Advertisement

அத்தியாயம் -19(2)

“தாலி பிரிச்சு கோர்த்திருக்கு. இப்படியா அமளி துமளி ஆகணும்? மனசே சரியில்லை எனக்கு” என்ற விமலாவின் கண்கள் கலங்கிப் போயின.

தேவகியும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்க, “மலர் கிளம்பு, அவனை அழைச்சிட்டு வா” என அவள் மறுக்க முடியாத படி சொன்னாள் கீர்த்தி.

அரை மனதோடு மலர் எழ, “வா நான் அழைச்சிட்டு போறேன்” என்ற விஷ்ணு அவன் அப்பாவிடம் கார் சாவியை பெற்றுக் கொண்டான்.

“நீ எதுக்குடா?” ‘நீ போக வேண்டாம்’ என்ற பொருள் அடங்க கேட்டார் தேவகி.

“என் தம்பிய மலர் சமாளிப்பா. அப்படியே ஏதாவது சச்சரவு ஆனாலும் என் வீட்டுக்காரர் மலரோட அக்கா வீட்டுக்காரரால எல்லாம் சிச்சுவேஷனை சரியா ஹேண்டில் செய்ய முடியாது அத்தை. விஷ்ணு போறதுதான் சரியா இருக்கும்” என்றாள் கீர்த்தி.

“இவ கிடக்கிறா ம்மா, நீ போய் உன் மச்சானை அழைச்சிட்டு வாடா விஷ்ணு” என கோபால் சொல்ல, பற்களை நெறித்தான் விஷ்ணு.

மிருணா கலக்கமாக கணவனை பார்க்க, “மலருக்கு துணைக்குத்தான் போறேன். சண்டையெல்லாம் போட மாட்டேன். ரிலாக்ஸ்” என அவளிடம் சொல்லி நகர்ந்தான் விஷ்ணு.

கார் சென்று கொண்டிருக்கையிலேயே பிரவாகன் வீட்டில்தான் இருக்கிறான் என தமனிடம் பேசி உறுதி படுத்திக் கொண்டாள் மலர்.

“இன்னிக்கு வேற ஆர்க்யூமெண்ட்ஸ் வேணாம் மலர். உன் பேரெண்ட்ஸ் ரொம்ப பயந்து போயிருக்காங்க. அரசி அத்தை கூட டென்ஷன்ல இருக்காங்க. அவங்களுக்காக எப்படியாவது அவரை சரி கட்டி அழைச்சிட்டு வர பாரு. நான் மன்னிப்பு கேட்கணும்னு அவர் நினைச்சாலும் ஆம் ஓகே வித் இட்” என்றான்.

“அண்ணா, அவருக்கு அவ்ளோலாம் இடம் கொடுத்தா உங்களை அவர் இஷ்டத்துக்கு ஆட வச்சிடுவார். எனக்கு துணைக்கு வர்றீங்க, அதையே மெயின்டெயின் பண்ணுங்க. அவர்கிட்ட பேச வேணாம் நீங்க” என மலர் சொல்ல விஷ்ணு சன்னமாக சிரித்தான்.

“என்ன, எதுக்குண்ணா இந்த சிரிப்பு?”

“எங்க ஸாஃப்ட் மலர் குட்டிக்கே இவ்ளோ கோவம் வருதுன்னா மிருவை நினைச்சு பார்த்தேன்” என்றான்.

மலரும் சிரித்தவள், “கல்யாணம் ஆன அன்னிக்கே கவலையா? அதெல்லாம் நீங்க சமாளிப்பீங்க” என்றாள்.

இப்படி இலகுவாக பேசி பேசியே பிரவாகனின் வீடு வருவதற்குள் மலரின் மன நிலையை ஓரளவு அமைதியாக்கியிருந்தான் விஷ்ணு.

விஷ்ணுவை வரவேற்பறையில் அமர வைத்து பணியாளை அழைத்து குடிக்க கொடுக்குமாறு சொல்லிக் கொண்டிருந்தாள் மலர்.

“ஓ மலர், இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் நான் பார்ப்பேனா? போ உன் ஹஸ்பண்ட்டை பாரு” என விஷ்ணு சொல்ல, கணவனை தேடிக் கொண்டு சென்றாள் மலர்.

அவர்களின் படுக்கை அறைக்கு பக்கத்து அறையில்தான் இருந்தான். இவள் உள்ளே செல்ல அவள் வந்ததை அறிந்தும் கண்டு கொள்ளாமல் மும்முரமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் தெரிந்த ஆக்ரோஷம் மலரை கலவர படுத்தியது.

இரண்டு நிமிடங்கள் அமைதியாக நின்றவள் அவன் கையிலிருந்த ஜாய் ஸ்டிக்கை “என்கிட்ட கொடுங்க” என சொல்லி பறித்துக் கொண்டாள்.

“வாட்?” அலட்சியமும் கோவமுமாக கேட்டான்.

“சாரி, வெரி சாரி!” என்றாள்.

“வாவ்! என் பொண்டாட்டி எனக்கு எதிராவே நடந்துகிட்டு பெரிய அவமானத்தை எனக்கு ஏற்படுத்தி கொடுத்திட்டு…” என்றவன் ஒரு விரல் காட்டி “சாரி” என சொல்லி இன்னொரு விரல் காட்டி “வெரி சாரி” என சொல்லி, “ரெண்டு வார்த்தையில சரி செய்யலாம்னு நினைச்சியா?” எனக் கேட்டான்.

அவனது அம்மாவுக்கு இரத்த அழுத்தம் உயர்ந்ததை சொன்னால் ஒரு வேளை உடனே புறப்பட்டு வரலாம் அல்லது அங்கு வந்து விஷ்ணுவால்தான் என் அம்மாவுக்கு இப்படி ஆனது என இன்னும் பிரச்சனை செய்யலாம். அவன் என்ன செய்வான் என்பது புரியாத காரணத்தால் அரசியை பற்றி எதுவும் சொல்லாமல் அவன் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு புன்னகைத்தாள்.

அவளின் நெருக்கத்தை கண்களால் சுட்டிக் காட்டி கேலியாக சிரித்தவன், “உன் கூட சமாதானமா போறதுக்கும் லிமிட்ஸ் இருக்கு மலர். பெட்டர் ஸ்டே அவே ஃப்ர்ம் மீ” என்றான்.

அவன் கையை பிடித்துக்கொண்டு, “இந்த மேரேஜ் இப்படி நடந்ததுல உங்களுக்கு வருத்தம்னு தெரியும். இப்படி நடக்க என்ன காரணம்னு கொஞ்சம் யோசிங்க. எம்மேல கோவம்னா நிஜமா சாரிங்க. உங்களுக்கு உண்மையா இல்லைனு எல்லாம் சொல்லாதீங்க” என்றாள்.

“வேற என்ன சொல்ல? எனக்கு தெரியாம என் தங்கச்சி கல்யாணம் நடத்தி வைக்கிற அளவுக்கு எங்கேருந்து துணிச்சல் வந்தது உனக்கு?” எனக் கேட்டான்.

இந்த திருமண ஏற்பாடு குறித்து அவளுக்கே இன்று காலையில்தான் தெரியும். மிருணாவும் கீர்த்தியும் பேசிக் கொள்வதை இவளும் பரத்தும் எதேச்சையாக கேட்க நேரிட்டு விட்டது.

ஆனால் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல பேசி அவனிடம் கீர்த்தியையே முழு குற்றவாளி ஆக்க விரும்பாதவள், “தாலி பிரிச்சு கோர்க்கிற ஃபங்ஷன் நடந்திருக்கு. இப்படி நீங்க கோச்சுக்கிட்டு வந்துட்டீங்கன்னு அம்மா அப்பாலாம் ஃபீல் பண்றாங்க. நாம அப்புறமா பேசலாமே” என்றாள்.

அவன் ஜாய் ஸ்டிக் கையில் எடுத்து கொண்டு மீண்டும் வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தான்.

வலிக்க ஆரம்பித்த தலையை அழுத்திக் கொடுத்துக் கொண்டாள் மலர்.

“என்ன?” என அவன் கேட்டதற்கு உச்சு கொட்டினாள்.

ஒரு முழு நிமிடம் அமைதியாக கழிய, “சரி வா போலாம்” என்றான்.

அவள் நம்ப முடியாமல் பார்க்க, “உனக்கு நான்தான் ஹெட் ஏக் தர்றதா நீ நினைக்கிற, நிஜத்துல நீயேதான் வரவச்சுக்கிற. டேப்லெட்ஸ் எதுவும் வேணுமா?” எனக் கேட்டான்.

“இல்லை, தேவையில்லை. சீக்கிரம் அங்க போலாம்” என சொல்லி எழுந்து கொண்டாள்.

வரவேற்பறையில் விஷ்ணுவை பார்த்தவன், “அப்புறம் மாப்ள, நீங்க வந்திருக்கீங்கன்னு உங்க உடன் பிறவா சிஸி சொல்லவே இல்லை. கல்யாணம் முடிஞ்சு முத முதல்ல வீடு வரும் போது இப்படி தனியாவா வர்றது? வெரி பேட்” என சொல்லி, மலரிடமும், “நீயாவது சொல்லியிருக்கணும் இதெல்லாம். யாருக்கும் சம்பிராதயமே தெரிய மாட்டேங்குது” என்றான்.

விஷ்ணு மலரின் முகத்தை பார்க்க அவள் கண்களை சுழற்றி ‘மயக்கம் வருகிறது, மேலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருங்க அண்ணா’ என்ற செய்தியை பார்வையில் பரிமாற்றம் செய்தாள்.

“வாங்க போலாம், விருந்தாவது என் தங்கையோட சேர்ந்து சாப்பிடுங்க” என சொல்லி முன்னே நடந்தான் பிரவாகன்.

“நான் அவர் கூட வர்றேன் ண்ணா. நீங்க வாங்க” என விஷ்ணுவிடம் சொல்லி விட்டு கணவன் பின் சென்றாள் மலர்.

செல்வத்தின் வீட்டு ஹால் நீளமான உணவு மேசையும் பெஞ்சுகளும் போட்டு விருந்து சாப்பிட தயாராக இருந்தது. அனைவரும் பிரவாகனின் வருகைக்குத்தான் காத்திருந்தனர்.

அங்குதான் வந்து கொண்டிருப்பதாக விஷ்ணு அறிவிப்பு செய்திருக்க அம்மாவை எழுப்பி அவருக்கு முடியாமல் போனது பற்றியெல்லாம் தம்பியிடம் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து வைத்தாள் கீர்த்தி.

காரிலிருந்து இறங்கிய மாப்பிள்ளையை கை பிடித்து வரவேற்றார் செல்வம்.

“என்ன மாமா நீங்க, புது மாப்பிள்ளை வரட்டும். அவருக்குதானே வரவேற்பு பலமா இருக்கணும்” என்றான் பிரவா.

என்ன எதிர் வினை ஆற்றுவது என புரியாமல் அவர் மகளை பார்க்க, அவளுக்கும் கணவனின் மனவோட்டம் புரயாததால் குழம்பிப் போய்தான் நின்றிருந்தாள்.

விஷ்ணு வரவும் அவன் கை குலுக்கி, “கங்கிராஜெலேஷன்ஸ் விஷ்ணு!” என வாழ்த்தி அவன் தோளில் கை போட்டு, “வாங்க…” என ஆர்ப்பாட்டமாக உள்ளே அழைத்து சென்றான் பிரவா.

ஹால் வரவும் தன் தோள் மீதிருந்த பிரவாகனின் கையை நாசூக்காக விலக்கி விட்ட விஷ்ணு, அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக “நேரடியான மோதலுக்கு எப்பவும் தயாரா இருக்கேன். உங்க தந்திரங்களை விட்ருங்க” என்றான்.

சத்தமாக சிரித்த பிரவாகன் பயந்து போய் விழித்த மிருணாவின் அருகில் சென்று அமர்ந்து, “உன் ஹஸ்பண்ட்டோட சென்ஸ் ஆஃப் ஹியூமர் சூப்பர். குட் சாய்ஸ் மிருணா” என்றான்.

“என்ன ண்ணா ஆச்சு உனக்கு?” கவலையாக கேட்டாள் மிருணா.

“கோவ பட்டாலும் கூடாது சமாதானமா சகஜமா இருந்தாலும் ஆகாதுன்னா நான் என்னதான் செய்வேன் மிருணா?” என்றவன், “விருந்து ஸ்டார்ட் பண்ணலாமே?” என மலரை பார்த்து சொன்னான்.

விஷ்ணு, மிருணா, மலர், பிரவாகன் என அடுத்தடுத்து அமர்ந்திருக்க பிரவாகன் பக்கத்தில் கோபால் உட்கார்ந்து கொண்டார். இதற்குள் ஹரியையும் அவன் மனைவி ஸ்வேதாவையும் வரவழைத்திருந்தார் தேவகி.

மலரின் பிறந்த வீட்டினர் பரிமாற, மற்றவர்கள் சாப்பிட்டனர்.

“என் பையன் தெரியாம இப்படி செஞ்சிட்டான் தம்பி, பெரிய மனசு பண்ணி அவனை மன்னிக்கணும்” என ஆரம்பித்தார் கோபால்.

‘ஐயோ இவர் வாய்ல நாலு வடைய வச்சு திணிங்களேன்’ என உள்ளுக்குள் சத்தமாக அலறினாள் மலர்.

“மறப்போம் மன்னிப்போம் மாமா” என அலட்டலாக பிரவாகன் சொல்ல, அசடு வழிய சிரித்தார் கோபால்.

“குடும்ப அரசியல் பத்தி என் தங்கைக்கு ஒண்ணும் தெரியலை. அதுவும் மூணு பசங்க மூணு மருமகள்னு உள்ள மிடில் கிளாஸ் குடும்பத்துல எவ்ளோ சில்லியா பாலிடிக்ஸ் நடக்கும்னு அவ புரிஞ்சுக்கிட்டா அவ அண்ணனையும் புரிஞ்சுப்பா” என்றான்.

ஸ்வேதா தன் கணவனை பார்க்க, “அமைதியா சாப்பிடு” என்றான் அவன்.

எரிச்சலடைந்து சாப்பிடுவதை நிறுத்தியிருந்த விஷ்ணுவை பார்வையால் கெஞ்சி சாப்பிட வைத்தாள் மிருணா.

‘என்ன சொல்ல வருகிறான் இவன்?’ என புரியாமல் விழித்தார் கோபால்.

விஷ்ணுவையும் மிருணாவையும் கீர்த்தியும் அவள் கணவனும் மணமகன் வீட்டில் விட்டு வர கிளம்பினார்கள். அடுத்த நாள் தங்கள் வீட்டுக்கு வரும் படி முறையாக அழைப்பு விடுத்தான் பிரவாகன்.

மலரின் மனம் சோர்ந்து போயிருந்தது. மற்றவர்களுக்கு பிரவாகன் ஓரளவு சமாதானம் அடைந்து விட்டான் என்ற தோற்றம் ஏற்பட்டாலும் அப்படி காட்டிக் கொள்கிறானே தவிர பெரிய அளவில் பாதிக்க பட்டிருக்கிறான் என்பதை அவளால் உணர முடிந்தது.

மீண்டும் இது பற்றி விவாதம் எழுமோ என நினைத்தவளுக்கு எதிர் கொள்ள சலிப்பாக இருந்தது. மருத்துவமனை மற்றும் குடும்ப விவகாரங்கள் எல்லாம் அவளை திணற வைத்தன. தற்சமயம் அவளுக்கு ஆசுவாசமாக மூச்சு விட்டால் போதும் என்ற நிலை.

புது மண மக்கள் கிளம்பியதும் புறப்பட தயாராக அம்மாவுடன் அமர்ந்திருந்த பிரவாகன் மலரை வர சொல்லும் படி விமலாவிடம் சொன்னான்.

 மலரின் காதிலும் விழ அங்கு வந்தவள் மாமியாரை பார்த்து, “ரெண்டு நாள் இருந்திட்டு வர்றேன் அத்தை” என்றாள். சிறு பார்வை கூட கணவனிடம் கொண்டு வரவில்லை.

“அதில்லம்மா…” அரசி ஏதோ சொல்ல வர, “அக்கா ரெண்டு நாள்ல போயிடுவா. அவ கூட இருந்திட்டு வர்றேன். ப்ளீஸ் அத்தை” என்றாள்.

அடுத்த நாள் மிருணாவை வர சொல்லியிருக்க மருமகளின் இந்த செயலில் அதிருப்தி கொண்டவர் மறுத்து ஏதோ சொல்ல வர, “அம்மா கிளம்பலாம்” என சொல்லி எழுந்து நின்றான் பிரவாகன். அந்த குரல் அரசியை வேறு பேச விடாமல் எழ வைத்தது.

மகளின் இந்த முடிவை பற்றி அவளது புகுந்த வீட்டினர் முன்பு எதுவும் கேட்க விரும்பாமல் கையை பிசைந்து கொண்டு நின்றார் விமலா.

யாரிடமும் விடை பெற்றுக் கொள்ளாமல் வாயில் வரை சென்று விட்ட பிரவாகனின் கை பற்றி, “மாப்ள நீங்க…” என ஏதோ பேசத் தொடங்கினார் செல்வம்.

“நீங்க பேச வேண்டியது என்கிட்ட இல்லை, உங்க பொண்ணுகிட்ட” என்ற பிரவாகன் வேகமாக வெளியேறியிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement