Advertisement

அத்தியாயம் -22(2)

இவள் முன்கூட்டியே தன்னிடம் சொல்லவில்லையே என்ற கோவமும் ஆதங்கமும் ஒரு பக்கம் இருந்தாலும் அதை மீறிய இனிய உணர்வுகள் ஒரு பக்கம் சூழ நின்றிருந்த பிரவா, “ரிசல்ட் வந்ததும் சொல்றேன், தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றான்.

ஜர்னாவும் பத்மநாதனும் சென்ற பின் ஆய்வுக் கூடத்துக்கு தகவல் சொல்லியிருந்த தமனும் வெளியேறினான்.

 மலர் பிரவாகனை முறைக்க, “நான்தான் முறைக்கணும் உன்னை, என்கிட்ட ஏன் சொல்லலை?” எனக் கேட்டான்.

“ப்ச்… கன்ஃபார்ம் ஆகல இன்னும்” என்றாள்.

“கன்ஃபார்ம் ஆன பிறகு மத்தவங்களுக்குத்தான் சொல்லணும். உனக்கு இப்படினு டவுட் வந்த உடனே என்கிட்ட சொல்லியிருக்கணுமா இல்லியா?”

“பிளான் பண்ணியெல்லாம் சொல்லாம இல்லை. எப்பவாவது இப்படி டேட் தள்ளி போகும். வெயிட் பண்ணி டெஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்தேன். உங்ககிட்ட சொல்ல மறந்து போயிட்டேன்”

“எது! மறக்கிற அளவுக்கு சின்ன விஷயமா இது?”

“உங்களோட பேசுற அளவுக்கு எனர்ஜி இல்லைங்க எனக்கு” சோர்வோடு சொன்னாள் மலர்.

நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன், “இட்ஸ் ஓகே, நீ படு” என்றான்.

அவள் அமர்ந்தே இருக்க ஆய்வுக் கூடத்தின் தலைமை நிபுணர் இரண்டு உதவியாளர்களோடு வந்திருந்தார்.

மருத்துவர் ஜர்னா மகப்பேறு மருத்துவர் தனலக்ஷ்மியிடம் ஆலோசித்து என்னென்ன சோதனைகள் செய்ய வேண்டும் என சொல்லியிருக்க சிறுநீர் மாதிரியோடு இரத்த மாதிரியும் சேகரிக்க ஆரம்பித்தனர்.

மலரின் அருகில் அவளது தோளில் ஆதரவாக கை வைத்த படி நின்றுக் கொண்டிருந்தவன், “இவ்ளோ பிளட் எதுக்கு மேன்?” என்றான்.

“சும்மா சும்மா மேடத்த ப்ரிக் பண்ண வேணாம்னு எல்லா டெஸ்டும் எடுக்க சொல்லியிருக்காங்க சார். மயக்கம் வந்திடுச்சாமே மேடத்துக்கு” என ஆய்வுக் கூட நிர்வாகி சொல்ல, “ரிப்போர்ட்ஸ் முதல்ல எனக்கு இன்ஃபார்ம் பண்ணனும்” என்றான்.

அவர்கள் சென்றதும் மலரை மீண்டும் படுத்துக் கொள்ள செய்தவன் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொள்ள, “இது நம்ம வீடு இல்ல, எதுவும் வேலை இருந்தா பாருங்களேன்” என சலிப்பாக சொன்னாள்.

“என்ன ரிசல்ட் வரும்னு கொஞ்சமும் பதட்டமில்ல, நான் கூட இருக்கணும்னு ஆசை இல்ல, என்ன மலர் இதெல்லாம்?” என கடிந்தான்.

“இல்லைனு உங்களுக்கு தெரியுமா?”

“ம்ம்… நான் சொன்ன ரெண்டுக்குமே ஆசையா? இல்ல ரெண்டாவது சொன்னத கணக்குல எடுத்துக்காம பதில் சொல்றியா?”

உதடுகள் துடிக்க அவன் புறங்கையில் ஒரு அடி வைத்தவள் பின் அந்த கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

“என் பக்கத்துல வந்து உட்காருன்னு பொண்டாட்டி சொன்னப்புறம் வந்து உட்கார நான் நார்மல் மனுஷன் இல்லை. பிரவாகன்” என்றான்.

“ஆ… முடியலை என்னால. சும்மா இருங்களேன்” என்றாள்.

“சும்மாதான் உன் பக்கத்தில இருக்கேன்… இது நம்ம பெட்ரூம் இல்லைனு தெரியுற அளவுக்கு நிதானத்துலதான் இருக்கேன் மலர்” என்றான்.

அவனிடம் வாய் கொடுக்காமல் கண்களை மூடிக் கொண்டாள் மலர்.

சில நிமிடங்களில் சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியான செய்தி பிரவாகனுக்கு அறிவிக்க பட்டது. கணவன் சொல்லப் போகும் செய்திக்காக அவனையே பார்த்த படி அவள் படுத்திருக்க நிறைவான சிரிப்புடன் அவளிடம் வந்தான் பிரவா.

அவன் எதுவும் சொல்லாமலே அறிந்து கொண்டவள் கண்களை மூடிக் கொண்டாள். கண்ணோரம் துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவளது கையை அவன் பிடித்துக்கொள்வதையும் நெற்றியில் முத்தமிடுவதையும் உணர்ந்து கொண்டாள்.

மெல்ல மலர்ந்து சிரித்தவள் கண்களை திறந்து பார்க்க, “ஹார்ட் ஒர்க் நெவர் ஃபெயில்ஸ்” என குறும்பாக சொன்னான்.

அவனது பிடிக்குள் இருந்த கையை விலக்கிக் கொண்டவள், “வேணாம்னு பிளான் பண்ணினேன், இப்ப கிடைக்கிற ஃபீல்…” என சொல்லி ஆடை மறைத்த தன் வயிற்றில் கை வைத்துக்கொண்டாள்.

அவளை ரசனையாக பார்த்திருந்தவன், “அம்மா ஆனதும் தனி அழகா தெரியுற” என்றான்.

சிரித்துக்கொண்டே எழுந்தவள், “இப்போ ஓகேவா இருக்கேன், நான் கிளம்பறேன்” என்றாள்.

“என்கிட்ட பேசக்கூட எனர்ஜி இல்லைனு சொன்ன?”

“உங்ககிட்ட பேசணும்னா நாலு ஆள் எனர்ஜி தேவை படுது. அதனால சொன்னேன், விடுங்க என்னை”

“இவ்ளோ அவசரமா எங்க போகணும் உனக்கு?”

“டியூட்டி பார்க்க, மதியத்துக்கு மேல போஸ்ட் ஆபரேட்டிவ் வார்டுல டியூட்டி எனக்கு” என்றாள்.

ஆமாம் அவள் ட்ரஸ்ட்டீ ஆனாலும் அவளது வேலையையும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தாள். பணி நேரம் மட்டும் கொஞ்சம் அவளது கடமைகளின் நேரத்தை அனுசரித்த படி இருக்கும்.

“இந்த நேரத்துல தேவையா மலர்? டேக் ரெஸ்ட். வீட்டுக்கு போய்டலாம்” என்றான்.

“ப்ரெக்னன்ஸினாலே ரெஸ்ட்லேயே இருக்கணும்னு இல்ல. இப்ப ஓகேதான்” என்றவள் புறப்பட்டும் விட்டாள்.

அவள் சென்றதும் உள்ளே வந்த தமன் வாழ்த்து கூற ஏற்றுக்கொண்டவன், “நாளைக்கு சேலரி டே தானே? நம்ம ஹாஸ்பிடல் ஸ்டாஃப்ஸ் எல்லாருக்கும் ஒன் டே சேலரி சேர்த்து கொடுக்க சொல்லிடு தமன், வித் ஸ்வீட்ஸ்” என்றான்.

“சார்! ஒரு நாள்ல எப்படி முடியும்?” என தமன் கேட்க, பிரவாகன் பார்த்த பார்வையில், அக்கவுண்ட்ஸ் நிர்வாகியை அழைத்த தமன், விவரத்தை சொல்லி, “மத்த வேலை எல்லாத்தையும் விட்டுட்டு இதை பாருங்க” என முடிவாக சொல்லி விட்டான்.

அறுவை சிகிச்சை நடந்து முடிந்தவர்களுக்கான வார்டு வந்தடைந்தாள் மலர். பிஜி பயிலும் மருத்துவர் ஏற்கனவே அங்கு இருக்க இவளும் நடைமுறைகளை கவனிக்கலானாள்.

குகன் மற்றும் கோபாலின் நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் கிடைத்ததில் அதிர்ச்சியும் அதிருப்தியும் இருந்த போதும் அவளடைந்திருந்த தாய்மை மனதை உற்சாக பாதையில் அழைத்து சென்றது. மாலையில் மாமியாரிடம் சொன்ன பிறகு கணவனையும் அழைத்துக் கொண்டு நேரில் போய் தன் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.

பிரவாகனுக்கு நேரம் கிடைக்குமா என சந்தேகம் வர, சற்றே ஓய்வு கிடைத்த பின் அவள் அவனுக்கு அழைக்க அவனது எண் பிஸியாக இருந்தது. பின் அவளும் பிஸியாகி விட்டாள்.

சிறிது நேரத்தில் பிரவாகனே நேரில் வந்தான். அவனது முகம் இரத்தப் பசை இழந்து இறுக்கமாக காணப் பட்டது. குழப்பத்தோடு அவள் என்னவென கேட்க ஒன்றும் சொல்லாமல் தன்னோடு அழைத்து சென்று விட்டான்.

மகப்பேறு மருத்துவர் தனலக்ஷ்மியின் அறையில் இருந்தனர் இருவரும். உடன் ஜர்னாவும் இருந்தார். மலரின் இரத்தத்தில் ஹெச் சி ஜி(H C G) எனப்படும் ஹார்மோனின் அளவு குறைவாக இருப்பதாக வந்திருந்தது.

“யூரின் டெஸ்ட் பாசிட்டிவ்தானே மேடம்?” என தளர்ந்த குரலில் கேட்டாள் மலர்.

“எஸ், பட் ப்ளட்ல ஹெச் சி ஜி கம்மியா இருக்கு” என எப்படி விளக்குவது என ஜர்னாவின் முகத்தை பார்த்தார் தனலக்ஷ்மி.

மலரும் மருத்துவம் படித்தவள்தானே, உள்ளுக்குள் பதற்றம் என்றாலும், “வெயிட் பண்ணினா என்னன்னு தெரிஞ்சிடும் தானே மேடம்?” எனக் கேட்டாள்.

“சிலருக்கு ஹெச் சி ஜி அளவு குறைவா இருந்தா கூட ப்ரெக்னன்ஸி நார்மலா கன்டினியூ ஆகும் மலர். உங்களுக்கு அதிகமா எக்ஸ்பிளைன்…” தனலக்ஷ்மியின் பேச்சில் குறுக்கீடு செய்தான் பிரவாகன்.

“எனக்கு எக்ஸ்பிளைன் பண்ணுங்க டாக்டர்” என்றான்.

இது கருப்பையில் அல்லாமல் கருப்பையின் குழாயில் கர்ப்பம் தரித்ததற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். அவ்வாறு இருந்தால் கருக்கலைப்பு செய்து விட வேண்டும் என்பதை சொன்னார்.

பிரவாகனின் முகம் இருண்டு போனது. எல்லாம் தெரிந்தாலும் நேரடியாக கேட்கும் போது மலரின் கண்கள் கலங்க, நன்றாக மூச்சு இழுத்து விட்டு அழாமல் அமர்ந்திருந்தாள்.

கரு கர்ப்ப பையில் இருந்து, ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் அதனால் பெரிதாக பயம் கொள்ள தேவையில்லை. தேவைப்பட்டால் ஊசி மூலமாக ஹெச் சி ஜி அளவை உயர செய்யலாம்.

ஆனால் அதற்கு முன் குழாயில் கரு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும். டிரான்ஸ் வஜைனல் ஸ்கேன் மூலம் கண்டறியலாம் என்றாலும் கர்ப்ப காலத்தின் ஆரம்பக் கட்டம் என்பதால் இப்போது அறிந்து கொள்ள முடியாது. இன்னும் ஒரு வாரம் காத்திருங்கள் என சொன்னார் தனலக்ஷ்மி.

“எஸ் பிரவா, மத்த ப்ளட் டெஸ்ட்ஸ் எல்லாம் நார்மல். மலரும் ஹெல்தியாதான் இருக்காங்க. இந்த மயக்கம் கூட ப்ரெக்னன்ஸி ரிலேட்டட்தான். திரும்பவும் மயக்கம் வந்தா என்ன செய்யலாம்னு பார்க்கலாம். ஹோப் ஃபார் த பெஸ்ட்” என்றார் ஜர்னா.

“வேற என்ன செய்யணும் டாக்டர்? வீட்ல ரெஸ்ட்டா இருந்தா போதுமா?” எனக் கேட்டான் பிரவா.

“எப்பவும் போல இருக்கட்டும். ஸ்ட்ரெஸ் இல்லாம மட்டும் பார்த்துக்கோங்க” என்றார் தனலஷ்மி.

மலரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான் பிரவா. ஒரு வாரத்திற்கு பின்னரே வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் எனவும் கூறி விட்டான்.

படுத்துக் கொண்ட மலர் வெறுமனே கண்களை மூடிக் கொண்டாள்.

“எதுவா இருந்தாலும் மனசை தயார் படுத்திக்கணும் மலர்” என பிரவாகன் சொல்ல, மறுப்பாக அவனை பார்த்தாள்.

அவளருகில் அமர்ந்து அவளது தலை கோதி விட்டவன், “எனக்கு மட்டும் ஆசை இல்லயா? அதுக்காக அழுது புலம்பறதுல என்ன பிரயோஜனம்?” எனக் கேட்டான்.

“இல்ல எல்லாரும் பயமுறுத்துறாங்க. ரொம்ப எர்லி ஸ்டேஜ், அதான் லோ லெவல்ல இருக்கு. என்னால ஃபீல் பண்ண முடியுது, சீக்கிரம் நம்ம குழந்தை வர போகுது” என ஒருவித பிடிவாதத்துடன் சொன்னாள்.

என்னவோ அவள் சொன்னால் அதுவே நடந்து விடும் என்பது போல அவளை தைரியமாக பார்த்தவன் ஆமோதிப்பாக தலையாட்டினான்.

“உங்களுக்கு நிறைய வேலை இருக்கும், நீங்க கிளம்புங்க, நான் என்னை பார்த்துப்பேன்” என்றாள்.

அரை மணி நேரத்தில் அவனும் கிளம்பி விட்டான்.

இரவில் அவன் வீடு வந்த போது ஓரளவு தெளிவாகவே காணப் பட்டாள். உணவு முடித்து உறங்க சென்றனர்.

அவனது கையணைவில் படுத்திருந்தவளிடம், “நான் ஒண்ணு சொன்னா என்னை நம்பி சரின்னு சொல்வியா?” எனக் கேட்டான்.

அவள் வெறுமனே ம் போட்டுக் கொண்டாள்.

“இந்த ஃப்ரீ பிளாக் உன்னை போட்டு ரொம்ப படுத்தறது போல இருக்கு. ஜே சி ஐ செர்டிஃபிகேஷன் கிடைக்கிற வரை எனக்கு டைம் கொடு, நீ ஆசை பட்ட மாதிரியே ஃப்ரீ பிளாக், ட்ரஸ்ட் எல்லாத்தையும் மாத்துறேன்…” அவன் சொல்லிக் கொண்டிருக்க லேசாக எழுந்தவள் முகத்தை நிமிர்த்தி அவனை வியப்போடு பார்த்தாள்.

அவளை கூர்மையாக பார்த்தவன், “ட்ரஸ்ட்டீ பொறுப்பிலேருந்து ரிசைன் பண்ணிடு மலர், பழைய படி நானே பொறுப்புக்கு வந்திடுறேன்” என ‘நீ செய்தே தீர வேண்டும்!’ எனும் தொனியில் அழுத்தமாக சொன்னான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement