Advertisement

பேரன்பு பிரவாகம் -15

அத்தியாயம் -15(1)

மண மக்களை அழைப்பதற்காக வந்த கீர்த்தி நாகரீகம் கருதி உடனே உள்ளே செல்லாமல் வெறுமனே சாத்தியிருந்த கதவை மெதுவாக தட்டினாள்.

கதவை திறந்து விட்ட மலரின் கண்கள் சிவந்திருக்க ஏகத்திற்கும் அவளுக்கு மூச்சு வாங்கியது. பயந்து போன கீர்த்தி உள்ளே வந்து அவளை அமர செய்து விட்டு உடனே கதவை அடைத்தாள்.

பால்கனியில் முதுகு காட்டிக் கொண்டு நின்றிருந்த பிரவாகன் தலை கோதிக் கொண்டிருப்பதை கண்ணாடி தடுப்பு வழியே கண்ட கீர்த்திக்கு அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என புலப்பட்டது.

தம்பி மனைவியிடம் தண்ணீரை நீட்டியவள், “என்ன மலர்?” எனக் கேட்டுக் கொண்டே அறையை நோட்டமிட்டாள்.

இருவர் அணிந்திருந்த பூ மாலைகளும் தரையில் கிடந்தன. அறையும் கலைந்து காணப் பட்டது.

“என்னம்மா?” இன்னொரு முறை வாஞ்சையாக கேட்டாள் கீர்த்தி.

தண்ணீரை பருகிய மலர் இயல்பான முக பாவத்தில், “ஒண்ணுமில்ல அண்ணி. அவர் நைட் சரியா தூங்கலையாம், இரிடேட்டடா இருக்கார், சும்மா நான் பேசின விளையாட்டு பேச்சுக்கு போய் கோவ பட்டு…” என அதற்கு மேல் பொய் பேச பிடிக்காமல் பூ மாலைகளை கையில் எடுத்தாள்.

கோவம் கொண்ட கீர்த்தி தம்பியிடம் சென்று நின்றாள். அக்கா வந்திருப்பது தெரிந்தும் அப்படியே நின்றிருந்தான்.

வேகத்தோடு தம்பியை தன் பக்கம் திருப்பினாள் கீர்த்தி. காற்றில் அவனது கேசம் கலைய நெற்றி புடைப்பு அவளது கண்களில் பட்டது.

திகைத்த கீர்த்தி அவனது நெற்றியை தொட, “ஷ் ஆ” என்றவன் அவளது கையை தட்டி விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டான்.

“என்னடா பிரவா? எங்க போய் மோதிகிட்ட? மாலையெல்லாம் கழட்டி போட்டு என்னடா கூத்து பண்ணிட்டு இருக்க நீ?” என கடிந்தாள்.

“என்ன வேணும் உனக்கு? நெக்ஸ்ட் என்ன?” என எரிச்சலாக கேட்டான்.

“மலர் பொறந்த வீட்டுக்கு போயிட்டு கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வரணும். எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள்.

“நீ போ, வர்றேன்”

“ஏது இதுக்கு மேல உங்களை தனியா விட்டுட்டு போகவா? உன் மண்டைய உடைச்சுகிட்ட மாதிரி அவளை ஏதும் செய்திட்டீனா?” என கீர்த்தி கேட்க, சரேலென அவள் பக்கம் திரும்பியவன், “ஏதாவது சொல்லிட போறேன் க்கா” என கத்தினான்.

தம்பியின் கோவத்தில் நிதானித்தவள் அறையை பார்க்க, மலர் இவர்களை தான் அழுத்தமாக பார்த்து நின்றிருந்தாள்.

“இப்படி அவ செய்ற அளவுக்கு என்ன செஞ்சு தொலைச்ச?” என தம்பியிடம் சீறினாள்.

“எல்லாம் என்னையவே கேளு!”

கீர்த்தி பதில் வேண்டும் என்பது போல பார்க்க, ஈ என எரிச்சலாக பற்களை காட்டியவன், “கிளம்பணும்னு சொன்னியே… போ” என்றான்.

தம்பியை முறைத்து விட்டு அறைக்கு வந்தவள் மலரின் கலைந்திருந்த சிகையை சரி செய்து விட்டு, அவளது கழுத்தில் மாலையை போட்டுக் கொள்ள செய்து, “ஓகேதானே நீ?” என விசாரித்தாள்.

“அது அண்ணி…” சங்கடமாக பார்த்தாள் மலர்.

“யார்கிட்டேயும் நான் சொல்லலை, அவனும் சொல்ல மாட்டான். ஆனா இப்படி நடக்காத மலர்” கண்டிப்போடு சொன்ன கீர்த்தி தன் தம்பியை பார்க்க, அவனும் உள்ளே வந்து அமைதியாக மாலையை அணிந்து கொண்டான்.

மலரின் வீட்டில் ஒரு மணி நேரத்திற்குள் சடங்குகளை முடித்துக் கொண்டு பிரவாகனின் வீடு வந்தனர். அங்கும் செய்ய வேண்டியவை செய்த பின் மலரை தன்னோடு அழைத்து சென்று விட்டாள் கீர்த்தி.

தன் அறைக்கு வந்த பிரவாகன் அடி பட்ட புலி போல நடை போட்டுக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ஐஸ் பேக் கொண்டு வந்து தந்தாள் கீர்த்தி. அதை வாங்கி உபயோகிக்காமல் அலட்சியமாக வைத்தவன், “ஈவ்னிங் ரிசப்ஷன் அப்போ உர்ருன்னு இருந்தான்னு வை, நான் மனுஷனா இருக்க மாட்டேன்னு சொல்லி வை” என்றான்.

“சபாஷ் தம்பி! உன் லவ் மொகர கட்டைய முத நாளே எனக்கு காமிச்சு கொடுத்திட்டியே! இவ்ளோ சீக்கிரமாவா உன் லவ் சாயம் வெளுத்து போகும்?” என்றாள் கீர்த்தி.

“ஏன், லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறவங்க சண்டை போட்டுக்க மாட்டாங்களா? இப்படி சண்டை போட போடத்தான் லவ் ஸ்டராங் ஆகும்”

“ஆமாமாம் இப்படித்தான் மண்டைய உடைச்சுக்குவாங்க”

“லிஸன் அக்கா! இன்னிக்கு மண்டைய உடைப்பா நாளைக்கு ஆசையா மாமான்னு கொஞ்சுவா. தட்ஸ் நாட் யுவர் பிஸ்னெஸ்”

“எதுக்காக… என்ன காரணம் அவகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டியோ… அவளை கஷ்ட படுத்தினா லூசர் நீதான்டா. யார் சொல்லியும் நீ கேட்க வேணாம், உனக்காகவாவது அவளோட ஒழுங்கா குடும்பம் பண்ணு” என சொல்லி நிற்காமல் சென்று விட்டாள் கீர்த்தி.

சில நிமிடங்களில் பிரவாவின் அறைக்கு வந்த தமன், “சார், உங்களுக்கு ஐஸ் பேக் வச்சு விட சொன்னாங்க அக்கா” என்றான்.

பிரவா முறைக்க, “பார்த்து இருக்க கூடாதுங்களா சார், கதவுல மோதிகிட்டீங்களாமே” அவனது நெற்றியை பார்த்துக் கொண்டே கேட்டான்.

நெற்றியை தடவிப் பார்த்துக் கொண்டவனுக்கு மாலையில் வரவேற்பு தொடங்குவதற்குள் சரி செய்தாக வேண்டுமே என இருந்தது. தமனை போக சொல்லி விட்டு அவனே ஒத்தடம் வைத்துக் கொண்டான்.

மலர் இருந்த அறைக்கு கீர்த்தி வந்த போது அவள் உறங்கிப் போயிருந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் தானும் ஓய்வெடுக்க சென்று விட்டாள்.

மாலையில் மலர் எழுந்ததும் அவளது வயிற்றை கவனித்த கீர்த்தி பேசலாம் என நினைக்க அகிலா வந்தாள். அவளை தொடர்ந்து மிருணா வர கீர்த்தியால் எதுவும் பேச முடியாமல் போனது. பின் பார்லர் ஆட்கள் வந்து விட்டனர்.

இரவு பதினோரு மணி வரை வரவேற்பு நடந்தது. எதுவும் பேசி அல்லது செய்து எரிச்சல் படுத்துவானோ என மலர் நினைத்திருக்க மாறாக வந்தவர்களை எல்லாம் சிரித்த முகத்தோடு அறிமுகம் செய்து வைத்தான். அவளிடம் வெகு அக்கறையாக நடந்து கொண்டான். ‘என்னதான் டா உன் கணக்கு?’ என மனதில் நொந்து கொண்டாள் மலர்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில் முற்றிலும் சோர்ந்து விட்டாள். வீடு வரும் போது இரவு பனிரெண்டு ஆகி விட்டது.

அகிலாவும் அவளது கணவனும் மலருக்கு துணையாக வந்திருந்தாலும் வேறொரு அறையில்தான் இருந்தனர். மலர் தனி அறையில் இருந்தாள். சாந்தி முகூர்த்தம் அடுத்த நாள்தான் என முன்னரே முடிவாகியிருந்தது.

அவளது அறைக்கு வந்த பிரவா, “உனக்காக காத்திட்டு இருக்கேன் மலர்” என்றான்.

“எதுக்கு?” பற்களை கடித்துக் கொண்டு கேட்டாள்.

“என் ரொமான்டிக் சைட் உனக்கு காட்ட” என்றான்.

“ச்சீ… அலையாத”

“பேச்சை குறைச்சிட்டு இன்னிக்கே நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்க” என சொல்லி சென்று விட்டான்.

அத்தனை அலுப்பாக இருந்தாலும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் மலர்.

அடுத்த நாள் இரவு அதி பயங்கரமாக அவளை கலவரமூட்டிக் கொண்டிருந்தது. பிரவாகனின் குணம் தெரிந்தாலும் அவனுடன் ஓரளவு சகஜமாக்கிக் கொள்ள நேரம் கேட்டு பார்க்கலாம் என எண்ணியிருந்தாள். கேட்டால் வேண்டுமென்றே இஷ்டத்திற்கு நடப்பான் என்பது இன்றே விளங்கி விட்டது.

எப்படி அவனுடன் தனிமையை கழிப்பது என்ற அச்சம் உறக்கத்தை அடித்து துரத்தி விட்டது. படுக்காமல் அமர்ந்து கொண்டவள் அவளது வலித்த கால்களை மெல்ல அழுத்திக் கொண்டே என்ன வந்தாலும் சமாளிக்க தன் மனதை தயார் படுத்த ஆரம்பித்தாள்.

அவளது கைப்பேசிக்கு கீர்த்தியிடமிருந்து, விழித்துக் கொண்டிருந்தால் சொல்லும் படி செய்தி வந்தது. இவள் அழைப்பே கொடுக்க துண்டிக்க பட்டு விட்டது. ‘என்னடா இது?’ என இவள் யோசித்துக் கொண்டிருக்க நேரிலேயே வந்து விட்டாள் கீர்த்தி.

“தூக்கம் வரலையா?” என விசாரித்தாள் கீர்த்தி.

“இல்ல ண்ணி, ரொம்ப டயர்ட், உடம்பெல்லாம் வலிக்குது, அதான்…” என்றாள்.

“தூங்கி எழுந்தா காலைல சரி ஆகிடும்”

தலையாட்டிக் கொண்ட மலர், “இதை சொல்லவா வந்தீங்க அண்ணி?” எனக் கேட்டாள்.

இல்லை என தலையசைத்தவள், “நான் பிரவாகனோட அக்காவா இருக்கலாம். அதுக்காக உன் பக்கம் யோசிக்க மாட்டேன், பேச மாட்டேன்னு கிடையாது. உனக்கு ஏதாவது என்கிட்ட சொல்லணும் ஷேர் பண்ணனும்னு இருந்தா தயங்காத மலர்” என்றாள்.

மலர் அமைதி காக்க, “சரி சொல்ல வேணாம். என்னால என்ன செஞ்சிட முடியும்னு நினைக்கிற போல” என்றாள்.

“யாரோட நிம்மதியும் கெடக் கூடாதுன்னு நினைக்கிறேன் அண்ணி. என்னால முடியாத நிலை வந்தா கண்டிப்பா சொல்றேன்” என்றாள்.

“ஓ அப்போ ஏதோ தப்பா இருக்கு, அப்படித்தானே?”

நன்றாக பேசி, போட்டு வாங்கி விட்டாரே என அதிர்ச்சியாக பார்த்த மலர், “நீங்க ரொம்ப ஸ்மார்ட் அண்ணி” என்றாள்.

“என்ன மலர் நடக்குது உங்களுக்குள்ள? ஆம் ரியலி ஒர்ரீட் அபௌட் யூ” என்றாள்.

புன்னகைத்த மலர், “சின்ன சின்ன மிஸ்அண்டர்ஸ்டாங்கிஸ் அண்ணி. பயப்பட எதுவும் இல்லை” என்றாள்.

Advertisement