Advertisement

பேரன்பு பிரவாகம் -23

அத்தியாயம் -23(1)

அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகி விட சொல்லி பிரவாகன் கேட்டதில் அதிர்ந்த மலர் அவனது கை அணைவிலிருந்து விடுபட்டு வேகமாக எழுந்தமர்ந்தாள்.

“ஏன் இவ்ளோ வேகம்? ஈஸி மலர்” கடிந்து கொண்டே அவனும் எழுந்தமர்ந்தான்.

“பொறுப்பிலேருந்து நான் விலகிட்டா பீஸ்ஃபுல்லா இருப்பேன்னு நினைச்சுக்கிட்டீங்களா? நீங்க ஃப்ரீ பிளாக் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டீங்க. உங்க சித்தப்பா இதான் சாக்குன்னு ட்ரஸ்ட் பணத்தை எல்லாம் முழுங்கி ஏப்பம் விட்ருவார்” என கோவமாக சொன்னாள் மலர்.

“இதுக்குத்தான் சொல்றேன்… ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகித் தொலையுற?” என சத்தமிட்டவன் உடனே நிதானித்து அவளது கையை பிடித்தான்.

அவள் தன் கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டு, அழ ஆரம்பித்தாள்.

“எரிச்சல் பண்ணாத மலர். திங்கிங் மட்டும் பெருசா இருந்து பிரயோஜனம் இல்ல, தைரியமும் வேணும். எதுக்கு இப்ப இந்த அழுகை?”

““என் அம்மா எப்படி இறந்தாங்கன்னு தெரியுமா?” அழுகையும் ஆத்திரமுமாக கேட்டாள்.

“வாட்?”

“நான் பொறந்து ரெண்டைரை மாசம். அம்மாவும் நானும் தாத்தா வீட்ல இருந்தோம். ஒரு நாள் ஏர்லி மார்னிங் பின்கட்டுல இருந்த பாத்ரூம் போயிட்டு வந்த என் அம்மா கால் இடறி விழுந்திட்டாங்க. தலைல அடி பட்ருச்சு, ஆனா வெளிக்காயம் எதுவுமே இல்லை” சொல்லிக் கொண்டிருந்த மலரின் கண்களில் தாயை பற்றிய எந்த நினைவுகளுமே இல்லாத வயதில் அவரை இழந்து விட்ட வருத்தத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது.

தாட்சாயிணியின் பிறந்த ஊர் ஒரு கிராமம். அங்கே மருத்துவமனை வசதிகள் கிடையாது. விடியற்காலையில் தலையில் பட்ட அடியின் காரணமாக வலி இருந்தாலும் சரியாகி விடும் என இருந்து விட்டார் தாட்சாயிணி.

மதியத்திற்கு மேல் வலி அதிகரிக்கவும் துடிக்க ஆரம்பித்து விட்டார். வீட்டில் உள்ளோர் பயந்து விட்டனர். மருத்துவ உதவிக்கு டவுனுக்குத்தான் செல்ல வேண்டும். அந்த நேரம் டவுன் செல்ல பேருந்தும் இல்லை.

கை வைத்தியம் செய்யும் உள்ளூர் பாட்டி கசாயம் வைத்துக்கொடுக்க வலி குறைந்ததாக சொன்னார் தாட்சாயிணி. எதற்கும் மருத்துவமனை சென்று விடலாம் என விமலா வலியுறுத்த மாலை பேருந்தில் மருத்துவமனை செல்லலாம் என இருந்தனர்.

நான்கு வயது அகிலாவையும் இரண்டரை மாத மலரையும் அருகில் கிடத்திக் கொண்டு படுத்த தாட்சாயிணிக்கு உறக்கம் வரவில்லை. தலை விண் விண் என வலித்தும் வெளிக் காயம் இல்லாத காரணத்தால் பயப்படும் படியாக எதுவும் இருக்கும் என நினைக்க தோன்றவில்லை.

இரவில் குழந்தைக்கு பசியாற்ற அடிக்கடி எழுந்ததன் விளைவாக, சரியான உறக்கம் இல்லாமல் இப்படி தலை வலிக்கிறது என நினைத்துக்கொண்டார்.

மாலையில் பேருந்து வரும் நேரத்துக்கு முன்பே தாட்சாயிணியின் காதிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. வாந்தி எடுத்தவர் தங்கையின் கைகளுக்குள் இருந்த சின்ன மகளையும் அருகில் நின்றிருந்த பெரிய மகளையும் நிராசையாக பார்த்துக் கொண்டே மயங்கி போய் விட்டார்.

அப்போது கண் மூடியவர் பின் கண்களை திறக்கவே இல்லை. மாட்டு வண்டி கட்டிக் கொண்டு டவுன் மருத்துவமனை வந்து சேர்த்தனர். தாட்சாயிணியின் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினார்கள்.

 நினைவு தப்பியிருந்தாலும் உயிரோடு இருந்த மனைவியை பார்க்கும் கொடுப்பினை கூட செல்வத்திற்கு கிடைக்கவில்லை. அவர் வந்து சேர்ந்த போது தாட்சாயிணி உயிரை விட்டிருந்தார்.

மலரின் சாயலில் ஒரு பெண்ணை அப்படி கற்பனை செய்து கொண்டிருந்த பிரவாகன் விக்கித்து போய் அமர்ந்திருந்தான்.

“சரியான நேரத்துல மெடிக்கல் ஹெல்ப் இல்லாம போனதாலதான் நான் அம்மா இல்லாத பொண்ணு ஆனேன். விபத்து ஏற்பட்டதிலிருந்து ஒரு மணி நேரத்தை கோல்டன் ஹவர்ஸ்னு சொல்வாங்க. அதுக்குள்ள அவங்களுக்கு பேஸிக் மெடிக்கல் ஹெல்ப் கிடைச்சிடுச்சுன்னா உயிர் பிழைக்க வைக்க அதிக வாய்ப்பு இருக்கு. சிகிச்சை சில நிமிட நேரம் தாமதம் ஆகுறதால மட்டும் எத்தனை உயிரிழப்பு ஏற்படுதுன்னு தெரியுமா?”

“இந்த சரவுன்டிங்ஸ்ல மல்டி ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் ஃபிரீயா இங்கதானே கிடைக்குது? இதை நம்பி எவ்ளோ பேர் வர்றாங்க? உங்க பெய்ட் பிளாக் ஹாஸ்பிடல் பேஷண்ட்ஸ் விட எண்ணிக்கை கம்மியாவே இருக்கட்டும்… ஆனா வர்றாங்கதானே?”

“நீங்க இப்ப செய்ற சின்ன தப்பால ஃப்யூச்சர்ல இந்த ஃப்ரீ பிளாக் இல்லாமலே போகலாம். அதனால ஒரு உயிர் போனா கூட அதுக்கு காரணம் நீங்கதான். அது எனக்கு வேணாம். எம்புருஷன் யார் உயிர் போறதுக்கும் காரணம் ஆக வேணாம். யார் குடும்பமும் அவங்க உறவை இழந்து நிர்கதியா நிக்க எம்புருஷன் காரணம் ஆக வேணாம். வேணாம்…” என்றவள் முகத்தை கைகளுக்குள் பொத்தி வைத்து அழ ஆரம்பித்தாள்.

ஸ்மரணை வரப் பெற்ற பிரவாகன் நகர்ந்து வந்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

சில நிமிடங்களில் அவளாகவே அழுகையை நிறுத்தி மெல்ல தேறிக் கொண்டாள். அவளது அழுகை நின்றிருந்தாலும் அவளை தன்னிடமிருந்து விலக்காமல் வைத்திருந்தான்.

“உன் அம்மாவோட டெத் உன்னை ரொம்பவே அஃபெக்ட் பண்ணியிருக்கு. உன் எண்ணம் தப்பில்ல, ஆனா இப்ப நீயும் ஒரு அம்மா மலர்” என்றான்.

“நான் நினைச்சதை செய்ய என் குழந்தை தடையா இருக்காது” என்றாள்.

“அறிவுப்பூர்வமா யோசிக்கணும், பேசணும். நீ ஆக்ஷன் ஹீரோயினா இருந்து ஆயிரம் உயிரை காப்பாத்து, அதுக்கு முன்ன என் குழந்தையை காப்பாத்தி நல்ல படியா என்கிட்ட கொடுத்திடு. பேபி விஷயத்துல ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்ல” என்றான்.

அவனிடமிருந்து வலிந்து விடுபட்டவள், “இவ்ளோ சொல்றேன்… உங்களுக்கு புரியலையா?” விரக்தியாக கேட்டாள்.

“உனக்குத்தான் புரியலை. ப்ரெக்னன்ட்னு தெரிஞ்ச அன்னிக்கே பயப்படற மாதிரி சொல்றாங்க. ஒரு இஞ்ச் நீ நகர்ந்தாலும் என் பேபிக்கு ஆபத்துன்னா நகர விட மாட்டேன் உன்னை. என் குழந்தையை காப்பாத்த முடியலைன்னா அப்புறம் என்னடி அப்பா நான்?”

“என்னை நகர விடக்கூடாதுன்னு யாரும் உங்களுக்கு அட்வைஸ் பண்ணல. இன்னும் ஒரு வாரத்துல எல்லாம் நார்மல்ன்னு தெரியத்தான் போகுது” என்றாள்.

“நீ எடுத்துக்கிற ஸ்ட்ரெஸ் பார்த்தா இந்த ப்ரெக்னன்ஸி டைம் ஸ்மூத்தா போக விட மாட்டேன்னு நல்லாவே தெரியுது. நான்தான் சொல்றேனே… எல்லாம் சரி பண்ணி தர்றேன்னு, பொறுமையா இருக்க முடியாதா உன்னால?”

“உங்களுக்கு மட்டும் நினைச்சத உடனே நடத்திக்கணும், நான் மட்டும் பொறுமை காக்கணுமா?”

“இப்ப நம்ம கவனம் நம்ம பேபி மேலதான் இருக்கணும் மலர்”

“என் ப்ரெக்னன்ஸியை எந்த விதத்திலேயும் ட்ரஸ்ட் விஷயத்தோட கம்பேர் பண்ணாதீங்க”

“நீதான் ப்ரெக்னண்ட்டா இருக்க, நீதான் ட்ரஸ்ட்டீயாவும் இருக்க. கம்பேர் பண்ணாதன்னு நீ சொல்றதுல லாஜிக் இல்ல மலர்”

“ப்ரெக்னன்ஸி என்னோட வீக்னெஸ் இல்ல”

விவாதம் அவர்களுக்குள் வளர்ந்து கொண்டே சென்றது.

ஒரு கட்டத்தில் அடுத்து பேச முடியாத அளவுக்கு மலரின் தொண்டை வறண்டு போயிருக்க தன்னையறியாமல் தொண்டையை நீவிக் கொண்டாள்.

எழுந்து அவளுக்கு பருக தண்ணீர் கொடுத்தவன், “ஃப்ரீ பிளாக்னு வந்திட்டா சாப்பாடு, தண்ணி எதுவும் தேவை படாது உனக்கு, அந்த சிந்தனையெல்லாம் வரவே வராது. அதனாலதான் நான் பயப்படுறேன். யூ மஸ்ட் ரிசைன்!” என்றான்.

தண்ணீர் குடித்து முடித்தவள், “நான் யோசிச்சு சொல்றேன்” என்றாள்.

“யோசிக்க என்ன இருக்கு?” என கோவமாக கேட்டவன் உடனே, “ஓகே, ஒன் வீக் ஆனதும் சொல்லு. நாளைக்கு உன் அப்பா வீட்டுல விடுறேன். உன் தம்பி நீட் எக்ஸாமுக்கு ஹெல்ப் பண்ண வந்ததா சொல்லிட்டு அங்கேயே இரு. நல்லா ரெஸ்ட் எடு” என்றான்.

அவள் மறுப்பாக சொல்லப் போக, “ஃபெட் அப் வித் யூ மலர்! ஒரு வாரத்துல ட்ரஸ்ட் ஹாஸ்பிடல் எதுவும் காணாம போயிடாது. இவ்ளோ வருஷம் நீயா தூக்கி சுமந்த எல்லாத்தையும்? இன்னிக்கு நீ பேச வேண்டிய லாஸ்ட் வார்த்தையை எப்பவோ பேசி முடிச்சிட்ட, இனி பேசினா அதிகப் படி, நோ மோர் ஆர்க்யுமெண்ட்ஸ்! ஜஸ்ட் லை டவுண் அண்ட் ஸ்லீப்!” கோவத்தோடு ஆரம்பித்து கட்டளையாக முடித்தான்.

 அவனை முறைத்துக் கொண்டே அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்து விட்டாள் மலர். அவளது முதுகை உரசிக் கொண்டு படுத்தவன் அவளது வயிற்றில் கை போட்டு அணைவாக பிடித்துக்கொண்டான்.

அவனது கையை அவள் விலக்கி விட, “பேபி இப்போ உன்கிட்ட இருக்கலாம், எப்பவும் என் பாதுகாப்புலதான் நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க” என அழுத்தமாக சொல்லி மீண்டும் அவளது வயிற்றில் கை வைத்துக் கொண்டான்.

அடுத்த நாள் மலரை மருத்துவமனை வர அனுமதிக்காதவன் அவளது பிறந்த வீட்டில் விட்டு விட்டான். மலரும் ஒரு வாரம் அமைதியாக இருக்கலாம், தம்பிக்கும் உதவியது போலிருக்கும் என எண்ணி அதிகமாக மறுப்பு சொல்லவில்லை.

அவளது பெற்றோரும் தம்பி படிப்பதற்கு உதவ வந்திருக்கிறாள் என நினைத்துக் கொண்டனர்.

*****

வழக்கம் போல பொய் கணக்கு இந்த முறை என்ன எழுத வேண்டும் என்பதை தலைமை கணக்கரிடம் வரிசை படுத்திக் கொண்டிருந்தார் தர்மேந்திரன். பயத்தோடு பார்த்திருந்த ஏகாம்பரம் அவரை தனிமையில் சந்தித்து, “இனியும் இப்படி செஞ்சா மலர் சும்மா இருக்க மாட்டா. வீணா நீங்க மாட்டிக்கிறது இல்லாம என்னையும் மாட்டி விட பார்க்குறீங்க” என்றார்.

“இனி மலரால எதுவும் செய்ய முடியாது. நான் சொல்றதை கேட்கிற நிலைல இருக்கான் பிரவாகன்” எனக் கூறி நரியின் தந்திரத்தோடு சிரித்தார் தர்மேந்திரன்.

“புரியலையே சார்”

“வேற யாருக்கும் புரி படுற வரை மட்டும்தானே நான் சுருட்ட முடியும்?” என அலட்சியமாக கேட்டார் தர்மேந்திரன்.

“எத்தனை வருஷங்களா நாம கூட்டு, என்கிட்ட கூட சொல்லக்கூடாதா?”

“உனக்கு தெரிஞ்சு எதுவும் ஆக போறதில்ல, மலர் சீக்கிரம் ட்ரஸ்ட்லேருந்து வெளியே போயிடுவா, நீ பயப்படாம போ” என அத்தனை தைரியமாக அவர் கூற, ஏகாம்பரத்துக்கு குழப்பம் இருந்தாலும் தைரியமாகவே சென்றார்.

*****

“அவருக்கு பயந்திட்டு சேஞ்ச் பண்ணனுமா சார்? மேடம் வருத்த படுவாங்க” அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியில் மாற்றம் செய்ய போவதை சொன்ன பிரவாகனிடம் கூறினான் தமன்.

“அந்தாளு மேல எனக்கு பயமா?” வாய் விட்டு சிரித்தான் பிரவாகன்.

“அப்புறம் ஏன் சார்? மேடம் நல்லாத்தானே மேனேஜ் பண்ணிட்டு இருக்காங்க?”

“அவளுக்கு இப்ப ரெஸ்ட் தேவை. என் சித்தப்பன் கொஞ்ச நாள் அவரை புத்திசாலின்னு நினைச்சிட்டு போகட்டுமே, என்ன இப்போ? திருட்டு ஆடு நல்லா தின்னு கொழுத்தா விருந்து அமர்க்கள படும்தானே?” கண்களில் அடக்க பட்ட சீற்றத்துடன் கேட்டான் பிரவாகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement