Advertisement

பேரன்பு பிரவாகம் -2

அத்தியாயம் -2(1)

நந்தியாவட்டை பூக்களை பறித்துக் கொண்டிருந்தாள் மலர். பூஜையில் எல்லாம் அத்தனை ஈடுபாடு கிடையாது, இவளது தந்தை செய்வார். அவர் பூஜை செய்ய இவள்தான் பூக்களை பறித்து தருவாள்.

நீட் கோச்சிங் புறப்பட்டுக் கொண்டிருந்தான் மலரின் தம்பி பரத். மருத்துவ படிப்பு என்பது அவனது கனவு. முதல் முறை சொற்ப மதிப்பெண்களில் சீட் கிடைக்காமல் போய் விட்டது. பணம் செலுத்தி படிக்க வைக்கும் அளவிற்கு வசதி கிடையாது. அவனது தந்தை செல்வம் கால்நடை மருத்துவர். அம்மா விமலா வீட்டை கவனித்துக் கொள்கிறார்.

முதல் மகள் அகிலா திருமணம் முடிந்து அவளது கணவனோடு சென்னையில் வசிக்கிறாள். இரண்டாவது மகள்தான் அன்புமலர். அவளுக்கு மெரிட் அடிப்படையில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்திருக்க சிரமம் இல்லாமல் படிக்க வைத்து விட்டனர். பரத் பற்றிய கவலைதான் இப்போது. அவனோ இந்த முறை எப்படியும் தனக்கு இடம் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறான்.

“அக்கா வாயேன், என்னை சென்டர்ல ட்ராப் பண்ணிட்டு அப்புறமா வந்து பூ பறிப்பியாம்” என்றான் பரத்.

எப்போதும் செல்வம்தான் கொண்டு போய் விடுவார். இன்று காலையிலேயே அவரது கிளினிக்கிற்கு விபத்தில் சிக்கிய குதிரை ஒன்று வந்திருக்க அதை கவனிக்க அவர் சென்றிருந்தார்.

“என் ஸ்கூட்டியிலயா? அதுல எல்லாம் ஏறுவியா நீ? என் ஸ்பீட் உனக்கு போறாதே. வெயிட் பண்ணி அப்பாவோடயே போ” என சொல்லிக் கொண்டே செம்பருத்தி பூக்களை பறிக்க ஆரம்பித்த மலரை முன்பு தான் செய்த கிண்டலுக்காக சமாதானம் செய்து அவளுடனே புறப்பட்டான்.

பரத் நன்றாகவே இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவான். இன்னும் பதினெட்டு வயது ஆகாததால் லைசென்ஸ் இல்லை. ஆகவே அக்காவின் தயவை நாடியிருந்தான்.

“என்ன ஓட்டுற நீ? சொன்னா மட்டும் கோவப்படுவ. இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட்டா போக்கா”

“ஏன் அவசர படுறடா? டைம் இருக்கு இன்னும்”

“உன்னை ஓட்ட சொன்னேன் பாரு!” சலித்தான்.

“உனக்கு ஓட்ட கத்து கொடுத்ததே நான்தான்டா”

“அதுவா முக்கியம்? ஃபார்ட்டி ஃபைவ் விட்டு தாண்ட மாட்டேங்குற” குறைப்பட்டான்.

“சிட்டி லிமிட் அவ்ளோதான் தம்பி”

“இந்த நேரம் டிராஃபிக் கூட இல்லக்கா, ரூல்ஸ் எல்லாம் பேசாதக்கா”

தம்பியே என்றாலும் அவளை தாண்டி வளர்ந்து விட்டான். அனைத்திலும் வேகம்தான். அவனுக்காக கொஞ்சமாக வேகத்தை கூட்டி ஓட்டினாள். பதினைந்து நிமிடங்களில் வந்து விட்ட கோச்சிங் சென்டரில் தம்பியை இறக்கி விட்டு கிளம்பினாள் மலர்.

வழியில் இருந்த பிள்ளையார் கோயில் பக்கத்தில் வண்டியை நிறுத்தி விட்டு கோயிலுக்கு சென்றாள். தம்பிக்காக வேண்டிக் கொள்ள வந்தவள் அங்கு விஷ்ணுவை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனும் இவளை பார்த்து விட்டதன் அடையாளமாக சிரிப்புடன் இவள் பக்கத்தில் வந்து நின்றான்.

“வரப் போறதா ஆன்ட்டி சொல்லவே இல்லைண்ணா. எப்ப வந்தீங்க?” என உற்சாகமாக கேட்டாள்.

“நேத்துதான் வந்தேன். இன்னிக்கு உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன்” என்ற விஷ்ணு அவளது நலனை விசாரித்தான்.

ஒரே தெருவில்தான் இருவரது வீடுகளும். விஷ்ணு அவளை விட ஐந்து வயது பெரியவன். சிறு வயதிலிருந்தே தெரியும். அவனை பார்த்துதான் இவளுக்கும் மருத்துவம் படிக்க ஆசை வந்தது. உடன் பிறக்கா விட்டாலும் சொந்த தங்கை போலவேதான் பாவிப்பான் விஷ்ணு. வெளிநாட்டில் குழந்தைகள் நல பிரிவில் மேற்படிப்பு முடித்து விட்டு வந்திருக்கிறான்.

“எப்படி வந்த நீ? என் கார்ல அழைச்சிட்டு போகவா?” எனக் கேட்டான்.

“இல்லண்ணா என் ஸ்கூட்டி இருக்கு”

“அப்ப சரி மலர், எனக்கு கிளினிக் ஆரம்பிக்க இடம் பார்க்க சொல்லியிருந்தேன். அப்பா ரெண்டு இடம் பார்த்திருக்கார். உன்னை வீட்ல விட்டுட்டு போலாம்னு நினச்சேன். நேரா இடத்துக்கே கிளம்பறேன்” என்றான்.

“ஏன் ண்ணா இங்க அன்பு மெடிக்கல் சென்டர்ல ஜாயின் பண்ணலையா? உங்களுக்கு ரிலேட்டிவ்தானே?” என விசாரித்தாள்.

“ரிலேட்டிவ்ஸ்கிட்டேர்ந்துதான் தள்ளி இருக்கணும் மலர்” என்ற விஷ்ணு சிரிக்க, “சரிதான் ண்ணா, அங்க வந்தா நீங்களும் டென்ஷன் ஆகிடுவீங்க” என்றாள்.

“என்ன மலர், அங்க என்ன பிரச்சனை உனக்கு?”

“அதுபத்தி நாம பொறுமையா பேசலாம் ண்ணா. நீங்க இடம் பார்க்க போயிட்டு வாங்க. முடிஞ்சா ஈவ்னிங் மீட் பண்ணலாம்” என சொல்லி விடை பெற்றுக் கொண்டாள்.

மலர் வீடு வரும் போது செல்வமும் வீடு திரும்பியிருந்தார். குளித்து வந்தவர் பூஜையை முடித்து விட்டு ஹாலில் இருந்த அவரது முதல் மனைவி தாட்சாயிணியின் புகைப்படத்திற்கும் பூக்கள் வைத்து கைகள் குவித்து வணங்கினார்.

ஆமாம் விமலா இவருக்கு இரண்டாம் தாரம். மலர் பிறந்து சில மாதங்களில் தாட்சாயிணி இறந்து போக மனைவியின் தங்கை விமலாவை பெரியவர்களின் வற்புறுத்தல் காரணமாக இரண்டாவதாக மணந்து கொண்டார். அக்காவின் பெண்களுக்கு எந்த குறைகளும் வைக்காமல் நன்றாகவே வளர்த்திருந்தார் விமலா.

ஆனாலும் இன்னும் செல்வத்தின் மனதில் முதல் மனைவியின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. பெரியவர்கள் பார்த்து பேசி முடித்த திருமணம் என்றாலும் அவர்கள் வாழ்வில் அத்தனை காதலும் அந்நியோன்யமும் நிறைந்திருந்தது.

உணவு மேசையில் குதிரை எப்படி இருக்கிறது என மலர் விசாரிக்க செல்வமும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“எந்நேரமும் மருந்து மாத்திரை நாய் பூனை வைத்தியம்னு பேசிக்கிட்டு…” கடுப்பாக சொன்னார் விமலா.

புன்னகைத்த செல்வம், “அம்மா உன் கல்யாணத்தை பத்தி பேச சொல்றா” என மகளிடம் சொன்னார்.

அதிர்ந்த மலர், “அக்காவுக்குத்தான் சீக்கிரம் பண்ணிட்டீங்க, எனக்கு மூணு வருஷமாவது டைம் கொடுங்க. நான் பி ஜி பண்ணனும்” என்றாள்.

“அப்பா ரிடையர்மெண்ட் முன்னாடி செய்றது நல்லது மலர். கல்யாணத்துக்கு அப்புறமா பிஜி படி” என்றவர் சொந்தத்தில் இருக்கும் என்ஜினீயர் பையன் ஒருவனை பற்றி கூறி, “உன்னை கேட்குறாங்க. நீ மேல படிக்கவும் அவங்களுக்கு சம்மதம்தான்” என்றார் விமலா.

செல்வத்தின் வருமானம் குடும்ப செலவுகளுக்கும் பிள்ளைகளின் படிப்புக்குமே சரியாக இருந்தது. விமலாவின் பெற்றோருக்கு இருவரும் பெண் மக்கள்தான் என்பதால் அவர்கள் மறையும் முன்னரே குடும்ப சொத்துக்களை பேரன் பேத்திகளுக்கு சமமாக பிரித்து எழுதி விட்டனர்.

அகிலாவுக்கு நல்ல வசதியான இடத்திலிருந்து சம்பந்தம் வரவும் கேட்டதை செய்து விமரிசையாகவே திருமணத்தை முடித்து வைத்திருந்தனர். இப்போது மலரை கேட்கும் இடத்தில் அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களே படிக்க வைத்து விடுவதாக சொல்லவும் இதையே முடிக்கலாம் என நினைத்தார் விமலா.

வேறு இடம் என்றால் நிறைய செலவாகும். மலருக்கு செலவு செய்யக் கூடாது என இல்லை. ஒருவேளை பரத் இந்த முறையும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் அவனது மருத்துவ கனவை நிறைவேற்ற சொத்துக்களை விற்று ஏற்பாடு செய்யலாம் என யோசனையில் இருந்தவருக்கு இந்த இடத்தை முடிக்கலாம் என தோன்றியது.

எதையும் ஒளித்து மறைத்து பேசும் சுபாவம் இல்லாத விமலா தன் எண்ணத்தை அப்படியே பகிர்ந்தார்.

“பரத் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவான். மலருக்குன்னு உள்ளது அவளுக்குத்தான், இவ கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்றார் செல்வம்.

விமலாவின் முகம் சுண்டிப் போய் விட்டது.

“மலர் என் வயித்துல பொறந்திருந்தாலும் இப்படித்தான் யோசனை சொல்லியிருப்பேன். அவளுக்கு ஏதோ கெடுதல் செய்ற தொனியில பேசுறீங்க. என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் சித்தி ஒருநாளும் அம்மா ஆகிட முடியாதில்லையா?” என ஆதங்கமாக கேட்டார்.

அகிலாவுக்கு என இருந்ததை தாண்டி அதிகமாக செய்துதான் அவளுக்கு திருமணம் முடித்திருந்தனர். விமலாவின் பெற்றோர் கூட சொத்தை இரண்டாக பிரித்து பேத்திகளுக்கு ஒரு பங்கு பேரனுக்கு இன்னொரு பங்கு எனதான் தருவதாக இருந்தனர்.

 அப்படி செய்தால் பிள்ளைகளுக்குள் பேதம் வந்து விடும் என கருதி மூவருக்கும் சமமாக கொடுக்க சொன்னதே விமலாதான். இன்று கணவர் பேசும் தோரணை தன்னை குற்றம் சாட்டுவது போல இருக்க பேசி விட்டார்.

விமலா மிகுந்த கண்டிப்பு நிறைந்தவர், பிள்ளைகளிடம் எப்போதுமே செல்லம் பாராட்ட மாட்டார். இன்று கலங்கிப் போய் இப்படி பேசவும் மலருக்கு என்னவோ போலானது. தான் சொன்னது மனைவியை இப்படி பாதிக்க கூடும் என நினைத்திராத செல்வத்துக்கும் ஏதோ போலானது.

விமலா அறைக்குள் சென்று விட சாப்பிட்டு முடித்திருந்த மலர் கை கழுவிக் கொண்டு அம்மாவை காண செல்ல, செல்வம் தடுத்து விட்டார்.

“உனக்கு டைம் ஆகிடுச்சு, நான் பார்த்துக்கிறேன், நீ கிளம்பு” என அப்பா கூற இந்த நேரம் தான் சென்று பேசினாலும் சங்கடமாக உணர்வாரோ என நினைத்த மலரும் சரி என்றாள்.

அறைக்கு செல்ல இருந்தவரின் கை பிடித்துக்கொண்டவள், “நீங்க பேசினதுல ஹர்ட் ஆகிட்டாங்க. உங்க மேலதான் தப்பு ப்பா. அம்மாகிட்ட சொல்லுங்க பரத் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவான். இல்லைனாலும் என்னோடத வித்து அவனுக்கு செய்றதுல எனக்கு தடை இல்லை. ஆனா பிஜி முடிச்சிட்டுதான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்” உறுதியாக சொன்னாள்.

செல்வம் சரி என்பதாக தலையசைத்து சிரிக்க, “லீவ் போட்டுட்டு அம்மா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க” என குறும்பாக சொல்லி விட்டு வெளியேறினாள்.

பிரவாகனின் வீட்டில் அவனது அம்மா அன்பரசியின் இரத்த மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனையிலிருந்து ஆட்கள் வந்திருந்தனர். வழக்கமான நிகழ்வுதான். மாதம் ஒரு முறை ஆய்வக ஊழியர்கள் இருவர் வந்து செல்வார்கள். பரிசோதனை முடிவுகள் வந்ததும் மருத்துவமனை சென்று அவரது மருத்துவரிடம் காட்டி விட்டு வருவார் அரசி.

அரசியின் தாத்தா சேதுராமர்தான் அன்பு மருத்துவமனையை ஸ்தாபித்தது. அவருக்கு பின் அவரது மகன் பார்த்தார். அவரது காலத்தில் மருத்துவக் கல்லூரி வந்தாலும் சேவை நோக்கில் தொடங்கப்பட்ட இலவச மருத்துவமனை தரமானதாகவே இருந்தது. அவருக்கு ஒற்றை பெண் அன்பரசி. மருத்துவம் படிக்க விருப்பமில்லை என சொல்லி விட்டார். ஆகவே மருத்துவரான மகேந்திரனை மணம் செய்து வைத்தனர்.

மகேந்திரனின் தம்பி தர்மேந்திரன். இருவரும் சேர்ந்துதான் மருத்துவத்தை வியாபாரமாக மட்டுமே மாற்றி விட்டனர். அரசி செயல் பாட்டுடன் இருந்தவரை இலவச மருத்துவமனையின் நிர்வாகம் அத்தனை சீர் குலையவில்லை. ஓரளவு தரமாகவே இயங்க வைத்திருந்தார்.

 மகேந்திரன் மறைவுக்கு பின் மனதளவில் தளர்ந்து ஒடுங்கி விட்டார். முதல் மகள் கீர்த்தி பிறந்து எட்டு வருடங்கள் கழித்து பிறந்தவன் பிரவாகன். அதன் பின் நான்கு வருடங்கள் சென்று பிறந்த மகள் மிருணாளினி. நிறைய ஆரோக்கிய குறைபாடுகள் வேறு.

 மகேந்திரன் இறந்து இரண்டு மாதங்களில் லேசான மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து தன்னால் முடியாது என்பதால் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொண்டார். அப்போதிலிருந்து முழு பொறுப்பும் பிரவாகன் வசம் என்றாகி விட்டது. அப்பாவின் கொள்கைகளை பிடித்துக்கொண்டு அவரது செயல்பாடுகளை கண்டு வளர்ந்தவனோ வியாபார நோக்கில் மட்டுமே நிர்வாகத்தை வழி நடத்தினான்.

அவன் படிக்கும் போதே அடுத்து என்ன என்பதில் தெளிவாக இருந்தான். மருத்துவம் படி என அரசி கூற, “நான் மெடிசின் படிச்சிட்டு யாருக்கு வைத்தியம் பார்க்க போறேன். ஒரு சீட் வேஸ்ட் ஆகுதுங்கிறது விட நான் ஏன் கஷ்டப்பட்டு படிக்கணும்?” என கேள்வி கேட்டு மறுத்து விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement