Advertisement

பேரன்பு பிரவாகம் -22

அத்தியாயம் -22(1)

சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டின் கதவை திறந்த விஷ்ணு, மிருணாவின் கையை பிடித்துக்கொண்டு, “வா மிரு” என சொல்லி அவளோடு சேர்ந்து அடி எடுத்து வைத்தான்.

இருவருமே அவர்களின் பணிக்கு செல்ல வேண்டும். மிருணா குளிக்க செல்ல, உணவு ஆர்டர் செய்தான் விஷ்ணு. அவள் குளித்து வரவும் இவன் குளிக்க சென்றான்.

அவன் வெளி வருகையில் முகத்திற்கு சன் க்ரீம் பூசிக் கொண்டிருந்தாள். அவள் பின்னால் வந்து நின்றவன் அவளது கையை விலக்கி விட்டு அவனே க்ரீம் பூசி விட ஆரம்பித்தான்.

அவன் பக்கமாக திரும்பியவள், “டைம் இல்ல விஷ்ணு” என செல்லக் கண்டிப்போடு சொன்னாள்.

“நைட் நீ ஹைதராபாத் கிளம்பிடுவ” என்றான்.

“டென் டேஸ்ல வந்திடுவேன்”

“டென் டேஸ்…” சோகமாக சொன்னவன் அவளை தன்னோடு நெருக்கிக் கொண்டான்.

மிருணாவின் முகத்தில் ஒட்டியிருந்த க்ரீம் அவனது முகத்தில் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது.

ஆர்டர் செய்திருந்த உணவு வந்து விட அழைப்பு மணி ஒலித்து அவர்களை பிரிந்து நிற்க வைத்தது.

“தேங்க்ஸ் ஃபார் த டெலிவரி பாய். போங்க விஷ்ணு, லேட்டா போனா திட்டு விழும்” என்றாள் மிருணா.

வெட்க சிரிப்போடு தலை கோதி விட்டுக் கொண்டவன் டி ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டு கதவு திறந்து உணவு வாங்கி வந்தான்.

அவனுக்கு முன் சாப்பிட்டு முடித்தவள் அவன் கன்னத்தில் அவசரமாக முத்தமிட்டு, “பை விஷ்ணு, லஞ்ச் அப்போ கால் பண்றேன்” என சொல்லி புறப்பட்டு விட்டாள்.

பத்து நாட்களுக்கு மிருணா தன்னுடன் இருக்க மாட்டாள் என்பதில் மனம் சுணங்கினாலும் தன்னை தேற்றிக் கொண்டு விரைவாக சாப்பிட்டு அவனும் மருத்துவமனை கிளம்பினான்.

மீட்டிங் ஹாலில் இருந்தாள் மலர். டிரஸ்டின் மற்ற உறுப்பினர்களும் வந்து சேர்ந்தனர். அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளும் சர்ஜிகல் ஐட்டங்களும் வாங்க முறையாக டெண்டர் அறிவிப்பு கொடுக்கப் பட்டு கொட்டேஷன்கள் பெறப் பட்டிருந்தன.

அனைத்தும் காணொளியாக்க பட்டுக் கொண்டிருக்க, “இதென்ன புது ப்ரொஸீஜர், தேவையா இது?” எனக் கேட்டார் ஒரு உறுப்பினர்.

“இனிமே இப்படித்தான். நாம சரியா நடக்கும் போது ரெகார்டு ஆகறது பத்தி எல்லாம் கவலை வேணாம்” என்றாள் மலர்.

சீல் வைத்து அனுப்ப பட்டிருந்த கவரை பிரித்து கோப்புகளை வெளியில் எடுத்தனர். லைசென்ஸ் பெற்ற நிறுவனமா, தொழிற்சாலையின் புகைப்படம் இணைக்க பட்டிருக்கிறதா, தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற நிறுவனமா என பல்வேறு அளவீடுகளை வைத்து பலவற்றை நிராகரித்து சிலவற்றை மட்டும் தனியாக எடுத்து வைத்தனர்.

அனைத்து தகுதிகளும் உள்ள கோப்புகளில் மலிவான விலை என்று பார்க்கையில் குகனின் நிறுவனத்திற்கே ஒப்பந்தம் செல்வது என முடிவாக மலர் திகைத்துப் போனாள். ஒரு வேளை நிஜமாகவே குகனின் நிறுவனம் தேர்வாகும் நிலை உண்டாகி விட்டது என தன்னை தேற்றிக் கொண்டு அமைதி காத்தாள்.

அடுத்து சர்ஜிகல் ஐட்டங்கள் வாங்கும் ஒப்பந்தம் கூட கோபாலின் நிறுவனத்துக்கே செல்லும் படி ஆக, இது எதேச்சையானது அல்ல என புரிந்து கொண்டாள் மலர்.

அவர்களுக்கே ஒப்பந்தம் கொடுப்பது தவிர வேறு வழியுமில்லை. ஆனால் இதெப்படி சாத்தியம்? காரணகர்த்தாவான கணவனின் மீது கோவமாக வந்தது.

நடைமுறையின் படி ஒப்பந்தம் கொடுப்பவர்களுக்கு அதை ஊர்ஜிதம் செய்யும் கடிதத்தில் கையெழுத்து போட்ட மலரின் மனம் கொதித்தது.

உறுப்பினர்கள் சென்றதும் கோவத்தோடு பிரவாகனை காண சென்றாள்.

அவனது அறைக்கு வெளியில் காத்திருந்த பத்மநாதன் நலன் விசாரிக்க முகத்தில் ஒளியே இல்லாமல் நலம் என்றாள்.

பெரு மூச்சு விட்டவர், “எதுவா இருந்தாலும் அமைதியா ஹேண்டில் பண்ணுமா” என அறிவுறுத்தினார்.

உள்ளே வந்தவளை பார்த்து பிரவாகன் புன்னகை செய்ய, அவளோ சோர்ந்து போனவளாக அவனுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

இந்த முறை முதலாளியின் உத்தரவுக்காக காத்திராமல் தானாகவே வெளியில் சென்று விட்டான் தமன்.

“காலைல கும்முன்னு இருந்த முகத்துல இப்போ அந்த கும்மு மிஸ் ஆகுதே, யார் காரணம் மலர்? நான்தான்னு சொல்லி எனக்கு ஷாக் கொடுக்காத” என்றான்.

“டெண்டர் அனவுன்ஸ் பண்ணனப்போ நான் பதவிக்கு வரலை. ஆனா அதுக்கப்புறம் எல்லாமே முறையாதானே நடந்தது? எப்படிங்க?”

“ஏன் அதுக்கு இவ்ளோ லோ வா பேசுற மலர்? நீதான் சொல்றியே… எல்லாமே முறையா நடந்ததா”

“முறையா நடந்ததாதான் நினைச்சிட்டு இருந்தேன், நிஜமா சொல்லுங்க… உங்க ரோல் எதுவும் இல்லயா இதுல?” என மலர் கேட்க, உதடுகள் வளைத்து சிரித்தான்.

“இனிமே உங்க மாமா, கோபால் அங்கிள் விஷயமா தலையீடு செய்ய மாட்டேன்னு என்கிட்ட சொன்னீங்க”

“அப்படியா? அவங்க விஷயமா உன்கிட்ட பேச மாட்டேன்னு சொன்னதாதான் ஞாபகம், அண்ட் நான் சொன்ன மாதிரிதான் நடந்திருக்கேன். நீ செய்ற எதையும் கண்டுக்கிறது கூட இல்லை மலர் நான்” என்றான்.

“நீங்க மாறுவீங்கன்னு உள் மனசுல ஒரு துளி நம்பிக்கை இருந்துச்சுங்க”

“ஓ கமான் மலர். ஒரு ஹஸ்பண்டா நான் மாத்திக்க வேண்டியது என்னன்னு சொல்லு கேட்டுக்கிறேன். என் ஆசை பொண்டாட்டியா உனக்கு என்ன அசெட் வேணும்? வேர்லோட எந்த மூலைய நீ பார்க்க ஆசை படுறேன்னு சொல்லு, எல்லாத்தையும் நிறைவேத்தி வைக்கிறேன்” என்றான்.

மலர் சலிப்பாக பார்க்க, “இல்ல… உன் தம்பிக்கு நீட் பத்தின கவலை இல்லாம மெடிக்கல் சீட் கன்ஃபார்ம் பண்ணனுமா? உன் அக்கா ஹஸ்பண்ட்டுக்கு ப்ரோமோஷன்… வேணாம்… நீ சொன்னா தனியா அவருக்கு கம்பெனியே ஸ்டார்ட் பண்ணி கொடுப்பேன். உன் பேரெண்ட்ஸ் இப்ப இருக்க வீடு சின்னதா இருக்குதானே? எத்தனை கிரவுண்ட்ல வீடு கட்டி தரலாம்? பாவம் அவரும் பூனைக்கும் நாய்க்கும் ஊசி போட்டே ஓஞ்சு போயிட்டார்” வரிசையாக அடுக்கினான் பிரகாவன்.

மலரின் மனம் எரிமலை குழம்பாக கொந்தளிக்க ஆரம்பித்தது. அவனிடம் எதுவும் பேசப் பிடிக்காமல் வேகமாக எழுந்தவளுக்கு திடீரென கண்கள் இருட்டிக் கொண்டு வர தடுமாறி இருக்கையிலேயே பொத் என அமர்ந்தாள்.

“ஹே ஹே மலர் என்னாச்சு?” பதறிக் கொண்டே எழுந்து அவளருகில் வந்து அவளை ஆதரவாக பிடித்துக்கொண்டான்.

அரை மயக்க நிலையில் இருந்தாள் மலர். உடனடியாக அவளை தூக்கி அங்கிருந்த சோஃபாவில் படுக்க வைத்தவன் தமனை உள்ளே வர செய்து, “கால் எனி டாக்டர்ஸ், அர்ஜென்ட்!” என்றான்.

வெளியில் அமர்ந்திருந்த பத்மநாதனை அழைத்து வந்தான் தமன். அருகில் இருந்த வார்டிலிருந்து மருத்துவ உபகரணங்களும் வரவழைக்க பட்டிருந்தன.

பத்மநாதன் அவளுக்கு இரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய முயல, எழுந்து கொண்டவள், “ஆம் ஓகே சார், நான் கிளம்பறேன்” என்றாள்.

“சரிம்மா, ஏன் மயக்கம் வந்ததுன்னு தெரிய வேணாமா? பி பி தானே செக் செய்திடுவோம்” என்றார் பத்மநாதன்.

“அதானே, லை டவுண் மலர்” என்ற பிரவா அவள் தோளை பற்றி மீண்டும் படுக்க வைத்தான்.

இரத்த அழுத்தம் பரிசோதனை செய்தவர் நாடித் துடிப்பு, ஆக்ஸிஜனின் அளவு போன்றவையும் பார்த்தார். அனைத்தும் சரியாக இருப்பதாக கூறி, “நைட் நல்லா தூங்கினியா ம்மா? காலைல நல்லா சாப்பிட்டியா?” என விசாரணை செய்தார்.

“நேரமா தூங்கி லேட்டாதான் எழுந்தா அங்கிள். பிரேக் ஃபாஸ்ட் கூட நல்லாத்தான் சாப்பிட்டா. இந்த வயசுலேயே அடிக்கடி மயக்கம் வருது. எதுக்கும் கம்ப்ளீட் செக் அப் செய்யலாமா அங்கிள்?” பிரவா கேட்டுக் கொண்டிருக்க, அவளுக்கு பருக பழச் சாறு வந்து சேர்ந்தது.

“போன முறை ஏன் மயக்கம் வந்ததுன்னு நல்லா தெரியும். இப்பவும் ஏதாவது ஸ்ட்ரெஸோ என்னவோ பிரவா. மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் இப்போ யாரு டியூட்டில இருக்காங்க? டேக் அ கன்ஸல்டேஷன்” என்றார்.

“தமன்…” என பிரவா அழைக்க, “உடனே வர சொல்றேன் சார்” என்றான் அவன்.

தலையில் கை வைத்துக்கொண்டே மலர் எழ, “ஹெட் ஏக் வேறயா? என்கிட்ட எதுவும் சொல்லலை நீ” கடிந்த பிரவா பழச்சாறை அவனே கையில் எடுத்து அவளிடம் நீட்டினான்.

“தலைவலிலாம் இல்ல, நீங்க பெருசு பண்றது பார்த்துதான் தலைல கை வச்சேன். எனக்கு ஒண்ணுமில்ல, நான்… எனக்கு…” என்றவளை மேலே பேச விடாமல் பழச்சாறை பருகும் படி பார்வையால் கட்டளையிட்டான்.

பருகாமல் விட மாட்டான் என்பதால் வாங்கிக் கொண்டவள் பாதி பருகி முடித்து, “போதும்” என்றாள்.

“ஏன் நல்லா இல்லயா?” கேட்டுக் கொண்டே அவள் தந்த கிளாசை வாங்கியவன் மிச்சத்தில் ஒரு வாய் பருகிப் பார்த்து விட்டு, “நல்லாதானே இருக்கு மலர்?” எனக் கேட்டான்.

“குடிக்க முடியலைன்னா விடுங்க ப்ளீஸ்” என்றாள்.

“வெயில்ல எதுவும் அலைஞ்சியா ம்மா? எதுவும் மனக் கவலையா?” அக்கறையாக விசாரித்தார் பத்மநாதன்.

பழச்சாறை பருகிக் கொண்டே, “ட்ரஸ்ட் சம்பந்தமா இவளே டென்ஷன் ஏத்திக்கிறா, ஹெல்த் செக் அப் பண்ணிடலாம்”என்றவன் தமனை பார்க்க, “டாக்டர் ஜர்னா மேடம் வந்திட்டிருக்காங்க சார்” என்றான்.

“எதுக்கு அவங்களையெல்லாம் வர சொல்லியிருக்கீங்க? அப்படி பார்க்கணும்னா நானே அவங்க கன்சல்டேஷன் ரூம் போவேனே…” மிகவும் சீனியர் மருத்துவர் தனக்காக இங்கு வருகிறார் என்பதை சங்கடமாக உணர்ந்தவள் சொன்னாள்.

அதற்குள் ஜர்னா வந்து விட்டார். மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர், சராசரிக்கும் அதிக உயரத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் சாத்வீகமாக தென்பட்டார். இருபது வருடங்களுக்கும் மேலாக இங்கே இருப்பதால் தமிழ் மிக நன்றாக பேசினார்.

பத்மநாதன் போலவே இவரும் பிரவாகனின் அப்பா காலத்திலிருந்து இங்கு இருக்கிறார். அரசிக்கு மருத்துவம் பார்ப்பதும் இவர்தான். இவரையும் ‘ஆன்ட்டி’ என அழைத்துதான் பிரவா பேசுவான்.

என்ன செய்கிறது என மலரிடம் பேசிக் கொண்டே பி பி அப்பாரட்டஸை அவர் கையில் எடுக்க, “எனக்கு பீரியட்ஸ் டேட் தள்ளிப் போயிருக்கு மேடம். இன்னும் நான் டெஸ்ட் பண்ணல” என்றாள் மலர்.

அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து சரேலென பிரவா எழ, அவனது தோளில் தட்டிக் கொடுத்த பத்மநாதன், “இது தெரியாம எவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்ட நீ? முதல்ல ப்ரெக்னன்ஸி டெஸ்ட் செய்ய அரேஞ் பண்ணு” என்றார்.

ஜர்னாவும் பரிசோதனை செய்து விடலாம் என சொல்லி காத்திருந்தார்.

“நான் டெஸ்ட் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன் மேடம்” என மலர் சொல்ல, ஒரு சிரிப்புடன் எழுந்து கொண்டார் ஜர்னா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement