் மேதாவித் தனமாக நடந்து கொண்டான்.

மலரே நேரடியாக சென்று மருத்துவமனை முன்னேற்றத்துக்காக அவனிடம் ஏதாவது சொன்னால் ‘செய்கிறேன் செய்கிறேன்’ என சொல்லி வேண்டுமென்றே தள்ளிப் போட்டான்.

குப்பையை அகற்றி விட்டு அந்த இடத்தில் மீண்டும் இன்னொரு குப்பையை கொண்டு வந்தது போலத்தான் தர்மேந்திரன் இடத்துக்கு சரத் வந்தது இருந்தது.

கணவன் மீது கடுங்கோபம் கொண்ட மலர் அவனிடமிருந்து மனதளவில் விலக ஆரம்பித்தாள்.

மலர் சொன்ன ஆட்களை நியமனம் செய்யாமல் கோதண்டம், சரத் அங்கு ஏன் என தமனும் சந்தேகம் கேட்டான்.

“இப்போதைக்கு நமக்கு தலைவலி தராம நம்ம சொல்றதை கேட்குற ஆளுங்கதான் அங்க வேணும். அடுத்த வருஷம் பார்க்கலாம்” என சொல்லி விட்டான் பிரவாகன்.

*****

அன்று பரத்தின் நீட் தேர்வு முடிவு வெளியானது. இந்த முறையும் நிர்ணயித்திருந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. நூலிழையில் தோற்று விட்டான்.

முடிவு தெரிந்ததுமே தம்பியை காண வீட்டுக்கு வந்து விட்டாள் மலர். அழுகையை அடக்கி வைத்துக் கொண்டிருந்தவன் அக்காவை கண்டதும் அழுது விட்டான்.

அவனை தேற்றி சாப்பிட வைத்தாள். பிரவாகனுக்கும் விவரம் தெரிய அவனும் நேரில் வந்தான். கவலை பட வேண்டாம் என கூறியவன் அவனது மருத்துவ கல்லூரியிலேயே படிக்க ஏற்பாடு செய்வதாக கூற, உடனே வேண்டாம் என மறுத்து விட்டாள் மலர்.

வாக்குவாதம் செய்ய விரும்பாத பிரவா யோசித்து சொல்லுமாறு விமலாவிடம் கூறி விட்டு, மலரை இன்று இங்கேயே தங்கும் படி அறிவுறுத்தி கிளம்பினான்.

“மாமா சொன்னதுக்கு வேணாம்னு சொல்லிட்டேன்னு கோவமாடா?” என தம்பியிடம் கேட்டாள் மலர்.

“நீ வேணாம்னு சொன்னா காரணம் இருக்கும் க்கா. நான் இன்னொரு முறை ட்ரை பண்றேன்” என பரத் சொல்லும் போதே அவனது கண்கள் கலங்கி விட்டன.

விமலாவும் தனிமையில் மகளிடம், “மாப்ள சொன்னதுக்கு ஏன் வேணாம்னு சொன்ன மலர்? சும்மா சீட் வாங்க வேணாம், எல்லாரும் என்ன பணம் கட்டுறாங்களோ அத பே பண்ணி வாங்கலாமே?” எனக் கேட்டார்.

“வேணாம் ம்மா, அங்க வேணாம். அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்ணலாம். வேற காலேஜ் பார்க்கலாம்” என மலர் சொல்ல, மேலும் அது பற்றி கேட்கவில்லை விமலா.

பெண்ணை கொடுத்த இடத்தில் அதிக சலுகை எடுத்துக் கொண்டால் நாளைக்கு எதுவும் பிரச்சனை வரும் போது பெண்ணுக்கு ஆதரவாக பேச முடியாமல் அவர்களிடம் இறங்கிப் போக வேண்டி வரும் என நினைத்த செல்வத்திற்கும் மருமகனின் கல்லூரியில் மகனை சேர்க்க வேண்டாம் என்றே பட்டது.

அகிலா கைப்பேசி வாயிலாக தம்பிக்கு ஆறுதல் சொன்னாள்.

பனிரெண்டாம் வகுப்பில் தொண்ணூறு சதவீத மதிப்பெண்களோடு வெற்றி பெற்றிருந்த நல்ல படிப்பாளி பையன்தான் பரத். மருத்துவ படிப்பு என்பது அவனுடைய கனவு. தம்பியின் படிப்புக்காக தன்னால் முடிந்த பண உதவி செய்வதாக கூறினாள் அகிலா.

தனக்கு என இருந்த இடத்தை விற்றுக் கொள்ளுங்கள் என சொல்லி விட்டாள் மலர்.

இப்போதைக்கு இடத்தை விற்று மகனை படிக்க வைக்கலாம், பின் மகளுக்கு அதே போல வேறொரு இடத்தை மகனையே வாங்கிக் கொடுக்க சொல்லி விடலாம் என செல்வமும் முடிவெடுத்தார்.

மறுநாள் இப்படி என பிரவாகனுக்கு தெரிய வர மலரை கடிந்து கொண்டான்.

“ஏன் உன் தம்பிக்கு நான் செய்யக் கூடாதா? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு?” கோவமாக கேட்டான்.

பதில் தராமல் நின்றாள் மலர். இன்னும் அவன் மீதிருக்கும் கோவமும் அதிருப்தியும் அவளிடமிருந்து அகலவில்லை.

அவனை கடினமாக பார்த்தவள் திரும்பி செல்ல நடந்தாள்.

“போடி அவ்ளோ வீம்பா உனக்கு? அஞ்சு வருஷம் எப்படி ஃபீஸ் கட்டி படிக்க வைக்குறீங்கன்னு பார்க்கிறேன். அப்பவும் நான்தான் ஹெல்ப் பண்ண வந்து நிப்பேன். உங்களுக்கெல்லாம் தேவை படறதுக்கு முன்னாலேயே ஓடி வந்து ஹெல்ப் செய்றேன்ல… அதான் என் அருமை புரிய மாட்டேங்குது” என பிரவாகன் பேச, ஒரு நொடி நின்று அவனை வெறுப்பாக பார்த்தவள் வெளியேறி விட்டாள்.

*****

விஷ்ணுவுக்கும் மிருணாவுக்கும் வரவேற்பு நடக்க இருக்க முதல் நாளே அவர்கள் கோவை வந்தடைந்தனர். ஸ்ரீதர் மற்றும் ஹரி குடும்பமும் அப்பா வீடு வந்து விட்டனர். இரவு உணவாக சப்பாத்தி, குருமா, தோசை, தக்காளி சட்னி என மெனு சொன்னாள் தர்ஷிணி.

“என் பையன் இட்லியும் தேங்காய் சட்னியும்தான் சாப்பிடுவான்” என்றாள் ஸ்வேதா.

“அவனுக்கு மட்டும் தனியா செய்துக்க” என்றாள் தர்ஷிணி.

“எத்தனை வேலை இழுத்துக்கிறது? தக்காளி சட்னி வேணாம், எல்லாருக்கும் சேர்த்து தேங்கா சட்னியே செய்திடலாம். தோசை ஒரு பக்கம் சப்பாத்தி இன்னொரு பக்கம்னு அடுப்படியிலேயே நின்னு வெந்து சாக முடியாது” என குரல் உயர்த்தினாள் ஸ்வேதா.

“நைட்ல தேங்கா சட்னி சாப்பிட்டா எங்கம்மாவுக்கு நெஞ்சு கரிக்கும்” என்றாள் தர்ஷிணி.

“அதான் குருமா செய்றோமே… அத தொட்டுக்கிட்டு சாப்பிட சொல்லுங்க” என்றாள் ஸ்வேதா.

இப்படி இரண்டு மருமகள்களுக்கும் சண்டை வலுக்க, “நீங்க கேட்குற எல்லாத்தையும் செய்திடலாம், அதான் இத்தன பேர் இருக்கோமே” என சமாதான படுத்த பார்த்தார் தேவகி.

என் பேச்சுக்கு மரியாதை இல்லை, என்னவோ செய்து கொள்ளுங்கள், சாப்பிடும் நேரம் வருகிறேன் என சொல்லி சென்று விட்டாள் தர்ஷிணி.

“அவங்க மட்டும் வேலை பார்க்காம போவாங்க, நான் மட்டும் எல்லாம் செய்யணுமா? நானும் இந்த வீட்டு மருமகதான், நான் பேசிட்டு இருக்கும் போது எல்லாம் செய்யலாம்னு ஏன் ஒத்துக்குறீங்க? அப்ப நீங்களே செய்யுங்க” என கோவமாக சொன்ன ஸ்வேதாவும் அவள் தங்கும் அறைக்கு சென்று புகுந்து கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement