Advertisement

அத்தியாயம் -21(2)

மிருணா சமையலறை செல்ல, அவளின் பின்னே செல்லப் போன தேவகியை பிடித்து வைத்துக்கொண்டார் சந்திரா. தன் அத்தையையும் அண்ணியையும் முறைத்து விட்டு மனைவியின் பின்னால் சென்றான் விஷ்ணு.

இன்னும் ஸ்வேதா பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்க அவளை பார்த்து புன்னகை செய்தாள் மிருணா. பதிலுக்கு அவளும் புன்னகை செய்து தன் சின்ன ஓர்ப்படியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

மிருணா கைப்பேசி எடுக்க விஷ்ணுவுக்கு சிரிப்பு வந்தது. அவனும் ஒருவர் இருவர் என்றால் ஏதோ சுமாராக தேநீர் வைத்து விடுவான். ஆட்கள் அதிகம் என்பதால் அளவெல்லாம் தெரியவில்லை.

அருகில் நின்ற கணவனிடம், “எவ்ளோ மெம்பர்ஸ்னு கவுண்ட் பண்ணுங்க” என்றாள்.

அவன் கணக்கிட்டு, “நம்மளோட சேர்த்து டென் அடல்ட்ஸ்” என்றான்.

“ஹவ் டூ மேக் டீ ஃபார் டென் மெம்பர்ஸ்?” என கைப்பேசி வழி கூகுலிடம் கேட்டாள்.

ஸ்வேதா சிரிப்பை அடக்க முயல அண்ணியை பார்த்து அவனும் சிரித்தவன், “இன்னிக்கு அத்தைய ஒரு வழி பண்றதுன்னு முடிவு பண்ணிட்டா, விட மாட்டா” என்றான்.

“ஷ்… நீங்க டென் செட் கப் அண்ட் ஸாசர் ரெடி பண்ணுங்க” என கட்டளை இட்டாள்.

“டீக்கு இங்க டம்ளர் தான்” என விவரம் சொன்ன ஸ்வேதா டம்ளரை எடுத்து காண்பித்தாள்.

“கமான் விஷ்ணு, அந்த டம்ளர்ல தண்ணி கலக்காத பால் ஃபைவ் டைம்ஸ் அளந்து எடுத்து பாயில் பண்ண வைங்க. நான் இன்னொரு வெஸல்ல தண்ணீ அளந்து எடுக்கிறேன்” என்றாள் மிருணா.

பாத்திரங்களை போட்டு விட்டு அந்த புது கணவன் மனைவியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள் ஸ்வேதா. அவன் கணக்கிட்டு பால் எடுக்க மிருணா ஏதோ பேச்சு கொடுத்ததில் எண்ணிக்கையை மறந்து போனான்.

“மிரு… நீ டிஸ்டர்ப் பண்ணினதால கவுண்டிங் மறந்திட்டேன்” என்றான்.

“நோ பிராப்ஸ் விஷ்ணு. இன்னொரு வெஸல் எடுத்து இன்னொரு முறை மெஷர் பண்ணுங்க” என்றவள் தண்ணீரை அளந்து கொண்டிருந்தாள்.

வேறொரு பாத்திரம் எடுக்க போன விஷ்ணுவை, “எத்தன பாத்திரம் போட்டு புரட்டுவீங்க? வேலை செய்ற அக்கா இன்னிக்கு லீவ்” என்றாள் ஸ்வேதா.

“அண்ணி நீங்களுமா? நான் வாஷ் பண்ணிடுறேன்” என பாவமாக சொன்னான் விஷ்ணு.

“தள்ளுங்க ரெண்டு பேரும்” என்ற ஸ்வேதாவே விரைவாக தேநீர் வைத்தாள்.

தயாரான தேநீரை டம்ளர்களில் ஊற்றி தனக்கு ஒன்று எடுத்துக் கொண்டு மற்றவற்றை ட்ரே ஒன்றில் வைத்து மிருணாவிடம் கொடுத்தவள், “எப்படியும் குறை சொல்லும் அந்தம்மா. அவ்ளோ வாய்க் கொழுப்பு இருந்தா உன் பொண்ணை போட்டுத் தர சொல்லி அண்டா அண்டாவா குடி இல்ல குளிக்க கூட செய்யுன்னு சொல்லிடு” என்றாள்.

“ம்ம்… சொல்லிட்டு நீங்கதான் சொல்லி தந்தீங்கன்னும் சொல்லிடுறேன்” என்றாள் மிருணா.

“சொல்லிக்கோயேன், எனக்கென்ன பயமா? என் மாமியாரே சும்மா இருக்கும் போது இந்தம்மா யாரு என்னை பேசறதுக்கு? விஷ்ணு அளவுக்கு பொறுமை எல்லாம் எனக்கு கிடையாது. ஏதாவது என்கிட்ட வச்சுக்கட்டும்…” என உறுமினாள் ஸ்வேதா.

மிருணா என்ன பதில் சொல்ல என கண்களை விரித்து விஷ்ணுவை பார்க்க, அவளை போக சொல்லி கண்களால் சொன்னவன் அண்ணிக்கு நன்றி சொன்னான்.

மிருணா சென்றதும் விஷ்ணுவை பிடித்துக்கொண்ட ஸ்வேதா, “உன் அண்ணன் எவ்ளோ கஷ்ட படுறார்னு தெரியாதா? மூணு பேர்ல நீங்க ரெண்டு பேர் நல்லா இருக்கும் போது என் வீட்டுக்கார் மட்டும் நல்லா இருக்க கூடாதா? உன் மச்சினர் தர்றேன்னு சொல்ற கான்ட்ராக்ட் வாங்க கூடாதுன்னு சொல்றியாமே? ஏன் விஷ்ணு இப்படி?” எனக் கேட்டாள்.

“ஹரிக்கு ஹெல்ப் வேணும்னா நான் செய்வேன் அண்ணி. என் மச்சினர் ஏன் செய்யணும்?” எனக் கேட்டு நிற்காமல் சென்று விட்டான்.

ஸ்வேதா சொன்னது போலவே தேநீரில் சுவை இல்லை, நிறமில்லை என குறை சொல்ல ஆரம்பித்தார் சந்திரா.

மிருணாவின் முகம் சுண்டிப் போக, அவள் தோள் சுற்றி கை போட்ட விஷ்ணு, “நீ எடுக்கப் போற படத்துல ஒரு நெகடிவ் லேடி கேரக்டர் ரெஃபரன்ஸுக்காக இவ்ளோ மெனெக்கெட தேவையில்லை மிரு” என சொல்லி அங்கிருந்து அழைத்து சென்று விட்டான்.

“டேய் ஸ்ரீதரா! உன் தம்பி சொல்றதை கேட்டியா…” என சந்திரா சத்தமிடும் ஒலி தேய்ந்து மறைந்தது.

அறைக்கு வந்ததும் படுத்துக் கொண்ட மிருணாவுக்கு அலை அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

“நாளைக்கு சென்னை போயிட போறோம். அத்தையை எல்லாம் அடிக்கடி மீட் பண்ண போறதில்லை. நம்ம கல்யாணத்தை விசாரிக்க வந்தவங்களாச்சேன்னு இன்னிக்கு பொறுமையா பேசினேன். நீ என்னடா இதுன்னு யோசிக்க கூடாது. என் அம்மா ரொம்ப கைண்ட் அண்ட் ஸாஃப்ட். அவங்க கூட உனக்கு கண்டிப்பா ஒத்து போகும்” என்றான்.

“என்ன விஷ்ணு, அண்ணா சொன்னது நினைச்சு பயப்படுறீங்களா?”

“கண்டிப்பா இல்ல மிரு. நம்ம லைஃப் ஹாப்பியாவே போகும்னு நினைக்கிற அளவுக்கு பிராக்டிகாலிட்டி தெரியாதவன் இல்லை நான். அப் அண்ட் டவுன்ஸ்ல கூட நாம நம்மை விட்டுத் தர மாட்டோம்னு ஸ்டராங் ஆ நம்புறேன்” என்றான்.

நேராக படுத்திருந்தவள் அவன் பக்கமாக பார்த்து ஆமோதிப்பாக சிரித்தாள். அவள் பக்கம் ஒருக்கலித்து படுத்து கையில் தலை தாங்கிக் கொண்டே அவளை இமைக்காமல் பார்த்தான். அவளின் புன்னகை இன்னும் விரிய அவளை நெருங்கி வந்தான்.

முதல் முத்தம் மனதில் பரப்பிய இனிய அதிர்வுகளோடு கண்களை மூடியிருந்தாள் மிருணா. அவளது கன்னத்தில் மீசை குத்த அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தவன், “ரெஸ்ட் எடு, நைட் நாம தூங்க போறதில்ல” என்றான்.

கண்கள் மூடியிருந்த படியே வெட்கமாக சிரித்தவளின் முகச் சிவப்பை கண்டவன் அவளை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டான்.

இன்று மருத்துவமனைக்கு செல்லவில்லை மலர். மதிய விருந்துக்கு வந்த பிரவாகன் மீண்டும் வெளியில் கிளம்பி விட்டான். இரவில் பத்து மணி தாண்டிய பிறகு வந்தவன் அவளை கண்டு கொள்ளாமல் ரெஃப்ரெஷ் ஆகி வர, அவனுக்கான சாப்பாடு தயாராக இருந்தது.

அவன் உணவருந்த அமரவும் வழக்கம் போல பரிமாற ஆரம்பித்தாள் மலர். வேண்டாம் என்பது போல ஒரு கை காட்டி தடுத்தவன் அவனே பரிமாறிக் கொள்ள சட்டென அவளின் கண்கள் கலங்கிப் போயின.

அவளை நிமிர்ந்து கூட பாராமல் வேகமாக சாப்பிட்டு முடித்தவன் டிவி யில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆரம்பித்து விட்டான். ஐ பி எல் மேட்ச் முடியும் தருவாயில் இருந்தது. தன்னிடம் பேச வருவான் என காத்திருந்தவள் ஏமாற்றத்தோடு படுக்கைக்கு சென்றாள்.

சில நிமிடங்களில் டிவியை அணைத்து விட்டான். அவளிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் முதல் நாள் போலவே வேறு அறைக்கு செல்லும் நோக்கத்தோடு வெளியில் போக நடந்தான்.

அவளிடமிருந்து ஒரு கேவல் வெளிப் பட அப்படியே நின்று விட்டான்.

ஏன் அழுகை வருகிறது என மலருக்கும் புரியவில்லை. அவனிடம் அழுகையை காட்டக் கூடாது என வலிந்து அழுகையை அடக்கினாள். அவளை அழுத்தமாக பார்த்திருந்தவன் சில நொடிகளுக்கு பின் அவளருகில் சென்று அமர்ந்தான்.

அவள் மூக்குறியும் சத்தம் கேட்கவும் வேகமாக அவளை தன்னை பார்க்க திருப்பினான். கலங்கிய கண்களும் விடைத்த மூக்கும் இமையோரம் தெரிந்த ஈரமும் அவனை அசைத்தன.

“இதென்ன கோலம் மலர்?” என கடிந்தான்.

தான் அணிந்திருந்த இரவு உடையின் டி ஷர்ட் உயர்த்தி தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் அவனை பார்த்து ரோஷமாக, “போறதுன்னா போங்க, எனக்கொன்னும் இல்லை” என்றாள்.

“போ, ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்றான்.

“உங்க அக்கறை ஒண்ணும் தேவையில்லை. கல்யாண விஷயம் காலைலதான் எனக்கு தெரியும்னு இந்நேரம் அண்ணி உங்ககிட்ட சொல்லியிருப்பாங்க. ஏன் நேத்து வரலைன்னு எக்ஸ்பிளைன் பண்ணி சாரியும் கேட்டாச்சு. சும்மா அவாய்ட் பண்ணினா என்ன அர்த்தம்? எங்கேயும் எனக்கு நிம்மதி இல்லை, போங்க” என்றாள்.

அவளையே பார்த்திருந்தவனுக்கு அவளது அழுகை என்னவோ செய்தது.

“நான் உன்கிட்ட பேசலை, அவாய்ட் பண்றேன்னா அழற?” எனக் கேட்டான்.

நன்றாக மூக்குறிந்து கொண்டவள், “அதெல்லாம் இல்லையே, பேசலைனா போங்க” என தன் அழுகையின் காரணத்தை ஒத்துக் கொள்ள முடியாமல் வீம்போடு சொன்னாள்.

புன்னகை அரும்ப, “நிஜமா போகவா?” எனக் கேட்டான்.

அடக்கப் பட்ட கோவத்தில் மூச்சு வாங்க அவனை பார்த்தவளின் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பிக்க, “ச்சீ நிறுத்து அழுகையை!” அதட்டலாக சொன்னவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement