Advertisement

பேரன்பு பிரவாகம் -13

அத்தியாயம் -13(1)

பிரவாகன் – மலர் திருமணத்திற்கான வேலைகள் படு வேகத்தில் நடந்து கொண்டிருந்தன.

“அவர்கிட்ட பேசினேன், நிஜமாவே லவ் பண்றார், எனக்கும் அவரை கல்யாணம் செய்துகிட்டா என்னன்னு தோணுது ப்பா?” எனதான் அவளது அப்பாவிடம் சொல்லியிருந்தாள்.

யாராலும் எதுவும் செய்ய இயலாது எனும் போது நடந்தவற்றை சொல்லி யாரின் நிம்மதியையும் பறித்துக் கொள்ள விரும்பவில்லை அவள்.

மகளே விருப்பம் எனும் போது திருமணத்தை நடத்தி விடலாம் என முடிவு செய்து விட்டார் செல்வம்.

திருமண தேதி போன்ற விவரங்களை பேச அரசியும் கீர்த்தியும் மலரின் வீட்டிற்கு வந்த போது அவளிடம் தனிமையில் பேசிப் பார்த்தாள் கீர்த்தி.

“நிஜமா உனக்கு விருப்பமா?” எனக் கேட்டாள் கீர்த்தி.

“விருப்பம்தான், கல்யாணம் பண்ணிக்கிட்டா ஃப்ரீ பிளாக் ட்ரஸ்ட்டோட ட்ரஸ்ட்டீ ஆக்குறேன்னு சொல்லியிருக்கார்” என்றாள் மலர்.

அதுக்காக கல்யாணம் செய்திப்பியா?”

“இந்த கல்யாணம் ஒரு நல்ல விஷயம் நடக்க உதவியா இருக்கு, உங்க தம்பி வேற என்னை லவ் பண்றார்,கல்யாணம் செஞ்சா தப்பில்லையே?”

“அவன் லவ் பண்றான்னு நம்புறியா நீ?”

“பேசிப் பார்த்ததுல அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் மலர்.

இலவச மருத்துவமனை நன்றாக நடக்க வேண்டும் என நினைத்து சம்மதித்து விட்டாள் போலும் என நினைத்துக் கொண்டாள் கீர்த்தி.

 “நிஜமா அவரை புடிச்சிருக்கா?” என அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்த பரத்தை அதட்டி அடக்கி வைத்தார் விமலா.

மலருக்கு சிறப்பான வாழ்க்கை கிடைத்து விட்டதாக நினைத்து விமலாவை போலவே அகிலாவுக்கும் அத்தனை மகிழ்ச்சி.

விஷ்ணுவுக்கு விஷயம் தெரிவதற்கு முன் மிருணாவுக்கு தெரிந்து விட்டது. அவள்தான், “என் அண்ணன் எங்க ஹாஸ்பிடல் டாக்டர் மலர்ங்கிறவங்கள லவ் பண்றார். மேரேஜ் டேட் கூட ஃபிக்ஸ் ஆகிடுச்சு. உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு அம்மா சொன்னாங்க” என்றாள்.

“நோ வே! இது வேற மலரா இருக்கும்” என்றான்.

கைப்பேசி எடுத்து அண்ணனின் டாட்டூவை காட்டினாள்.

“மலர்தான் இது, ஆனா என்ன இதெல்லாம்?”

“நானும் நம்பவே இல்லை, என் அக்காதான் இந்த போட்டோ அனுப்பினாங்க, எல்லாருக்குமே ஷாக்தானாம்” என விவரம் சொன்னாள் மிருணா.

“உன் அண்ணனா? பெர்மனெண்ட் டாட்டூவா இது?”

“அட ஆமாங்க, இப்படிலாம் என் அண்ணன் செய்வாருன்னு முன்னாடி யாராவது சொல்லியிருந்தா சத்தியமா சிரிச்சிருப்பேன். நிஜமாவே லவ்தான், இல்லைனா என் அண்ணா இப்படி செஞ்சிருக்க மாட்டார், ஹவ் க்யூட்!”

“ஏது… உன் அண்ணன் லவ் பண்றார்! ஸிக்த் சென்ஸ் ஒர்க் அவுட் ஆகாம போயிடுச்சா மிரு உனக்கு? ஏதோ தப்பா இருக்கு. அவங்க ரெண்டு பேருக்கும் கருத்து வேற்றுமைதான் அதிகம் இருக்கும். இதெப்படி சாத்தியம்?”

“கருத்து வேற்றுமைக்கும் லவ்வுக்கும் சம்பந்தம் இல்லை விஷ்ணு. ஆப்போசிட் கேரக்டர்ஸ் உள்ளவங்கதானே ஈஸியா அட்ராக்ட் ஆவாங்க?”

“உனக்கு சொன்னா புரியாது. உன் அண்ணன் லவ் பத்தி தெரியலை, கண்டிப்பா மலர் அவரை லவ் பண்ண சான்ஸ் கிடையவே கிடையாது. எனக்கு எப்படி யாரும் சொல்லாம போனாங்க?”

“எனக்கே நேத்துதான் இந்த விவரம் எல்லாம் தெரிஞ்சது. எதுவும் முடிவாகாம சொல்ல வேணாம்னு இருந்தாங்களாம். நேத்துதான் அம்மாவும் அக்காவும் அவங்க வீட்டுக்கு போய் டேட் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்திருக்காங்க” என்றாள்.

நம்ப முடியாத விஷ்ணு உடனே மலருக்கு அழைத்து கேட்க, “ஆமாண்ணா, லவ் பண்றார், எனக்கும் பிடிச்சிருக்கு” என்றாள்.

“அவரை பத்தி தெரியும்தானே மலர், ஹாஸ்பிடல் நிலைமை சரியில்லை, எதுவும் பிடிக்கல, அநியாயம் நடக்குதுன்னு என்கிட்ட சொன்னியே மலர்? நிஜமா உனக்கு அவரை பிடிச்சிருக்கா? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லும்மா” என வாஞ்சையாக கேட்டான்.

நிஜத்தை சொன்னால் விஷ்ணுவால் முடிந்த அளவு இவளுக்காக போராடுவான் என மலருக்கு நன்கு தெரியும். ஆனால் பிரவாகனின் பணம், செல்வாக்கு முன்னிலையில் யாராலும் எதுவும் செய்ய இயலாதே.

பெருமூச்சு எடுத்துக் கொண்டவள், “நாங்க பேசினோம் ண்ணா. அங்க நடக்கிற நிறைய விஷயம் அவருக்கே தெரியலை. அதெல்லாம் கவனிக்க அவர்கிட்ட டைம் இல்லையாம். கல்யாணம் அப்புறம் என்னை பார்த்துக்க சொல்லியிருக்கார். மேலோட்டமா பார்த்தாதான் அவர் மண்டை கனம் பிடிச்சவர் போல இருக்கார், நிஜமா நல்லவர்தான் ண்ணா” மனமறிந்து பொய் உரைத்தாள் மலர்.

மலரே இப்படி சொல்லும் போது மேலும் அதை பற்றி ஆராயாமல் நல்ல விதமாக பேசி உரையாடலை முடித்து விட்டான் விஷ்ணு.

“நிஜமா உன் அண்ணன் மலரை லவ் பண்ணினா சரிதான். இல்லை அவளை எதுக்காகவும் கஷ்ட படுத்தணும்னு நினைச்சார்… மார்க் மை வேர்ட்ஸ் மிரு… உன் அண்ணனோட முதல் எதிரி நானாதான் இருப்பேன்” என்றான் விஷ்ணு.

“சும்மா இருங்க விஷ்ணு, அண்ணா லவ்தான் பண்றார். சும்மா எல்லாம் கல்யாணம் வரை போவாரா?” எனக் கேட்டு அவனை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் மிருணா.

அவளது நண்பன் கிஷோர் மற்றும் கமலவேணி என கேட்டவர்கள் அனைவரிடமும் விஷ்ணுவிடம் சொன்னதையேதான் சொன்னாள் மலர்.

ஆகவே மலரை மிரட்டித்தான் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறான் என்ற செய்தி யாருக்கும் தெரிய வரவே இல்லை.

இந்த திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என உடல்நலன் ஒத்துழைப்பு கொடுக்கா விட்டாலும் ஜோதிடர் சொன்ன கோயில்களில் வழிபாடுகள் செய்தும், அன்னதானம் வழங்கிக் கொண்டும் இருந்தார் அரசி.

“என்ன சார் இது? பிரவாகன் லவ் பண்றாரா? அவர் சொன்னதா நீங்க சொல்லி மலரை நிறைய டார்ச்சர் பண்ணிட்டேன், மலர்தான் பிரவாகன் வைஃப்னா… இனி எம்பாடு திண்டாட்டம்தான், போங்க சார்” கவலையாக சொன்னார் பிரீ பிளாக் சூப்பரிண்ட்டெண்ட் ஏகாம்பரம்.

“பிரவாகனுக்கு லவ்வா?” நக்கலாக கேட்டார் தர்மேந்திரன்.

“லவ்தான், அப்படித்தான் எல்லாரும் சொல்லிக்கிறாங்க. கேம்பஸ் உள்ள இதுதான் ஹாட் டாபிக்”

“நயா பைசா பிரயோஜனம் இல்லாம எதுவும் செய்ய மாட்டான் பிரவாகன்”

“ஓ! பிரவாகன் பத்தி அவ்ளோ தெரியுமா உங்களுக்கு?”

“அவனை பத்தி அதிகம் தெரியாது, ஆனா என் அண்ணன் பத்தி நல்லா தெரியும்.”

“விளங்குற மாதிரி சொல்லுங்க சார்” என்றார் ஏகாம்பரம்.

“என் அண்ணா அவன் இள வயசுல ஒரு பணக்கார பொண்ணை விரும்பினான். அப்பதான் அன்பு ஹாஸ்பிடல் ஓனர் பொண்ணு அன்பரசிய கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு வந்தது. அவன் விரும்பின பொண்ணை விட அன்பரசி பல மடங்கு வசதியுள்ள பொண்ணு. கொஞ்சம் கூட யோசிக்காம விரும்பின பொண்ணை நட்டாத்துல விட்டுட்டு அன்பரசிய கல்யாணம் பண்ணிகிட்டு இந்த ராஜாங்கத்துக்கு ராஜா ஆகிட்டான். பிரவாகன் என் அண்ணா மகேந்திரனோட அச்சு வார்ப்பு. அப்பனை மாதிரிதான் இவனும் இருப்பான்”

“அப்படியா சார்? ஆனா நான் பார்த்த வரைக்கும் அரசி மேடம்கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்கிட்டாரே உங்கண்ணன்”

“பின்ன… வைஃப்கிட்ட அன்பா நடந்து நம்பிக்கையை சம்பாதிச்சு அவன் இல்லைனா தான் இல்லைங்கிற அளவுக்கு மாத்தி வச்சதாலதான் அவன் செய்ற எதுலேயும் அரசி தலையிட்டுக்கல. புருஷன் எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு கண் மூடித் தனமா நம்பினதாலதான் ஃப்ரீ பிளாக்ல என் ராஜாங்கம் நடந்திட்டு இருக்கு?”

“அரசி மேடம் கொஞ்ச காலம் பொறுப்பு பார்த்துகிட்டப்ப எல்லாம் சரியா இருந்த காரணம் உங்க அண்ணன் இல்லாததுதானா சார்?”

“பின்ன? ஆனா நடக்கிறது எனக்கு சாதகமா இருந்தது, அரசிக்கு ஹார்ட் அட்டாக் வந்து பிரவாகன்கிட்டயே எல்லா பொறுப்பும் வந்திடுச்சு”

“ஹ்ம்ம்… ஆனாலும் சார், உங்க அண்ணன் பண்ணினதுல காரணம் இருக்கு. மலர் சாதாரண குடும்பத்து பொண்ணு. பெரிய வசதியான குடும்பங்கள் நிறைய பேர் பிரவாகனை அவங்க வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க காத்திட்டு இருக்கும் போது அவர் ஏன் மலரை கல்யாணம் செய்யணும்? ஒரு வேளை நிஜமாவே லவ்தான் போல சார்”

“இந்த கல்யாணத்துக்கு பின்னால ஸ்ட்ராங்கான காரணம் இல்லாம இருக்காது” என உறுதியாக சொன்ன தர்மேந்திரன் அதை எவ்விதம் கண்டு பிடிப்பது என தன் கோணல் புத்தி கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.

“என்ன யோசனை சார்? கல்யாணம் அப்புறம் கூட இங்கதான் வருவேன்னு சொல்லிட்டு இருக்கே அந்த பொண்ணு? நமக்கு எதுவும் இடைஞ்சல் தருவாளோ?” இன்னும் ‘நான்தான் ட்ரஸ்ட்டீ ஆக வேண்டும்’ என மலர் பிரவாகனிடம் போட்ட கண்டிஷன் பத்தி அறியாத ஏகாம்பரம் கேட்டார்.

“யாரு அந்த சுண்டைக்காய் டாக்டர் பொண்ணு எனக்கு இடைஞ்சல் கொடுக்குமா? நடக்கிறத பாருங்களேன்” என வில்லங்கமாக சொன்னார் தர்மேந்திரன்.

கீர்த்தியின் புகுந்த வீட்டில் அவளது கணவன் மற்றும் பிள்ளைகளை தவிர மற்றவர்களுக்கெல்லாம் தாரிகாவை தவிர்த்து விட்டு மலரை பிரவாகன் மணம் புரிய போவதை ஜீரணிக்க முடியவில்லை. மலரின் வசதியை வைத்து மட்டம் தட்டியும் ஏதோ தந்திரம் செய்து பிரவாகனை மயக்கி விட்டாள் எனவும் பேசினார்கள்.

சரத் ஒரு படி மேலே போய், “டாக்டரா அது? திருட்டு வேலை செய்ற பொண்ணு. சேச்ச… எப்படித்தான் அவளை போய் பிரவாகன் சார் மேரேஜ் பண்ணிக்க போறாரோ” என கேவலமாக பேசினான்.

“மலரை பத்தி தப்பா ஒரு வார்த்தை பேச என்ன நினைக்க கூட இங்க யாருக்கும் உரிமை இல்லை, இல்லை அப்படித்தான் பேசுவோம்னா என் தம்பி காதுக்கு விஷயத்தை எடுத்திட்டு போறது தவிர வேற வழியில்லை எனக்கு” என நேரடியாக சொல்லி விட்டாள் கீர்த்தி.

குடும்பத்துக்குள் பிரச்சனைகள் வராமல் இருக்க எப்போதும் சுமூகமான முறையில்தான் எதையும் கையாள்வாள் கீர்த்தி. ஆனால் தன் தம்பியின் வருங்கால மனைவியை இப்படி தரக் குறைவாக இவர்கள் விமர்சிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் பேசி விட்டாள்.

பிரவாகனுக்கு பயந்து மருமகளை சமாதானம் செய்தார் சிதம்பரம். ஆனால் வீட்டுப் பெண்கள் கீர்த்தியிடம் முகம் திருப்ப ஆரம்பித்திருந்தனர். வாசவி நல்ல பெண், அவள் கீர்த்தியிடம் இணக்கமாக இருப்பதை கவனித்த சரத் அவளை கண்டித்தான். கணவனுக்கு பயந்து அவளும் கீர்த்தியை தவிர்க்க ஆரம்பித்து விட்டாள்.

இப்படியாக இந்த திருமணம் ஒவ்வொருவரிடமும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement