Advertisement

பேரன்பு பிரவாகம் -20

அத்தியாயம் -20(1)

இந்த சமயத்தில் புகுந்த வீடு செல்லாமல் இங்கு ஏன் தங்கினாய் என விமலா மலரை திட்டிக் கொண்டிருந்தார்.

“அவளுக்கு ஏதோ முடியலை, ஒண்ணும் சொல்லாத. போடா மலர், தூங்கி எழுந்து வா” சின்ன மகளிடம் சொன்ன செல்வம் பெரிய மகளை அவளை கவனிக்கும் படி சொன்னார்.

தலைவலி மாத்திரை கொண்டு வந்து கொடுத்தான் பரத். வேண்டாம் என மறுத்து விட்டாள். அக்காவின் நெற்றியில் தைலம் இட்டு இதமாக தடவிக் கொடுக்க ஆரம்பித்தான் பரத்.

தங்கை அருகில் அமர்ந்திருந்த அகிலா ஆதரவாக கையை பிடித்துக்கொண்டாள். மெல்ல மெல்ல உறங்கிப் போனாள் மலர்.

மிருணாவை அவளது புகுந்த வீட்டில் விட்ட கீர்த்தி தன் மகள்களை கணவனோடு அனுப்பி வைத்து விட்டு ஹ்ருதிக் மட்டும் தன்னோடு அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தாள்.

அப்போதுதான் மலர் இங்கு வரவில்லை என்பது அவளுக்கும் தெரிந்தது. அரசி குறையாக சொல்ல, “மிருணாவை விட சின்ன பொண்ணு ம்மா. ஹாஸ்பிடல்லேயும் நிறைய ஃபேஸ் பண்றா” என மலருக்கு ஆதரவாக பேசினாள்.

“அப்ப அவ வராம போனது சரிங்கிறியா? மிருணாவோட கல்யாணத்தை இப்படி பண்ணி வச்ச உன்னை சொல்லணும், அத வச்சுத்தான் ரெண்டு பேருக்கும் சண்டையா இருக்கணும். உன்னாலதான் எல்லாம்”

“அப்ப அவன் சண்டை பிடிக்க வேண்டியது என்கிட்ட, மலர்கிட்ட இல்லை”

“மலர்தான் இங்க வரவே இல்லையே”

“இன்னிக்கு அங்க இருக்கட்டும், நாளைக்கு காலையிலேயே நான் மலர்கிட்ட பேசுறேன். எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா. இவனுக்கும் கோவம் கொஞ்சம் குறையும். மிருணா இங்க வர்றதுக்கு முன்னாடி மலர் வந்திடுவா. நான் இன்னிக்கு இங்கேயே இருக்கேன்” என்றாள் கீர்த்தி.

“வேணாம் வேணாம், அதான காலைல மலர் வருவான்னு சொல்றியே. புள்ளைங்கள விட்டுட்டு என் கூட எதுக்கு இருக்க? உன் மாமியார் மாமனார்கிட்ட வேற மிருணா கல்யாணம் பத்தி சொல்லணும். நீ கிளம்பு” என்றார் அரசி.

அம்மாவுக்கு இன்று உடல்நிலை முடியாமல் போனதை கண் கூடாக பார்த்தவளுக்கு அப்படி விட்டு செல்ல மனமில்லை. மிருணா கூட அம்மாவை பற்றி மிகவும் கவலையாக பேசியிருக்க, நான் அம்மாவுடன் இருப்பேன் என சொல்லித்தான் அங்கிருந்து கிளம்பினாள்.

மகளின் எண்ணம் புரிந்தது போல, “எப்பவுமே ஏறி இறங்குற ப்ரெஷர்தானே? யாருமில்லாம தனியாவா இருக்கேன். கூடவேதான் கேர் டேக்கர்ஸ் இருக்காங்களே” என அரசி சொல்லியும் கீர்த்தி அங்கேயே தங்கி விட்டாள்.

மகன் உறங்கிய பின் தம்பியை காண சென்றவள் மலருக்கு முன் கூட்டியே இத்திருமண திட்டம் பற்றி தெரியாது என எடுத்து சொன்னாள்.

அக்காவின் மீதும் கோவமாக இருந்தவன் அமைதியாக இருக்க, “விஷயம் தெரிஞ்ச உடனே உன்கிட்ட சொல்லியிருந்தா கல்யாணம் நடந்தே இருக்காது. அப்பவும் மலர் செஞ்சது தப்புன்னு மிருணா விஷ்ணுலாம் நினைப்பாங்க. இந்த கல்யாணம் வச்சு நீ அவ கூட சண்டை போடக்கூடாது பிரவா. தட்ஸ் நாட் ஃபேர்” என்றாள்.

அக்காவின் முகத்தை கூட பார்க்கவில்லை அவன். கீர்த்தி அவனருகில் வந்து வாஞ்சையாக அவனது தலை கோதி கொடுக்க பட் என அக்காவின் கையை தட்டி விட்டான். மனம் தளராமல் மீண்டும் தலை கோதி விட்டவள் மீண்டும் கை தட்டி விட வந்தவனின் கையை பற்றிக் கொண்டு, “கொஞ்சமாவது மாறுடா” என்றாள்.

“மிருணாவும் இந்த வீட்டு வாரிசு. நியாயமா அவளுக்கு கிடைக்க வேண்டியதை ஏன் வேணாம்னு விஷ்ணு வீம்பு பிடிக்கணும்? இவ்ளோ ஹை கிளாஸ் சொசைட்டில பிறந்து வளர்ந்திட்டு அவ ஏன் கஷ்ட படணும்?” எனக் கேட்டான்.

“நீ அவங்களுக்கு பிரஷர் கொடுத்த. விஷ்ணுவோட அப்பாவை கைக்குள்ள போட்டுக்கிட்டு விஷ்ணுவுக்கு எதிரா பிளே பண்ணின. இந்த விஷயத்துல உன்கிட்ட பேசினா பலன் பூஜ்யமாதான் இருக்கும்னு தெரிஞ்சதாலதான் நானும் ஹெல்ப் பண்ணினேன்”

“நோய்ல குழந்தை மருந்து சாப்பிட மறுத்தா அப்படியே விடணுமா? மல்லுகட்டி வாய்ல ஊத்தி விடுறதில்லையா? நான் ஹேண்டில் பண்ற விதம் உங்களுக்கு பிடிக்காம போகலாம். ஆனா நான் சரியாத்தான் எல்லாம் செய்றேன். உன் விஷயத்துல அப்பா என்ன செஞ்சாரோ அதையேதான் அவர் இடத்திலிருந்து என் தங்கைக்கு செய்ய நினைக்கிறேன். இன்னிக்கு உன் ஃபேமிலில உன் கை ஓங்கி இருக்கிறதாலதான் உன் இன் லாஸ் பத்தி பயப்படாம இங்க நைட் ஸ்டே பண்ற. உன் முடிவுகளை சுதந்திரமாக நீ எடுக்கிற? உன் கையை அப்படி ஓங்கி நிறுத்தி வச்சிருக்கிறது அப்பா. மிருணாவுக்கும் அப்படி ஒரு லைஃப் தான் அமைச்சு தர நினைச்சேன். அமைச்சு தருவேன்” என்றான்.

“குகன் ஒத்து வந்த மாதிரி விஷ்ணுவும் ஒத்து வரணும்னு என்னடா இருக்கு? என் சொத்து மதிப்புதான் என் இன் லாஸ் கிட்ட மதிப்பு மரியாதைய வாங்கி தருதா? மே பீ அவங்க அப்படி இருக்கலாம். ஆனா எனக்கு குகன் ஃபுல் சப்போர்ட் செய்வார், அதனாலதான் என்னால சுதந்திரமா இருக்க முடியுது” என்றாள்.

“மாமா இன்னிக்கு இருக்க பொசிஷன் உன்னால வந்தது, ஐ மீன் உனக்காக அவருக்கு அப்பா ஏற்படுத்தி கொடுத்தது”

“மாமா என்கிட்ட அன்பா இருக்க காரணம் அதான்னு சொல்றியா நீ?”

“அவர் அன்பை தடையில்லாம பெத்தவங்க முன்னாடி கூட பயமில்லாம காட்ட அதான் காரணம். உன்னை யாரால என்ன செய்ய முடியும் அங்க? ஒரு பொண்ணுக்கு அப்படி ஒரு புகுந்த வீட்டை எல்லாராலேயும் அமைச்சு தர முடியுமா? உன்னை போல மிருணாவும் சுதந்திரமா நிம்மதியா வாழணும்னு நீ நினைக்கல”

“ஓஹோ! மலருக்கு இங்க எதை வச்சு மதிப்பு?”

“எல்லாரும் பிரவாகன் இல்லை. நான் எல்லாத்திலேயும் விதி விலக்கானவன். பிரவாகனோட வைஃப் ங்கிற தகுதி போதும் அவளுக்கு”

“ஸ்டுபிட் ஆ இருக்குடா நீ பேசுறது” என கீர்த்தி சொல்ல, அலட்சியமாக தோள்களை குலுக்கினான்.

“உன் எண்ணம் தப்புன்னு விஷ்ணு உனக்கு புரிய வைக்கலாம் இல்லயா? பொண்ணோட சொத்து இல்லை புகுந்த வீட்ல அவளுக்கான மரியாதை, அவ சுதந்திரத்தையும் நிம்மதியையும் அவ வீட்டு வசதி தீர்மானிக்கிறது இல்லை. சீக்கிரம் புரிஞ்சுப்ப. மலரை காலைல வர சொல்றேன், தூங்கு” என சொல்லி வெளியேற எத்தனித்தாள்.

“அவ இங்க வர யாரும் சிபாரிசு செய்ய தேவையில்லை. நீ சொல்லித்தான் அவ இங்க வரணும்னா வர தேவையுமில்லை. என்னை இன்னும் கோவமாக்காத க்கா” என்றான்.

“இப்படியே இருடா மாறிடாத! ஒரு நாள் இல்லை ஒரு நாள்… உன்னோட வறட்டு பிடிவாதமும் வானத்தை முட்டுற கோவமும் உன்கிட்ட ஒண்ணும் இல்லாம எல்லாத்தையும் பறிச்சுக்க போகுது”

“தேங்க்ஸ் ஃபார் த கர்ஷ்!” என பிரவா சொல்ல கோவமாக வெளியேறி விட்டாள் கீர்த்தி.

எப்போது தனிமை கிடைக்கும் என காத்திருந்த மிருணா விஷ்ணுவின் அறைக்கு வந்ததுமே அழ ஆரம்பித்து விட்டாள்.

மனைவியை மென்மையாக தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், “கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கலாம் மிரு, வாழ்க்கையில ஒண்ணா அடி எடுத்து வச்சப்புறம் எப்பவுமே செகண்ட் தாட்ஸ் வரக்கூடாது. இத இப்படி தவிர வேற எப்படியும் நடத்தியிருக்க முடியாது. கொஞ்ச நாள் ஆனதும் எல்லார் கோவமும் குறையும், அப்புறம் கொஞ்ச நாள்ல கோவம் மொத்தமா மறைஞ்சு போயிடும்” என்றான்.

மெல்ல மிருணாவின் அழுகை மட்டுப் பட, தன் மார்பில் கிடத்தியே அவளை உறங்க செய்து தானும் உறங்க முற்பட்டான்.

மலர் கண் விழித்த போது அறை இருட்டாக இருந்தது. மின் விளக்கை போட்டு விட்டு நேரம் பார்த்தாள். பத்தை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தன. ரெஃப்ரெஷ் செய்து கொண்டு வெளியில் வந்தாள். அகிலா அவளது கணவன், குழந்தை எல்லாம் உறங்க சென்றிருந்தனர். பரத் படித்துக் கொண்டிருந்தான்.

மெலிதான சத்தத்தில் டிவி பார்த்துக் கொண்டே இவள் எழுவதற்காக உறங்காமல் காத்திருந்த விமலா மகளை சாப்பிட சொன்னார். சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு அம்மாவின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டு முடித்தாள்.

மற்றது காலையில் பேசலாம் என நினைத்த விமலா, “உடனே படுக்காத, அப்பா வர்ற வரை டிவி பார்க்கிறதுன்னா பாரு, எனக்கு டயர்டா இருக்கு” என சொல்லி உறங்க சென்று விட்டார்.

டிவியை அணைத்து விட்டு அப்பாவிடம் சென்றாள். வெளியில் இருக்கும் அறையில் அடி பட்டு வந்திருந்த அணில் ஒன்றுக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தார் செல்வம். அந்த வளர்ப்பு பிராணியின் உடைமைக்காரர் கவலையாக தென் பட்டார். அவரது அக்கா மகன் தெரியாமல் சின்ன மூன்று சக்கர சைக்கிள் கொண்டு விபத்தை ஏற்படுத்தியிருந்தான் என விவரம் சொன்னார்.

Advertisement