Advertisement

அத்தியாயம் -23(2)

“ட்ரஸ்ட் விஷயத்துல உங்க மேல மேடம் அதிருப்தி ஆக போறாங்க, அதை வச்சு உங்களுக்குள்ள இப்ப இருக்க குட் டெர்ம்ஸ் பாதிக்குமே சார். எப்படி சார் ஹேண்டில் செய்ய போறீங்க?” கவலையாக கேட்டான் தமன்.

“ஹேண்டில் பண்ணித்தான் ஆகணும் தமன்” என்ற பிரவாவின் முகத்தில் மலரை நினைத்து கவலை ரேகைகள்.

மலரை அவளது பிறந்த வீடு சென்று இரண்டு முறை பார்த்து வந்தான். அதிக நேரமெல்லாம் இல்லை, பதினைந்து நிமிடங்கள் இருப்பான். காபி பருகி விட்டு அவளது உடல்நிலை சம்பந்தமாக மட்டுமே பேசி விட்டு உடனே புறப்பட்டு விடுவான்.

*****

அன்று பரத்துக்கு நீட் தேர்வு. மலர் அவளது கைகளால் மலர்கள் பறித்து சிறு மாலை தொடுத்து அவனை விட்டு கடவுள் படத்திற்கு அனுவிக்க சொன்னாள். அப்பாவோடு அவனை வழியனுப்பி வைத்து விட்டு மலர் வீட்டுக்குள் வர பிரவாகன் வந்து விட்டான்.

இன்று அவளுக்கு பரிசோதனை. இருவருக்குமே நம்பிக்கை இருந்தாலும் மனதில் மெல்லிய பதற்றமும் இருக்கத்தான் செய்தது. கிளம்பும் முன் அன்னையின் படத்திற்கு முன் நின்று வணங்கிய மலரின் கண்கள் பனித்து போயின. விமலா மாப்பிள்ளைக்கு காபி தயாரித்து கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை.

மனைவியின் அருகில் வந்து நின்றவன் அவளை தன் தோளோடு ஆறுதலாக அணைத்து பின் விட்டான். பிரவாகன் காபி பருகிய பின் இருவரும் புறப்பட்டனர்.

பரிசோதனை முடிவு வரவும் கணவனை நம்பிக்கையான சிரிப்போடு மலர் பார்க்க, அவனுக்கும் அப்பாடா என இருந்தது. மருத்துவர் தனலக்ஷ்மியை காண சென்றனர்.

“இப்போ நார்மல் ரேஞ்ச்ல இருக்கு. என் சஜ்ஜசன் என்னன்னா ஹெச் சி ஜி லெவல்ஸ் மட்டும் மானிட்டர் பண்ணலாம். இப்போ ஸ்கேன் தேவையில்லை, வெயிட் பண்ணலாம்” என சொல்லவும் நான்கைந்து முறை நன்றி சொன்னான் பிரவாகன்.

மலரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக கூறியவர் கர்ப்ப காலத்தில் சொல்லும் அறிவுரைகள் மட்டும் சொல்லி மற்றபடி எப்பொழுதும் போல இயங்கலாம் எனவும் சொல்லி விட்டார்.

அவனது அலுவலக அறைக்கு மலரை அழைத்து சென்றான். ட்ரஸ்ட் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான கடிதம் அவளது கையொப்பம் தாங்க தயாராக காத்திருந்தது.

கடிதத்தை கையில் எடுத்து பார்த்தவள் அலட்சியமாக மேசையில் வைத்து விட்டாள்.

என்ன சொல்வாளோ என அவன் பார்த்திருக்க, “ட்ரஸ்ட்டீ பொறுப்பு எனக்கு வேணாம்” என்றாள்.

 வாயை குவித்து மூச்சு விட்டவன், “குட் மலர், குட் டெஸிஸன், நம்ம குழந்தைக்காக…” என்றான்.

“ஒரு கண்டிஷன்” என சொல்லி அவனை அழுத்தமாக பார்த்தாள்.

எரிச்சல் அடைந்தாலும், “சொல்லு…” என கேட்கவே செய்தான்.

“உங்க சித்தப்பாவையும் சூப்பரிடெண்ட்டண்ட் ஏகாம்பரத்தையும் அங்கேருந்து அனுப்பிடுங்க. கிஷோர் அங்க நிர்வாகம் செய்யட்டும், சீனியர் டாக்டர் கிருஷ்ணகுமார் சாரை சூப்பரிடெண்ட்டண்ட்டா ப்ரொமோட் பண்ணுங்க” என்றாள்.

“அங்க எந்த சேஞ்ச் செய்றதுக்கும் ஒரு வருஷம் டைம் சொன்னேன் உன்கிட்ட” என்றான்.

“இல்ல, ஹாஸ்பிடல் இம்ப்ரூவ் பண்ணத்தான் ஒரு வருஷம் டைம் சொன்னீங்க. ஊழல் பெருச்சாளிங்களை அங்கேருந்து ரிமூவ் பண்றதுக்கு ஏன் யோசிக்கணும்? எனக்கு இதை செய்து கொடுங்க, ட்ரஸ்ட்டீ பதவிலேருந்து ரிசைன் பண்ணிக்கிறேன்”

“கண்டிப்பா செய்றேன், ஆனா இப்ப இல்ல. கொஞ்சமாவது புரியுதா மலர் உனக்கு… எனக்கு டைட் ஷெட்யூல், மெடிக்கல் காலேஜ் சீட்ஸ் அதிகம் அப்ரூவல் ஆகுற ஸ்டேஜல இருக்கு. இந்த அகாடமிக் இயர்லேயே எஃபக்ட்டுக்கு கொண்டு வர கடுமையா போராடிட்டு இருக்கேன்”

“இப்படித்தான் ஏதாவது காரணம் சொல்வீங்கன்னு எனக்கு தெரியும்”

“நிறைய சிக்கல் இருக்கு மலர். அவங்களை அங்கேருந்து அனுப்பனும்னா முதல்ல அங்க உள்ள எல்லாத்தையும் சரி செய்யணும், இல்லைனா அவங்களாலேயே பிராப்லம்ஸ் கிரியேட் ஆகும். இந்த சமயத்துல அவங்க கிரியேட் பண்ற நியூசென்ஸ் எல்லாம் பார்க்க முடியாது என்னால”

“அப்ப ட்ரஸ்ட் விஷயங்களை சரி பண்ணுங்க, அப்புறமா அவங்கள வெளிய அனுப்புங்க”

பற்களை கடித்தவன், “வேணும்னு பேசுறியா இப்படி? ரெண்டு மாசத்துல ஜே ஸி ஐ க்கு ரெடி ஆகிடுச்சா ஹாஸ்பிடல்னு எவாலுயெட்(evaluate – மதிப்பீடு) பண்ண பிரைவேட்டா ஒரு டீம் வர்றாங்க, அதுல ஃபெயில்னு அவங்க சொன்னா ஜே சி ஐ கிடைக்கலங்கிற மாதிரிதான். இப்போ ரெடி ஆகி அதுக்கப்புறம் கன்சிஸ்டெண்ட்டா அப்படியே ஃபாலோ ஆனாதான் ஜே சி ஐ டீம் வர்றப்போ ஹாஸ்பிடல் பக்காவா ரெடில இருக்கும். இதுல எப்படி நான் ஃப்ரீ பிளாக் பிரச்சனைய இழுத்துக்க முடியும்?” எனக் கேட்டான்.

“ஜே சி ஐ கிடைக்கும் போது எனக்கு குழந்தை பிறந்திருக்கும். என்னால கொஞ்ச நாள் ஹாஸ்பிடல் போக முடியாது, அப்புறம் மேல பிஜி படி, இப்ப விட்டா டைம் இல்லை வயசு போயிடும்ன்னு ஏதாவது காரணம் சொல்லி என்னை அங்கேருந்து ஒரேயடியா தள்ளி வச்சிடுவீங்க”

“என்னை நம்பல நீ!” கோவப்பட்டான் பிரவாகன்.

“நம்பிக்கை வர்ற மாதிரி என்ன நடந்துகிட்டீங்க? சொன்ன மாதிரி ட்ரஸ்ட்டீ ஆக்கி இப்போ விட்ருனு சொல்றீங்க”

பிரவாகன் ஏதோ சொல்லப் போக, “குழந்தைக்காகன்னு சொல்லாதீங்க. ப்ரெக்னன்ஸி ஒண்ணும் வியாதி இல்ல. நான் நல்லா ஆரோக்கியமா இருக்கேன், என் குழந்தையை என்னை விட நல்லா பார்த்துப்பேன்” என்றாள்.

மீண்டும் பிரவாகன் ஏதோ சொல்லப் போக அவனை பேசவே விடவில்லை மலர்.

“திரும்ப திரும்ப காலேஜ் சீட், ஹாஸ்பிடல் அக்ரிடியேஷன்னு என் காதுல பூ சுத்தாதீங்க. என்ன… மெடிக்கல் காலேஜ் விஷயமா வேகாத வெயில்ல ரோட்ல உட்கார்ந்து தர்ணா போராட்டம் பண்ண போறீங்களா? ஒரு வேளை உண்ணா விரதம், பாத யாத்திரை அப்படி எதுவும் செய்ய போறீங்களோ? ஏசி ரூம்ல விருந்து சாப்பிட்டுக்கிட்டே ஒரு சீட் நம்பர் அதிகமாக்க இவ்ளோன்னு பேரம்தானே பேசப் போறீங்க? ஒரு வேளை பேரம் படியாம போனா கூட அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கையேந்தி நிக்க போறதில்லையே?” நக்கலாக கேட்டாள்.

வாயை குவித்து மூச்சு விட்டு கண்களை மூடிக் கொண்டவன் மீண்டும் கண்களை திறக்க, “அடுத்த ரீசன் என்ன? ஹ்ஹான்… ஜே சி ஐ! எனக்கு புரியலை. ஜே சி ஐ க்காக நீங்கதான் ராப்பகலா உழைச்சிட்டு இருக்கீங்களா? எல்லாத்துக்கும் டீம் இருக்கு. டியூட்டி டைம் முடிஞ்சு எக்ஸ்ட்ரா அவர்ஸ்ல ட்ரைன் பண்றேன் டீச் பண்றேன்னு உங்க ஸ்டாஃப்ஸ சக்கையா பிழிஞ்சிட்டு இருக்காங்க” என சீறினாள்.

“பேயிங் எக்ஸ்ட்ரா ஃபார் தட்!” மேசையை தட்டி கோவமாக சொன்னான்.

“ஓ பணம் கொடுத்தா அட்டை பூச்சி மாதிரி எவ்ளோ வேணா உழைப்பை எடுத்துக்கலாமா? மனி மேட்டர்ஸ்…” இயலாமையுடன் கூடிய கோவத்தோடு சொன்னவள், “எனி வே… உங்க பணம் வச்சு எல்லாரையும் ஓடி ஓடி உழைக்க விடுறீங்க? நீங்க என்ன ஹார்ட் ஒர்க் போடுறீங்க?” எனக் கேட்டாள்.

“யூ டாமிட்! சோல்ஜர்ஸ் ஹெல்ப் இல்லாம எம்பயர் (empire – பேரரசு) உருவாகுறது இல்ல” சீறினான்.

“ஹ்ஹாஹான்… சிப்பாயோட சிப்பாயா… சொல்ல போனா முத சிப்பாயா அரசன் நின்னு வழி நடத்தணும். உங்க பிஸ்னஸ்க்கு தப்பான கம்பாரிசன் கொடுக்காதீங்க”

தண்ணீரை எடுத்து பருகியவன், “என்கிட்ட பணம் இருக்கு, நான் சாதிச்சுக்கிறேன்? என்னடி பிராப்லம் உனக்கு?” வெகுண்ட கோவத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.

மலரின் முகம் இறுகிப் போய் சிவக்க, “டோண்ட் டைவெர்ட் த டாபிக்! சும்மா கோவ படுத்திகிட்டு… என்கிட்ட இப்ப டைம் இல்ல மலர்” முடிவாக சொன்னான்.

தானும் தண்ணீர் பருகிக் கொண்டவள், “தெரியாமதான் கேட்குறேன்… ஃப்ரீ பிளாக் பார்க்க டைம் இல்ல டைம் இல்லனு சொல்றீங்களே… ட்ரஸ்ட் கணக்கு வழக்கு சரி பண்ணனும்னு நீங்க ஆர்டர் போட்டா போதும். வேற என்ன செய்ய போறீங்க? மூளை நோக நோக நீங்க அக்கவுண்ட்ஸ் பார்க்க போறீங்களா? நான் நெருக்கடி தர்றதா நீங்க நினைக்கலாம், இந்த நெருக்கடி இப்ப தராம வேற எப்ப தந்தாலும் உங்ககிட்ட என் காரியம் எதுவும் வேலைக்கு ஆகாதுன்னு எனக்கு தெரியும். என்ன பிளான் பண்ணி என் வாயை அடைப்பீங்களோ? உங்க மாஸ்டர் மைண்ட்டோட என்னால போட்டி போட முடியாது. இப்ப விட்டா ஃப்ரீ பிளாக்குக்கு எப்பவும் விடிவு வர போறதில்லை” என்றாள்.

“என்ன உன் பயம்? என் சித்தப்பா பணத்தை முழுங்கிடுவார்… அதானே? எவ்ளோ முழுங்குவார், ட்ரஸ்ட் பணம் முழுசையும் முழுங்குவாரா? முழுங்கிட்டு போட்டுமே. ஒரு வருஷத்துல அவர் முழுங்கின பணத்தை நான் ரீபிளேஸ் பண்றேன். இட்ஸ் அ பிராமிஸ்” என்றான்.

சொல்வதை செய்து விட்டு அதற்கு மாற்று கண்டு பிடிப்பான். கேள்வி கேட்டால் நீ கேட்டதை செயதேன், இப்போது சூழல் மாறி விட்டது என கதைகள் சொல்வான். இந்த விஷயத்தில் இப்போதுதான் இவனை கிடுக்கு பிடி போட்டு பிடிக்க வேண்டும் என முடிவாக இருந்தவள் இராஜினாமா கடிதத்தை கையில் எடுத்து கிழித்து போட்டாள்.

“வாட்ஸ் ராங் வித் யூ?” எரிச்சலும் கோவமுமாக கேட்டான்.

“எந்த ஸ்ட்ரெஸும் எடுத்துக்காம ட்ரஸ்ட்டீயாவும் அம்மாவாவும் என் பொறுப்பை கடமையை நான் மேனேஜ் பண்ணுவேன். உங்ககிட்ட கூட எதுக்காகவும் வந்து நிக்க மாட்டேன்” என்றாள்.

அவளை மேலும் எதுவும் கடிய மனமில்லாமல் இயலாமையோடு அவன் பார்க்க, “ப்ரெக்னண்ட் ஆனதிலேருந்து எனக்கு என்ன வேணும்னு கேட்கவே இல்லை நீங்க” என்றாள்.

அவன் முறைக்க, “ப்ச்… பரவாயில்ல, நானே சொல்றேன், நான் டிரஸ்ட்டியா தொடரனும்… அட் எனி காஸ்ட்” என்றாள்.

“மலர்…”

“ப்ரெக்னண்ட்டா இருக்கிற வைஃப் ஆசையா கேட்கிறதை முடியாதுன்னு சொல்வாரா தி கிரேட் பிரவாகன்?” என நக்கல் இழைந்தோட மலர் கேட்க, தாடை இறுக அவளை பார்த்திருந்தான்.

“எங்க முடியாதுன்னு சொல்லுங்க…” சிரிப்போடு கேட்டாள்.

‘முடியாது’ என கத்த சொல்லி மூளை கட்டளையிட்டாலும் அவ்வாறு செய்யாமல் அமைதியாக ஆனால் அழுத்தமான பார்வையோடு அவன் அமர்ந்திருக்க, “தேங்க்ஸ்!” என சொல்லி புறப்பட்டு விட்டாள்.

உள்ளே வந்த தமன் குப்பை தொட்டியில் கிழிந்து போய் கிடந்த கடிதத்தையும் ஒரு கையால் தலையை தாங்கிய படி அமர்ந்திருந்த பிரவாகனையும் பார்த்து விட்டு, “சார்…” என இழுத்தான்.

இரண்டு முறை தமன் அழைத்த பின்னரே நிகழ்வுக்கு வந்தவன், “கீப் அ க்ளோஸ் ஐ ஆன் ஹெர் (அவளை உன்னிப்பாக கவனி). அவளை டென்ஷன் பண்ற மாதிரி ஒரு சின்ன விஷயம் கூட நடக்க கூடாது” என்றான்.

“உங்க சித்தப்பாவை எப்படி கண்ட்ரோல் பண்றதுங்க சார்?”

“எப்படி வேணும்னாலும் பண்ணு”

“மேடம்கிட்ட உண்மையை சொல்லிட்டார்னா?”

“அதை சொல்லாத வரைக்கும்தான் அவர் இஷ்ட படி ஆடலாம்னு தெரியாத அளவுக்கு சாம்பிராணி இல்ல அந்தாள். மலர் ஷுட் பீ இன் ஸேஃப் சர்கிள்”

“யாரையாவது ஆள் அங்க செட் பண்ணி அந்தாள் அதிகம் பேசினா கல்ல கொண்டு அடிடான்னுதான் சொல்லி வைக்கணும்” விளையாட்டாக சொன்னான் தமன்.

“செய், ஐ டோண்ட் மைண்ட்!” என பிரவா சொல்ல ஆ என பார்த்தான் தமன்.

“ஈ நுழையறதுக்குள்ள வாயை மூடிட்டு மலரோட ரெஸிக்னேஷன் லெட்டர் வேற ரெடி பண்ணி வை” என கட்டளை இட்டான்.

“எதுக்கு சார், திரும்பவும் மேடம் கிழிச்சு போடறதுக்கா?”

“அவசரக் காரிகிட்ட இப்ப நிதானம் இன்னும் குறைஞ்சு போயிருக்கு. மே பீ அவ ப்ரெக்னன்ஸி காரணமா இருக்கலாம். சீக்கிரமே அவளை ரிசைன் பண்ண வைக்க எனக்கு காரணம் தர போறா. அப்போ தேவைப்படும்” என்ற பிரவாகனிடம் அவனது அலட்டலான சிரிப்பு மீண்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement