Advertisement

அத்தியாயம் -21(3)

என்னவோ அழுகை நிற்காமல் வந்தது அவளுக்கு. சரி அழுது முடிக்கட்டும் என அவளை அணைத்த வண்ணம் அவன் அமைதி காக்க, “சும்மா உங்களுக்காக அழறேன்னு மட்டும் நினைக்காதீங்க. ச்சை… இந்த அழுகை ஏன் வந்து தொலையுது, நிக்க கூட மாட்டேங்குது. என் மானத்தை வாங்குது” என புலம்பிக் கொண்டே கைகள் கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டாள்.

அவன் அவளை விலக்க முற்பட மலருக்கு அவள் மீதே ஆத்திரமாக வந்தது. எப்படி மிரட்டி என்னை திருமணம் செய்து கொண்டான், இவன் பேசவில்லை தவிர்க்கறான் என்றால் எனக்கு ஏன் அழுகை வந்து தொலைக்கிறது. இவன் மீதே சாய்ந்து கொண்டு வேறு அழுகிறேன் என தன்னை கடிந்து கொண்டவள் தன் முகத்தை அவன் மார்பில் மறைத்துக் கொண்டாள்.

“என்ன மலர்? நிறுத்துவ நிறுத்துவன்னு பார்க்கிறேன், என்ன இது?” எனக் கேட்டான்.

“நீ செய்றது எதுவும் பிடிக்கல, உன்னை பிடிக்கல, அப்புறம் எதுக்கு நீ பேசலைன்னு அழுகை வருதுன்னு தெரியலை. ஏதாவது கேட்டுகிட்டே இருக்காத. அழுகை ஸ்டாப் ஆனா ஸ்டாப் பண்ண மாட்டேனா?” எனக் கேட்டாள்.

“நான் கோவமா இருக்கேன் மலர். என்னை சமாதானம் பண்ணாம இப்படி நீ அழுதா என்ன நியாயம்? என்னை பிடிக்கல பிடிக்கலன்னு எவ்ளோ கத்தி நீ சொன்னாலும் நிஜம் என்னன்னு எனக்கு தெரியும்” என்றான்.

சட்டென அவனிடமிருந்து விலகியவள், “என்ன… என்ன தெரியும் உங்களுக்கு? நீங்க நினைக்கிற போலலாம் இல்லை” என்றாள்.

“ஹ்ஹும்? சரி நான் நினைக்கிறது போல இல்லை. என்ன உன் நிம்மதி போகுது? ஹஸ்பண்ட் வைஃப்னா சண்டை வர்றது எல்லாம் சகஜம்தான். அதான் உனக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டியிருக்கேனே. கொஞ்சம் கூட மெனெக்கெடாம என் கோவத்தை ஆஃப் பண்ண தெரியுதே உனக்கு” என கிண்டலாக சொன்னான்.

“அவ்ளோ அழறேன் கண்ணை தொடைச்சு கூட விடலை. கோவம் ஆஃப் ஆகிட்டாம்!”

“என்கிட்ட காட்டிட கூடாது உன் அழுகையைன்னு அவ்ளோ ரோஷத்தோட அழற. நான் பார்த்திட்டேன்னு ஃபீலிங்ஸ் வேற. நான் கண்ணை தொடைக்கணும்னா என்னை நம்பி அழணும்”

“ஆரம்பிச்சிட்டீங்களா?”

“உனக்கு ஏன் இப்போ பீஸ்(peace – அமைதி ) இல்லைனு கேட்டேன்”

துப்புரவு தொழிலாளர்கள் வேலைக்கு எடுப்பதில் நடந்த குளறு படியை சொன்னவள், “உங்களுக்கு தெரியாதா?” எனக் கேட்டாள்.

நெற்றியை நீவி விட்டுக் கொண்டே அவளை அழுத்தமாக பார்த்தான்.

“நான் ஒண்ணும் ஹாஸ்பிடல் விஷயம் இங்க பேசலை. நீங்க கேட்டதாலதான் சொன்னேன்” என்றாள்.

“ரூல் இஸ் அ ரூல். டோண்ட் பிரேக். ஹாஸ்பிடல் விஷயம் இங்க பேச வேணாம்” என்றான்.

அவனை முறைத்தவள் ஓய்வறை சென்று முகம் கழுவி வந்தாள். அவன் படுத்திருக்க, “நான் ஓகே ஆகிட்டேன், நீங்க உங்களுக்கு எங்க நல்லா தூக்கம் வருமோ அங்க போங்க” என சீண்டலாக சொன்னாள்.

“நீயே சொன்னதுக்கு அப்புறம் இங்க தூங்கணும்னு எனக்கும் ஆசை இல்லை” என்றவன் வேகமாக எழுந்தான்.

போய் விடுவாயா என பார்த்துக் கொண்டே அவள் அமர, சட்டென அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன், வேகமாக அவள் வாயை பொத்தி, “நேத்தெல்லாம் சரியா தூங்கல அண்ட் ஆம் ஸ்ட்ரெஸ்டு. லெட் மீ ஸ்லீப் பீஸ்ஃபுலி மலர்” என்றான்.

மிருணாவின் திருமணம் இவனை பாதித்திருக்கிறது என எண்ணிக் கொண்டவள் எதுவும் கேட்காமல் அவனை தட்டிக் கொடுக்க அவன் உறங்கி விட்டான். பின் அவளும் அவன் பக்கத்தில் படுத்து உறங்கிப் போனாள்.

அடுத்த நாள் வழக்கம் போல அவனுடன்தான் மருத்துவமனை புறப்பட்டு சென்றாள். இலவச பிரிவுக்கு அவள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் தமன் வந்தான்.

துப்புரவு பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் பணியை மீண்டும் மேற்கொள்ள சொன்னான். அவள் கேள்வியாக பார்க்க, “ஆல்ரெடி வேலைல உள்ளவங்கள்ல மெயின் தலை ரெண்டு பேரை கவனிச்சு விட்டா தர்மேந்திரன் சார் ஏத்தி விடுறதை அவங்க பார்த்துப்பாங்க” என்றான்.

“கவனிக்கிறதுன்னா?”

“எல்லாத்தையும் நேரடியா சொல்ல முடியுங்களா மேடம். பணம்தான் வேற என்ன?” எனக் கேட்டான்.

“இல்லை அவங்கள நானே அழைச்சு மீட்டிங் போட்டு புரிய வைக்கிறேன்” என்றாள்.

“வேலைக்கு ஆகாது மேடம். பிரச்சனை பண்றவங்கள வேலைய வுட்டு தூக்குறது ஒண்ணும் பெரிய விஷயம் கிடையாது மேடம். இது மாதிரி ஆளுங்க களை மாதிரி வந்திட்டேதான் இருப்பாங்க. அதை களையுறது விட கண்டுக்காம விட்டுடனும். இம்பார்ட்டன்ஸ் கொடுத்து பெரிய ஆள் ஆக்கி விடக்கூடாது. நம்ம கவனம் மரத்தை வளர்க்கிறதுல இருக்கணும். ஆல மரம் பெருசா வளர்ந்து நிக்கும் போது களையெல்லாம் கண்ணுக்கே தெரியாது மேடம்” என்றான்.

“தமன்… என்ன இதெல்லாம்?”

“நான் சொன்னதா நினைச்சுக்கிட்டீங்களா? இது சாரோட கொள்கை. எவன் வந்தாலும் பணம் கொடுத்துதான் அடக்க முடியும். அப்படியும் அடங்கலைனா வேற ட்ரீட்மெண்ட் இருக்கு. ஆனா அதுக்கு அவசியமில்லைனு நினைக்கிறார் சார்”

மலர் அமைதி காக்க, “எப்படி நடந்தா என்ன மேடம்? உங்க வேலை ஆனா சரிதானே?” எனக் கேட்டான்.

“இதுக்கெல்லாம் மூல காரணம் அவர் சித்தப்பாதானே? அவரை இங்கேருந்து அனுப்பிட்டாலே முக்காவாசி பிரச்சனை சரியாகிடாதா?”

“ஸாருக்கு அவர் அப்பா மேல கொஞ்சம் செண்டிமெண்ட்ஸ் இருக்குங்க மேடம். மகேந்திரன் சார்தான் அவர் தம்பிய இங்க நிர்வாகம் பண்ண போட்டது. அதனால நீங்க சொல்றது பத்தி யோசிக்க மாட்டார்”

தர்மேந்திரனை நினைத்து எரிச்சல் கொண்டவள், “ஆனாலும் உங்க பாஸுக்கு நேர் வழில எதையும் சரி பண்ணி தர முடியாது. பணம் எல்லாம் கொடுத்து யாரையும் மாத்த வேணாம். யாருக்கும் மனசாட்சி கிடையாதா இங்க? நான் பேசுறேன்” என்றாள்.

மலர் ஒத்துக் கொள்ளா விட்டாலும் இப்படித்தான் செய்ய சொல்லியிருந்தான் பிரவா. எனவே வாதிடாமல், “சரிங்க மேடம், பேசி சரி பண்ணுங்க. மீட்டிங் ஹால்ல நடத்துங்க மீட்டிங்” என சொல்லி சென்று விட்டான்.

அன்று மதியமே மீட்டிங் போட்டு துப்புரவு தொழிலாளர்களிடம் பேசி புரிய வைத்தாள். அவர்கள் தலையாட்டிக் கொண்டு சென்றாலும் தங்கள் வேலை பாதிக்க படும் என்ற பொய்யான விஷயத்தை தர்மேந்திரன் ஆட்கள் சொல்லி மீண்டும் குழப்பி வைத்தனர்.

தான் பேசியதில் இனி பிரச்சனைகள் வராது என நினைத்தவள் ஹெச் ஆர் இல் நேர்காணல் நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் படி சொல்லி விட்டாள்.

டியூட்டி அறைக்கு வரும் போது கிஷோர் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தான். இவள் ஓரமாக அமர்ந்து கொண்டு என்னனென்ன தேவைகள் என மருத்துவக் குழு கொடுத்திருந்த லிஸ்ட்டை பார்வையிட்டு விட்டு கிஷோருக்காக காத்திருந்தாள்.

அவன் ஓய்வடையவும் அவனிடம் அந்த லிஸ்ட் டை காண்பித்து, “பட்ஜெட் ரொம்ப அதிகமா இருக்கு கிஷோர். எல்லாமே முக்கியம். இதை இதுக்கு மேல ஷார்ட் லிஸ்ட் செய்ய முடியாது” என கவலையாக சொன்னாள்.

“பெய்ட் பிளாக் ஹாஸ்பிடல் அண்ட் மெடிக்கல் காலேஜ் அஃபிசியல் அக்கவுண்ட்லேருந்து மாசம் லம்பா ஒரு தொகை ட்ரஸ்ட்டுக்கு வருது. அஸ் அ ட்ரஸ்ட்டி உன் கவனத்துக்கும் வரும். பொய் கணக்கு எழுத வச்சு தர்மேந்திரன் ஸ்வாகா செய்வார். டேக் அ வைஸ் அண்ட் ஸ்டராங் மூவ் மலர்” என்றான்.

“உனக்கெப்படி தெரியும்?”

பல வருடங்களாக இங்கு பணி செய்யும் மூத்த அக்கவுண்ட்ஸ் அதிகாரியின் பெயரை சொன்னவன், “சோர்ஸ் நம்மள தவிர யாருக்கும் தெரிய வேணாம் மலர். பிரவாகன் ஸாருக்கு கூட” என்றான்.

“அது பிரச்சனை இல்லை கிஷோர். ட்ரஸ்ட் அக்கவுண்ட்ஸுக்கு வந்துதான் மாறுதுன்னா எனக்கு தெரியாம போக வாய்ப்பில்லை. அப்பதான் தெரிஞ்சதா காட்டிக்கிறேன்” என்றாள்.

“ம்ம்… ஷார்ட் லிஸ்ட் பண்ண வேணாம். ரொம்ப முக்கியம், முக்கியம், தேவையானதுன்னு மூணு வகையா பிரிச்சுக்கலாம். சில மாசங்களுக்கு ட்ரஸ்ட்டுக்கு வர்ற அமௌண்ட்டை கரெக்ட்டா யூடிலைஸ் செஞ்சோம்னா லிஸ்ட்ல உள்ள எல்லாத்தையும் வாங்கிடலாம்” என்றான்.

இந்த விஷயத்தில் கணவன் தலையிட்டு சரி செய்தால் எத்தனை நன்றாக இருக்கும் என யோசித்தாள் அடுத்த நாள் வரப் போகும் குண்டு பற்றி அறியாத மலர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement