Advertisement

அத்தியாயம் -16(2)

யாரென அவன் கேட்க அவளது அக்கா கணவரது தாத்தாவின் நண்பர், அவர் ஒரு வக்கீல் என்றாள்.

“உன்னை ஏமாத்தி ஏதாவது சிக்கல்ல மாட்டி விடுவேன்னு டவுட்டா?” கோவமாக கேட்டான்.

“உங்களுக்கு ஃபேவர் பண்ணிக்காம எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு பார்த்துக்கிறேன். முன் ஜாக்கிரதை” என்றாள்.

“மலர்…” பற்கள் கடிபட அவளது பெயரை உச்சரித்தான்.

“ஒய் டென்ஷன்? நோ டென்ஷன்”

“இதை செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. உன் நோக்கம் சரிங்கிறதாலேயும் நீ என்கிட்ட கேட்டதை உனக்கு செஞ்சு தரலாம்னு நான் பிரிய பட்டதாலேயும் மட்டும்தான் நடக்குது இது”

“என்னாச்சுன்னு இப்ப கத்துறீங்க?”

“என்னை நம்பாம வயசான வக்கீல் தாத்தாவை நம்புவியா?”

“அதிகமா யோசிக்காதீங்க, மெடிக்கல் ஹெல்ப்னா டாக்டர்கிட்ட போற மாதிரி லீகல் மேட்டர்ஸை லாயர்கிட்ட கேட்டுக்கிறேன்” என்றவள் அவனது கையை சலுகையாக பிடித்து தோளில் சாய்ந்து கொண்டாள்.

“கோவம் வர்ற மாதிரி நடந்துகிட்டு இது என்ன இப்போ?”

“பிடிக்கலைனா போங்க…” என சொல்லி விலகப் போனவளை மீண்டும் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

“ஃபைவ் டேஸ்ல ட்ரஸ்ட்டீ ஆகிடுவ, ஹேப்பி?” எனக் கேட்டான்.

“ம்ம்… உடனே அங்க ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணனும், ஃபண்ட் எப்படி யூஸ் ஆகுதுன்னு டிரான்ஸ்பரன்சி கொண்டு வரணும்…” அவள் சொல்லிக் கொண்டிருக்க, தன்னிடமிருந்து அவளை தள்ளி நிறுத்தி விட்டு கடினமாக பார்த்தான்.

“என்ன?”

“ட்ரஸ்ட்டீ ஆக்க கேட்டுகிட்ட, செய்து தர்றேன், தட்ஸ் இட்! அதுக்கு மேல உன் சமத்து, எதிலேயும் என்னை தலையிட சொல்லாத. என் ஃபோகஸ் எல்லாம் இப்ப ஜே சி ஐ வாங்குறதுல இருக்கு. வேணும்னா செர்டிஃபிகேஷன் வாங்கின அப்புறம் நீ கேட்கிறதை செய்ய பார்க்கிறேன்” என்றான்.

“ஹப்பா… உங்க ஜே சி ஐ யை கட்டிக்கிட்டே அழுவுங்க”

“அழுவறதா?” எனக் கேட்டு சத்தமாக சிரித்தவன், “என்னை அழ வைக்கிற சக்தியெல்லாம் உலகத்துல யாருக்கும் எதுக்கும் கிடையாது” என்றான்.

“ஏன் உங்கப்பா இறந்தப்போ அழாம சிரிச்சிட்டு நின்னீங்களா?” கிண்டலாக கேட்டாள்.

“ம்ம்ம்…” அவளை அழுத்தமாக பார்த்தவன், “யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுக்க, இப்ப பாதில விட்டுட்டு போன மசாஜ் கம்ப்ளீட் பண்ணு” என்றான்.

“அதான் குளிச்சிட்டீங்களே? இன்னொரு நாள் பார்க்கலாம்”

“வா மலர், எனக்கு உன் கூட இருக்கணும், அதுக்கு ஏதோ ஒரு ரீசன்” என சொல்லி கையோடு அவளை அவர்களின் அறைக்கு அழைத்து சென்று விட்டான்.

அன்றைய இரவே தற்போதைய ட்ரஸ்ட்டீயான அவன் அவனது பொறுப்பிலிருந்து நீங்குவது தொடர்பாக அவனிடம் கையெழுத்துக்கள் பெறவென வக்கீலோடு வந்தான் தமன்.

அந்த வேலையை முடித்த பின், தமனிடம் ஏதோ பணித்து வெளியே அனுப்பி விட்டு வக்கீலோடு எதை பற்றியோ தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தான்.

பிரவாகனை இரவு உணவுக்காக அழைக்க அங்கு வந்த மலர் அவனது அலுவலக அறைக்கு செல்லப் போக, “யாரும் டிஸ்டர்ப் செய்ய வேணாம்னு சொல்லியிருக்காங்க மேடம் எம் டி சார்” என சொல்லி வெளியிலேயே அவளை தடுத்து நிறுத்தினான் தமன்.

“எனக்கே தடையா? அவருக்கு தெரிஞ்சா உங்களை திட்டுவார் தமன்” என்றாள் மலர்.

“இங்க வீட்ல இருக்க ஆஃபீஸ் ரூம்க்கு வேற வெளியாள் யார் வரப் போறாங்க மேடம்? நீங்க வர வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுதான் என்னை இங்க நிறுத்தியிருக்கார். சார் சொல்லாத எதையும் நான் செய்ய மாட்டேன், ப்ளீஸ் புரிஞ்சு கோஆபரேட் பண்ணுங்க மேடம்” என்றான்.

“கிண்டலுக்கு கேட்பேன், இப்ப நிஜமோன்னு தோணுது”

“என்னங்க மேடம்?”

“உங்க பாஸ் கள்ள கடத்தல் செய்றாரா? இல்ல வெபன்ஸ் எதுவும் டெரரிஸ்ட்டுக்கு சப்ளை செய்றாரா? இல்ல இதுக்கும் மேல வேற ஏதாவது…”

“ஐயோ மேடம்! சார் அப்படிப்பட்டவர் இல்லை”

“ஆமாம் ரொம்ப நேர்மையானவர்தான் உங்க சார்” நக்கலாக சொன்னாள்.

“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வச்சிருக்கார் சார். முழு நல்லவன் யாரு மேடம் இந்த உலகத்துல?”

“உன் அரைகுறை நல்லவன் அப்படி என்ன எனக்கு தெரியாம டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கார்னு தெரிஞ்சே ஆகணுமே” என்றவள் தமன் எதிர்பார்க்கா நொடியில் கதவை திறக்க முற்பட, உள்ளிருந்து தாழிடப் பட்டிருந்த கதவு அவளை ஏமாற்றியது.

மலர் கதவு திறக்க சென்றதுமே அதிர்ந்திருந்த தமன், அப்படி அவளால் செய்ய முடியாமல் போனதை கண்ட பின் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசம் அடைந்தான்.

மூடியிருந்த கதவில் ஓங்கி ஒரு அடி வைத்தவள் தமனை முறைத்து விட்டு சென்று விட்டாள். அவள் சென்ற சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட, வக்கீல் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

நெட்டி முறித்த பிரவாகன், “என்னடா பொழப்பு இது? ஆ ஊ ன்னா மூஞ்ச தூக்குறா, போய் தொலைன்னு விடவும் முடியலை. இப்ப எனக்கு தெரியாம என்னடா உன் டொக்கு ன்னு கேட்டு சண்டை போடுவா” என்றான்.

“சார்?”

“கதவை அடிச்சிட்டு போனது அவதானே? உன்னால அவளை ஸ்டாப் பண்ண முடியாதுன்னு அடிக்கடி ப்ரூவ் பண்ற மேன்”

“உங்களால முடியும்னு நம்பிக்கை இருந்தா சரிதான்!” சத்தமாகவே முணு முணுத்தான்.

“தமன்!”

“ஐயோ சார்! உங்களுக்கா சார் மேடத்தை சமாளிக்க தெரியாது?”

“என்னத்த தமன்?” சலித்தான் பிரவா.

“முடியலைன்னா அப்படியே விடுங்க சார், தானா இறங்கி வருவாங்க மேடம்”

தமனின் சட்டைக் காலரை பிடித்து சரி செய்வது போல செய்தவன், “ஒரு குடும்பஸ்தன் மாதிரி அட்வைஸ் பண்ணுடா, இப்படிலாம் ஏத்தி விட்டு என் இல்லற வாழ்க்கைக்கு எண்ட் கார்ட் போடலாம்னுதானே பார்க்கிற? போ போயி நிம்மதியா தூங்கு” என்றான்.

“நீங்கதான் மேடத்தை மயக்கி வச்சுப்பேன்னு சொல்லிட்டு இருக்கீங்க, பார்த்தா அப்படி தெரியலை சார்”

“ஹ… ஹ… பசங்க சட்டுனு முடிவெடுப்பாங்க, சட்டுனு கமிட் ஆவாங்க. பொண்ணுங்க நிதானமாதான் எல்லாம் செய்வாங்க. ஆனா முடிவு பண்ணிட்டாங்க ரொம்ப டீப் ஆ உள்ள இறங்கிடுவாங்க. மலரும் அப்படித்தான் போல, நிதானமா ஆனா என்னை விட ஸ்ட்ராங்கா… ப்ச்… உனக்கு சொன்னா புரியாது தமன்”

“மேடம் பேர் சொல்லும் போது கூட வேற மாதிரி ஆகுறீங்க சார்”

“அப்படியா? அவ மேல உள்ள என் மயக்கத்துக்கும் லிமிட்ஸ் இருக்குடா. நீ கிளம்பு” என சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.

 மலர் தனியாகவே சாப்பிட்டு விட்டு சென்று விட்டதாக தகவல் வர, அவனும் தனியாகவே சாப்பிட்டு முடித்து மனைவியை எப்படி சமாதானம் செய்வது என யோசித்த வண்ணம் அறைக்கு சென்றான்.

மதுரையில் அவுட்டோர் ஷூட்டிங் முடித்து விட்டு சென்னை வந்தடைந்த மிருணாளினியை அழைத்து செல்ல இரயில் நிலையம் வந்திருந்தான் விஷ்ணு.

தான் இல்லாத நேரம் தன்னுடைய புல்லட்டை உபயோகித்துக் கொள்ளும் படி அவள் கேட்டும் மறுத்து விட்டு லோனில் கார் வாங்கியிருந்தான். காரில்தான் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

அமைதியாக வந்தவளை யோசனையாக பார்த்தவன், “நான்தான் அமைதியா இரு, வெயிட் பண்ணலாம் சொன்னேன்ல?” என்றான்.

மிருணாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அன்பு மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும், பிரவாகன் சொல் படி நடக்க வேண்டும். அவர்களின் வாழ்வு அவன் கொடுக்கும் வீட்டில்தான் ஆரம்பிக்கும் என்றெல்லாம் சொன்ன கோபால் இதற்கு ஒத்துக் கொள்ளா விட்டால் மிருணாவை மறந்து விடும் படி மகனிடம் கூறினார்.

விஷ்ணு வாதம் செய்ய, “பிரவாகன் தம்பிய எதிர்த்துகிட்டெல்லாம் அவர் தங்கையை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் ரெடி இல்லை. அவர் சொல்றதை கேட்காட்டா விட்ரு. எனக்கும் உன் அம்மாக்கும் வயசாகுது, எம்மேலதான் உனக்கு பாசமில்லை, உன் அம்மா மேல அக்கறை பாசம் இருக்குதானே? உன் கல்யாணத்தை பார்க்கணும்னு அவ சொல்றா” என்றார்.

பிரவாகனை பகைத்துக் கொள்ள முடியாது, உன் மகனை இப்படியே விட்டால் அந்த பெண்ணை மறக்க முடியாத அளவுக்கு விரும்பி விடுவான், இப்போதே இழுத்து பிடிக்கா விட்டால் மோசமாகி போகும் என்றெல்லாம் மனைவியை பயமுறுத்தினார் கோபால். தேவகியும் மகனிடம் பிரவாகன் சொல்வதை ஏற்று மிருணாவை மணம் செய் இல்லையென்றால் வேறு பெண் பார்க்கிறோம் என சொல்லி நெருக்கடி கொடுத்தார்.

அப்பாவிடம் சண்டையிட்டு சமாளிப்பவனால் அம்மாவிடம் அப்படி செய்ய முடியவில்லை. ஒரு வருடம் பொறு என ஒருவாறு சமாதானமாக சொல்லி விட்டு சென்னை வந்து விட்டான்.

“உன் அண்ணா பிளே பண்ண ஆரம்பிச்சிட்டார். என் அப்பா அவர் சொல்றதையெல்லாம் கேட்க ரெடியா இருக்கார். நாம ஒரு வருஷம் வெயிட் பண்ணலாம் மிரு” என மிருணாவிடமும் சொல்லியிருந்தான்.

அது பற்றித்தான் கவலையாக இருக்கிறாள் என நினைத்து பேசினான்.

“அம்மா அவங்க ஹெல்த் ரிப்போர்ட்ஸ் எல்லாம் அனுப்பியிருக்காங்க. எல்லாம் பயமுறுத்தற மாதிரி இருக்கு. சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்றாங்க” என்றாள் மிருணா.

“ரிப்போர்ட்ஸ் எல்லாம் உண்மையா? எங்க என்கிட்ட காட்டு. ஃபேக் ரிப்போர்ட்ஸ் ரெடி செய்றது ஒண்ணும் உன் அண்ணனுக்கு முடியாத காரியம் இல்லை” என்றான்.

“ஃபேக் ஆ இருந்தாலும் எப்படி உங்களால கண்டுபிடிக்க முடியும்?” எனக் கேட்டவள், “ஃபேக்தான்” என்றாள்.

அவன் அவளை கேள்வியாக பார்க்க, “அக்காகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்” என்றாள்.

“அப்புறம் என்ன மிரு?”

“அம்மா எமோஷனலா பேசுறாங்க விஷ்ணு. என்னை நினைச்சு கவலையா இருக்குன்னு சொல்றாங்க. வயசு ஓடுதாம்”

“விஷயத்துக்கு வா மிரு” என்றான்.

“அண்ணா கூட பேசினார். எனக்கும் சொத்துல பங்கிருக்கு, என்ன செய்யணுமோ அதைத்தான் செய்றோம், மெடிக்கல் காலேஜ்…” அவள் பேசிக் கொண்டிருக்கையில் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை முறைத்தான்.

“நீங்க அக்செப்ட் பண்ணிக்க மாட்டீங்க, எங்களுக்கு எதுவும் வேணாம்னு நான் தெளிவா சொல்லிட்டேன் விஷ்ணு” என்றாள்.

“சொல்லிட்டதானே? அப்புறம் ஏன் கவலையா இருக்க?”

“உங்களுக்கு புரியலையா? என் ஃபோகஸ் எல்லாம் போகுது. இதுவே ஸ்ட்ரெஸ் ஆகுது. கவலை படக்கூட உரிமை கிடையாதா எனக்கு?” எனக் கேட்டவளின் கண்கள் கலங்கி போயிருந்தன.

அவளை கனிவாக பார்த்தவன், “யார் வீட்டு சம்மதமும் வேணாம், நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டான்.

“நானும் அதைத்தான் யோசிச்சேன், சொன்னா திட்டுவீங்க நினைச்சேன்” என்றாள்.

புன்னகைத்தவன், “நான் என்னிக்கு கல்யாணம்னு சொல்றேன்” என்றான்.

“எப்படி முடியும் விஷ்ணு? இப்ப கூட அண்ணா ஆள் நம்மள வாட்ச் பண்ணிட்டு இருப்பாங்க. நாம இப்படி செய்ய வாய்ப்பிருக்குன்னு அண்ணாக்கு யோசனை இல்லாம இருக்குமா? இப்ப இன்னும் க்ளோஸா நம்மளை வாட்ச் பண்ண சொல்லியிருப்பார்” என்றாள்.

அவளது கன்னத்தை தட்டிக் கொடுத்தவன், “உன் அண்ணா அவர் கைலதான் இந்த உலகம் சுத்துதுன்னு இறுமாப்புல இருக்கார். இருக்கட்டும். நீ நம்ம கல்யாணத்துக்கு ரெடி ஆகு” என்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement