Advertisement

பேரன்பு பிரவாகம் -21

அத்தியாயம் -21(1)

விருந்து முடிந்து விஷ்ணுவும் மிருணாவும் விஷ்ணுவின் வீட்டிற்கு வந்த போது அவனது பெரியண்ணன் ஸ்ரீதர் அவனது மனைவி தர்ஷிணி அவர்களது குழந்தைகள் தர்ஷிணியின் தாயும் கோபாலின் அக்காவுமான சந்திரகலா அவரது கணவர் குபேரன் ஆகியோர் வந்திருந்தனர்.

ஹரியும் அவனது மனைவி ஸ்வேதாவும் கூட அங்குதான் இருந்தனர்.

தர்ஷிணிக்கும் ஸ்வேதாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆகாது. தன் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்தவள் தர்ஷிணி. தாய் மாமன் வீடு என்பதாலும் அதிக உரிமை பாராட்டுவாள். காலை டிபன் என்ன செய்வது என்பதிலிருந்து குடும்பமாக எங்காவது செல்லலாம் என்றால் எங்கு செல்லலாம் என அனைத்திலும் அவள்தான் முடிவு எடுப்பாள்.

இரண்டு மருமகள்களும் மாமியார் வீட்டுக்கு வருவதே எப்போதாவதுதான். முறை வாசல் செய்வது, பாத்திரம் கழுவுவது, வீட்டை பெருக்குவது, நல்ல நாளில் பூஜை அறையில் யார் விளக்கு ஏற்றுவது என அனைத்திலும் சண்டை பிடிப்பார்கள். இரண்டு மருமகள்களையும் சமாளிக்கவே தேவகிக்கு தனி ஜீவன் தேவைப்படும்.

பொறுத்து பார்த்துதான் மேல் வேலைக்கு ஆள் வைத்தார். அந்த பெண் காலையில் வந்து விட்டு சென்று விடுவார். மிச்ச நேரங்களில் இதை நீ செய் அதை அவள் செய்வாள் என வேலைகளை பிரித்துக் கொடுத்து சச்சரவு வராமல் பார்த்துக் கொள்வார் தேவகி.

ஸ்ரீதரும் ஹரியும் கூட அம்மாவின் கஷ்டம் புரியாமல் தங்கள் மனைவிக்கு ஆதரவுக் கொடி பிடித்துக்கொண்டு அம்மாவிடம் தனியே சண்டை போடுவார்கள்.

“அவன் நல்லா சாம்பாதிக்கிறான்னு அவன் பொண்டாட்டிக்கு இம்பார்டன்ஸ் கொடுக்கிற நீ? ஒரு கண்ணுல நெய்யும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிற ம்மா” என்பான் ஹரி.

“என்ன இருந்தாலும் அவன்தானே உனக்கு செல்லம். இண்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணியும் ஏத்துக்கிட்டீங்க, இதையே நான் பண்ணியிருந்தா தண்ணி தெளிச்சு விட்ருப்பீங்க. அவனை மட்டும் அப்பா அவர் கூடவே வச்சுக்கிட்டார். பசங்கள விடுங்க… மருமகளுங்கள் விஷயத்துலயாவது நியாயமா நட ம்மா. அந்த பொண்ணு குழந்தையை கவனிக்கறேன்னு எப்ப பாரு ரூம்லேயே இருக்கு, எம்பொண்டாட்டி வேலை பார்த்து பார்த்து முதுகு வலில அவஸ்தை படுறா” என்பான் ஸ்ரீதர்.

“உங்கம்மா அவங்க பெரிய பையன் புள்ளைய மட்டும் குளிக்க ஊத்தினாங்க, நம்ம புள்ளைய கண்டுக்கிறதே இல்லை” கணவரிடம் புகார் வாசிப்பாள் ஸ்வேதா.

“அதென்ன உங்க தம்பி புள்ளய மட்டும் இடுப்ப விட்டு இறக்கிறதே இல்லை அத்தை. நம்ம புள்ள சின்னதா இருந்தப்போ இப்படி பார்த்துகிட்டாங்களா? நீங்கதான் அம்மா அம்மானு உசுரை விடுறீங்க. நம்மன்னா அவங்களுக்கு எப்பவுமே மட்டம்தான்” என்பாள் தர்ஷிணி.

சந்திரகலாவோ ஒரு படி மேல். தேவகிக்கு மாமியார் இல்லாத குறை தீர்க்க வந்த நாத்தனார்.

“தேவகி… இதென்ன இட்லி இவ்ளோ பெருசா இருக்கு? தொண்டைக்குள்ள எப்படி போகும்? சின்ன சின்னதா ஊத்தி எடுத்திட்டு வா. அப்படியே நான் குடிக்கிற பதத்துல வெந்நீர் எடுத்திட்டு வா. உங்க அண்ணனுக்கு அரை ஸ்பூன் சர்க்கரைல டீ கலந்து உன் கையால கொடு” என அமர்ந்த இடத்திலிருந்து வேலை ஏவுவார்.

இன்று வீடு அமைதியாகத்தான் இருந்தது. அனைவரது பார்வையும் மிருணாவை எடை போடுவதாக இருந்தது.

தன் நாத்தனார் மற்றும் அவரது கணவரிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் படி கூறினார் தேவகி. புது மணமக்களும் வணங்க, “இந்த வீட்ல ரெண்டு மருமகளுங்களும் முத வருஷ கல்யாண நாளே குழந்தையோடதான் கொண்டாடினாங்க. நீங்களும் சீக்கிரம் ஒண்ண பெத்தெடுத்து என் தம்பி குடும்பத்தை வளர வைங்க” என்றார் சந்திரகலா.

மிருணா கணவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே எழுந்து நிற்க அவனோ புன்னகை குறையாமல் நின்றிருந்தான்.

“இதென்னடா கோபால்… மறுவீடு போயிட்டு வந்த பொண்ணு சும்மா வந்திருக்கு. தர்ஷிணிக்கு அண்டா அண்டாவா பலகாரம் கொடுத்து விட்டேனே நான். அரசி அக்கா பொண்ணு அரசி அக்கா பொண்ணுன்னு மூச்சுக்கு மூவாயிரம் தடவ சொன்ன…” தன் வேலையை தொடங்கினார் சந்திரா.

எப்போதும் அக்காவின் பேச்சுக்களில் குறுக்கிட மாட்டார் கோபால். சொத்து முழுவதையும் மகனுக்கு அல்லவா தரப் போகிறார். ஆகையால் மனைவியையே பணிந்துதான் போக சொல்வார். ஆனால் மிருணா அப்படி அல்லவே.

“என்னக்கா நீ, அது நம்ம வீட்டுக்கு வந்திருக்க அதிர்ஷ்டலக்ஷ்மி! சும்மா பலகார அண்டா வரலை பாயாச டம்ளர் வரலைன்னு…” எனும் போதே ஹரியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

கைப்பேசி எடுத்துக் கொண்டு தனியே சென்றவர் அழைப்பை ஏற்று, “ஒரே வீட்டுக்குள்ள இருந்துகிட்டே என்னடா போன் பண்ற?” எனக் கேட்டார்.

“நீங்க பிரவாகன் தங்கைனு எதுவும் மிருணாளிணிக்கு செய்ய தேவையில்லை. அவளும் உங்களுக்கு ஒரு மருமக. எதிலேயும் பட்டுக்காதீங்க. ஏதாவது சப்போர்ட் செஞ்சீங்கன்னா விஷ்ணு பொண்டாட்டியும் என் பொண்டாட்டி மாதிரி காலி பெட்டித்தான். புரிஞ்சுதா ப்பா?” என்றான் ஹரி.

“ஆமாடா, நான் யோசிக்காம போயிட்டேன் பாரு. அந்த பொண்ணு ‘அண்ணா நீ சொன்னதுதான் கரெக்ட்’னு பிரவாகன்கிட்ட போய் நின்னா உன் தம்பியே அந்த தம்பி சொல்றதை கேட்கிறதா சொல்லியிருக்கானாம். அரசி அக்கா இத சொல்லி பிரச்சனை எதுவும் வராம பார்த்துக்க தம்பின்னு சொன்னாங்க!” என்ற கோபால் பின் ஏன் தன் அக்காவிடம் செல்லப் போகிறார்.

அரசிக்கு எந்த சம்பிராதயங்களும் கடை பிடிக்க பயமாக இருந்தது. எதுவும் முறை என சொல்லி, செய்து விஷ்ணு மறுத்து, தன் மகன் எதிர்த்து என ரசா பாசமாகி விடுமோ என நினைத்தவர் விருந்தை மட்டும் முடித்து அனுப்பி வைத்து விட்டார்.

கோபாலிடம் இது சம்பந்தமாக, “எதுவும் செய்யலைன்னு நினைக்காக தம்பி, ரிஷப்ஷன் முடியட்டும், கீர்த்திக்கு என்ன செய்முறை செஞ்சேனோ எல்லாம் செய்திடுறேன்” என சொல்லி அவரது சம்மதத்தையும் பெற்றிருந்தார்.

சந்திராவுக்கு தன் மகள் அதிகாரம் செலுத்திய இடத்தில் அவளை விட செல்வாக்கு நிறைந்த பெண் வந்திருக்கிறாளே என பொறாமை.

அவர் பேசும் தொனி மிருணாவுக்கு கோவத்தை கொடுக்க விஷ்ணுவை பார்த்தாள்.

“ஏன் அத்தை, என்ன ஸ்வீட் சாப்பிட்டு சுகரை இன்னும் ஏத்திக்கணும் உங்களுக்கு? சொல்லுங்க ஸ்ரீதர் வாங்கி தருவான்” என விளையாட்டாகவே பேசி அந்த சூழலை கடக்க விரும்பினான் விஷ்ணு.

“எம்பெருமான் புண்ணியத்துல எனக்கு சுகர் எல்லாம் கண்ட்ரோல்லதான் இருக்கு, இப்படியா ஒண்ணுமில்லாம ஒரு பொண்ணை கட்டிகிட்டு வருவ? தர்ஷிணிக்கு செஞ்ச அளவுக்கு இல்லைனாலும் அதுல பாதியாவது கொண்டு வர வேணாம். என்னமோ போ… நீயும் ஹரி மாதிரியே ஏமாந்து போயிட்ட!” என நீட்டி முழக்கினார்.

இன்று வேலை செய்யும் பெண் வராமல் போனதால் குவிந்து கிடந்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த ஸ்வேதா கழுவிய பாத்திரங்களை நங் நங் என போட்டுடைத்து சத்தம் எழுப்பி தன் கோவத்தை வெளிப் படுத்தினாள்.

“அண்ணி வாங்களேன், அடைக்கு மாவு இந்த பதத்துல இருந்தா போதுமா ன்னு பார்த்து சொல்லுங்க” என அங்கிருந்து சந்திராவை நகர்த்த பார்த்தார் தேவகி.

“நீ வா இங்க முதல்ல. இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. புதுப் பொண்ணு சமைக்கட்டும். டீ லேருந்து ஆரம்பிக்கட்டும்” என்ற சந்திரா, மிருணாவை பார்த்து, “போம்மா, எல்லருக்கும் டீ வை” என ஏவினார்.

“எனக்கு சமையல் எல்லாம் தெரியாது ஆன்ட்டி” என்றாள் மிருணா.

மோவாயில் கை வைத்தவர் அடுத்த புராணத்தை ஆரம்பிக்க, “அத்தை போதும். டீ போட கத்துகிட்ட அப்புறம் இன்னொரு முறை உங்களுக்கு டீ போட்டு தருவா. சமைக்க தெரியலைங்கிறதை ஏதோ நடக்க கூடாத அசம்பாவிதம் ரேஞ்சுக்கு பேசி அவளை பயமுறுத்தாதீங்க” என அப்போதும் பொறுமையை கடை பிடித்தான் விஷ்ணு.

“ம்ம்… நகை நட்டு சீர்னு எதுவும் இல்லை. சமையல் தெரியாது. சினிமாக்காரி வேற. பெரியவங்க சொல்றதை கேட்கிறதும் கிடையாது…”

“பெரியவங்க மாதிரி நடங்க அத்தை. வார்த்தைகள் வித்தியாசமா இருந்தா சரியா இருக்காது” என சீறாமல் மென்மையான கண்டிப்போடு சொன்னான் விஷ்ணு.

அதுவரை வேடிக்கை பார்த்திருந்த தர்ஷிணி என் அம்மாவை மரியாதை இல்லாமல் நடத்துகிறாய் என விஷ்ணுவை குறை சொல்லி இனி இங்கு இருக்க வேண்டாம் உடனே புறப்படுகிறோம் என நின்றாள்.

முன் பக்கம் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு இங்கு நடப்பது தெரியாது. தெரிந்தாலும் தன் மாமியாரை விட்டுத் தர மாட்டான் என்பது வேறு விஷயம்.

பொறுமையிழந்த விஷ்ணு ஏதோ கோவமாக சொல்லப் போக, “டீ தானே ஆன்ட்டி, நான் போடுறேன். எங்க மேரேஜ் நேத்துதான் முடிஞ்சிருக்கு, ப்ளீஸ், கோவ படாம இருங்க” என்ற மிருணா கணவனை அவரிடம் மன்னிப்பு கேட்கும் படி சொன்னாள்.

கொஞ்சம் அதிக படியாக போகிறதோ என நினைத்த தர்ஷிணி, “உனக்காக விடுறேன் மிருணா. அப்புறம் எங்கம்மா உனக்கு ஆன்ட்டி இல்லை, சித்தின்னு சொல்லு. வீட்டு மருமக நல்ல நாள்ல சமைக்க ஆரம்பிக்கிறது வழக்கம்தானே? நீ போ” என்றாள்.

Advertisement