Advertisement

அத்தியாயம் -20(2)

வலியில் துடித்த அணிலின் காயங்களுக்கு மருந்திட்டு, ஊசி மூலம் வலி நிவாரணி செலுத்தினார் செல்வம். மலரும் அப்பாவுக்கு உதவி செய்தாள். ஆன்டிபயாடிக் மருந்தும் செலுத்திய செல்வம் நாளை கிளினிக் கொண்டு வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்.

“ப்பா பசிக்கும்தானே இதுக்கு? எதுவும் தரவா?” அணிலின் முதுகை வருடி விட்டவாறே கேட்டாள்.

அது என்னென்ன விரும்பி சாப்பிடும் என வந்திருந்தவர் சொல்ல, வீட்டிலிருந்து தண்ணீரும் நறுக்கிய தக்காளி மற்றும் கொய்யா பழங்களும் எடுத்து வந்தாள்.

அணிலை கொஞ்சி கொஞ்சி சாப்பிட வைத்த மலரை சிரிப்புடன் பார்த்திருந்தார் செல்வம்.

அணில் சென்ற பின் கையுறை கழற்றிய செல்வம் கைகளை சுத்தம் செய்து கொண்டு மருந்துகளை எடுத்து வைக்க ஆரம்பித்தார். மலரும் கைகள் கழுவிக் கொண்டு திண்ணை வாசலில் அமர்ந்து கொண்டாள்.

அணில் சாப்பிட்டதே நினைவில் ஓடியது. கணவன் சாப்பிட்டிருப்பானா மாட்டானா என நினைத்தவள் உடனே அவனுக்கு அழைத்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே அழைப்பை துண்டித்தான். மீண்டும் அழைப்பது வீண் என்பதால் மறுபடியும் அவனுக்கு அழைக்கவில்லை.

மாமியார் இந்நேரம் உறங்கியிருக்க கூடும் என்பதால் அவரை கவனித்துக் கொள்பவருக்கு அழைத்து பேசினாள். அரசி உறங்கிக் கொண்டிருப்பதாகவும் கீர்த்தியும் அங்குதான் இருக்கிறாள் என விவரம் சொன்னார். பிரவாகன் பற்றி கேட்டதற்கு அவருக்கு அவனை பற்றி எதுவும் தெரியவில்லை.

கைப்பேசியை ஓரமாக வைத்து விட்டு அப்படியே அவள் அமர்ந்திருக்க அவள் பக்கத்தில் வந்தமர்ந்தார் செல்வம்.

“தூங்க போகலையா ப்பா?” எனக் கேட்டாள்.

“போறேன் மா. உனக்கு இப்ப எப்படி இருக்கு?” என அக்கறையாக விசாரித்தார்.

“இப்ப ஓகே ப்பா” என்றவளின் முகம் தெளிவின்றி காணப் பட்டது.

இலவச மருத்துவமனை ட்ரஸ்ட்டை பார்க்கிறாள் மகள், கொஞ்சம் சிரம படுகிறாள் என மேலோட்டமாக அவருக்கு தெரியும். அதைக் கொண்டு மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்ற கணிப்பும் அவருக்குண்டு.

“இங்க வச்சு விஷ்ணு கல்யாணம் நடந்தா உம்மேல மாப்ள கோவ படுவார்னு தெரியாதாம்மா?” எனக் கேட்டார்.

தனக்கு காலையில்தான் தெரியும், அனைவர் முன்பும் அண்ணியை சொல்ல விரும்ப வில்லை. அண்ணி விளக்கம் சொல்ல முற்பட்டதை கூட அவர் கேட்கவில்லைதானே என்றெல்லாம் சொன்னாள் மலர்.

“அகிலாவை தவிர வேற சொந்தம் வர வேணாம்னு பிடிவாதம் செய்தியே மலர்?”

“அது கல்யாணத்துக்காகன்னு நினைச்சுக்கிட்டீங்களா?”

ஆம் என்றவர், “யார் என்ன சொன்னா உன்னை?” எனக் கேட்டார்.

“எப்பவும் போலதான் ப்பா. அம்மா அவங்க கடமையை சரியா செய்றாங்களான்னு விசாரிப்புகள் வந்திட்டே இருக்கும். என் கல்யாணத்தப்போவும் நடந்தது. என் பயாலஜிகல் மதர் அம்மா கிடையாதுன்னு நினைவு படுத்திட்டே இருக்காங்க. அதனாலதான் வேணாம்னு சொன்னேன்” என்றாள்.

செல்வத்துக்கும் திடீரென முதல் மனைவியின் நினைவுகள். அப்படி நடந்திருக்க வேண்டாமே என நினைத்தவர் பெரு மூச்சு விட்டு, “உனக்கு ஏதாவது பிரச்சனையாம்மா… மாப்ள கூட…” எனக் கேட்டார்.

“இல்லையேப்பா!” வேகமாக சொன்னாள்.

அவர் மகளின் கண்களை உற்று நோக்க, ட்ரஸ்ட் சம்பந்தமாக எழும் கருத்து வேறுபாடுகள் பற்றி அவர் பயம் கொள்ளாத வகையில் மேலோட்டமாக சொன்னாள்.

“நான் சரியாதானே ப்பா நடக்கிறேன்? நல்லது செய்ய இவ்ளோ போராடணுமா?” என வருத்தமாக கேட்டாள்.

செல்வம் மகளையே ஊன்றி பார்த்திருக்க, “நினைச்சது போல எதுவும் செய்ய முடியலை. அவர் சித்தப்பாவோட குறுக்கீடு நிறைய இருக்கு. இப்ப கூட ஹவுஸ்கீப்பிங் ஸ்டாஃப்ஸ் கான்ட்ராக்ட் பேசிஸ்ல வேலைக்கு எடுக்க அரேஞ் பண்ணினேன். ஏற்கனவே வேலைல இருக்கிறவங்ககிட்ட புதுசா ஆளுங்க வர்றதால அவங்க வேலைக்கு ஆபத்துங்கிற மாதிரி பொய் பிரச்சாரம் செஞ்சு அவங்க ஸ்ட்ரைக் பண்ணி… இண்டர்வியூக்கு வந்தவங்களை… லிட்ரலி தொரத்தி விட்டுட்டாங்க” மருத்துவமனையில் கடந்த இரு நாட்களுக்கு முன் சந்தித்த பிரச்சனை பற்றி கூறினாள்.

“மாப்ளகிட்ட சொல்ல வேண்டியதுதானே ம்மா?”

“அவர் வேற வேலைல பிஸிப்பா. அவர்கிட்ட அது பத்தி பேச்சு எடுத்தாலும் எங்களுக்குள்ள சண்டையாகித்தான் போகுது. வீட்ல இது பத்தி டிஸ்கஸ் பண்ணக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். நாலு ஸ்டெப் முன்னாடி போறோம்னு நினைச்சா எட்டு ஸ்டெப் பின்னாடி போறேன்” சலிப்பாக சொன்னாள்.

“நீ பொறுப்புக்கு வந்து ஒரு மாசம் கூட முடியலையே ம்மா?”

“அதான் ப்பா, அதுக்குள்ளயே மூச்சு முட்ட வைக்கிறாங்க”

“சரி பண்ணிடலாம் டா”

“எப்படி ப்பா?”

“ஒரு காட்டுக்கு ரெண்டு பலசாலிங்க மரம் வெட்ட போனாங்க. ஒருத்தன விட இன்னொருத்தன் சளைச்சவன் இல்லை. ஆனாலும் ஒருத்தன் இன்னொருத்தன விட அதிக மரத்தை வெட்டி சாய்ச்சான். ஏன்னு தெரியுமா ம்மா?” எனக் கேட்டார்.

மலர் உதடுகள் பிதுக்க, “ஒருத்தன் பலம் முழுசையும் ஒரேயடியா பிரயோகிச்சான். ரெஸ்ட் இல்லாம மரங்களை வெட்டிகிட்டே இருந்தான். ஒரு கட்டத்துல அவனோட கோடாரி மழுங்கி போய்டுச்சு. அவனும் அலுத்து சலிச்சு போயிட்டான். இன்னொருத்தன் ஒரு மரத்தை நிதானமா வெட்டி சாய்ச்சிட்டு அலுப்பு தீர ரெஸ்ட் எடுத்தான். அடுத்த மரத்தை வெட்டுறதுக்கு முன்னாடி கோடாரில பழுது இருக்கான்னு சரி பார்த்து அதை கூர் தீட்டிக்கிட்டான். இப்போ புரிஞ்சதா ம்மா?” எனக் கேட்டார்.

அவள் தலையாட்ட, “உடனே நடக்கணும்னு வேகமா போறதால நினைச்சதை சாதிக்க முடியாதுடா, நிதானிச்சு நடக்கணும் நீ. எல்லாத்திலேயும்…” என்றார்.

அப்பாவை நெருங்கி வந்து அவர் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

“பெர்சனல் லைஃப் ப்ரொஃபஷனல் லைஃப் ரெண்டும் போட்டு குழப்பிக்கிறியோ…”

‘அப்படியா?’ என மலர் யோசனையாக, “பிறந்த வீட்ல பொண்ணுங்க தங்கறது தப்பில்ல. அவங்க விருப்ப பட்ட நேரம் வரலாம் தங்கலாம். இன்னிக்கு இந்த சூழல்ல நீ இங்க இருக்கிறது சரியாம்மா?” எனக் கேட்டார்.

“நான் அவருக்கு உண்மையா இல்லைனு அவர் சொன்னது ஹர்ட் ஆகிடுச்சு ப்பா” அப்பாவின் மடியில் தலை சாய்த்திருந்த படியே சொன்னாள்.

“அவர் பார்வையில அப்படித்தானே மலர்? இல்லைனு புரிய வைக்க நீ முயற்சி செய்யணும்தானே?”

“உடனே புரிஞ்சுக்குவாரான்னு தெரியலை. இருந்தாலும் ஆர்க்யூமெண்ட்ஸ் போகும் ப்பா. ஆம் ஃபெட் அப், பேசுறதை தள்ளிப் போட நினைச்சேன் ப்பா”

“உன் மாமியார் ஹெல்த் கண்டிஷன் யோசிக்கணும்ல மலர் நீ? நாளைக்கு விஷ்ணு மிருணா அங்க வரும் போது உன் பொறுப்பு என்னன்னு யோசிக்கலையா ம்மா? மாப்ள கூட விவாதிக்க விருப்பம் இல்லைனா அவர்கிட்ட ‘இன்னிக்கு வேணாம், மனசுல எனர்ஜி இல்லை’னு சொன்னா கேட்ருக்க மாட்டாரா?” என அவர் கேட்க, நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள் மலர்.

“இன்னிக்கு விருந்துக்கு மாப்ள வரவே போறதில்லன்னு பயந்து போய்தான் இருந்தேன். நீ கூப்பிட்டதும் வந்திட்டார்தானே? அவருக்கு நீ தேவை படறப்போ அவர் கூட போகாம இருந்தா சரியாம்மா?”

தந்தையின் கண்களை சந்திக்க இயலாமல் இலக்கின்றி பார்த்தாள். இந்த திருமண பந்தத்தை நல்ல வழியில் கொண்டு செல்வதாக தீர்மானம் செய்துதானே அவனுடன் வாழ ஆரம்பித்தாள். ஆத்மார்த்த தம்பதிகள் போல அந்நியோன்யம் பெருகி விடவில்லை என்ற போதும் கணவன் என்ற நினைப்பு உள்ளுக்குள் இருக்கிறதுதானே?

அவன் எப்படி திருமணம் செய்து கொண்டான் என்பதை மறக்கவில்லை, ஏன் செய்து கொண்டான் எனும் காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் திருமணத்திற்கு பின் துன்புறுத்தலாக எதையும் அவன் செய்ததில்லை. வார்த்தைகள் கொண்டு முட்டி மோதி சண்டையிட்டுக் கொண்டாலும் முதலில் அவன்தான் இறங்கி வந்திருக்கிறான்.

அவன் பின்பற்றும் கொள்கைகள், நினைத்த செயலை நடத்தி முடிக்க எந்த எல்லைக்கும் செல்லும் அடாவடித்தனங்கள் இவற்றில் துளியும் உடன்பாடில்லை. இவற்றை இவன் மாற்றிக் கொள்ள வேண்டும் எனதான் நினைக்கிறாள். மற்றபடி திருமணத்திற்கு முன்பிருந்த வெறுப்புதான் இப்போதும் இருக்கிறதா?

 யாருமறியா பிரவாகனை அவள் அறிவாளே. இந்த நிமிடத்தில் மனசாட்சியிடம் கேட்டு பார்க்கிறாள். வேறு வழியின்றிதான் அவனுடன் வாழ்ந்து வருகிறாளா? அப்படியா அவன் தன்னை நடத்துகிறான்? தீவிர அலசலில் இருந்தாள் மலர்.

“நாம செய்ற எல்லாமே சரியா இருக்கும்னு யாருமே நினைக்க கூடாதுடா கண்ணம்மா. விரும்பிதானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? நல்லா இருக்கீங்கன்னுதான் நானும் நினைச்சிட்டு இருக்கேன். யாருக்கும் வரக்கூடாத பெரும் துயரத்தை கடந்து வந்தவன், எம்புள்ளைங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம். சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் உங்க உறவை பாதிக்க விடக்கூடாது மலர்” என்றார்.

“அப்பா!” ஏதோ செய்தி தாங்கி அழைத்தாள் மலர்.

“அடேய்… காலைல போலாம். இப்போதானே சொன்னேன் அவசர படக்கூடாதுன்னு” என்றார்.

“ஈவ்னிங் வேற தூங்கிட்டேன் ப்பா. இனிமே எனக்கு தூக்கம் வராது. அவரும் தூங்கல ப்பா” என்றாள்.

“பேசினியா?”

“இல்ல கால் கட் பண்ணிட்டார். கோவமா இருக்கார்” என்றாள்.

“விடிஞ்சதும் போய்டலாம் மலர்”

மலர் அரை மனதாக, கொஞ்சம் ஏமாற்றம் சுமந்த முகத்தோடு தலையாட்ட செல்வத்துக்கு பொறுக்க முடியவில்லை. பரத்திடம் மட்டும் சொல்லிக் கொண்டு அவரது இரு சக்கர வாகனத்தில் மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement