Advertisement

அத்தியாயம் -20(3)

அரை மணி நேரத்தில் பிரவாகனின் வீடு வந்து விட்டனர். செல்வம் மகளுக்கு ஏதோ அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க இருவரையும் கண் காணிப்பு கேமரா வழி கண்ட பிரவாகன் வேகமாக வெளியில் வந்தான்.

கேட் திறக்கப்பட அப்பாவும் மகளும் பிரவாகனை கண்டு விட்டு அதிர்ந்தனர். செல்வம், “மாப்ள… வந்து…” என தடுமாற, “உள்ள வாங்க மாமா” என்றான்.

இந்த நேரம் வந்து என்ன செய்ய, சம்பிராதயங்கள் வேண்டாம், வீடு போய் விடுகிறேன் என அவன் மறுக்க முடியாத படி சொன்னார்.

நடு இரவில் தனியாக எப்படி செல்வீர்கள் எனக் கேட்டு, டிரைவரை காரை எடுக்க சொன்னான். அவரை காரில் ஏற்றி விட்டு, செக்யூரிட்டி கொண்டு அவரது வாகனத்தை வீட்டில் சேர்ப்பிக்கும் படி சொல்லி அனுப்பி வைத்தான்.

இன்னும் அவனது பார்வை மலரின் மீது விழவில்லை. அவனது அந்த அலட்சியத்தில் அவனுக்காக வந்தவளும் இப்போது முறுக்க ஆரம்பித்தாள்.

கேட்டிற்கும் வீட்டிற்கும் இடையில் செக்யூரிட்டிகளின் காதுகளில் அவர்களது பேச்சு சென்றடையாத இடத்தில் இருந்தனர் இருவரும்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் கண்டு கொள்ளாமல் முன்னே நடக்க, அவளோ நின்ற இடத்திலேயே நின்று கொண்டாள். தன்னை பின்பற்றி அவள் வரவில்லை என உணர்ந்து நின்றவன் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

“மிட் நைட்ல வந்து நிக்கிறேன். வா ன்னு ஒரு வார்த்தை சொன்னா உங்க தலையில உள்ள கொம்பு உடைஞ்சு விழுந்திடுமா?” எனக் கேட்டாள்.

“நான் போக சொன்னேனா, இப்ப வான வேடிக்கை வச்சு வரவேற்பு கொடுக்க?”

‘சும்மாவே ஆடுவான் ஆணவக்காரன், நாம ஒரு சான்ஸ் கொடுத்தா சும்மாவா விடுவான்?’ என மனதில் நினைத்தவள், அவனை தாண்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.

“செய்றது எல்லாம் அதிகப் பிரசங்கித்தனம், தம்மேல தப்பே இல்லாதது மாதிரி எவ்ளோ திமிரா நெஞ்ச நிமித்திக்கிட்டு உள்ள போறத பாரு!” அவளுக்கு கேட்கும் படியாகவே சொன்னான்.

“நான் ஒண்ணும் உங்களுக்காக வரலை. அத்தைய பார்க்க வந்தேன்” என சொல்லிக்கொண்டே அவனது பார்வையிலிருந்து மறைந்து விட்டாள்.

பிரவாகன் கண்டு கொள்ளாமல் அவனது அறைக்கு சென்று விட்டான். அரசி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க கீர்த்திக்கும் இவள் வந்தது தெரியவில்லை.

ஹாலில் அமர்ந்திருந்தவளுக்கு தன்னை கண்டு கொள்ளாமல் சென்றவனிடம் செல்ல தயக்கமாக இருந்தது. கால் மணி நேரம் கடந்தும் அவன் இவளிடம் வரவே இல்லை. மனதை தேற்றிக் கொண்டு இவளே அவர்களின் அறைக்கு சென்றாள்.

படுக்காமல் நடை போட்டுக் கொண்டிருந்தவன் அறையின் வாயிலில் நின்றிருந்தவளை பார்த்து விட்டு, “எல்லாத்தையும் விடு, என் கூட வராம உன் அப்பா வீட்ல இருக்கேன்னு எல்லார் முன்னாடியும் வச்சு நடு ஹால்ல சொன்ன பாரு… சாப்பிட வாங்கன்னு நீ கூப்பிட்டதும் போனா போகுதுன்னு உன் இழுப்புக்கு வந்த என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?” எனக் கேட்டான்.

“ரொம்ப ஆஃப் மூட்ல இருந்தேன். நல்ல ஹெட் ஏக். உங்க கோவத்தை ஃபேஸ் பண்ண ரெடியா இல்லை நான்” என்றாள்.

“இப்ப ரெடி ஆகிட்டியா?” எனக் கேட்டான்.

“தெரியலை, ஃபேஸ் பண்ணிதானே ஆகணும்”

“நீ தூங்கு, என் கோவம் குறைஞ்சதும் உன்கிட்ட பேசுறேன் நான்” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.

இரவில் வேறு அறையில் உறங்கியிருந்தவன் விடிந்த பின்னர்தான் வந்தான்.

அவன் பார்வையாலேயே அவளை தள்ளி நிறுத்த அவளும் அமைதியாக இருந்து கொண்டாள்.

மலரை கண்ட அரசிக்கும் கீர்த்திக்கும் மகிழ்ச்சி. தர்மேந்திரனுக்கு மிருணாவின் திருமணம் பற்றி சொல்லியிருந்த அரசி இன்று நேரில் வர சொல்லியிருந்தார். குடும்பத்தோடு அவர் ஆஜராகி விட்டார். குகனும் அவனது பெற்றோரோடு வந்து சேர்ந்தான். மஹிஷா, மஹிமா இருவரும் பள்ளி சென்று விட்டனர்.

முதல் நாள் பிரவாகன் மருத்துவமனை செல்லாததால் காலையிலேயே தமன் வந்திருந்தான். விஷ்ணுவும் மிருணாவும் புறப்பட்டு விட்டதாக செய்தி வர பிரவாகனை வர சொல்லும் படி மருமகளிடம் சொன்னார் அரசி.

மலர் அவனை அழைக்க நேரிலேயே சென்றாள்.

“அண்ணாவும் அண்ணியும் வந்திட்டு இருக்காங்களாம், வர்றீங்களா நீங்க?” என மலர் கேட்க, அவளை பார்த்து வருவதாக இயல்பான முகத்தோடு சொன்னான்.

‘ஹப்பா மலையிறங்கிட்டான்!’ என நினைத்துக்கொண்டாள் மலர்.

என்ன இது திடீர் திருமணம், ஏன் இப்படி என யாரும் கேள்வி கேட்கவில்லை. பிரவாகனிடம் அப்படி கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

விஷ்ணு மிருணா வந்ததும் மரியாதை குறையாமல் வரவேற்றான் பிரவாகன். மலர் ஆரத்தி எடுத்தாள்.

மிருணா அண்ணனின் கை பிடித்து அவனை பார்க்க, கண்கள் சிமிட்டி, “ஹேப்பியா இருங்க பெரிய மனுஷி!” என்றான்.

சடங்கு சம்பிராதயங்கள் என நேரம் சென்றது. காலை உணவும் முடிந்தது. தர்மேந்திரன் குடும்பமும் சிதம்பரம் குடும்பமும் புறப்பட்டு சென்றது. கீர்த்தி மட்டும் மகனுடன் தங்கிக் கொண்டாள்.

வரவேற்பரையில் இருந்தனர் அனைவரும்.

“என்ன பிளான்ல இருக்கீங்க விஷ்ணு?” எனக் கேட்டான் பிரவாகன்.

“மிருணாவுக்கு ரெண்டு நாள்ல ஹைதராபாத் போகணுமாம், நாளைக்கு சென்னை கிளம்பலாம்னு இருக்கோம்” என்றான் விஷ்ணு.

“ரிஷப்ஷன் எதுவும் வேணாமா?” நேர்காணலில் கேள்வி கேட்பது போல கேட்டான்.

“அண்ணா… இப்போதைக்கு பிளான் பண்ண வேணாமே” என்றாள் மிருணா.

‘ஏன்?’ என பார்வையால் கேட்டான்.

“அது… என்னவோ வேணாம்னு தோணுது”

“உனக்கு எல்லாம் தோணும், அம்மா டேட் பார்த்து சொல்வாங்க. ஃப்ரீ பண்ணிக்க” என முடிவாக சொல்லி விட்டான்.

“என்னிக்கு கிளம்பணும், ஃப்ளைட் டிக்கெட்ஸ் போட சொல்றேன். இல்லைனா ஜாகுவார்லேயே கிளம்புங்க, காரை நீங்களே வச்சுக்கோங்க. அடையார்ல இருக்க வீட்ல எல்லா ஏற்பாடும் பண்ண சொல்லிட்டேன்” என்றான் பிரவா.

“ரிஷப்ஷன் மட்டும் உங்க விருப்ப படி செய்ங்க, மத்தது நான் பார்த்துக்கிறேன். மிருணாவை நல்லா வச்சுக்க முடியும் என்னால” என்றான் விஷ்ணு.

ஏதோ விவாதம் வெடிக்க போகிறது என மற்ற பெண்கள் கவலையாக பார்த்திருக்க தங்கையின் கணவனை ஆழமாக பார்த்த பிரவா, “உங்க விருப்பம் விஷ்ணு. என் தங்கை எப்ப ‘அண்ணா என்னால முடியலை’ன்னு சொல்றாளோ அது வரைக்கும் உங்க விருப்பம்தான், அப்புறம்…” என சொல்லி ‘எல்லாம் என் விருப்பம்’ என்பதை பார்வையால் சொன்னான்.

“அண்ணா!” கண்டனமாக அழைத்தாள் மிருணா.

“இவ்ளோ சீக்கிரமாவா மிருணா?” என கிண்டலாக கேட்டான் பிரவா.

“அப்படி ஒண்ணு நடந்தா கண்டிப்பா உங்க விருப்பம்தான் எல்லாம். ஐ ப்ராமிஸ் யூ” சாந்தமான சிரிப்புடன் சொன்னான் விஷ்ணு.

“குட்!” என்ற பிரவா தன் அம்மாவை பார்த்து, “லஞ்ச்க்கு வந்திடுறேன் மா, வெளில கிளம்பறேன்” என்றான்.

இப்போதைக்கு விஷ்ணுவையும் மகனையும் ஒரு சேர இருக்க விடாமல் செய்வதே நல்லது என அரசிக்கு தோன்ற, மறுப்பாக எதுவும் சொல்லவில்லை அவர்.

மற்றவர்களிடமும் சொல்லிக் கொண்டவன் இறுதியாக மலரை பார்த்து தலையசைக்க அவளும் தலையசைத்தாள்.

பிரவாகன் வெளியேறி விட மலரும் வெளியே வந்தவள், “சீக்கிரம் வந்திடுங்க” என பிரத்யேகமாக சொன்னாள்.

காதில் விழாதது போல அவன் செல்ல, “என்னங்க உங்ககிட்டதான் சொல்றேன், கவனம் இங்க இல்லயா?” எனக் கேட்டாள்.

சட்டென நின்று அவளை பார்த்தவனின் கன்னச் சதைகளின் துடிப்பு சொன்னது அவனது கோவத்தின் அளவை.

ஏதோ சொல்ல வந்த மலர் திகைத்து அமைதியானாள். அவன் சென்று விட்டான்.

மற்றவர்கள் முன்னிலையில் இயல்பாக இருப்பவன் தனிமையில் தன்னை தவிர்க்கறான் என்பது புரிந்த மலருக்கு புசு புசு என கோவம் ஏறியது.

“சிலித்துக்கிறது பாரு… பெரிய ஜல்லிக்கட்டு காளை!” எரிச்சலோடு வாய் விட்டு சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் சென்றாள் மலர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement