Advertisement

பேரன்பு பிரவாகம் -14

அத்தியாயம் -14(1)

மலர், பிரவாகன் திருமணத்திற்கு முந்தைய தின சடங்குகள் முடிந்து அனைவரும் உறங்குவதற்காக கலைந்து கொண்டிருந்தனர்.

முதன் முதலாக புடவையில் பார்த்த மிருணாவிடம் அவள் அழகாக இருப்பதாக சொல்லாமல் செல்ல விஷ்ணுவுக்கு மனமில்லை. மலர் குடும்பத்துக்கு திருமண வேலைகளில் கொஞ்சம் உதவி விட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லி அங்கேயே தேங்கியிருந்தான்.

அப்படியொன்றும் வீட்டு ஆட்கள் செய்ய வேண்டிய வேலைகள் என எதுவுமில்லை. குறுகிய காலத்தில் தீர்மானிக்க பட்ட திருமணம் என்றாலும் அத்தனை பிரம்மாண்டமாக கோலாகலமாக எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

வழி மாறி வேறு எதுவும் மாயஜால உலகத்துக்கு வந்து விட்டோமோ என வந்தவர்கள் நினைக்கும் வண்ணம் அலங்கரிக்க பட்டிருந்தது மண்டபம்.

கருப்பு நிற சஃபாரி, கண்களில் கருப்புக் கண்ணாடி, காதில் ப்ளூ டூத் என சுற்றிக் கொண்டிருந்த பிரவாகன் நியமித்த ஆட்கள் அனைவரது தேவைகளையும் வெகு சிறப்பாக கவனித்தனர்.

மிருணா தன் கண்களுக்கு தென்படுகிறாளா என விஷ்ணு தேடிக் கொண்டிருக்க பின் பக்கம் வரும் படி அவளிடமிருந்து அவனது கைப்பேசிக்கு செய்தி வந்தது.

பின்னால் இருக்கும் காரிடார் சென்ற விஷ்ணு அவளை காணாமல் தேட, ஒளிந்திருந்த மிருணா பின் பக்கத்திலிருந்து அவனை அணைத்தாள். தன் வயிற்றை சுற்றி இறுக்கியிருந்த அவளது கைகளில் வலிக்காமல் அடி வைத்து, “விடு மிரு” என்றான்.

விடாமல் அவள் இன்னும் இறுக்கிக் கொள்ள, கோர்த்திருந்த அவளது கைகளை பிரித்து தன் முன் இழுத்து நிறுத்தியவன், “உன்னை இப்படி பார்த்ததுல எனக்குதான் மூளை குழம்புதுன்னா உனக்குமா? எல்லா இடத்திலேயும் கேமரா இருக்கு” என கடிந்தான்.

“இங்க இருக்க ரெண்டு கேமராவும் அரை மணி நேரம் முன்னாடிலிருந்தே ஃப்ரீஸ் ஆகிடுச்சு” என்றாள்.

“உன் வேலையா?” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான்.

“பின்ன… சென்னைல பார்க்கிறப்ப எல்லாம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணிட்டு இன்னிக்கு இப்படி ஆள முழுங்கினா என்ன அர்த்தம்?” செல்ல முறைப்போடு கேட்டாள்.

அவளை திருப்பி நிற்க செய்து அவளது முதுகோடு அணைத்து தோள் வளைவில் முகம் பதித்து, “இந்த செகண்ட் எப்போ வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்னு அர்த்தம்” என்றான்.

“நான்தான் உங்களுக்கு ஷாக் கொடுக்க திடீர்னு பின்னால வந்து ஹக் பண்ணிக்கிட்டேன், நீங்களும் ஏன் அப்படி செய்றீங்க? எல்லாரும் தூங்க போயாச்சு. நாம இங்க இருக்கிறது யாருக்கும் தெரியாது” என சின்ன குரலில் சொன்னாள்.

அவளை விட்டு அவன் விலக அவன் பக்கமாக திரும்பி நின்றாள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் நீ ஆசைப்பட்ட மாதிரி கட்டிக்கிறேன்” என்றான்.

அவள் வெட்கத்தோடு சிரிக்க, அவளது கையை பிடித்துக் கொண்டவன், “ரொம்ப அழகா இருக்க மிரு. இப்படி புடவைல பார்க்கும் போது இப்பவே இப்படியே என் கூட அழைச்சிட்டு போய்டலாமான்னு தோணுது” என்றான்.

“ம்ம்… தோணும் தோணும்…” என்ற பிரவாகனின் குரலில் அதிர்ந்து திரும்பினார்கள் இருவரும்.

தங்கையை முறைத்த வண்ணம் பிரவாகன் நின்றிருக்க, விஷ்ணு தான் பிடித்திருந்த மிருணாவின் கையை விட்டு விட்டு சங்கடமாக பார்த்தான்.

“அண்ணா… அது நான்தான் அவரை வர சொன்னேன்… வந்து…” திணறினாள் மிருணா.

அவள் மீது பழி போட்டுக் கொள்வதை விரும்பாத விஷ்ணு, “மிரு!” என அவளை பேச விடாமல் அடக்கி, “இந்த டைம் இப்படி மீட் பண்ணியிருக்க கூடாது, சாரி சார்” என்றான்.

மிருணாவும் “சாரி ண்ணா” என்றாள்.

மிருணாவை தன்னிடம் வந்து நிற்கும் படி பிரவா பார்வையால் சொல்ல விஷ்ணுவை ஒரு முறை பார்த்து விட்டு அண்ணன் பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.

“ஏன் விஷ்ணு… நானே நல்லவிதமா கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொன்னப்போ வீம்பு பண்ணிகிட்டு இங்கேருந்து அங்க போய்… ஷ்ஷப்பா… ஏன் ஒரு விஷயத்தை ஷார்ட்டா சிம்பிலா செய்ய தெரியாதா உங்களுக்கு?” எனக் கேட்டான் பிரவா.

“ஏன் போனேன்னு உங்களுக்கு தெரியாதா?” எனக் கேட்டான் விஷ்ணு.

நக்கலாக சிரித்த பிரவா, “இப்ப மட்டும் என்ன மாறிடும்னு நினைச்சு இப்படி… ஹ்ம்ம்?” எனக் கேட்டான்.

விஷ்ணு அழுத்தமாக பார்க்க, “என் சிஸ்டர் கூட இலவச இணைப்பா நான் தர்றதை ஏத்துக்கிட்டாதான் என் வீட்டு மாப்பிள்ளை ஆக முடியும். இல்லைனா எவன் ஏத்துக்கிறானோ அவன்தான் என் சிஸ்டர் ஹஸ்பண்ட், புரிஞ்சுதா?” எனக் கேட்டான்.

“அண்ணா!” கோவமாக அழைத்தாள் மிருணா.

“வாய தொறந்த…” என பிரவா அதட்ட, முதல் நொடி மிரண்டாலும் அடுத்த நொடி தைரியமாக, “அவரை எதுக்காகவும் கம்பெல் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கேன். உன் கண்டிஷன்ஸ் அவர் கேட்க மாட்டார், அவர் சொல்றதைதான் நான் கேட்பேன்” என்றாள்.

“உன் நல்லதுக்கு சொன்னா என்னையே எதிர்த்துக்கிட்டு நிப்பியா? உன் ‘அவர்’ இருக்காரே அவர்… அவர் வீட்லேயே நான் சொன்னதைத்தான் கேட்பாங்க” என்றான் பிரவா.

“கல்யாணம்ங்கிறது அதை பண்ணிக்க போறவங்க தீர்மானிக்கிறது. வாழப் போறது நாங்கதான்” என்றான் விஷ்ணு.

“அஃப்கோர்ஸ், உங்களை நல்லா வாழ வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு. பிரவா தங்கச்சி புருஷன்னா இந்த சொசைட்டில ஒரு ஹைட்ல இருக்கணும். நான் சொல்ற ஹைட்டுக்கு என் ஹெல்ப் இல்லாம உங்களால வர முடியாது” என்றான்.

“எங்க ஏரியா செல்போன் டவர் ஹைட் போதுமா? இல்ல… இமயமலை போய் அங்க இருக்க எவரெஸ்ட் ல ஏறி நின்னாதான் நீங்க சொல்ற ஹைட் கிடைக்குமா?” என்ற மலரின் குரல் கேட்க, பிரவாவை தவிர மற்ற இருவரும் அவளை பார்த்தனர்.

உடனே திரும்பாமல் சலிப்பாக கண்களை மூடி திறந்த பிரவா நிதானமாக அவள் பக்கம் திரும்பி, “காலைல கல்யாணம், தூங்காம இங்க என்ன வேலை உனக்கு?” எனக் கேட்டான்.

“ம்ம்… என்னை கல்யாணம் செய்துக்க போறவருக்கு தூக்கம் வரலைன்னு உலாத்த கிளம்பிட்டார். அவருக்கு கம்பெனி கொடுக்கலாம்னு வந்தேன்” என்றாள் மலர்.

“நீ ஏம்மா இன்னும் தூங்கல, வா உன்னை உன் ரூம்ல விடுறேன்” என சொல்லிக் கொண்டே அவளருகில் வந்து நின்றான் விஷ்ணு.

“என்கிட்ட ஏன் ண்ணா சொல்லலை நீங்க?” குற்றம் சுமத்துவது போல கேட்டாள் மலர்.

விஷ்ணுவுக்கு முன் முந்திக் கொண்டு, “சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப? எனக்கு தெரியாம இவங்க மீட் பண்ணிக்க ஸேஃபா நீயே வழி ஏற்படுத்தி கொடுத்திருப்பியா?” என குதர்க்கமாக கேட்டான் பிரவா.

“ஏன் இப்படிலாம் பேசுறீங்க? மலர் என் கூட பொறக்காத சிஸ்டர், அவகிட்ட சொல்லலியேன்னு ஆதங்கத்துல கேட்குறா” என்றான் விஷ்ணு.

“விடுங்க ண்ணா, அவர் பேசுற எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்க வேணாம்” என்றாள் மலர்.

“மலர் உன்கிட்ட மட்டும்தான் பொறுமையா போயிட்டு இருக்கேன். நீ நினைக்கிற அளவுக்கு அவ்ளோ ஈஸி கிடையாது நான். பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் நல்லா திரும்ப கிடைக்கும்” என எச்சரித்தான் பிரவா.

விஷ்ணு கவலையும் அதிர்ச்சியுமாக மலரை பார்க்க, அவள் அலட்டிக் கொள்ளாமல்தான் இருந்தாள்.

“என்ன ண்ணா இப்படி பேசுற அண்ணிகிட்ட? லவ் பண்ணி தானே கல்யாணம் செய்ற? நாளைக்கு மேரேஜ் வச்சுகிட்டு இவ்ளோ ஹார்ஷ் டோன்ல பேசுற. இட்ஸ் நாட் ஃபேர் ண்ணா” கண்டனம் தெரிவித்தாள் மிருணா.

“மலர்… எல்லாம் ஓகேதானே?” மலரை பார்த்து தவிப்பாக கேட்டான் விஷ்ணு.

“மிஸ்டர் விஷ்ணு, இங்க வேற பஞ்சாயத்து போயிட்டு இருக்கு, முடிஞ்சு போனதை கிளறி இப்ப நடந்திட்டு இருக்கிறதை ஆஃப் பண்ணாதீங்க” என்றான் பிரவா.

பிரவாகனை ‘சுள்’ என ஒரு பார்வை பார்த்த விஷ்ணு மீண்டும் மலரை பார்த்து அவளை பதில் சொல்ல சொன்னான்.

“எங்களுக்குள்ள பிடிச்சு போய்த்தான் ண்ணா கல்யாணம் நடக்குது” என்றாள் மலர்.

“சரி ஏன் இங்க வந்த இப்போ?” என விசாரித்தான்.

“தூக்கம் வராம ரூம் விட்டு வெளிய வந்தேன். இவர் இவரோட பி ஏ தமன்கிட்ட ஏதோ பேசிட்டு கோவமா நடந்து போனதை பார்த்தேன். கீழ வந்து தமன்கிட்ட என்னன்னு விசாரிச்சேன். மழுப்பலா பேசி என்னை அனுப்பி வைக்க பார்த்தார். ரூம் போறது மாதிரி லெஃப்ட் சைட் வழியால இங்க வந்தேன்” என்றாள்.

“ஒரு வேலையும் உருப்படியா பண்ண மாட்டான், ஸ்டுபிட்!” என அங்கு இல்லாத தமனை திட்டினான் பிரவா.

“நான்தான் கேமரா ஃப்ரீஸ் பண்ணி வச்சிருந்தேனே, உனக்கெப்படி ண்ணா தெரிஞ்சது?” எனக் கேட்டாள் மிருணா.

“செய்றதும் செஞ்சிட்டு எப்படின்னு வேற விசாரிக்கிறியா? போ, உன் அண்ணிய அழைச்சிட்டு ரூம் போ!” என பிரவா அதட்ட, முகத்தை சுருக்கிக் கொண்டு ஏதோ முணு முணுப்பாக அண்ணனை திட்டினாள் மிருணா.

“உங்க அண்ணன் எல்லாரையும் வேவு பார்க்க ஆள் வச்சிருப்பார், ஹாஸ்பிடல் நடத்துறாரா இல்லை கள்ள கடத்தல் மாதிரி தப்பான பிஸ்னஸ் பண்றாரான்னு தெரியலை. பார்க்கிற அவ்வளவும் இல்லீகல் வேலை” என்றாள் மலர்.

“உன் க்ரைம் ரேட் கூடிட்டே போகுது மலர்” என்றான் பிரவா.

“பார்ன் கிரிமினல் என் கிரைம் ரேட் பத்தி சொல்றது வேடிக்கையா இருக்கு” என்றவள் விஷ்ணு முன்னிலையில் அவ்வாறு பேசி விட்டதற்காக தன்னை தானே கடிந்து கொண்டாள்.

“மலர்…” அதிர்வாக அழைத்தான் விஷ்ணு.

மிருணா குழப்பமாக தன் அண்ணனை பார்க்க அவனோ அலட்சிய பாவத்தோடு நின்றிருக்க இன்னும் குழம்பினாள்.

“ஹையோ அண்ணா… ஒரு ஃப்ளோல சும்மா பேசுறதுக்கு எல்லாம் காரணம் கேட்காதீங்க. நான் அவரை அப்படித்தான் பேசுவேன், அந்த பேச்சுல மயங்கி விழுந்துதான் என்னை லவ் பண்ணினாராம் அவர்” என்றாள் மலர்.

“ஆமாம், இந்த பேச்சுலதான் சர்ரு புர்ருன்னு லவ்ல வழுக்கி விழுந்தேன், அம்மாடி மலர், மிச்சத்தை நாளைக்கு பேசி என்னை விழ வைம்மா. இப்ப ரெண்டு பொண்ணுங்களும் கிளம்புங்க” என்றான் பிரவா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement