Advertisement

பேரன்பு பிரவாகம் -24

அத்தியாயம் -24(1)

ஹைதராபாத்திலிருந்து மற்ற உதவி இயக்குனர்களுடன் ரயில் மூலம் மிருணாளினி சென்னை வந்தடைந்த போது நடு இரவாகி விட்டது. விஷ்ணுவுக்கு சொல்லியிருந்தாள். அவன் பாதி வழியில் வந்து கொண்டிருக்கும் போதே மருத்துவமனையிலிருந்து அவசர அழைப்பு வந்ததன் காரணமாக மிருணாவிடம் அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என சொல்லி மருத்துவமனை சென்று விட்டான்.

“என் பிரெண்ட் என்னை கூப்பிட பைக்ல வந்திருக்கான், உன்னை விட்டுட்டு அப்புறம் நாங்க போயிக்கிறோம், வா மிருணா” என அவளுடன் வந்திருந்த இன்னொரு உதவி இயக்குனர் அழைத்தும் மறுத்து விட்டாள்.

“என்னை விட்டுட்டு வந்து அப்புறம் நீ கிளம்பினா உனக்கு ரொம்ப லேட் ஆகிடும். வீட்டு சாவியும் என்கிட்ட இல்ல, விஷ்ணு வர்ற வரை வெயிட் பண்றேன்” என சொல்லி விட்டாள்.

அரை மணி நேரம் தாண்டியும் விஷ்ணு வரவில்லை. அவளது அழைப்பையும் எடுக்கவில்லை. இன்னொரு மாற்று சாவியும் இவள் கையில் இல்லை, வீட்டிற்குள் இருந்தது.

நேராக மருத்துவமனை சென்று விடலாமா என இவள் யோசித்துக் கொண்டிருக்கையில், யாரோ ஒரு மனிதன் இவளருகில் வந்து நிற்க, சரியாக அதே நேரம் தங்கைக்கு அழைத்தான் பிரவாகன்.

அழைப்பை ஏற்று “தூங்கலையா ண்ணா நீ?” என கேட்டாள் மிருணா.

“உன்னை இங்க வெயிட் பண்ண வச்சிட்டு உன் ஹஸ்பண்ட் என்ன பண்றார்?” என கோவமாக கேட்டான் பிரவா.

“ஏதோ எமர்ஜென்ஸின்னு ஹாஸ்பிடல் போயிருக்கார். வந்திடுவார்” என்றாள்.

“அவர் மெதுவா வரட்டும். உன் பக்கத்துல நிக்கிறவர் என் ஆள்தான், வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு”

இப்படி தன்னை ஒருவன் தொடர்ந்து கொண்டே இருப்பது அவளுக்கு சலிப்பையும் கோவத்தையும் கொடுத்தாலும் அந்த நேரம் அவளால் தன் அண்ணனிடம் கோவத்தை காட்ட இயலவில்லை. அண்ணனின் அக்கறை புரிய, “வீட்டு சாவி கையில் இல்லை ண்ணா, அவர் வந்திடுவார். நான் வெயிட் பண்றேன்” என தன்மையாகவே சொன்னாள்.

“உன் வீடு நீ எப்ப போனாலும் உனக்காக ரெடியாதான் இருக்கும். விஷ்ணுக்கு மெசேஜ் பண்ணிட்டு கிளம்பு நீ” என பிரவாகன் அழுத்தி சொல்ல, அவளுக்கும் அயர்வாக இருக்க மேற்கொண்டு வாதிடாமல் கிளம்பி விட்டாள்.

விஷ்ணு வேலை செய்யும் மருத்துவமனை வேறு வழியில் இருக்க, அவனுக்கும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது தெரியாத காரணத்தால் குறுஞ்செய்தி அனுப்ப டைப் செய்ய ஆரம்பித்தாள்.

அதற்குள் அவனே அழைத்து விட்டான்.

“சாரி மிரு, ஜஸ்ட் டுவெண்ட்டி மினிட்ஸ்ல வந்திடுவேன்” என்றான்.

பிரவாகன் அனுப்பிய காரில் மிருணா ஏறி பத்து நிமிடங்கள் கடந்து விட்டன. விவரத்தை சொன்ன மிருணா, “வீட்டுக்கு வந்திடுங்க விஷ்ணு, இதுக்கு மேல திரும்ப ஸ்டேஷன் போனா இன்னும் டிலே ஆகும்” என்றாள்.

உள்ளே போன குரலில் ம் என மட்டும் சொல்லி கைப்பேசியை வைத்தவன் வீட்டிற்கு கிளம்பினான்.

விஷ்ணுவின் நேரமோ என்னமோ வழியில் ஒரு சரக்கு லாரி இன்னொரு சரக்கு லாரியுடன் மோதி விபத்தாகியிருந்தது. யார் உயிருக்கும் ஆபத்தில்லை என்ற போதும் லாரிகளில் இருந்த சரக்குகள் கவிழ்ந்து துப்புரவு பணி ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.

சாலை சீராக நேரமெடுக்கும் என்பதால் வேறு வழியில் சுற்றிக் கொண்டு வீடு வந்ததில் அவனுக்கு மேலும் ஒரு மணி நேரம் தாமதமானது.

‘மிருணா அவள் முன்னர் தங்கியிருந்த அவளது அண்ணன் வாங்கி கொடுத்த வீட்டிற்கு சென்றிருப்பாள், உறங்கிக் கூட போயிருப்பாள். பத்து நாட்களாக அவளை காண எத்தனை ஆவலாக காத்திருந்தேன். மோசமான நாளாக அமைந்து விட்டதே?’ ஏமாற்றமும் அவளை அழைக்க செல்ல முடியாததால் தன் மீதான கோவமுமாக வீடு வந்தான் விஷ்ணு.

வீட்டின் வெளியில் வராண்டாவில் வெறும் தரையில் அமர்ந்த வண்ணம் ஷூ அணிந்திருந்த கால்களோடு தனது ட்ராலியில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தாள் மிருணா.

விஷ்ணுவின் உள்ளம் உருகிப் போய் விட்டது. அருகில் வந்து அவளது முகத்தில் மோதிய கார் குழல்களை ஒதுக்கி விட்டான்.

அவனை போலவேதான் அவளுக்கும் கணவனை காண ஆவலாக இருந்திருக்கும். அண்ணன் வீடு சென்றால் விஷ்ணு வருவானோ என்னவோ என நினைத்து இங்கேயே வந்து காத்திருந்தவள் உறங்கி விட்டாள்.

சத்தமில்லாமல் கதவை திறந்தவன் வெகு நாசூக்காக அவளது ஷூக்களை களைந்து அலுங்காமல் அவளை கையில் அள்ளிக் கொண்டான். அவளது ஸ்பரிசம் அவனுக்குள் அப்படியொரு உற்சாகத்தை கொடுத்தது.

மெதுவாக அவளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்து டிராலியையும் உள்ளே எடுத்து சென்றான்.

தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவன் விளக்கொளியில் சிறிது நேரம் அவளை பார்த்து ரசித்தான். தனக்காக எதிர்பார்த்து ஏமாந்து போய் தூங்கி விட்டாளே என்ற நினைவால் பெரு மூச்சு விட்டவன் மின் விளக்கை அணைத்து விட்டு அவள் பக்கம் வந்து படுக்கப் போனான்.

புரண்டு படுத்தவள் விழித்துக் கொண்டாள். எங்கிருக்கிறோம் என எதுவும் புரியாமல் அதிர்ந்து போனவளாக அவள் சட்டென எழ, “படு மிரு” என்ற விஷ்ணுவின் குரல் கேட்டது.

நொடியில் பாய்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

“மிரு சாரி…” என்றவன் இதழ்களில் ஒரு விரல் வைத்து, “எதுவும் பேசக்கூடாது, இப்படி உங்களை ஹக் பண்ண டென் டேஸ் அண்ட் எலெவன் நைட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஃபேஸ் கூட காட்டமா பேய் மாதிரி பேசி பயமுறுத்திட்டீங்க” என்றாள்.

அவளை விலக்கி விட்டு மின் விளக்கை போட்ட விஷ்ணு சிரிக்க, மலர்ந்து சிரித்தவள் மீண்டும் அவனை அணைத்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் என்னவென பார்வையால் கேட்க, “புது பொண்டாட்டிய பிரிஞ்ச சோகமே இல்ல, கொஞ்சம் கூட தாடி வளர்க்காம க்ளீன் ஷேவ்ல மொழு மொழுன்னு இருக்கிறத பாரு” அவனது கன்னங்களை பிய்க்காத குறையாக பிடித்து இழுத்து கொஞ்சி தீர்த்தாள்.

கொஞ்சம் இளைத்து வெயிலின் தாக்கத்தில் சருமம் கறுத்து போயிருந்தவளை கண்களால் அளவிட்டவன், “ரொம்ப கஷ்டமா மிரு?” எனக் கேட்டான்.

“அவுட்டோர் ஷூட்டிங், அங்க நல்ல வெயில் விஷ்ணு. உங்களுக்கு ஒண்ணு சொல்லவா…” அவன் கழுத்தில் கை போட்டு தொங்கிக் கொண்டே கேட்டாள்.

“ஒண்ணு என்ன ஆயிரம் சொல்லு. நீ பக்கத்துல இல்லாம காது கேட்காத ஃபீல்” எனக் கூறி சிரித்தான்.

ஏற்கனவே கைப்பேசியில் கூறிய கதைகளை நேரில் சொன்னாள். சில நிமிடங்கள் கழித்து அவன் சமையலறை செல்ல இவளும் அவன் பின்னாலேயே வால் பிடித்துக்கொண்டு சென்றாள். அவன் தேநீர் வைக்க, சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டவளின் வாய் ஓயவே இல்லை.

இன்னொரு அடுப்பில் ஆம்லெட் செய்தவன் அவளிடம் கொடுக்க ஃபோர்க் வைத்து சாப்பிட்டவள், “இன்னொன்னு வேணும்” என்றாள்.

டபுள் ஆம்லெட் செய்து கொடுத்தவன் தயாரான தேநீரை வடிகட்ட, “நடுராத்திரி பத்து நாள் பிரிஞ்சு வந்த பொண்டாட்டியோட பெட் ஷேர் பண்ணணும் நினைக்காம ஆம்லெட் போட்டு தர ஹஸ்பண்ட்லாம் ஆயிரத்தில் ஒருவன்” என்றாள்.

தேநீர் கோப்பையை அவளிடம் நீட்டிக் கொண்டே, “உன்னை ஒண்ணும் பண்ணாம சும்மா இருக்கேன்னு கிண்டல் செய்றியா நீ?” எனக் கேட்டான்.

“அப்படியும் வைத்துக் கொள்ளலாம் மழலை மருத்துவரே” என்றவள் சூடான தேநீரை ரசித்து பருகி, “லவ்ட் இட்” என்றாள்.

“ஹேய் குழந்தைங்க டாக்டர்னு சொல்றியா? டாக்டரா இருந்தும் சின்ன புள்ளன்னு ஓட்டுறியா என்னை?”

அவள் சிரிக்க, “சிலேடை? ம்ம்… பேசு பேசு” என்றான்.

“பேசிட்டுதானே இருக்கேன்?”

சுவர் ஓரமாக சாய்ந்து நின்று கொண்டே பார்வையை மனைவியிடத்தில் வைத்த வண்ணம் தேநீரோடு சேர்த்து அவளையும் பருகினான் விஷ்ணு.

அவனது பார்வை சொன்ன ரகசியங்களில் சட்டென பேச்சுக்கள் இல்லாமல் போய் அமைதியாகி விட்டது சமையலறை.

காலி கோப்பையை மேடையில் வைத்தவள் விஷ்ணுவை பார்ப்பதும் பின் பார்வையை தவிர்த்து சிரிப்பதுமாக இருந்தாள். தேநீர் பருகி முடித்தவன் அவளுடைய காலி கோப்பையையும் எடுத்து சிங்க்கில் போட்டு விட்டு அவளை தூக்கிக் கொண்டான்.

“ராத்திரி விடியகாலை ஆகிடுச்சு. எனக்கு ஹாஸ்பிடல் போக வேணாம், ரெண்டு பேரும் சேர்ந்தே ரெஸ்ட் எடுக்கலாம்… இப்ப இல்ல, கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா” என்றான்.

விழி பார்வையில் அவளும் ரகசியம் பேச, அவளோடு அவர்களது படுக்கை அறைக்குள் நுழைந்தான் விஷ்ணு.

காலை பத்து மணிக்கு விஷ்ணுவின் கைப்பேசி ஒலித்து அவனை எழுப்பி விட்டது. அவனுடைய பெரியண்ணன் ஸ்ரீதர் அழைத்தான். நலம் விசாரித்தவன் வார இறுதியில் விருந்துக்கு நெய்வேலி வரும் படி அழைத்தான்.

மிருணாவிடம் கலக்காமல் ‘வார இறுதிதானே’ என நினைத்த விஷ்ணுவும் சரி என சொல்லி விட்டான்.

அவளும் எழுந்த பின் காலை உணவாக சேமியா உப்புமா செய்யலாம் என வேலையை ஆரம்பித்தனர்.

“பீன்ஸ் இந்த சைஸ் நறுக்கினா ஓகேவா?” என மிருணா கேட்க, “உன் விருப்பம் போல கட் பண்ணு, எப்படி கட் பண்ணினாலும் மென்னு சாப்பிட்டுக்கலாம்” என்றான்.

வெங்காயம் நறுக்கியவளின் கண்கள் கலங்க ஆரம்பிக்க, “நீ தேங்கா சட்னி வை, நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி அவளிடமிருந்து வெங்காயத்தை வாங்கிக் கொண்டான்.

“ரொம்ப நல்லவன் ப்பா நீயி, ஆனா உன் கண்ணு கலங்கினா எனக்கு தாங்காது” என்றவள் அவளே வெங்காயத்தை வாங்கிக் கொண்டாள்.

“எப்பவும் இது வேலைக்கு ஆகாது மிரு. சமையல் வீட்டு வேலைக்கெல்லாம் ஆள் பார்த்திடலாம்” என்றான் விஷ்ணு.

“காந்திமதி அக்கா அந்த வீட்லதான் இருக்காங்க. மார்னிங் டைம் வர சொல்லி கேட்கிறேன். அவங்க சமையல் நல்லா இருக்கும்” என்றாள்.

“அது உன் இஷ்டம், ஆனா நம்ம வீட்டு வேலைக்கு நாம பே பண்ணிக்கலாம்” என விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்க அழைப்பு மணி ஒலித்தது.

யாரென போய் பார்த்தான் விஷ்ணு. காந்திமதிதான் ஒரு பையோடு நின்றிருந்தார்.

‘இப்போதுதானே இவரை பற்றி பேசிக் கொண்டிருந்தோம், அதற்குள் வந்து நிற்கிறாரே!’ என நினைத்தவன் அவரை உள்ளே வர சொல்லி விட்டு மிருணாவையும் அழைத்தான்.

“வாங்க க்கா” என அவள் வரவேற்பு கொடுக்க, “நைட் லேட்டாதான் வந்தீங்களாம், காலைல பத்து மணிக்கு மேலதான் இங்க வரணும்னு சொல்லிட்டாங்க, அதான் இப்போ வந்தேன். பசிக்குதா ம்மா?” எனக் கேட்டார் காந்திமதி.

“யார் உங்களை இங்க வர சொன்னது?” எனக் கேட்டான் விஷ்ணு.

“ஐயாவோட பி ஏ தம்பி பேசினாங்க. டிஃபன் எல்லாம் ரெடியா இருக்கு, மதியம் என்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா செஞ்சி எடுத்திட்டு வந்திடுவேன்” என்றவர் பையிலிருந்து இரண்டு கேஸரால்களை வெளியே எடுத்தார்.

மிருணா பாவமாக விஷ்ணுவை பார்க்க அவன் எரிச்சலோடு அறைக்கு சென்று விட்டான்.

“டைனிங் டேபிள்ல வச்சிடுங்க க்கா, நான் உங்களுக்கு போன் பண்றேன்” என்றாள் மிருணா.

“லஞ்ச் என்ன செய்யன்னு சொன்னா ரெடி பண்ணிடுவேன் மா”

“சொல்றேன் க்கா, ப்ளீஸ் கிளம்புங்க” என அவள் அழுத்தி சொல்ல, அவரும் சென்று விட்டார்.

விஷ்ணு கோவமாக இருக்க, “எனக்கும் தெரியாது விஷ்ணு. அவங்களுக்கு என்ன ஆர்டர் கிடைக்குதோ அப்படி செய்திட்டாங்க. அவங்ககிட்ட போய் கோச்சுக்க முடியுமா?” எனக் கேட்டாள்.

“எனக்கும் உம்மேலயோ அவங்க மேலேயோ கோவம் இல்ல மிரு. உன் அண்ணன் என்ன செஞ்சிட்டு இருக்கார்னு அவருக்கு தெரியுதா? அக்கறையா சாப்பாடு கொடுத்து விடறாதாவே இருக்கட்டும், நம்மள்ல யார்கிட்டயாவது கேட்ருக்கலாம்தானே? சத்தியமா செம கடுப்பாகுது மிரு” என்றான்.

“அக்கா இல்லைனா அம்மா மூலமா பேசி அண்ணனுக்கு நான் புரிய வைக்கிறேன். இப்ப சாப்பிட வாங்க” என்றாள்.

Advertisement