Advertisement

பேரன்பு பிரவாகம் -16

அத்தியாயம் -16(1)

போரா போரா தீவில் தேனிலவு முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர் பிரவாகனும் மலரும்.

தேனிலவை திகட்ட திகட்ட அனுபவித்தனர். தண்ணீருக்கு மேலே அமைக்க பட்டிருந்த சகல வசதிகளும் கொண்ட பிரைவேட் வில்லாவில்தான் தங்கியிருந்தனர்.

நினைத்த நேரம் காதல் செய்தான். கூச்சங்கள் இல்லாமல் தன் விருப்பங்களை அவளிடம் நிறைவேற்றிக் கொண்டான். மறுப்பு என்பதே இல்லாமல் அவளும் அவனது மனதை குளிர்வித்தாள். இளமையின் ஜாலங்களில் திளைத்தனர்.

இருவருமே முக்கியமான விஷயங்களின் விவாதங்ளை கவனமாக தவிர்த்து விட்டனர். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தங்கள் துணையை வளைக்க வேண்டும் என கணவனும் மனைவியும் போட்டி போட்டுக் கொண்டு நடந்தனர். அதில் அவர்களுக்குள் கருத்து முரண்கள் மழைக்கு முளைக்கும் காளான்கள் போல வளர்ந்தன.

உணவு, உடை, ரசனை என எதிலும் ஒத்துப் போக வில்லை. சில சமயங்களில் அற்ப காரணங்களுக்காக கூட முட்டி மோதிக் கொண்டனர். ஆனால் எல்லாம் பகல் வேளையில்தான், இரவில் அவளை கொஞ்சி கொஞ்சியே சமாதானம் செய்து விடுவான். அவனே கற்பனை செய்ய முடியாத படி எளிதில் சமாதானம் அடைந்து அவனை திகைக்க வைத்தாள்.

மனதளவில் புரிந்து கொண்டார்களோ இல்லையோ உடலளவில் நெருக்கமாகியிருந்தனர்.

கருத்து வேறுபாடுகள் யாருக்குத்தான் இல்லை, மற்றபடி தன் காதலில் மொத்தமாக அவள் மயங்கி விட்டாள் என நினைத்துக் கொண்டான் பிரவாகன். இதோ இப்போது கூட இந்த விமான பயணத்தில் அவனது கையை அணைவாக பிடித்துக்கொண்டு அவன் தோளில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

அவளை பார்க்க பார்க்க அவனது மனம் கனிந்து மென்மையானது. அடிக்கடி இப்படி அவள் பார்க்காத இடங்களுக்கு அவளை அழைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.

வீடு வந்த பின் பெற்றோரிடம் பேசியவள் உறங்க ஆரம்பித்து விட்டாள். பத்து நாட்கள் இங்கு இல்லாததால் பிரவாகனுக்கு நிறைய வேலைகள் தேங்கிக் கிடந்தன. தமனுடன் அலுவலக அறையில்தான் இருந்தான். ஓரளவு என்ன செய்ய வேண்டும் என தமனுக்கு வேலைகள் கொடுத்து விட்டு மற்றவற்றை நாளை பார்த்துக் கொள்வதாக சொன்னான்.

அறக்கட்டளைக்கு மலர் ட்ரஸ்ட்டீ ஆவது தொடர்பாக நினைவு படுத்தினான் தமன்.

“ஓ இன்னும் நினைவு வச்சிருக்கியா நீ? பார்த்துக்கலாம்” என்றான் பிரவா.

“மேடம் கேட்டா என்ன சொல்றதுங்க சார்?”

“அவளுக்கு அதெல்லாம் நினைவுல இல்லை. ஜாலியா இருக்கிறது விட்டுட்டு ஏன் அந்த தொல்லைனு நினைக்க ஆரம்பிச்சிட்டா. ஃப்ரீ பிளாக் போகலைனு சொன்னாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்லை. வெயிட் பண்ணு” என பிரவா சொல்ல, ‘சரிதான் பாஸ்கிட்ட நிஜமாவே மேடம் மயங்கிட்டாங்க போல’ என நினைத்துக்கொண்டே கிளம்பினான் தமன்.

பிரவா அறைக்கு வந்த போது உறக்கத்தில் இருந்தாள் மலர். அவளருகில் செல்ல மனம் உந்தினாலும் சென்றால் அது எப்படி முடியும் என தெரிந்ததால் அவளுக்கு ஓய்வு கொடுக்க எண்ணி வெளியேறி விட்டான்.

சில மணி நேரங்களுக்கு பின் எழுந்த மலர் அலுப்பு தீர சுடு நீரில் குளித்து தயாரானாள். தன்னிடம் கணவன் மயங்கியிருக்கிறான், தான் எது கேட்டாலும் செய்து தருவான் என எண்ணியவள் கணவனிடம் இப்படி நடக்கலாமா என குழம்பினாள்.

நன்றாக யோசித்த பின் நன்மைகள் நடக்க இப்படி நடப்பதொன்றும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தவள் அறையை விட்டு வெளி வந்தாள்.

மாமியாரிடம் சற்று நேரம் பேசியிருந்து விட்டு வந்தவள் அத்தனை பெரிய வீட்டில் அவன் எங்கிருக்கிறான் என தேட ஆரம்பித்தாள். அவனது கைப்பேசிக்கும் ரிங் சென்றதே தவிர எடுக்க படவில்லை.

அவன் எங்கிருக்கிறான் என்பதை வேலையாள் சொல்ல, அவன் இருப்பதாக சொன்ன இடத்திற்கு சென்றாள். குளிரூட்டப்பட்ட பெரிய ஹாலில் நீளமான சாய்விருக்கையில் தளர்வாக படுத்திருந்தான்.

ஒருவன் அவனுக்கு முடி திருத்தி முடித்து மசாஜ் செய்து கொண்டிருந்தான். கதவு திறந்த ஓசை கேட்கவும் குப் என அவள் உபயோகிக்கும் வாசனை திரவியத்தின் மணம் அவனது நாசியை அடைய, “வா மலர்” என கண்களை திறக்காமல் வரவேற்பு கொடுத்தான்.

“முடிய லேட் ஆகுமா?” எனக் கேட்டாள்.

அவள் கேட்ட தொனியில் பட்டென கண்களை திறந்தவன் மசாஜ் செய்து கொண்டிருந்தவனை வெளியே போக சொல்லி விட்டு குறும்பான சிரிப்போடு அவளை பார்த்து புருவங்களை உயர்த்தினான்.

கைகளை மடித்து கட்டிக் கொண்டு முறைத்தவள், “பேசலாம்னு வந்தேன், சீரியஸா கேட்குற மூட்ல இருந்தா மட்டும் சொல்லுங்க. இல்லைனா நான் போறேன்” என்றாள்.

“போறியா? கம், மசாஜ் பண்ணி விடு எனக்கு” என அழைத்தான்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது”

“தெரியாதுன்னு நீ சொல்ற எல்லாத்தையும் நான்தான் சொல்லிக் கொடுக்கிறேனே…”

அவள் முகம் காட்டமாக, “நீச்சல் தெரியாத உனக்கு நீச்சல் கத்து கொடுத்தேனே அதை சொன்னேன், நீ நல்ல டாக்டரா தெரியாது, ஆனா எனக்கு நீ நல்ல ஸ்டூடெண்ட்” என செல்ல விஷமம் பீறிட சொன்னான்.

“நான் குளிக்க வேற செய்திட்டேன்”

“இத்தனை நாளும் அப்படி ஒரு நாளைக்கு ஒரு முறைதான் குளிச்சியா? காமெடி பண்ணாம வா ஹனி” என்றான்.

அவள் திரும்பி செல்ல தயாராக, “மசாஜ் பண்ணிகிட்டே பேச வந்ததை பேசலாம்” என்றான்.

சலித்துக் கொண்டே அவனிடம் வந்து நின்றவள் அவன் சொன்ன படியே கிண்ணத்தில் இருந்த நல்லெண்ணெய் எடுத்து தலையில் ஊற்றி இதமாக மசாஜ் செய்து விட ஆரம்பித்தாள்.

கண்களை மூடியவனின் மனம் தளர்ந்து கொண்டிருக்க, “நாளையிலேருந்து ஹாஸ்பிடல் போறேன், ட்ரஸ்ட்டீ எப்போ ஆகுறது நான்?” எனக் கேட்டாள்.

வேகமாக நிமிர்ந்தமர்ந்து அவளை திரும்பி பார்த்தான்.

“என்ன… ஏற்கனவே பேசி வச்சதுதானே? எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?” அவனது முன் உச்சி தலையை இதமாக தேய்த்து விட்டுக் கொண்டே கேட்டாள்.

அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன், “இன்னும் உனக்கு அங்க போகணும்னு தோணுதா என்ன? மேல படிக்கிறதா பிளான் இருந்ததுதானே உனக்கு?” எனக் கேட்டான்.

“அது நீட் க்கு பிரிப்பேர் ஆக வேணாமா நான்? நெக்ஸ்ட் இயர்தான் எக்ஸாம் எழுதணும். இப்போ ஹாஸ்பிடல் வர்றேன்”

“நீட் ஆ? நீ யாருன்னு மறந்திட்டியா?”

“எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அதையே பேசக்கூடாது. என் ஸ்டடீஸ் நான் பார்த்துப்பேன். நான் ட்ரஸ்ட்டீ ஆகுற ஏற்பாடு என்னாச்சு?” அழுத்தமாக கேட்டாள்.

தமன் இன்று நினைவு படுத்தியதை சொன்னவன், “இப்போ உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்காதுன்னு நினைச்சு வெயிட் பண்ண சொல்லிட்டேன்” என்றான்.

“ஏன் ஏன்… எனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்காது?” வேகமாக கேட்டாள்.

‘காதல் மயக்கத்தில் மறந்து போயிருப்பேன்னு நினைச்சேனே’ என மனதில் நினைத்தவன், நேரில் “இப்பவே ஹேப்பியாதானே இருக்க நீ? உன்னை நல்லா வச்சுக்கலையா நான்? எவ்ளோ ஆசையா இருக்கேன் உம்மேல?” எனக் கேட்டான்.

“உங்களையும் அதே கேள்விகள் கேட்கிறேன்”

“எஸ், ஆம் ஹேப்பி அண்ட் என் ஹனி பன் ஹெவன் காட்டுறா எனக்கு” என்றான்.

“ஹ்ம்ம்… அப்போ ஹாஸ்பிடல் போகாதீங்க, இங்கேயே சந்தோஷம் கிடைக்குதுதானே? டுவெண்ட்டி ஃபோர் அவர்ஸ் வீட்லேயே இருங்க. உங்க சொத்து இன்னும் பல தலைமுறைக்கு குறையாது, வீட்ல போர் அடிச்சா ஜாலியா உலகத்தை சுத்தி வரலாம். போரா போரா தீவுல ஒரு லக்ஸுரி பங்களா வாங்கி அங்கேயே தங்கிடலாம்” என்றாள்.

சிரித்தவன், “நான் ரெடின்னா நம்பவா போற?” என்றான்.

“அப்போ இப்பவே செயல் படுத்துங்க” கண்களை உருட்டிக் கொண்டு கட்டளை போல சொன்னாள்.

“எதை?”

“திரும்ப திரும்ப சொல்ல முடியாது. நான் என்ன நினைக்கிறேனோ அதை செஞ்சிட்டு வந்து என்கிட்ட பேசுங்க” என்றவள் அவனிடமிருந்து எழுந்து கொண்டாள்.

“சரி… செய்றேன், இப்ப வந்து மசாஜ் செய்” என அவன் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளியேறி விட்டாள். கோவத்தில் எண்ணெய் கிண்ணத்தை தள்ளி விட்டான்.

சில நொடிகளில் முன்னர் மசாஜ் செய்து விட்டவன் உள்ளே வந்து, “மேடம் அனுப்பினாங்க” என்றான்.

வேண்டாம் என சொல்லி அவனை அனுப்பி வைத்தவன் அங்கேயே குளித்து தயாராகி அவளை தேடிக் கொண்டு வந்தான். படுக்கையறையில் அமர்ந்து அவளது அக்காவிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள். இவன் அருகில் அமரவும் எழுந்து வெளியே சென்றாள்.

தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தவளின் பின்னால் இரண்டு நிமிடங்கள் நடந்தவன் அவளது பாராமுகத்தில் கடுப்பாகி தள்ளி சென்று தமனிடம் பேசினான்.

“காலைல கேட்டப்போ வெயிட் பண்ண சொல்லிட்டு இப்ப உடனே நடக்கணும்னு சொல்றீங்களே சார்?”

“நான் சொல்றதை செய்யதான் நீ இருக்க, கேள்வி கேக்க இல்லை தமன்” என இவன் சீறி விட்டு அழைப்பை துண்டித்தான்.

அரை மணி நேரத்தில் அழைத்த தமன் இன்னும் ஐந்து நாட்களில் மலர் ட்ரஸ்ட்டீ ஆகி விடலாம் என விவரம் சொன்னான்.

“பிராசஸ் பண்ணின பேப்பர்ஸ் போட்டோஸ் ஷேர் பண்ணு எனக்கு” என்றான் பிரவா.

“நீங்க ஹனிமூன் போறதுக்கு முன்னாடியே எல்லாம் ரெடி பண்ணி லாயர் உங்ககிட்ட காட்டினார்தானே சார்? இப்ப திரும்ப என்ன பார்க்க போறீங்க சார்?”

“தமன்…” என அதிகாரமாக பிரவா அழைக்க, உடனே அனுப்புவதாக சொல்லி வைத்தான் தமன்.

மீண்டும் பிரவா மலரிடம் வர இப்போது யாரோ தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் காத்திருந்து பார்த்தவன் அவளது அலைபேசியை பறித்து அழைப்பை துண்டித்தான்.

அவள் கண்களால் சுட்டெரிக்க தன் வாட்ஸ் ஆப்பிற்கு தமன் அனுப்பியிருந்த போட்டோக்களை காட்டினான். கைப்பேசியை தன் கையில் வாங்கியவள் திரையை பெரிது படுத்திக் கொண்டு கவனமாக படிக்க ஆரம்பித்தாள்.

“கொல்லாத மலர், எல்லாம் சரியா இருக்கு. நான் வெரிஃபை பண்ணினதுதான் எல்லாம்” என்றான்.

“நீங்க சொன்னா உடனே நம்பணுமா? அப்பதான் நல்லா கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு பார்க்கணும்” என்றாள்.

“நான் உன் ஹஸ்பண்ட் மலர்”

“ம்ம்… இந்த மேரேஜ் எப்படி நடந்ததுன்னு மறக்கல நான்”

“பல முறை சொல்லிட்டேன், உன்னை சம்மதிக்க வைக்க அப்படி மிரட்டினேன். தப்பா எதுவும் செய்யல நான்”

“நான் சம்மதிக்கலைனா பண்ணியிருப்பீங்க”

“நீ ஓகே சொல்லிடுவேன்னு தெரியும். எதுவும் செய்ற பிளான் இல்லை” என்றவனை நிமிர்ந்து பார்த்து கேலியாக சிரித்தாள்.

“நம்பு மலர்” என்றான்.

“உங்க ஆசை படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, அப்புறமும் உங்க ஆசைப்படித்தான் எல்லாம் நடக்குது. நம்பு நம்பு ன்னு அடிக்கடி சொல்ல வேணாம். அப்படி நம்பிக்கை வர்ற மாதிரி நடந்துக்கோங்க”

“பேசுடி பேசு…”

“ம்ம்…” என்றவள் அந்த புகைப்படங்களை அவளது கைப்பேசிக்கு மாற்றிக் கொண்டு அவனுடையதை அவனிடம் நீட்டினாள்.

“உன் போன்ல பார்க்க போறியா? டைம் வேஸ்ட் மலர், நிஜமா…” அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் கைப்பேசியில் கவனமாக இருந்தவள் யாருக்கோ அழைத்தாள்.

பேச்சை நிறுத்தி விட்டு அவன் கடுப்பாக நிற்க, அங்கிள் என அழைத்து யாரிடமோ பேசினாள்.

 நலன் விசாரித்தவள், “டாகுமெண்ட்ஸ் அனுப்பிருக்கேன் அங்கிள். எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு சொல்லுங்க அங்கிள். ஏதாவது சேஞ்ச் பண்ணனுமான்னும் பார்த்துட்டு சொல்லுங்க. நீங்க சொல்ற படி செய்திடலாம்” என சொல்லி வைத்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement