Advertisement

பேரன்பு பிரவாகம் -19

அத்தியாயம் -19(1)

மலர் நீட்டியிருந்த அட்சதை தட்டில் இருந்து யாரும் அட்சதை எடுத்துக் கொள்ளவில்லை.

“இவங்க கல்யாணம் நடக்கிறதுல எல்லோருக்கும் விருப்பம் இருந்ததுதானே? அப்புறம் பேசிக்கலாம், முதல்ல பிளெஸ் பண்ணுங்க” என்றாள் மலர்.

அரசியின் கண்களில் இருந்து கண்ணீர் விழ, அம்மாவின் தோள் பிடித்த கீர்த்தி, “இப்படி நடக்கலைன்னா இப்போதைக்கு அவளுக்கு கல்யாணம் நடக்கிறதே டவுட் ஆகிடும். ஆசிர்வாதம் பண்ணும்மா” என்றாள்.

அரசிக்கு வருத்தமும் வேதனையும்தான். ஆனாலும் கடைக்குட்டி பெண், இவள் பிறந்த பிறகுதான் அடியோடு வெளி வேலைகளை விட்டொழித்து இவளுக்காகவே வீட்டோடு இருந்தார். இவளுக்கு பத்து வயது நிறைந்த பிறகுதான் கொஞ்சமாக மருத்துவமனை நிர்வாகம் கவனிக்க ஆரம்பித்தார். சமீப காலமாக இவளது திருமணம் பற்றிய கவலைதான்.

எதிர் பாராத திருமணம் என்றாலும் ஆசி கேட்டு வணங்குபவளை கண்டு பெற்ற மனம் கனிந்தது. அட்சதையை கையில் எடுத்து மண மக்களை மனமார வாழ்த்தினார். அவரே வாழ்த்திய பிறகு மற்ற பெரியவர்கள் யோசிக்கவில்லை. கோபால் மட்டும் மனதில் மகிழ்ந்தாலும் ஓரக் கண்ணால் பிரவாகனை பார்த்தார். அவன் முகம் கடு கடு என இருந்தது.

ஆசி வாங்கிய பின் விஷ்ணுவும் மிருணாவும் எழுந்து கொண்டனர். அம்மாவிடம் சென்று அவரை கட்டி அணைத்துக் கொண்ட மிருணா, “சாரி ம்மா, வேற வழி தெரியலை எங்களுக்கு” என்றாள்.

“ஆயிரம் பேரை வர வழைச்சு ஆடம்பரமா வியாபார கல்யாணம் செய்றது விட இப்படி சிம்பிலா மனசுக்கு பிடிச்ச பொண்ணை உங்க எல்லார் முன்னாடியும் கல்யாணம் செய்றது சரின்னு பட்டது, யாரும் தப்பா நினைக்காதீங்க எங்களை” என்றான் விஷ்ணு.

“உன் அண்ணனுங்க குடும்பம் இல்லையேடா இங்க” ஆதங்கமாக சொன்னார் தேவகி.

“விமல் மாமா வீடியோ எடுத்திருக்காங்க ஆன்ட்டி, அட்வென்ஜர் மேரேஜ் செய்றப்போ இப்படி எதையாவது மிஸ் பண்ண வேண்டியதா போயிடுது” என சத்தமாக சொன்ன பரத், தேவகியை நெருங்கி அவர் காதில், “அவங்களை எல்லாம் வரவச்சிருந்தா பிரவாகன் மாமா முன்னாடியே ஸ்மெல் பண்ணியிருப்பார். அதனாலதான் அவங்கள கூப்பிடல” என்றான்.

மலரும் பரத்தும் இதற்கு உடந்தை என்பதில் என்ன பிரச்சனை வருமோ என பயந்து போயிருந்த செல்வம் தனது சின்ன மாப்பிள்ளையை கவலையாக பார்த்தார்.

“கொஞ்ச நேரம் அமைதியா இரு பரத்!” என மகனை கண்டித்தார் விமலா.

தம்பியிடம் எடுத்து சொல்லி அவனது கோவத்தை குறைக்கலாம் என நினைத்த கீர்த்தி, தன் மகள்களிடம் அவர்களது தம்பியையும் அகிலாவின் மூன்று வயது மகளையும் அழைத்துக் கொண்டு வெளியில் காம்பவுண்டிற்குள்ளேயே விளையாடுமாறு சொல்லி அனுப்பி வைத்தாள்.

“வெளில பசங்க விளையாட போறாங்க பாரு, கூட இருந்து பார்த்துக்க” என சொல்லி பரத்தையும் வெளியேற்றினாள் மலர்.

தன்னருகில் வந்த அக்காவை பார்த்து குற்றம் சொல்வது போல புன்னகை செய்த பிரவா மனைவி பக்கத்தில் வந்து நின்றான்.

திட்ட போகிறான் என மலர் பார்க்க, அவளை முறைத்துக் கொண்டே அவளது கையில் இருந்த தட்டிலிருந்து அட்சதை எடுத்துக் கொண்டவன், “எங்க ஆசீர்வாதம்லாம் வேணாமா?” என விஷ்ணுவை பார்த்து கேட்டான்.

“டேய்!” கீர்த்தி அதட்ட, “க்கா என் கால்ல விழவா சொன்னேன்? வா நீயும் மாமாவும் கூட வந்து நில்லுங்க” என அக்காவிடம் சொல்லி குகனை பார்த்தான்.

கீர்த்தி பக்கம் ஓடோடி வந்த குகன் மனைவியை அழைத்துக் கொண்டு பிரவாகனின் பக்கத்தில் போய் நின்றான்.

அம்மாவின் பக்கத்தில் நின்றிருந்த தங்கையை பார்த்த பிரவா, “ஏன் மிருணா, நான் பிளெஸ் பண்ண வேணாமா?” எனக் கேட்டான்.

அண்ணன் கேட்ட தொனியே அவளை குற்றம் சொல்வது போலிருந்தது. கூடவே மெல்லிய வருத்தம் தெரிந்தது. ஓடி வந்து அண்ணனை கட்டிக் கொண்டாள்.

“உன்னாலதான் அண்ணா இப்படி” அண்ணனை குற்றம் சொன்னாள்.

“எனக்கு எதிரா இப்படி ஒரு கல்யாணம் பண்ற அளவுக்கு உனக்கு வந்த தைரியம் என்னாலதான்னு சொல்றியா?” அட்சதை இருந்த வலக் கையை இறுக மூடி கோவத்தை அடக்கிக் கொண்டவன் இடக் கை கொண்டு மிருணாவின் தலையை கோதி விட்டுக் கொண்டே கேட்டான்.

தான் இன்னும் கொஞ்சம் பொறுமையாக பேசி அண்ணன் மனதை மாற்ற முயற்சித்திருக்க வேண்டுமோ என அவளுக்கு தோன்ற அழுகை பெருகியது.

“போதும் பிரவா, இன்னிக்கு அவ கல்யாணம் நடந்திருக்கு. எதுக்காக அவளை எமோஷனலா வீக் ஆக்குற?” எனக் கேட்டாள் கீர்த்தி.

கணவனை பார்வையால் கடிந்து கொண்ட மலர், மிருணாவை தன் கணவனிடமிருந்து பிரித்து விலக்கி நிறுத்தினாள்.

மலரை பார்த்து எரிச்சலை அடக்கிக் கொண்டு பிரவா சிரிக்க, “வாங்க ண்ணா அண்ணி கூட சேர்ந்து நில்லுங்க” என விஷ்ணுவிடம் கூறினாள் மலர்.

புது மணத் தம்பதிகள் சேர்ந்து நிற்க தன் அக்கா, அக்காவின் கணவர் இருவரையும் அருகில் வரும் படி கண்களால் சொன்னாள் மலர்.

அனைவரும் அவர்களுக்கு அட்சதை தூவ, கண்கள் கோவத்தில் சிவந்திருக்க தாடை கடினப் பட அப்படியே நின்றிருந்த பிரவாகனின் மூடியிருந்த வலது கை முஷ்டியை திறக்க வைத்து, “ம்ம்…” என அட்சதை இட வற்புறுத்தினாள் மலர்.

மலரை ஒரு முறை முறைத்து விட்டு மண மக்களுக்கு அட்சதை இட்டான் பிரவாகன்.

‘தங்கள் மகளுக்கு ஏன் இந்த அதிகப் படியான வேலை?’ எனதான் மலரின் பெற்றோர் நினைத்திருந்தனர்.

எதுவும் சொல்லாமல் வாயில் நோக்கி பிரவாகன் நடக்க, விமலா தன் கணவனிடம் ஏதோ சொன்னார்.

மாப்பிள்ளை நோக்கி விரைந்து வந்த செல்வம், “விருந்து இன்னும் முடியலைங்க மாப்ள, பாதியில போனா எப்படி? வாங்க, ரூம்ல ரெஸ்ட்டா இருங்க கொஞ்ச நேரம்” என்றார்.

“எந்தங்கச்சியோட கல்யாணம் முடிஞ்சிருக்கு, வேலை நிறைய இருக்குமே மாமா எனக்கு. இப்போ போய் ரெஸ்ட் எடுக்க சொல்றீங்களே…” எனக் கேட்டான் பிரவா.

“உங்களுக்கு அப்படிலாம் சிரமம் தரக் கூடாதுன்னுதான் இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டேன், எந்த வேலையும் இழுத்து விட்டுக்காதீங்க” என்றான் விஷ்ணு.

“எப்படிங்க மாப்ள சார், நீங்க இருக்க அந்த சிங்கில் பெட் ரூம் ஃப்ளாட்ல என் வீட்டு இளவரசி கூட குடும்பம் பண்ணுவீங்களா? நீங்கதான் மாப்ளன்னு முன்னாடியே நான் முடிவு செய்ததாலதான் இந்த மேரேஜ் செல்லுப்படி ஆகியிருக்கு. எதுவும் பண்ண முடியாம சைலன்ட்டா இல்லை நான். எனக்குள்ள கொஞ்சம் நல்லவன் உயிரோட இருக்கான் அண்ட் மிருணா என் தங்கை. அவ முடிவை சரியா ஆக்கித் தர வேண்டிய கடமை எனக்கிருக்கு. அதனால…” பிரவாகன் பேசிக் கொண்டிருக்க இடை மறித்தாள் மலர்.

“அதனால என்ன… என்னங்க இப்போ? ஏன் இவ்ளோ அரகன்ஸி? அவங்க லைஃப அவங்கள வாழ விடாம உங்க இஷ்டத்துக்கு அவங்களை ஆட்டி வைக்க ஏன் நினைக்குறீங்க? ப்ளீஸ் இன்னிக்கு நாளை ஸ்பாயில் பண்ணாதீங்க” என்றாள் மலர்.

“உன்கிட்ட பேசல மலர் நான். இப்படி ஒண்ணை உன்கிட்டருந்து நான் எதிர்பார்க்கல. நாம பேச வேண்டியதை அப்புறம் பேசலாம்” என்றான்.

“இல்லங்க…”

“என்ன தைரியம் இருந்தா என்கிட்ட சொல்லாம மறைச்சிருப்ப நீ?” பிரவாகன் கோவத்தில் கத்த, மகள் பக்கத்தில் வந்து நின்ற விமலா அவளை ‘மேலும் ஏதும் பேசாதே!’ என பார்வையால் எச்சரித்து அடக்கினார்.

“உங்களுக்கு கோவம்னா என்கிட்ட காட்டுங்க, மலர் மேல தப்பில்ல” என்றான் விஷ்ணு.

“மிஸ்டர் புது மாப்பிள்ளை… எங்க விஷயத்துல…” என்ற பிரவா தன் மூக்கை ஆள் காட்டி விரலால் தொட்டுக் காட்டி, பின் விஷ்ணுவை சுட்டிக் காட்டி, “அடி பட்ரும், வேணாம்” என்றான்.

பிரவாகன் நடத்தை மற்றும் பேச்சில் தேவகி பிடித்தமின்மையை பார்வையால் காட்ட, “பிரவா!” என கண்டனத்தோடு அழைத்தார் அரசி.

“அட்சதை தூவி அக்ஸெப்ட் பண்ணிட்ட ல்லம்மா? இனிமே நான் பார்த்துக்கிறேன். கத்தி உன் பிரஷர் ஏத்திக்காத” என அம்மாவின் வாயை அடைத்தவன், கோபாலிடம், “எங்க வீட்டு மருமகன் எப்படி நடந்துக்கணும்னு சொல்லி கொடுங்க” என்றான்.

“தம்பி சொல்ற படி கேளு டா விஷ்ணு” என்ற தன் தந்தையை பார்வையால் எரித்தான் விஷ்ணு.

“என் பொண்டாட்டியையும் என் அக்காவையும் எனக்கெதிரா திருப்பி தந்திரமா மேரேஜ் பண்ணிகிட்டு பெரிய நேர்மையானவன் மாதிரி ட்ராமா பண்ணாதீங்க மாப்ள சார்” விஷ்ணுவிடம் காய்ந்தான் பிரவா.

“என்னங்க…” மலர் தன் கணவனை சமாதானம் செய்ய நினைக்க, “உன்னை இப்போ பேசாதன்னு சொன்னேன்” அவளிடம் அழுத்தமாக கூறினான்.

“ப்ளீஸ் பிரவா, இவ்ளோ கோவம் வேணாம். நான் எக்ஸ்பிளைன் பண்றேன் உனக்கு…” தம்பி தோள் மீது கை வைத்து தன்மையாக பேசினாள் கீர்த்தி.

“முடிஞ்சு போனதை பத்தி என்னக்கா எக்ஸ்பிளைன் பண்ண போற நீ?”

“நான்தான் உனக்கு தெரியாம இருக்கணும்னு மலர்கிட்ட சொன்னேன். நீ கோவ படறதா இருந்தா என்கிட்ட கோவ படு” என்றாள் கீர்த்தி.

“நீ சொன்னா அவ கேட்கணுமா? யார் எது சொன்னாலும் கேட்பாளா? அவ எனக்குதான் உண்மையா இருக்கணும்” என்றான்.

“உண்மை அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தைலாம் யூஸ் பண்ணாத பிரவா” என்றாள் கீர்த்தி.

யார் சொல்வதையும் கேட்க தயாராக இல்லாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறியிருந்தான் பிரவாகன்.

அடுத்து என்ன செய்வது என அங்கு சங்கடமான சூழல் நிலவியது.

 “வீடியோலாம் எடுத்தீங்களே… நீங்களும் கூட்டா பாஸ்?” என விமலிடம் சின்ன குரலில் கேட்டான் குகன்.

“ஐயோ ஜி! என் மச்சான் அவன் ஃபோனை கையில கொடுத்து டென் மினிட்ஸ் விடாமல் வீடியோ எடுங்க, ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னான். இப்படி ஒரு சர்ப்ரைஸ் எதிர்பார்க்கல நான். குட்டி பிசாசு என்னை இப்படி கோர்த்து விட்ருக்கான்” என புலம்பினான் விமல்.

சோர்ந்து போயிருந்த அரசி இருக்கையில் உட்கார்ந்திருந்த நிலையில் அப்படியே சாய்ந்து விட்டார். அவருக்கு பயங்கரமாக வியர்த்து கொட்டியது. இப்போது கவனமெல்லாம் அரசியின் பக்கம் திரும்பி விட்டது.

வீட்டிலிருந்த பி பி அப்பாரட்டஸ் எடுக்க விரைந்தாள் மலர். விமலாவும் மகளை பின்பற்றி வந்தவர், “ஏன் மலர் உன் வீட்டுக்காரருக்கு தெரியாம இப்படி பண்ணின? எல்லாம் போய் நீ அவர்கிட்டருந்து மறைச்சிட்ட அப்படிங்கிறதுதான் பெருசாகிடுச்சு. உன் மாமியாருக்கு அப்படி வேர்த்து விடுது, ஏதாவது ஆனா… ஐயோ கடவுளே!” என அனத்தினார்.

அம்மாவுக்கு பதில் தராமல் ஹால் வந்த மலர் பதற்றமாக தெரிய, விஷ்ணுதான் அரசியை பரிசோதனை செய்தான். இரத்தக் கொதிப்புதான் உயர்ந்திருக்கிறது என சொல்லி அவரது மாத்திரைகள் இருந்த பையிலிருந்து அப்போதைக்கு போட மாத்திரை கொடுத்தான். அவனது யோசனை படி அரசியை அறை ஒன்றில் ஓய்வெடுக்க வைத்தனர்.

அம்மாவுடன் இருந்த கீர்த்தி, “விஷ்ணு மாப்பிள்ளை ஆகணும்னு நினைச்சதானே ம்மா? அதானே நடந்திருக்கு. பெருசா விமரிசையா கல்யாணம் நடக்கலைன்னு நினைக்காத, மிருணாவை எப்படி வச்சுக்க போறார்னு மட்டும் பாரு” என சமாதானமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

மகள் பேசியதில் தெம்பாக உணர்ந்தவர் கண்களை மூடிக் கொண்டார். அவர் உறங்கியதும் ஹால் வந்தாள் கீர்த்தி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement