Advertisement

பேரன்பு பிரவாகம் -17

அத்தியாயம் -17(1)

அன்புமலர் இலவச மருத்துவமனை அறக்கட்டளையின் அறங்காவலராக பொறுப்பேற்று விட்டாள். இப்படி ஒன்றை எதிர்பார்த்திராத தர்மேந்திரனும் ஏகாம்பரமும் திகைத்துப் போயினர்.

அவள்தான் புதிய அறங்காவலர் என முறையாக அறிமுகம் செய்து விட்டு உடனே தன் வேலைகளை பார்க்க கிளம்பி விட்டான் பிரவாகன். உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் இருந்தாள் மலர்.

இந்த அறக்கட்டளை குழுவில் உள்ளவர்கள் அனைவரும் சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள். பிரவாகன் மூலமாக அவர்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள், அதற்கு பிரதிபலனாக இங்கு தங்களது கடமைகளை அவனது கட்டளை படி செய்வார்கள்.

பிரவாகன் பதவி நீங்கி அந்த இடத்திற்கு மலர் வந்தது உறுப்பினர்களுக்கு அதிர்ச்சிதான் என்றாலும் பெரிதாக கவலைகள் இல்லை. வேலைப் பளு காரணமாக மனைவியை இப்படி இங்கு விட்டு விட்டான் என நினைத்துக்கொண்டனர்.

“இந்த பொண்ணு ஏற்கனவே இங்க நிறைய பிரச்சனை செய்ததா கேள்வி பட்டேனே, பிரவாகன் சார் இருக்கிற வரை தர்மேந்திரன் சார் சொல்றதை முடிவா நாம எடுப்போம், அதை பிரவா சார் ஓகே பண்ணுவார். இனிமே எதுவும் மாற்றம் இருக்குமோ?” என ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினரிடம் ரகசியமாக கேட்டார்.

“அட நீங்க வேற… பெண்கள் தொகுதியில வேற வழியில்லாம லேடிஸ்தான் எலெக்ஷன்ல நிப்பாங்க. ஏதோ ஒரு பொண்ணுதான் ஜெயிச்சு பதவிக்கு வரும். ஆனா பவர் யார் கைல இருக்கும்?” எனக் கேட்டார் மற்ற உறுப்பினர்.

“அந்த பொண்ணோட புருஷன், அப்பா, அண்ணன், மகன் இப்படி யார் கையிலயாவதுதான் இருக்கும்”

“அதேதான் இங்கேயும். சும்மா உப்புக்கு சப்பாணிங்க இந்தம்மா. எதுவும் மாறல” நக்கலாக சொல்லிக் கொண்டார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய மலர் இனி இங்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என எது வாங்குவதாக இருந்தாலும் அதற்கான முறைகள் ஒழுங்கான முறையில் நடக்க வேண்டும் என சொன்னாள்.

கீர்த்தியின் கணவன் குகனின் நிறுவனம்தான் இங்கு பல காலமாக சப்ளை செய்வதாக சொன்ன ஒரு உறுப்பினர், “நீங்க எந்த கஷ்டமும் பட வேணாம் மேடம். எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். உங்களுக்கு எந்த வேலையும் இல்லை, கையெழுத்து போட்டா போதும்” என்றார்.

அவரை அழுத்தமாக பார்த்தவள், “இங்க சொந்த பந்தங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. அதெப்படி எல்லா முறையும் அவருக்கே கான்ட்ராக்ட் கிடைக்கும்?” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் தர்மேந்திரன் சார் பார்த்துக்குவார். சில சமயம் குகன் சார் கம்பெனிக்கு டைரெக்ட்டா கான்ட்ராக்ட் போகும். சில சமயம் வேற கம்பெனிக்கு போகும், அவங்க இவங்க பினாமியா இருப்பாங்க” என சொல்லப் பட்டது.

மாதாந்திர செலவு என காட்டப் படும் தொகையை சரி வர கணக்கில் ஏற்ற மாமாவை உபயோகித்துக் கொண்டிருந்தான் பிரவாகன். அதாவது இங்கிருந்து எந்த பணத்தையும் எடுப்பதில்லை, செலவீனத்தில் கூடுதலாக கணக்கு காட்டப் படும். இது தடையில்லாமல் நடக்க வெளியாட்களை நம்பாமல் குகனுக்கே எல்லா முறையும் கான்ட்ராக்ட் கிடைக்கிறது.

இப்போது சர்ஜிகல் ஐட்டங்களின் கான்ட்ராக்ட் கூட கோபாலுக்கு கிடைக்க போவதும் தெரிய வந்தது.

இதுவரைக்குமே கணக்கு வழக்கில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கும் என்பதில் மலருக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.

“இதுவரைக்கும் எப்படியோ இனி அப்படி கிடையாது. ட்ரஸ்ட் நேர்மையான முறையில செயல்படத்தான் நாம எல்லாரும் இருக்கோம். அடுத்த முறை எந்த கான்ட்ராக்ட்டா இருந்தாலும் தர்மேந்திரன் சார் தலையீடு இருக்க போறதில்லை. டெண்டர்ஸ் அனவுன்ஸ் பண்றதிலேருந்து கொட்டேஷன்ஸ் கலெக்ட் பண்றது, கிரைட்டீரியாஸ் லிஸ்ட் வச்சு ஷார்ட் லிஸ்ட் பண்றது, தகுதியானவங்களுக்கு கான்ட்ராக்ட் கொடுக்கிறதுன்னு செலக்ட் பண்றது வரை எல்லாமே முறையா நடக்கணும்”

“மெடிக்கேஷன்ஸ் வந்த பிறகு கூட குவாலிட்டி செக்கிங் சரியா நடக்கணும். எல்லாத்துக்கும் கிரைடீரியாஸ் இருக்குதானே? ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணுங்க., இதுக்கான மெடிக்கல் டீமும் ஃபாலோ பண்ணுவாங்க. இது வரைக்கும் முடிஞ்சத என்னன்னு நான் பார்த்துக்கிறேன், இனி நடக்க போறது சரியா இல்லைனா…” சொல்லி விட்டு அனைத்து உறுப்பினர்களையும் பார்வையை சுழற்றி பார்த்தாள்.

அந்த ஹால் அமைதியாக இருக்க, “ரூல்ஸ் ஃபாலோ பண்ணாதவங்களை போர்ட் லேருந்து நீக்க முடியும். எதை செய்யவும் தயங்க மாட்டேன் நான்” என்றாள்.

உறுப்பினர்களுக்குள் சல சலப்பு எழுந்தது. சட்ட திட்டங்களுக்கு என இருந்த புத்தகத்தை கையில் எடுத்து காட்டியவள், “கிளம்பறப்போ இந்த ரூல்ஸ் புக் எல்லாருக்கும் ஒரு காபி கொடுக்க சொல்லியிருக்கேன். என்ன செய்யலாம் செய்யக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கோங்க” என்றாள்.

சின்ன பெண், அனுபவம் சுத்தமாக கிடையாது, அசட்டுத் தனமாக நல்லது செய்கிறேன் என அதிரடியாக ஏதாவது செய்வாள், அங்கு சுரண்டல் செய்பவர்கள் பாதிக்க படுவார்கள், மற்ற படி அனைத்தும் பிடிப்பட்டு பெரிதாக எதுவும் செய்வதற்குள் வருடம் ஆகி விடும். நான் என்னென்ன அங்கு நடக்க வேண்டும் என சொல்லியிருக்கிறேனோ அதில் பெரிதாக மாற்றங்கள் வரப் போவதில்லை என நினைத்திருந்தான் பிரவாகன்.

மலர் சொன்னது எல்லாம் பிரவாகன் காதுக்கு வர நெற்றியை நீவி விட்டுக் கொண்டு யோசனை ஆனான்.

“நான்தான் அப்பவே சொன்னேனே சார், மேடத்தை தப்பா எடை போட்ருக்கீங்க. இன்னும் ஐ டி பெனிஃபிட்ஸுக்காக நாம செய்ற சில அட்ஜஸ்ட்மெண்ட்சையும் கண்டு பிடிச்சு ஆப்பு வைக்க போறாங்க” என்றான் தமன்.

தமனை தன் பார்வையால் எதுவும் பேச விடாமல் அடக்கியவன், “விடு பார்த்துக்கலாம்” என சொல்லி அந்த பேச்சையே விட்டு விட்டான்.

இரவில் பிரவாகன் வீடு சென்ற போது உறங்க தயாராகிக் கொண்டிருந்தாள் மலர். அவனை பார்த்ததும் புன்னகை செய்தாள். அவனது மூளை சோர்வாக இருக்க அவளின் புன்னகை உற்சாகத்தை வர வழைத்தது. குளித்து வந்தவன் தலை கூட துவட்டாமல் பாத் ரோப் உடன் சோபாவில் சரிந்து விட்டான்.

“ஏன் இவ்ளோ டயர்ட்?” கேட்டுக் கொண்டே அவனை லேசாக நிமிர்த்தி அமர வைத்து தலை துவட்டி விடலானாள்.

மருத்துவக் கல்லூரியின் என் ஆர் ஐ மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பாக மெனெக்கேட்டுக் கொண்டிருக்கிறான். அது தொடர்பாக சென்னை சென்று திரும்பியிருந்தான்.

அவளிடம் எதுவும் சொல்லாமல் அவள் மீது சாய்ந்துக் கொண்டான்.

“சாப்பிட்டுட்டு சாயலாம்” என்றவள் விலகி, இரவு ஆடையை அவனிடம் கொடுத்து விட்டு அறைக்கு உணவு எடுத்து வருமாறு பணியாளுக்கு சொன்னாள்.

உணவு வந்த பின் ஆடை மாற்றியிருந்தவன் சாப்பிட வர, அவனுக்கு பரிமாறியவள் அவனுக்கு முன்னாலேயே அமர்ந்து கொண்டாள்.

“நீ சாப்பிட்டியா மலர்?”

“அத்தையோடு சேர்ந்து சாப்பிட்டுட்டேன், அண்ணி பசங்கள அழைச்சிட்டு வந்திருந்தாங்க. மஹிமாக்கும் மஹிஷாக்கும் யார் ஸ்கின் டோன் ஃபேர் னு சண்டை. ஜட்ஜ் ஹ்ருதிக். ஸ்கின் டோன் வச்சு என்ன சண்டைனு அண்ணி ரெண்டு பேருக்கும் நல்லா டோஸ் கொடுத்தாங்க. வீடு அவ்ளோ கல கலப்பா இருந்தது. அவங்க கிளம்பினதும் அப்படியே சைலன்ட் ஆகிடுச்சு” என கதை சொன்னாள்.

மனைவியை சாப்பிடுகிறானா உணவை சாப்பிடுகிறானா என தெரியாத வகையில் கண்களை அவளிடமிருந்து அகற்றவில்லை. அவனை செல்ல கண்டனத்தோடு பார்த்தவள் அவன் தலையை குனிய செய்து உணவை பார்க்க வைத்தாள்.

தட்டை தள்ளி வைத்தவன் அடக்கப் பட்ட குறும்பு சிரிப்புடன் அவளையே பார்க்க, “சாப்பிட்டதும் பார்ப்பீங்களாம்” என்றவளும் குறும்பாக சிரித்தாள்.

‘என்னா வாழ்க்கைடா இது! இவ்ளோ நாள் வேஸ்ட் பண்ணிட்டேனே’ எனதான் அவனுக்கு தோன்றியது.

இப்போது மருத்துவமனை சமாச்சாரங்களை பேசி இனிமையை கெடுத்துக் கொள்ள விரும்பாமல், “வீடு கல கலப்பு போச்சுன்னு ஏன் கவலை படுற மலர்? நாம இன்னும் கொஞ்சம் ஹார்ட் ஒர்க் பண்ணினா சீக்கிரம் வீட்டை பெர்மனெண்ட்டா கல கலப்பாக்கிடலாம்” என சொல்லிக் கொண்டே சாப்பிடுவதை தொடர்ந்தான்.

ஈ என இளித்தவள், “எனக்கு பி ஜி பண்ணணும், அது வரை தடா” என்றாள்.

“சொல்லவே இல்லை நீ” என்றவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, கண்களை சுருக்கி அழுத்தமான குரலில், “என்ன பண்ணிட்டு இருக்க நீ?” எனக் கேட்டான்.

அவள் மௌனம் காக்க, “ஆன்சர் மீ மலர்!” என அதட்டினான்.

அவனை தைரியமாக பார்த்தவள், “பர்த் கண்ட்ரோல் பில்ஸ்” என்றாள்.

கையில் இருந்த ஸ்பூனை தட்டில் போட்டவன், “யாரை கேட்டு போட்டுக்கிற நீ?” என கோவமாக கேட்டான்.

மலர் பதில் சொல்லாமல் இருக்க, எழுந்து கொண்டவன் அறைக்குள் நடை போட்டான்.

உணவு மேசையில் இருந்த அனைத்தையும் எடுத்து பணியாளை அழைத்து கொடுத்தனுப்பியவள் உள் அறையில் இருந்த படுக்கைக்கு செல்ல, அவளை படுக்க விடாமல் பிடித்துக்கொண்டான்.

“என்கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்கணும் நீ. இட்ஸ் ஓகே, இனிமே அந்த பில்ஸ் வேணாம். எனக்கு பேபி வேணும்” என்றான்.

“டிஸ்கஸ் பண்ற அளவுக்கு அப்போ நமக்குள்ள எதுவும் சரியா இல்ல. சொன்னா சரியான விதத்துல புரிஞ்சுக்குவீங்களான்னும் தெரியலை. எப்பவுமே மறைச்சு வைக்க நினைக்கல நான். அதனாலதான் இப்ப சொன்னேன்” என்றாள்.

உள்ளுக்குள் எதையோ நினைத்துக்கொண்டு தலையாட்டிக் கொண்டவன், “இட்ஸ் ஓகே, இனிமே செய்யாத. அந்த டேப்லெட்ஸ் கொடு, டிஸ்போஸ் செய்திடலாம்” என கை நீட்டினான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement