Advertisement

அத்தியாயம் -2(2)

தொடக்கத்தில் மருத்துவமனை விவகாரங்கள் குறித்து மகனிடம் கேட்டுக் கொள்வார்தான். அம்மாவே என்றாலும் அப்படி ஒருவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.

“இதெல்லாத்தையும் விட்டுட்டு வீட்ல ரிலாக்ஸ் பண்ணுங்க, நான் பார்த்துக்கிறேன். ஒரு வேளை என் மேல நம்பிக்கை இல்லைனா உங்களுக்கு நம்பிக்கையான வேற யாரையும் என்னை கண்காணிக்க வைங்க” என அவன் சொல்ல, ‘மகனை வேவு பார்ப்பது போல ஆள் வைப்பதா?’ என திகைத்த அரசி பின் எதையுமே அவனிடம் கேட்டுக் கொள்வதில்லை.

ஆதலால் அரசியின் கவனத்திற்கு எதுவும் வருவதில்லை. மகன் செம்மையாக நிர்வாகம் செய்கிறான் என்ற நினைவில்தான் அவர் இருந்தார்.

கடைக்குட்டி மிருணாளினி விஷுவல் கம்யூனிகேஷன்தான் படிப்பேன் என சொல்லி படித்தாள். கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பெரிய திரைப்பட இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருக்கிறாள்.

மிருணாளினிக்கு மணம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த அரசி தன்னை காண வந்த மகனிடம் சொன்னார்.

“நானும் நினைச்சேன் மா, எப்படி பட்ட பையன் வேணும்னு அவகிட்ட கேட்டுட்டு பார்க்க ஆரம்பிக்கிறேன். நீங்க ஹாஸ்பிடல் இன்னிக்கு செக் அப் வருவீங்கதானே? வரும் போது சொல்லுங்க, நானே டாக்டர்கிட்ட பேசிக்கிறேன்” என்றான்.

“என் உடம்புக்கு என்ன? எப்பவும் போலதான் இருக்கேன். அவளுக்கு கல்யாணம் செய்த கையோட உனக்கும் செய்யலாம்னு நினைக்கிறேன்” என்றார்.

“ரெண்டு வருஷம் போகட்டுமே ம்மா”

“கூட கொஞ்ச நாள் மருமகளோட இருந்திட்டு போறேனே” என்றவரை முறைத்தவன், “உங்க விருப்பம் போல பொண்ணு பாருங்க. உங்க சாய்ஸ்தான்” என்றான்.

“என்னடா இப்படி சொல்ற? கீர்த்தியோட சின்ன மாமனார் பொண்ணு தாரிகாவை பிடிச்சிருக்குன்னு சொல்வேன்னு நினைச்சேன்”

நெற்றி சுருக்கி யோசித்தவன், “உங்களுக்கு விருப்பமா?” எனக் கேட்டான்.

“அப்படி எதுவும் இல்லடா, உனக்கு விருப்பம் இருக்குமோன்னு நினைச்சேன். அவளை பத்தி என்ன நினைக்கிற? பேசவா நான்?”

 “வேணாம் ம்மா. ரொம்ப ஷார்ட் டெம்பர் பொண்ணு. பட்டு பட்டுன்னு பேசுவா. எனக்கு செட் ஆகாது. வசதி முக்கியம் இல்லை எனக்கு. வீடு வந்தா நிம்மதியா இருக்கணும். உங்களையும் வீட்டையும் பார்த்துகிட்டு என்னையும் நல்லா கவனிச்சுக்கிற மாதிரி பொறுப்பா யாரையாவது பாருங்க” என்றான்.

“நிஜமாவே அவ வேணாமா? அவங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா கீர்த்தி சொன்னாளே”

“எனக்கு விருப்பம் இல்லைனு அக்காட்ட சொல்லிடுங்க. மத்தது அக்காவே பார்த்துக்கும்” என சொல்லி சென்று விட்டான்.

தாமதிக்காமல் கையோடு கீர்த்திக்கு அழைத்து பேசினார் அரசி. மகனின் விருப்பமின்மை பற்றி கூற, “அவனுக்கு பிடிச்ச மாதிரிதான் ம்மா கல்யாணம் செய்து வைக்கணும். முதல்ல மிருணாவுக்கு செய்யலாம். இங்க என் மாமனார் மாமியாரை நான் சமாளிச்சுக்கிறேன்” என்றாள்.

“சரி அப்போ ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்திடலாம். கல்யாணம் செய்ற நேரம் இருக்குன்னா ரெண்டு பேருக்கும் சேர்த்தே தேடலாம். அவனுக்கும் தள்ளி போட வேணாம். எந்நேரமும் பிஸியாவே இருக்கான், என்னால என்ன கவனிக்க முடியுது? என்னதான் வேலைக்காரங்க இருந்தாலும் மனைவி கவனிக்கிற மாதிரி வராதே. உனக்கு தெரிஞ்ச வேற பொண்ணுங்க யாரும் இருந்தா கூட யோசிச்சு சொல்லு” என்றார்.

“அவர் கிளம்பிட்டு இருக்கார் மா. நான் ஈவ்னிங் பேசுறேன்” என சொல்லி வைத்து விட்டாள் கீர்த்தி.

கீர்த்தியின் கணவன் குகன் மருத்துகள் தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறான். சிறிய அளவில் இருந்த நிறுவனம் கீர்த்தியோடனான திருமணத்திற்கு பின் தேசிய அளவில் பிரபலமான பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. அப்போது உயிரோடு இருந்த மகேந்திரன் மாப்பிள்ளையின் தரத்தை அப்படி உயர்த்திக் காட்டினார். தேசிய அளவில் பார்மசி கவுன்சிலில் முக்கிய பதவி வகிக்கிறான்.

அந்த வீட்டில் கீர்த்தியின் வார்த்தைகளுக்கு எப்போதும் பலம் அதிகம். அதற்கென அவள் இஷ்டத்திற்கு நடக்க மாட்டாள். அவளுக்கு நியாயமென பட்டதை வலியுறுத்துவாள்.

அவர்களுடையது கூட்டுக் குடும்பம். சிதம்பரம் அவரது மனைவி கவிதா. சிதம்பரத்தின் தம்பி குணாளனுக்கு கவிதாவின் தங்கை சவிதாவையே மணம் செய்து வைத்திருந்தனர். குகனின் தம்பி சரத்திற்கு மிருணாளினியை பெண் கேட்கலாம் என்ற போது கீர்த்தியே சரி வராது என சொல்லி விட்டாள்.

எலும்பு முறிவு மருத்துவராக அன்பு மருத்துவமனையில் பணி செய்யும் சரத் மது அருந்துவான், சுயநலம் பிடித்தவன் கூட. ஆனால் அந்த காரணங்களை சொல்லாமல் “மிருணா இப்போதான் படிச்சு முடிச்சிருக்கா. அவளுக்கு மூணு வருஷம் கழிச்சுதான் பார்க்கலாம்னு ஜாதகத்துல இருக்கு. சரத்துக்கு இப்பவே வயசு முப்பதாகிடுச்சு. போக போக இன்னும் வயசு ஏறும்” என சொன்னாள்.

மூன்று வருடங்கள்தானே காத்திருக்கலாம் என சிதம்பரம் சொல்ல சரத் ஒத்துக் கொள்ளவில்லை.

சரத்திற்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அந்த பெண் வாசவி கூட சுற்றி வளைத்து கீர்த்திக்கு உறவு முறைதான். ஆனால் கீர்த்தி அளவுக்கு வசதி கிடையாது.

குணாளனுக்கு தாரிகா ஒரே பெண். இவளை வைத்து தன் குடும்பத்தின் பொருளாதார தரத்தை இன்னும் உயர்த்திக் கொள்ள நினைத்திருக்கிறார் சிதம்பரம்.

மாலை நேரம் நான்கு மணி. மலருக்கு பணி நேரம் முடிந்து விட்ட போதிலும் இன்னும் கிளம்பவில்லை. பிரசவ வார்டில் சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் ஒரு பெண் அனுமதிக்க பட்டிருந்தாள். பரிசோதனைகள் மேற்கொண்டதில் அவளது இரத்தம் உறையும் தன்மை பாதிக்க பட்டிருப்பது தெரிய வந்தது.

மகப்பேறு மருத்துவர் கமலவேணிதான் அந்த பெண்ணை பார்த்தார். சிக்கலான பிரசவம் என கூறி அரசு மருத்துவமனை செல்லுங்கள் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிசுவின் இதய துடிப்பு குறைய ஆரம்பித்து விட்டது. தாமதம் செய்யாமல் அறுவை சிகிச்சை செய்தால் குழந்தையின் உயிரையாவது காப்பாற்ற இயலும் எனக் கூறி அதற்காக செயல் பட ஆரம்பித்தனர்.

சிசேரியன் மூலம் குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் பிரசவித்த பெண் ஆபத்தான நிலையில் இருந்தாள். இரத்தப் போக்கு அதீதமாக இருந்தது. சிறிது நேரத்தில் அறுவைசிகிச்சை செய்யப் பட்ட வயிற்று பகுதியில் தையல் போட்டிருந்த இடத்தில் இரத்தக் கசிவு ஏற்பட ஆரம்பித்து விட்டது.

மலர் கூடவேதான் இருந்தாள். இரத்தம் உறையும் தன்மை தோல்வி அடைந்திருந்தது.

ஃபேக்டர் செவன் எனப்படும் மருந்து செலுத்தி பார்க்கலாம் என கமலவேணி யோசனை சொன்னார். இந்த இலவச பிரிவில் அந்த உயர்தர மருந்து கிடையாது. அந்த பெண்ணின் கணவரிடம் பணம் செலுத்தி வாங்கி வருமாறு சொன்னார்கள்.

மருந்தின் விலையை கேட்டு அதை வாங்கும் அளவுக்கு வசதி இல்லாத அந்த மனிதர் கண்ணீரோடு நிற்க மலரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அவளிடமும் அந்தளவுக்கு பெரும் தொகை தற்சமயம் இல்லை.

பார்மசி சென்று நிலையை சொல்லி மருந்தை கேட்டாள்.

“அப்படிலாம் எடுத்து தர முடியாதுங்க. மெடிகேஷன் ஸேஃப்டி டீம் ஹெட் டாக்டர் சரத் வரணும். அவர்கிட்டத்தான் மருந்து இருக்கிற கப்போர்ட் கீ இருக்கு, அவர் பெர்மிஸன் இல்லாம கப்போர்ட் திறக்க கூட முடியாது என்னால” என்றான் பார்மசிஸ்ட்.

“ஸ்பேர் கீ எதுவும் இங்க பார்மசி ஹெட்கிட்ட இருக்காதா?” என கேள்வி எழுப்பினாள்.

“அது முன்னாடி ஒரு பிராப்லம் ஆகிப் போச்சு மேடம், இப்போ கீ சரத் சார்கிட்டதான் இருக்கு”

“நைட் எமர்ஜென்சின்னாலும் அவர்தான் வருவாரா?” கடுப்பாக கேட்டாள்.

“ஐ சி யூ ல ஸ்டாக் இருக்கும் மேடம். அங்க உள்ள இன்ஜார்ஜ் கொடுப்பாங்க. அங்க எந்த ட்ரக்ஸ் முடிஞ்சாலும் காலைல ரீப்லேஸ் பண்ணிடுவோம்” என தகவல் தந்தான்.

மருந்துகளின் பாதுகாப்பான உபயோகம், நோயாளிகளின் பாதுகாப்பு, நோய்த் தொற்று கட்டுப்பாடு, கழிவு மேலாண்மை என பல பிரிவுகளில் குழு அமைக்கப்பட்டு அதன் கீழ் குறிப்பிட்ட சில உறுப்பினர்களும் அதற்கு தலைமையாக ஒரு மருத்துவரும் இருப்பார். அவர்களுக்கென சில பொறுப்புகளும் கடமைகளும் இருந்தன.

நேரம் குறைவாக இருப்பதால் ஐ சி யூ சென்று வாங்க முற்படவில்லை அவள். அப்படி சென்றாலும் இலவச பிரிவு நோயாளிக்கு கொடுக்க படுமா என்பது சந்தேகம்தான். ஆகவே சரத்திற்கு தொடர்பு கொண்டு நிலையை விளக்கினாள்.

 “பிரிஸ்கிரிப்ஷன் ப்ளஸ் மருந்துக்கான பணம் ரெண்டும் கொடுத்தா கொடுக்க சொல்றேன்” என்றான் சரத்.

பார்மசியிலிருந்து தடாலடியாக எடுத்து செல்லவும் வழியில்லை. அபாயகரமான மருந்துகளும் விலை உயர்ந்த மருந்துகளும் மிகவும் பாதுகாப்பாகத்தான் வைக்கப் பட்டிருக்கும்.

 பணம் செலுத்தி சிகிச்சை பார்த்துக் கொள்ளும் நோயாளிகள் பற்றி கவலையில்லை. அவர்களுக்கு தேவையான மருத்துகளை அந்தந்த வார்டில் உள்ள கம்ப்யூட்டரில் பதிந்து விட்டால் வார்டுக்கே வந்து விடும். இது போன்ற விலை உயர்ந்த அல்லது அபாயகர மருந்துகள் ஐ சி யூ வில் எப்போதும் இருக்கும். அங்கிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் இலவசமாக வைத்தியம் பார்ப்பவர்கள் நிலை பரிதாபகரமானதுதான். அடுத்து என்ன செய்வது என மலருக்கு புரிபடவில்லை. இரத்த போக்கு நிற்காத வரை இரத்தம் செலுத்தியும் பிரயோஜனம் கிடையாதே.

பச்சிளங் குழந்தை கண்ணுக்குள் வந்து நின்றது. தாயை இழக்கவா இன்று பிறப்பெடுத்திருக்கிறது. அதை விட வருங்காலத்தில் தன் பிறப்புதான் தாயின் மரணத்திற்கு வழியாக இருந்தது என தெரிய வந்தால் எத்தனை மன வேதனை அடையும்.

 மலருக்கும் கண்கள் கலங்குவது போலாக, ‘சீச்சி… உணர்ச்சி வசப் படுற நேரமா இது? ஏதாவது வழி இருக்கும் யோசி யோசி மலர்’ தன்னை தேற்றிக் கொண்டவள் அடுத்து என்ன வழி என சிந்தனை செய்தாள்.

சட்டென ஒரு யோசனை பிறக்க விரைந்து ஓடினாள். எங்கே செல்கிறாள் என தெரியாமல் பார்மசிஸ்ட் திகைப்படைய உயிருக்கு போராடும் பெண்ணின் கணவனோ பித்து பிடித்தவன் போல நின்றிருந்தான். சரத்தின் அறைக்கு ஓடி சென்றவள் மூச்சிரைக்க நின்றிருந்தாள்.

நேரடியாகவே அவனிடம் நிலையை எடுத்து சொன்னாள். மருந்தின் பணத்துக்கு தான் பொறுப்பெடுத்தக் கொள்வதாக சொன்னாள். மனமிறங்க மறுத்தவன் அவளை துச்சமாக பார்த்து விட்டு ஓய்வறைக்குள் புகுந்து விட்டான்.

எப்படியாவது சாவியை எடுத்துக் கொண்டு வருவது என்ற திட்டத்தோடு வந்தவளுக்கு இப்போது காரியம் சுலபமாகி விட்டது. மின்னல் வேகத்தில் அவனது மேசை டிராயரில் இருந்த சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டாள்.

மூச்சிறைக்க பார்மசி வந்து நின்றவள், “சரத் சார் ஆபரேஷன்ல இருக்கார், கீ கொடுத்து விட்டார். சீக்கிரம் மருந்த கொடுங்க” என ஏவினாள்.

அவன் நம்பாத பார்வை பார்த்துக் கொண்டே சரத்திடம் கேட்பதற்காக கைபேசி எடுக்க, “லேட் பண்ற ஒரு ஒரு செகண்ட்டும் அந்த உயிர் ஆபத்தை நோக்கி போய்கிட்டு இருக்கு. ஏதாவது ஆச்சுன்னா நீங்கதான் பொறுப்பு” என சத்தமிட்டாள்.

உடனடியாக பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து மருந்தை எடுத்துக் கொடுத்தான் பார்மசிஸ்ட்.

வாங்கிக் கொண்டவள், “கொஞ்ச நேரம் கழிச்சு கீய சரத் சார்கிட்ட கொடுத்திடுங்க” என சொல்லி ஓட்டமும் நடையுமாக இலவச மருத்துவமனை கட்டிடத்தை அடைந்தாள்.

மருந்து செலுத்தப் பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த பெண்ணின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது. பிழைத்து விடும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்த கமலவேணி மருந்து எப்படி கிடைத்தது என விசாரித்தார்.

தயங்கிய மலர் பின் உண்மையை சொல்ல அதிர்ந்து போய் விட்டார்.

“இது எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும்னு யோசிக்கலையா நீ?” என பயத்தோடு கேட்டார்.

“என்ன நடந்தாலும் அந்த குழந்தைக்கு அம்மா கிடைக்க போறாங்க மேடம். அது போதும் எனக்கு” என கலங்காமல் சொன்னவளை என்ன சொல்வது என தெரியாமல் பார்த்து நின்றார் கமலவேணி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement