Advertisement

அத்தியாயம் -13(3)

“அதான் மேடம் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கதானே சார்? மேரேஜ் வரைக்கும் அவங்களை ப்ரோவோக் பண்ணாம அமைதியா போனா என்னங்க சார்?” எனக் கேட்டான் தமன்.

“யோவ்! என்னமோ அவ ஆசை ஆசையா என்னை கட்டிக்க சம்மதிச்ச மாதிரி சொல்ற? இப்படி இருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் குஸ்தி போட்டுக்க வேண்டியதுதான். எனக்கு என் மேரேஜ் லைஃப் ஸ்மூத்தா போகணும். மல்லுக்கட்டிட்டி இருக்கிறவளை என் பக்கம் இழுக்க ட்ரை பண்றேன். என்ன செஞ்சாலும் கொடுக்கு தூக்கிட்டே திரியுறா” கடுப்பாக சொன்னான்.

“அவங்களுக்கு புடிச்ச மாதிரி நடக்கணும் சார் அதுக்கு?”

“ஏது சோசியல் சர்வீஸ் பண்ண சொல்றியா என்னை? அதெல்லாம் நடக்கிற காரியமா? நான் செய்றதை அவளுக்கு பிடிக்க வைக்கிறேன் பார்” என்றான்.

“பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலை சார்”

“இப்ப வந்திட்டு போன டிசைனர்ஸ் எல்லாத்துக்கும் எவ்ளோ காஸ்ட் ஆகும்னு பில் அனுப்பியிருக்கானுங்க, பாரு” என்றவன் தன் முன் இருந்த லேப்டாப்பை தமன் பக்கமாக திருப்பினான்.

திருமண பட்டு மட்டும் இருபது லட்சங்கள், மற்ற ஆடைகளுக்கான விலைப் பட்டியல் தனி. நகைகளின் மொத்த மதிப்பு சில கோடிகள்.

தமன் விழி விரித்து அவனை பார்க்க, “புடவைக்கும் நகைக்கும் மயங்காத பொண்ணு உண்டா? சும்மா இல்ல கோடிக் கணக்குல வாங்கி குவிக்கிறேன் அவளுக்காக, எல்லாம் ரெடி ஆகி வரட்டும், எப்படி மயங்கி போறான்னு மட்டும் பாரு” என்றான்.

“சார்… மலர் மேடம் அதுக்கும் மயங்கலைன்னா…”

“யோவ் வாய வைக்காதய்யா”

“எதுக்கும் ரெடியா இருக்கிறது நல்லதுதானே சார்?”

“மயங்காம இருக்க மாட்டா. அப்படியே இருந்தாலும் கவலையில்ல. எல்லாம் ஒரு வருஷம் வரைக்கும்தான்”

“ஒரு வருஷத்துல என்ன மாறும் சார்?”

“எதுவும் மாறாது, எங்களுக்கு ஒரு பேபி பொறக்கும். அப்புறம் என் பொண்ணையோ பையனையோ கவனிக்கவே அவளுக்கு நேரம் சரியா இருக்கும். அந்த பேபிக்கு மூணு வயசாகி இவ ரிலாக்ஸா சுத்தி முத்தியும் பார்க்க ஆரம்பிக்கிற நேரம் அடுத்த பேபி வந்திடும்” என்றான்.

“மேடம் அப்படிலாம் இருப்பாங்களா சார்?”

“எல்லா பொண்ணுங்களும் அப்படித்தான், இவ மட்டும் விதி விலக்கா? கனவு லட்சியம் எல்லாம் குழந்தை பொறந்ததும் வேனிஷ் ஆகிப் போயிடும். கடமை, நேர்மை, சமூக சேவை எல்லா மண்ணாங்கட்டியும் அம்மாங்கிற ரோல் முழுசா விழுங்கிடும்” என சொல்லி கைகளை நீட்டி உயர்த்தி நெட்டி முறித்தான்.

“இப்போதைக்கு குழந்தை வேணாம்னு மேடம் முடிவு பண்ணிட்டா…”

“அவ என்ன அதை முடிவு பண்றது? கல்யாணமே அவ முடிவு இல்லை. இனிமே எல்லாமே என் முடிவுதான் என் இஷ்டம்தான். மிடில் கிளாஸ் பொண்ணு, ஹை கிளாஸ் வாழ்க்கை என்னன்னு தெரியாதவ. தெரிஞ்சுக்கிட்டா நான் காட்டுற மாயலோகத்த விட்டு வெளி வர மாட்டா” என்றவனிடம் கர்வம் ஆர்ப்பரித்தது.

சட்டென கதவை திறந்து கொண்டு மலர் உள்ளே வர, தான் பேசியதை அவள் கேட்டிருக்க கூடிய வாய்ப்பு இல்லையென்றாலும் நொடி நேரத்தில் தூக்கி வாரிப் போட திகைத்து பின் சுதாரித்தான் பிரவாகன்.

“என்ன ஏன் ஜெர்க் ஆகுறீங்க?” கேட்டுக் கொண்டே வந்தவள் அவனுக்கு முன்னிருந்த இருக்கையில் சாவகாசமாக அமர்ந்தாள்.

“நாக் பண்ணிட்டு வர மாட்டியா?” எனக் கேட்டான்.

“பாய் ஃப்ரெண்ட் ரூம்க்கே பெர்மிஸன் இல்லாம போகலாம், நீங்க என் வருங்கால கணவர். அப்போ நான் வரலாம், அப்படித்தான் வருவேன்” என்றாள்.

“குட், இப்படி உரிமையா இருன்னுதான் நானும் சொல்றேன் மலர்” என சொல்லி சிரித்தான்.

“தமன் போங்க, பத்மா சார் நான் கூப்பிட்டா உள்ள வர மாட்டேங்குறார், உங்க பாஸ் சொன்னாதான் வருவாராம். இவர் கூப்பிடறதா சொல்லி அழைச்சிட்டு வாங்க” என்றாள்.

அவன் பிரவாகனின் முகம் பார்க்க, “உங்களுக்கு உள்ள எல்லா மரியாதையும் எனக்கும் கொடுக்கணும்னு யார் யாருக்கோ சொல்லியிருக்கீங்க, உங்க பி ஏ க்கு சொல்லலையா?” எனக் கேட்டாள்.

‘போ’ என்பதாக பிரவாகன் தமனுக்கு கை காட்ட, அவன் சென்று பத்மநாதனோடு உள்ளே வந்தான்.

அவரை அமர சொன்னவன், “ஜே சி ஐ ரிப்போர்ட்ங் ஆல்டர்னேட் டேஸ் மட்டும் டைரெக்ட் ரிப்போர்ட் பண்ணினா போதும், மத்தது போன்ல சொல்ல சொல்லிட்டேனே அங்கிள், ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க?” எனக் கேட்டான்.

“அதில்ல பிரவா, ஃப்ரீ பிளாக் இன்ஸ்பெக்ஷன் போய் ரிப்போர்ட் பண்ண சொல்லியிருந்தியே” என சொல்லி ஒரு கோப்பை அவன் முன் வைத்தார்.

“ஓ… ஐ ஃபர்காட் அங்கிள்” என்றவன் அந்த கோப்பை கையில் எடுத்து பிரித்துக் கூட பார்க்காமல் மீண்டும் மேசையிலேயே வைத்து விட்டான்.

“அங்க எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல பிரவா, டீடெயில் ரிப்போர்ட் இதுல இருக்குப்பா” என்றார்.

“மேரேஜ் வேலை எல்லாம் நிறைய இருக்கு அங்கிள். நீங்க இத மறந்திட்டு ஜே சி ஐ க்கு ரெடி ஆகுறதுல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுங்க. சித்தப்பாகிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான்.

“சும்மா சும்மா அவர்கிட்ட பேசுறதுல என்ன பிரயோஜனம்? இது என்னன்னு பார்த்து ஆக்ஷன் எடுங்க” என்றாள் மலர்.

பத்மநாதனை கிளம்ப சொன்ன பிரவா, “மேரேஜ்க்கு அப்புறமா இந்த தலைவலிய நீயே பார்த்துக்கிறதா சொல்லியிருக்கதானே? அதனால இப்போதைக்கு கிடப்புல போட்டுட்டேன்” என சொல்லி அந்த கோப்பை எடுத்து தமனிடம் நீட்டினான்.

சட்டென அந்த கோப்பை பறித்துக் கொண்டவள், “எப்படியா இருந்தாலும் என் கைக்கு வரப் போற ஃபைல்தானே, நானே வச்சிக்கிறேன்” என்றாள்.

தமன் பிரவாவை பார்க்க, ‘விட்டு விடு’ என பார்வையால் சொன்னான்.

கோப்பை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தவளது கவனத்தை கலைத்து நகை மற்றும் ஆடைகளின் விலைப்பட்டியலை காண்பித்தான்.

அவள் எந்த பாவனையும் காட்டாமல் சாதாரணமாக இருக்க, “உங்கப்பா சேர்த்து வச்சிருக்க பிராப்பர்ட்டி முழுசையும் வித்தா கூட இதையெல்லாம் வாங்க முடியாது. எல்லாமே உனக்குத்தான், இது சாம்பில், இன்னும் எவ்ளோ உனக்கு நான் செய்வேன்னு போக போக தெரிஞ்சுக்குவ” என்றான்.

“பத்மா சார் எக்ஸ்பீரியன்ஸ் வேற லெவல்தான். எனக்கே அங்க எப்படி சில விஷயங்கள் எல்லாம் சரி செய்றதுன்னு மலைப்பா இருந்தது, நல்ல சொலூஷன்ஸ் சஜ்ஜஸ்ட் பண்ணியிருக்கார்” என்றாள் மலர்.

கோவமாக அந்த கோப்பை பறித்து தரையில் விட்டெறிந்து விட்டு, “நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீ என்ன சொல்லிட்டு இருக்க?” என சீற்றமாக கேட்டான்.

அவனை முறைத்துக் கொண்டே எழுந்தவள் அந்த கோப்பை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அவனிடம் பார்வையால் வெறுப்பை உமிழ்ந்தாள்.

“ரோடியம், பலேடியம் இதெல்லாம் போட்டு பார்த்திருக்கிறியா நீ? உன் பட்டு சாரி பல்லு ல கோல்டால இழைக்க சொல்லியிருக்கேன். கொஞ்சம் கூட ஹைப் ஆகாம… ஈ ஓட்டிட்டு இருக்க பழைய கட்டிடம் பத்தி பேசி கடுப்பாக்கிக்கிட்டு…” எரிந்து விழுந்தான்.

தமன் அங்கு இருப்பதா செல்வதா என ஒன்றும் புரியாமல் தன் முதலாளியின் கண்ணசைவுக்காக காத்துக் கொண்டு அங்கேயே நின்றான்.

தமன் அங்கு இருப்பதெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை பிரவாகன். இத்தனை செய்கிறேன், எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாளே என்பதில் அவனது அகங்காரம் சீண்ட பட்டிருக்க அவனிடம் அப்படியொரு கோவம்.

“இதெல்லாம் போட்டதும் நீ எப்படி இருப்பேன்னு கற்பனை கூடவா வராது உனக்கு? என்னடி பொண்ணு நீ? எந்த ஆகாசத்திலேருந்து குதிச்சிருக்க?”

“ஹ்ம்ம்… இதெல்லாம் உங்களுக்கு பிடிச்சிருக்கா?” நிதானமாக கேட்டாள் மலர்.

கொஞ்சமாக தரை இறங்கியவன், “யா… எப்படி செய்யணும்னு பார்த்து பார்த்து சொன்னது நான்தானே?” எனக் கேட்டான்.

“வெரி சிம்பில்…” தோள்களை குலுக்கியவள், “அப்ப இந்த ரோடியம், பலேடியம் கோட்டட் ஜீவல்ஸ் அண்ட் கோல்ட் எம்பெட்டட் சில்க் சாரி… எல்லாத்தையும் நீங்களே போட்டுக்கோங்க, ஐ டோண்ட் மைண்ட்!” என சொல்லி வெளியேறி விட்டாள்.

தன் முன்னிலையில் தன் முதலாளிக்கு ஏற்பட்ட அவமானத்தில் கண்களை சுருக்கிக் கொண்டே பாவமாக பார்த்தான் தமன்.

தன் மேசையில் இருந்த கோப்புளை எல்லாம் தமன் மீது விசிறி எறிந்த பிரவா, “கெட் லாஸ்ட் யூ இடியட், அவ சத்தம் போட ஸ்டார்ட் பண்ணனப்பவே வெளிய ஓடாம இங்க என்னடா உனக்கு வேலை?” என கத்தினான்.

தமன் வேகமாக வெளியே போக, “நில்லு மேன்!” என அதற்கும் கத்தினான்.

தமன் மூச்சு வாங்கிக் கொண்டே திரும்பி பார்க்க, “எல்லா அப்பாயிண்ட்மெண்ட்ஸும் கேன்சல் பண்ணு, ரிப்போர்டிங் பண்ண வந்தவங்ககிட்ட நீயே ரிப்போர்ட் வாங்கிக்க. யாரும் என் ரூம் வரக்கூடாது” என இரைந்தான்.

“ஓகே சார்” என பயத்தோடு சொல்லி விட்டு வெளியேறினான் தமன்.

மேசையில் விரல்களை தட்டி இலக்கில்லாமல் வெறித்த பிரவாகனின் தலையோடு சேர்த்து உடலும் கொதிப்பது போலிருக்க அவனது மூக்கு விடைத்துக் கொண்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement