Advertisement

அத்தியாயம் -15(2)

“என்ன கேட்டாலும் சொல்ல மாட்டேன்னு தெரிஞ்சு போச்சு. அதை விடு, நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. பழசு என்னவோ… இந்த கல்யாண வாழ்க்கைய அடுத்து எப்படி எடுத்திட்டு போறதுன்னு இருக்க நீ?”

“புரியலை அண்ணி”

“நேரடியாவே கேட்கிறேன். அவனை விட்டு பிரியுற ஐடியா எதுவும் இருக்கா உனக்கு?”

“என்ன ண்ணி…”

“கோட்டிங் போட்டு பேசாம நீயும் வெளிப்படையா பேசு மலர்”

இல்லை என தலையசைத்தாள்.

“குட்! ஒரு கல்யாணத்துல ரெண்டு குடும்பம் இணையுது, உறவு சேருது, எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி அவங்களோட இணைஞ்சு வாழணும் அப்படிலாம் சொல்வாங்க. என்னை பொறுத்த வரை மேரேஜ் லைஃப் ப்யூர்லி ரெண்டு பேர் மட்டும் சம்பந்த பட்டது. அவங்களுக்குள்ள புரிதல், இணக்கம், ஈர்ப்பு எதுவும் இல்லைனா அந்த மேரேஜ் ஃபெயில்தான். எல்லா வித முயற்சிகள் எடுத்தும் முடியாம போய், மத்தவங்களுக்காக பொறுத்து போய் சகிச்சு வாழ்வோம்னு வாழறதுக்கு பிரியறது பெட்டர்னுதான் சொல்வேன்”

“இன்னிக்கிதான் கல்யாணம் ஆகியிருக்கு அண்ணி எங்களுக்கு” பதற்றமாக சொன்னாள் மலர்.

“இது அரேஞ் மேரேஜோ லவ் மேரேஜோ இல்லைனு எனக்கு தெரியும் மலர். அவன் என் தம்பி, உன்னையும் என் தம்பி மனைவிங்கிறதுக்கு முன்னாடியே தெரியும். ரெண்டு பேர் லைஃப் நல்லா போக என்னாலான முயற்சி எடுக்கிறேன். நான் சரியாத்தான் பேசிட்டு இருக்கேன்” என்றாள் கீர்த்தி.

மலர் அமைதியடைந்து விட்டாள்.

“இந்த கல்யாணம் நீங்க ரெண்டு பேரும் ஒத்துகிட்டு பண்ணிக்கிட்டது. அதை சரியான வழில கொண்டு போற கடமையும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கு. சொல்லி புரிய வைக்கிற ஜென்மம் இல்லை என் தம்பி. அதனாலதான் உன்கிட்ட சொல்றேன்”

மலர் கவனம் பிசகாமல் கீர்த்தி சொல்வதை உள் வாங்கிக் கொண்டாள்.

“உங்க வாழ்க்கை தோல்வில முடிஞ்சா அதிக பாதிப்பு உங்களுக்குத்தான்னாலும் அதனால மன வருத்தம், கவலை எல்லாம் யார் யாருக்கெல்லாம் பரிசா கொடுக்க போறீங்கன்னு தெரியுமா மலர்?”

“எங்களை சேர்ந்தவங்க எல்லாருக்கும்” என்றாள்.

“எஸ், அதனால இந்த லைஃப் சரி செய்துக்க உன்னாலான முயற்சி எடுக்காம பிரியறது பத்தி சிந்திக்க கூடாது, இதை உன் மனசுல ஆழமா பதிய வைக்கணும்” என கீர்த்தி சொல்ல சம்மதமாக தலையாட்டினாள் மலர்.

“அவன் எது செஞ்சாலும் பொறுத்து போ, அவனை அனுசரிச்சு போ, சகிச்சுக்கிட்டு இரு… இதெல்லாம் இல்லை நான் சொல்றது”

“அப்படிலாம் நீங்க சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் அண்ணி” என்றாள்.

“கேட்காத. ஆனா வேற என்ன செய்யலாம்னு இருந்த?”

“உங்க தம்பி கண்ணுல விரலை விட்டு ஆட்டணும்னு இருந்தேன். அவர் முழி பிதுங்கணும்” ஆவேசமாக சொல்லி விட்டு அமைதியானாள்.

அதிராமல் சிரிப்புடன் பார்த்த கீர்த்தி, “கண்ணுல விரல் விட்டு ஆட்டினா அவன் மாறிடுவானா? இன்னும் துள்ள மாட்டானா? உனக்கு இன்னும் தலைவலி கொடுக்க மாட்டானா? நம்ம கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதா இருக்கும் அவன் செயல்கள்” என்றாள்.

“பயமுறுத்துறீங்களா அண்ணி”

“எச்சரிக்கை செய்றேன் மலர்”

“என்னை என்னதான் செய்ய சொல்றீங்க அண்ணி?”

“அவன் எல்லாத்தையும் பார்க்கிற பார்வையை அவன் கண்ணோட்டத்தை மாத்து மலர்”

மலர் ஏதோ சொல்லப் போக, தடுத்து தானே பேசினாள் கீர்த்தி. “எங்களால ஏன் முடியலை, நாங்க செய்ய தவறிட்டோம்னு நீ என்ன சொன்னாலும் என்கிட்ட பதில் இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு சம்மதமான்னு நிறைய முறை உன்கிட்ட கேட்டேன், அப்போ உனக்கு சாய்ஸ் இருந்தது, இப்ப…”

எந்த நிலையில் நிறுத்தி தன் சம்மதத்தை பெற்றான் என்பது நினைவில் வர, “இப்ப… சொல்லுங்க அண்ணி இப்ப… வேற சாய்ஸ் இல்லைனு சொல்றீங்களா?” கோவமாக கேட்டாள் மலர்.

“இப்பவும் இருக்கு. சொல்லப் போனா சரி வராத லைஃப்க்கு குட் பை சொல்லிட்டு புது லைஃப் க்கு ஹலோ சொல்ற உரிமை எப்பவும் ஆணுக்கு மட்டுமில்லை பொண்ணுக்கும் இருக்கு. ஆனா உனக்காக எங்களுக்காக ஒரு ட்ரை கொடு மலர்”

“உங்க தம்பிய மாத்த நான் மட்டும் நினைச்சா போதுமா? அவர் கோஆபரேட் பண்ண வேணாமா? அவரோட பணமும் செல்வாக்கும் எல்லாத்தையும் சுருட்டி வச்சுக்குது”

“நீ சொல்ற பணமும் செல்வாக்கும் அவனோட பலம். நீ அவனோட பலவீனத்தை பிடி”

“உங்க தம்பி வீக்னெஸ் என்னன்னு நீங்கதான் சொல்லணும் அண்ணி”

“அது தெரிஞ்சா நானே அவனை மாத்தியிருக்க மாட்டேனா? அவனை எதை வச்சு கட்டி இழுக்கன்னு எங்க யாருக்குமே தெரியலை. எவ்ளோ சாமர்த்தியசாலின்னாலும் பொண்டாட்டிகிட்டேருந்து எதையும் மறைக்க முடியாது. அவனை பத்தி இன் அண்ட் அவுட் உன்னால தெரிஞ்சுக்க முடியும் மலர்”

“தெரிஞ்சு?”

“ஆப்பொனண்ட் வீக்னெஸ் வச்சு அவங்கள மடக்கிறதை, மசிய வைக்கிறதை அவன்தான் செய்யணுமா? நீயும் அவனோட பலவீனத்தை வச்சு அவனை இழுத்து பிடி. ஃப்ரீ பிளாக் ட்ரஸ்ட்டீ ஆக்குறேன்னு சொல்லியிருக்கான்ல? கண்டிப்பா ஆக்கிடுவான், ஆனா அங்கே உனக்கு போராட்டம் அதிகமா இருக்கும். எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணுவானா தெரியாது. அவன் லகான் உன் கைக்குள்ள வந்திட்டா நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ எல்லாத்தையும் அவன் மூலமாவே சாதிச்சுக்கலாம்”

மலர் கேட்டுக் கொண்டிருக்க தொடர்ந்தாள் கீர்த்தி.

“மண்டைய உடைக்கிறது, காலை வாரி விடுறதுன்னு சின்ன புள்ள தனமான விளையாட்டை விட்டுட்டு பெருசா யோசி மலர். ஏதாவது துருப்பு சீட்டு உன் கைல மாட்டும் போது அதை கெட்டியா பிடிச்சுகிட்டு அவனை உன் இஷ்டத்துக்கு ஆட்டி வை”

மலர் தீவிர யோசனையில் இருக்க, “ஒரு வேளை உன் எல்லா முயற்சியும் தோத்து போய் பிரியறதுதான் முடிவுன்னா கண்டிப்பா அவனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன். எப்பவும் நான் உன் பக்கம் இருப்பேன் மலர்” என்றாள் கீர்த்தி.

நன்றி என வார்த்தையால் சொல்லாமல் பார்வையால் சொன்னாள் மலர்.

மலரின் கன்னத்தை வாஞ்சையாக பிடித்துக்கொண்ட கீர்த்தி, “உன் நல்ல மனசு எனக்கு தெரியும். உனக்கு பிடிக்காததெல்லாம் நடக்குதுன்னு நினைக்காத. இந்த கல்யாணம், நீ ஃப்ரீ பிளாக் ட்ரஸ்ட்டீ ஆக போறது எல்லாமே தற்செயல் கிடையாது, நீ இந்த நேரம் இங்க வரணும்னு ஏற்கனவே தீர்மானம் ஆகியிருக்கு. நடக்கிற எல்லாத்துக்கும் பின்னால ஏதோ வலுவான காரணம் இருக்கு” என்றாள்.

மலர் ஆமோதிப்பாக தலையாட்ட, “தூங்கு மலர்” என சொல்லி சென்று விட்டாள்.

இப்போது மலரின் மனம் லேசாக இருந்தது. படுத்ததும் நிம்மதியாக உறங்கி விட்டாள்.

அடுத்த நாள் பகல் கோயில் வழிபாடு, மறு வீட்டு விருந்து என முடிந்தது. மாலையில் பிரவாகனை சந்திக்க கோபால் வந்திருந்தார். அலுவலக அறையில் இருவர் மட்டும் பேசிக் கொண்டனர். அவன் சொல்வதெற்கெல்லாம் பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்ட மனிதர் உற்சாகமாக புறப்பட்டு சென்றார்.

இரவில் சர்வ அலங்காரத்தோடு பிரவாகனின் அறையில் விடப் பட்டாள் மலர். அறைக்குள் அவனை காண வில்லை, அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக சென்று படுக்கையில் அமர்ந்து விட்டாள்.

மெலிதாக விசில் அடித்துக் கொண்டே குளியலறையிலிருந்து வெளி வந்தான் பிரவாகன்.

மலர் அவன் பக்கமாக திரும்பாமல் இருக்க, “ஆசையா டாட்டூ போட்டேன், இப்ப அவளே என் கூட இருக்கா. ப்ச்… ஹெவன்லி ஃபீல்!” சிலாகிப்பாக பேசிக் கொண்டே ஆடை மாற்றியவன் அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான்.

அவளது நாடியை பிடித்து தூக்கி தன்னை பார்க்க செய்தவன், “உன் நகை, புடவை எல்லாம் பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான்.

அவள் பதில் தராமல் போக, “பிடிக்கலையா? எனக்கு பிடிச்சிருக்கு. எங்க இப்ப சொல்லு, ‘அவ்ளோ பிடிச்சா நீங்களே போட்டுக்கோங்க, ஐ டோண்ட் மைண்ட்!’ ம்ம்… சொல்லு மலர்” அவளை போலவே சொல்லிக் காண்பித்தவன், “உன்னைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு, இப்பவும் எதையும் மைண்ட் பண்ண மாட்டியா?” எனக் கேட்டான்.

மௌனமாகவே இருந்தாள்.

“என்ன பேச்சு வரலையா?” வம்பாக பேசிக் கொண்டே அவளது நகைகளை ஒவ்வொன்றாக கலைய ஆரம்பித்தான்.

எதிர்ப்பு காட்டாத மலர், “எல்லாத்திலேயும் அவசரமா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“பொறுமையா போனாலும் ஏதோ ஒரு நாள் இது நடக்கத்தானே போகுது? ஒய் ஷுட் ஐ கண்ட்ரோல் மைசெல்ஃப்?” என அவன் கேட்க அலுப்பாக பார்த்தாள்.

“நீ ப்ரிப்பேர்டா வந்திருக்கேன்னு தெரியும். ஏன்னா என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு”

நிஜம்தான், அவள் மனதளவில் தயாராகவே வந்திருந்தாள்.

“கல்யாணம் இதுக்காகதானே மலர்? சொல்லு… எனி அப்ஜக்ஷன்?” எனக் கேட்டான்.

அவள் இல்லை என தலையாட்ட, “அதிசயத்தை பாரு, உன்னை சம்மதிக்க வைக்க நிறைய போராடணும், எனர்ஜி வேஸ்ட் பணண்ணனும், பேசி பேசியே என் தொண்டை தண்ணி வத்த போகுதுன்னுலாம் நினைச்சேன்” என்றான்.

“என் சம்மதம் கேட்கிற அளவுக்கு நல்லவனா நீ?”

“கொஞ்சமா அப்படித்தான் போல…” என்றவன் அவளது தாலி சரடை கையில் எடுத்து பார்த்தான்.

“இதையும் கழட்டணுமா?” எனக் கேட்டவள் அவனது கையை விலக்கி விட்டாள்.

“அவ்ளோ செண்டிமெண்ட்டா உனக்கு? அப்ப இது மட்டும் உன்னோட இருக்கட்டும்” என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

விடியும் நேரம் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவன் அணிந்திருந்த டி ஷர்ட்டை இவள் அணிந்திருந்தாள். அவளது புடவை அவனை தழுவி அவனது உடலை மறைத்திருந்தது.

மலரின் கழுத்திலிருந்த தாலி சரடு பிரவாகனின் கழுத்துக்கு இடம் பெயர்ந்திருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement