Advertisement

பேரன்பு பிரவாகம் -25

அத்தியாயம் -25(1)

கைப்பேசியில் பேசிக் கொண்டே பிரவாகன் வந்தான். எப்போதும் அவனில்லாத சமயத்தில் தர்மேந்திரன் ‘என் தம்பி மகன் எனக்கு நெருக்கம்’ என்பது போல அலட்டலாக காட்டிக் கொண்டாலும் அவன் முன்னிலையில் பவ்யமாகத்தான் இருப்பார். ஆனால் இன்று அவன் வந்தும் அலட்சியமாகவே இருந்தார்.

பத்மநாதனுடன் ஜே சி ஐ சம்பந்தமாக அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த பிரவா மனைவியின் அருகில் வந்து நின்று பாதுகாவலரிடம் இருக்கை கொடுக்குமாறு கண்களால் சொன்னான். இரண்டு இருக்கைகள் போடப் பட அதில் ஒன்றில் அவளை அமரும் படி பார்வையால் சொன்னான்.

அவள் மறுப்பாக பார்த்து விட்டு நிற்க, அவளது தோளில் அழுத்தம் கொடுத்து அவளை அமர செய்தவன், அடுத்த அரை நிமிடத்தில் அலைபேசி பேச்சை முடித்துக் கொண்டான்.

“நீ ஓகேவா மலர்?” அக்கறையாக அவன் மலரிடம் விசாரிக்க, அவளோ தர்மந்திரனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“இந்த சமயம் இவ்ளோ கோவம் நல்லதுக்கு இல்ல. அங்க பார்க்காத” அவளது முகத்தை தன்னை பார்க்க திருப்பினான். உதடுகள் துடிக்க அவனை பார்த்தவளின் பார்வையில் குற்றசாட்டு தெரிந்தது.

இருக்கையில் அமர்ந்த பிரவாகன் அங்கிருந்த கிருஷ்ணகுமார், கமலவேணி, கிஷோர் மூவரையும் பார்த்து, “ப்ளீஸ் பீ சீட்டட்” என கூற, அவர்களும் அறையில் இருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.

தமன் கையில் ஏதோ கோப்புடன் வேக நடை போட்டு வந்து சேர்ந்தான்.

“பிரவா…” இன்னும் தன்னை கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் அழைத்தார் தர்மேந்திரன்.

சித்தப்பாவின் அழைப்பை சட்டை செய்யாமல், “எல்லாம் ரெடியா தமன்?” என பிரவா கேட்க, “ஸைனிங் அத்தாரிட்டி யாருங்க சார்?” எனக் கேட்டான்.

“ட்ரஸ்ட்டீ பொறுப்பிலிருந்துதான் விலகினேன். நிர்வாக பொறுப்பு என்கிட்டதான் இருக்கு. எனக்கு டைம் இல்லாததாலதான் இங்க வேற ஆள போட்ருக்கேன்… சேலரி கொடுத்து வேலைக்கு வச்சிருக்கேன். அப்போ ஸைனிங் அத்தாரிட்டி யாரு மேன்?” என பிரவா கேட்க, கோப்பை பிரித்து அதிலிருந்த காகிதங்களில் கட கடவென பிரவாகனிடம் கையெழுத்து பெற்றான் தமன்.

பின் தர்மேந்திரன் மற்றும் ஏகாம்பரம் இருவரின் பின்னால் நின்று கொண்டிருந்த அவர்களது கையாட்களான ஆறு ஊழியர்களிடம் அவர்களின் பெயர்களை வாசித்து காகிதங்களை பட்டுவாடா செய்தான்.

“டிஸிப்பிளனரி ஆக்ஷன்ல ஒன் மன்த் சஸ்பென்ட் செய்ய பட்டுருக்கீங்க. என்கொயரி நடக்கும், உங்க வேலை பத்தி அதுல முடிவு செய்யப்படும்” என அறிவித்தான் தமன்.

ஆறு பேரும் ஏதோ முறையிட ஆரம்பிக்க, அவர்களை அங்கிருந்து அப்புற படுத்தினார்கள் பாதுகாவலர்கள்.

ஏகாம்பரத்துக்கு லேசாக பயம் வர கையை பிசைந்து கொண்டு தர்மேந்திரனை பார்த்தார்.

அசராமல் ஒரு இருக்கையை தன்னருகில் இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்ட தர்மேந்திரன் ஏகாம்பரத்தையும் அமர சொன்னார். பயந்து போன ஏகாம்பரம் அமராமல் கலக்கத்தோடு பிரவாகனை பார்க்க, ஏளன சிரிப்போடு அவர்களை பார்த்திருந்தான் பிரவா.

“தமன்…” பிரவா அழைக்க, “இதோ சார்” என்ற தமன் கோப்பிலிருந்து இன்னொரு காகிதத்தை எடுத்துக் கொண்டு ஏகாம்பரத்தை நெருங்கினான்.

“சார், நான்… நான்… உங்க சித்தப்பா சொன்னதைத்தான் நான் செய்றேன், மத்த படி மலர் மேடத்தை எதுவும் நான் பேசலை. எல்லாம் உங்க சித்தப்பாதான்…” என திணறிய ஏகாம்பரத்தின் கையில் காகிதத்தை திணித்தான் தமன்.

தர்மேந்திரன் ஒரு பக்கம் அவரை முறைக்க, பிரவாகனோ என்ன நினைக்கிறான் என கணிக்க முடியாத பார்வை பார்த்திருக்க, தடுமாற்றத்தில் அந்த காகிதத்தில் என்ன இருக்கிறது என கூட ஏகாம்பரத்தால் வாசிக்க முடியவில்லை.

“இன்னிலேருந்து ஓ பி (வெளி நோயாளிகள் பிரிவு) டிபார்ட்மெண்ட் சூப்பரின்டெண்ட்டண்ட்டா ஆக போறீங்க சார். ப்ரோமோஷன் வித் ஹைக், கங்கிராட்ஸ் சார்!” என்றான் தமன்.

“எது…ஓ பி டி க்கு சூப்பரின்டெண்ட்டண்ட்டா? ஏகாம்பரம் ஒரு டாக்டர், அவருக்கு அங்க என்ன வேலை? அவமான படுத்துறீங்களா அவரை?” கோவமாக கேட்டார் தர்மேந்திரன்.

“ஹைக் கோட ப்ரோமோஷன் கொடுத்திருக்கார் எம் டி. வேணாம்னா ரிசைன் பண்ணிக்கட்டும்” என்றான் தமன்.

எம் பி பி எஸ் படித்திருந்த ஏகாம்பரம் அந்த காலத்திலிருந்து இங்குதான் இருக்கிறார். தர்மந்திரனை கைக்குள் போட்டுக் கொண்டு பெரிய பதவியும் வாங்கி விட்டார். பிராக்டீஸ் விட்டே பல வருடங்கள் ஆகி விட்டன. இதற்கு மேல் இங்கிருந்து வெளியேறி தனியாக கிளினிக் ஆரம்பித்தால் எங்கிருந்து மக்கள் வருவார்கள்.

சம்பள உயர்வு என்றாலும் இப்போதிருக்கும் பதவியிலிருந்து பல படிகள் கீழே சென்ற நிலை. உள்ளம் அவமானத்தில் குமைந்தாலும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்.

“பிரவா! இங்க நிர்வாகம் எனக்கு கீழதான் இருக்கணும், இல்லைனா…” தர்மேந்திரன் கோவமாக பேச, “இல்லைனா?” இருக்கையிலேயே நிமிர்ந்து அமர்ந்த பிரவா சீற்றம் தெறிக்கும் குரலில் ரௌத்திர பார்வையோடு கேட்டான்.

பயமும் கோவமுமாக அவர் அவனை பார்த்திருக்க, “என் வைஃபை அடிக்க ஆள் வைக்கிற அளவுக்கு எங்கேருந்து தைரியம் வந்தது உங்களுக்கு?” அடித் தொண்டையில் சீறினான்.

“அது… என் விஷயத்துல தலையிட்டு பேசினதால என் விஸ்வாசி கோவத்துல… உன் வைஃபும் எனக்கு மரியாதை தராமதான் பேசினிச்சு” என்றார்.

தமனை பார்த்த பிரவா, “இந்த கேம்பஸ்குள்ள எனக்கு விசுவாசமா இருக்கிறவங்க மட்டும் இருந்தா போதும். இவரோட விசுவாசிய நல்லா கவனிச்சு அனுப்பனும் புரிஞ்சுதா?” என்றான்.

“கவனிக்கிற கவனிப்புல இனி ஒரு பய உங்களை தவிர வேற யாருக்கும் விஸ்வாச வேலை செய்யனும்னு நினைக்க கூட மாட்டான் சார்” என்றான் தமன்.

கிருஷ்ணகுமாரும் கமலவேணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மலர் அதிருப்தியாக தனது கணவனை பார்க்க, கண்டு கொள்ளாதவன், “உங்களுக்கு ஃபுல் மெடிக்கல் செக் அப் செய்ய சொல்லிருக்கேன். ஏதாவது பிராப்லம் இருக்க வாய்ப்பிருக்கு. உடம்பு நல்லாகுற வரைக்கும் குன்னூர் எஸ்டேட்ல போய் ரெஸ்ட் எடுங்க. தனியா போக வேணாம், துணைக்கு சித்தியையும் அழைச்சிட்டு போங்க” என்றான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றார் தர்மேந்திரன்.

“செக் அப் க்கு அப்புறம் தெரிய வரும்” என்றவன், “என்ன தமன்?” எனக் கேட்டான்.

“உங்க சித்தப்பா சார் மெடிக்கல் லீவ்ல போக எல்லா ஏற்பாடும் பண்ண சொல்லிட்டேன் சார்” என்றான் தமன்.

“பிரவா! எனக்கெதிரா நீ நடந்தா நான் என்ன வேணா செய்வேன்” என மிரட்டலாக கூறினார்.

“எனக்கு எதிராவா?” நக்கலாக கேட்டவன், “வெல்! சித்தப்பா… எனக்கு பிடிக்காதது நடந்தா என் ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும்னு உங்களுக்கு நல்லா தெரியும். இருந்தும் உங்களுக்கு மட்டும் ஏன் மெடிக்கல் லீவ் கொடுத்து அனுப்புறேன்னு தெரியுதா?” எனக் கேட்டான்.

தர்மேந்திரன் எச்சில் கூட்டி விழுங்க, “என்ன இருந்தாலும் உங்க அப்பாவோட தம்பி, அந்த பாசம் இருக்குமே சார் உங்களுக்கு… ஸாருக்கு நல்லா தெரியும்” என்றான் தமன்.

“புரிஞ்சுதா சித்தப்பா? புரியாம நீங்க செய்றதை செய்வேன்னு நின்னா தாராளமா செய்யுங்க. உங்க செயல்களை பொறுத்து அதுக்கு தக்க பதில் கொடுக்க ரெடியா இருக்கேன் சித்தப்பா” என்ற பிரவாகன் குரலில் மறைமுக மிரட்டல் தொனித்தது.

‘துருப்பு சீட்டு கையில் இருப்பதால் என் விருப்பம் போல் நான் ஆடுவேன்’ என தர்மேந்திரன் நினைத்திருக்க, ‘அதை வெளியிடாமல் நீ இருக்கும் வரைதான் நீ நடமாடவே முடியும்’ என நேரிடையான வார்த்தைகள் இல்லாமல் சொன்னான் பிரவாகன்.

கன்றிப் போன முகத்துடன் எழுந்த தர்மேந்திரன் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் வெளியேறினார்.

அந்த இடம் அமைதியாக இருக்க, கிருஷ்ணகுமார், கமலவேணி, கிஷோர் மூவரையும் பொதுவாக பார்த்து, “என் வைஃப்க்காக உடனே ஓடி வந்து நின்னதுக்கு தேங்க்ஸ், யூ ப்ளீஸ் கேரி ஆன் யுவர் ஒர்க்ஸ்” என்றான்.

“சூப்பரின்டெண்ட்டண்ட் போஸ்ட் காலியா இருக்கே, அட்மினிஸ்ட்ரேஷன் கூட…” மலர் சொல்ல, “அவங்க போகட்டும் மலர், நாம பேசலாம்” என்றான்.

மற்ற மருத்துவர்கள் சென்ற பின், மலரின் வியர்த்த நெற்றியை பார்த்தவன் “இங்க ஏசி இல்லயா?” என தலைமை கணக்கரிடம் கேட்டான்.

“ஐ சி யூ லேயே ரெண்டு ஏசி ரிப்பேர்ல இருக்கு” என்றாள் மலர்.

‘இவளோட…’ என நினைத்தவன் எரிச்சலாக தலையாட்ட, “இங்க ஏசி இல்லைங்க சார்” என்றார் கணக்கர்.

“டியூட்டி டாக்டர் ரூம்ல ஏசி இருக்குங்க சார்” என்றான் தமன்.

எழுந்து கொண்ட பிரவா, “கம் வித் மீ” என சொல்லி முன்னே நடக்க மலரும் தமனும் அவனை பின்பற்றி சென்றனர்.

குளிரூட்டபட்ட டியூட்டி மருத்துவர் அறையில் இருந்தனர் மூவரும்.

தர்மேந்திரன், ஏகாம்பரம் இருவரின் பொறுப்புகளுக்கு அடுத்து யார் என மலர் கேட்க, “பெய்ட் பிளாக் அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மெண்ட் சீனியர் கோதண்டம் நாளையிலேருந்து சார்ஜ் எடுத்துக்குவார். சூப்பரின்டெண்ட்டண்ட்டா டாக்டர் சரத் சார்ஜ் எடுத்துக்குவார்” என்றான்.

கோதண்டம் யாரென இவளுக்கு தெரியவில்லை. ஆனால் இவன் சொல்வதை அப்படியே செய்யும் இவனது விசுவாசியாக இருக்க வேண்டும் என கணித்தாள். அடுத்து சரத்… அவசரத்துக்கு மருந்து எடுத்த பிரச்சனையால் அவன் மீது இவளுக்கு அத்தனை நல் அபிப்ராயம் கிடையாது.

 “வெல் டன்!” என ஆதங்கமாக சொன்னாள்.

பிரவாகன் தமனை பார்க்க, அவன் அறங்காவலர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை எடுத்து மலரிடம் நீட்டினான்.

இதையும் எதிர்பார்த்திருந்தவள், “என்ன அவசியம் வந்தது இப்போ?” எனக் கேட்டாள்.

“உன் பிஸிகல் அண்ட் மெண்டல் ஹெல்த்துக்காக” என்றான் பிரவா.

“எனக்கு வேலை இருக்கு, நடக்காத ஒண்ணை பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்” என்ற மலர் எழுந்து கொண்டாள்.

“மலர்…” பிரவாகன் அதட்டலாக அழைக்க, தமனை பார்த்தவள், “உங்க எம் டி ய என்ன சொல்லன்னே தெரியலை. எம்மேல இவ்ளோ அக்கறையான்னு ஷாக் தருவார், அப்புறம் அந்த ஷாக்லாம் ஒண்ணுமில்லங்கிற அளவுக்கு இரிடேட் பண்ணுவார். நான் சொன்ன மாதிரி கிஷோரையும் கிருஷ்ணா சாரையும் இங்க எந்த பொறுப்பிலேயும் உட்கார வைக்க போறதில்லைனு தெரிஞ்சிடுச்சு. அவர் விருப்ப படி என்ன வேணா செய்யட்டும், நான் ரிசைன் பண்ண மாட்டேன்” என சொல்லி வெளியேறி விட்டாள்.

தமன் பிரவாகனை பார்க்க, கடிதத்தை தன் கையில் பெற்றுக் கொண்டவன், “அவ ஸைன் பண்ணிடுவா. நீ ப்ரொஸீஜர் என்னன்னு பாரு” என சொல்லி எழுந்து கொண்டான்.

மாலையில் பணி முடித்து விட்டு காரில் சென்று கொண்டிருந்தாள் மலர். கார் வழி மாறி செல்ல என்னவென கேட்டாள்.

“உங்க அப்பா வீட்ல விட சொல்லியிருக்காங்க மேடம்” என்றான் டிரைவர்.

‘கோவமாக இருப்பதால் அங்கு இருந்து விட்டு வர சொல்லி அனுப்புகிறானா? எப்படி இருந்தாலும் எதையும் கேட்டு முடிவு செய்வதில்லை, அவன் இஷ்டத்திற்கு அனைவரையும் ஆட்டி வைப்பது…’ உள்ளுக்குள் கொதித்தாலும் டிரைவரிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement