Advertisement

அத்தியாயம் -13(2)

மலர் தினமும் பிரவாகன் அனுப்பி வைக்கும் காரில்தான் மருத்துவமனை வந்து செல்கிறாள். மலரிடம் சொன்னால் மறுத்து பிடிவாதம் செய்வாள் என்பதால் அவளது தந்தையிடம், “இனியும் மலர் அப்படி ஸ்கூட்டர்ல போறது எல்லாம் நல்லாவா இருக்கும் மாமா? ஸேஃப் கூட கிடையாது” என சொல்லி காரில் வர அனுமதி பெற்றுக் கொண்டான்.

மருத்துவமனை வளாகத்தின் வழியில் இவளை காணும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் இவளுக்கு வணக்கம் வைத்தனர். மதிய உணவுக்காக உணவகம் சென்றால் மேனேஜர் ஓடி வந்து உபசரனை செய்தான். அடுத்து நடந்த மருத்துவ முகாமில் அவளது பெயர் வரவில்லை.

டியூட்டி மருத்துவர் அறை சகல வசதிகள் கொண்டதாக புதுப்பிக்க பட்டது.

கிஷோர் கூட முன்பு போல அவளிடம் சகஜமாக பேசாமல் யோசித்து யோசித்து பேசுவது போல பட பொங்கி விட்டாள்.

“திடீர்னு என் தலைல கிரீடம் ஏறிடுச்சா… இல்லை பார்க்க ரத்த காட்டேரி மாதிரி பயங்கரமா இருக்கேனா?” என தன் நண்பனிடம் சீறினாள்.

“இனிமே நீ எனக்கு வெறும் ஃப்ரெண்ட் மட்டும் இல்லையே மலர், உனக்குண்டான ரெஸ்பெக்ட் கொடுத்துதானே ஆகணும் நான்?” என பாவமாக கேட்டான் கிஷோர்.

“இந்த கல்யாணம் என்னை எந்த விதத்திலேயும் மாத்தாது, நீயும் மாற வேண்டிய அவசியம் இல்லை. ப்ளீஸ் பழைய படி இரு கிஷோர்” என கெஞ்சலாக மலர் கேட்க அவன் தலையாட்டிக் கொண்டான்.

மலரை தனது அறைக்கு வரும் படி பிரவாகனிடமிருந்து செய்தி வர, எரிச்சலோடு எழுந்து சென்றாள். பேட்டரி கார், தமனின் வரவேற்பு என்ற ஆர்ப்பாட்டங்களை சகித்து சிறப்பு வாயில் வழி வருங்கால கணவனின் அறைக்கு செல்லப் போக, வெளியில் காத்திருந்த பத்மநாதன் மரியாதையாக எழுந்து நின்றார்.

“சார்… நீங்களுமா?” என அலுப்பாக கேட்டாள்.

புன்னகைத்தவர், “பிரவாகனுக்கு உண்டான எல்லா மரியாதையும் உனக்கும் தரணும்னு சொல்லிட்டான் மா.எனக்கு மட்டுமில்ல, முக்கிய பொறுப்புல இருக்க எல்லாரையும் அழைச்சு மீட்டிங் போட்டு சொல்லியிருக்கான். உன் இடத்துக்கு தக்க படி நீயும் நடந்துக்க, ஸ்டராட்டிங்ல ஒரு மாதிரி இருந்தாலும் சீக்கிரம் பழகிடும்” என்றார்.

“மனசால ஏத்துக்க முடியாத எதையும் பழகிக்க முடியாது சார்” என்றாள்.

பத்மநாதன் ஏதோ சொல்லப் போக, “மேடம் போகலாம், சார் உங்களுக்காக வெயிட் பண்றார்” என்றான் தமன்.

அவனை எரிப்பது போல பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்தாள். அங்கு ஏற்கனவே வேறு நான்கு நபர்கள் இருந்தனர். தென்னிந்திய சாயல் இல்லை அவர்களிடம்.

கேள்வி பட்டிராத, சட்டென மனதில் பதியாத பெயர்களை சொல்லி அவர்களை அறிமுகம் செய்வித்தவன், “உன் காஸ்ட்யூம் அண்ட் ஜுவல்ஸ் டிசைன் பண்ண வந்திருக்காங்க. உன் விருப்பத்தை சொல்லு” என்றான்.

இரண்டு நாட்களுக்கு முன்பே இப்படி வடிவமைப்பாளர்கள் வீட்டுக்கு வருவார்கள் என சொல்லியிருந்தான்.

“அதுக்கு எந்த அவசியமும் இல்லை, கல்யாணமே என் இஷ்ட படி இல்லை. மத்த கூத்தையெல்லாம் கூட உங்க இஷ்ட படியே நடத்திக்கோங்க” என சொல்லியிருந்தாள்.

ஒரு சிரிப்போடு அப்போது விட்டு விட்டவன் இன்று இப்படி மருத்துவமனைக்கே அழைத்து வருவான் என இவள் நினைத்திருக்கவில்லை.

எப்படி வேண்டும் உங்கள் திருமண ஆடை என வடிவமைப்பாளர் கேட்க, அவள் வாயை திறப்பதற்கு முன், “ஆடம்பரமா இருக்கணும், ஒவ்வொரு நூல் இழையிலேயும் அந்த ஆடம்பரம் எதிரொலிக்கணும். இதுவரை யாரும் அது போல அணியாததாக சிறப்பும் தனித்தன்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு வந்து செல்பவர்களுக்கு வாழ்நாள் வரை நினைவில் தங்க வேண்டும்” என ஆங்கிலத்தில் சொன்னான் பிரவாகன்.

‘இவன் அடங்கவே மாட்டானா, சரியான அல்டாப்பு அனகோண்டா!’ மனதிற்குள் கவுண்டர் கொடுத்து விட்டு அமைதியாக இருந்தாள்.

லேப்டாப்பில் சில மாதிரிகளை வடிவமைப்பாளர் காட்ட மலரை பார்க்க சொன்னான். அவள் அதிக நேரமெல்லாம் எடுக்கவில்லை, மூன்றாவதாக காட்டியதை ஓகே செய்து விட்டாள்.

“என் அனுபவத்துல இவ்ளோ சீக்கிரம் திருமண ஆடையை தேர்ந்தெடுத்த பெண்ணை கண்டதே இல்லை” என வியப்பாக சொன்னார் வடிவமைப்பாளர்.

“ஹையோ தமன்! இந்தாள்கிட்ட சொல்லுங்க, இப்படி ஒரு கல்யாணத்தையே அவர் அனுபவத்துல பார்த்திருக்க மாட்டார்னு” என்றாள் மலர்.

என்ன சொல்கிறாள் என வடிவமைப்பாளர் வினவ, “என்னையே அப்படித்தான் வித் இன் செகண்ட்ஸ்ல செலக்ட் பண்ணினாளாம், மனசுக்கு பிடிச்சது சீக்கிரம் அமைஞ்சிட்டா அப்புறமும் ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்னு கேட்கிறா” என விளக்கம் சொன்னான் பிரவாகன்.

“தமன் உங்க எம் டி யோட எக்ஸ்பிளநேஷன் கேட்டுகிட்டு எப்படி சிரிப்பை அடக்கிக்கிறீங்க? ப்ளீஸ் எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க” எனக் கேட்டு சிரிப்பை அடக்குவது போல செய்தாள் மலர்.

மலர்ந்து சிரித்த பிரவாகன், “இந்த டிசைன் நல்லா இல்லை, வேற பார்க்கலாமா மலர்? ஆயிரம் டிசைன்ஸ் பார்த்து அதுல ஒண்ணு செலக்ட் செய்யலாம். இல்லை அதுவும் நமக்கு சேட்டிஸ்ஃபை ஆகலைனா நாலு நாள் இவரை உட்கார வச்சு நாமளும் உட்கார்ந்து பிடிச்ச மாதிரி டிசைன் உருவாக்கலாம். என்ன சொல்ற?” எனக் கேட்டான்.

சிரிப்பை கைவிட்டு இயல்பானவள் இன்னும் மற்ற சடங்குகளுக்கு தேவையான ஆடைகளையும் விரைவாக தேர்வு செய்து சொன்னாள். ஆடை வடிவம்தான் அவளின் தேர்வு, அது எப்படி தயாராக வேண்டும் என்பதை பிரவாகன்தான் சொன்னான்.

அவன் சொன்னது போலவெல்லாம் வடிவமைக்க சில மாதங்களாவது ஆகும் என வடிவமைப்பாளர் சொல்ல திருமண தேதிக்குள் தயார் செய்யும் படியான அளவிலேயே தன் எதிர்பார்ப்பை நிறுத்திக் கொண்டான்.

அடுத்து நகைகளுக்கும் அதே போல. கழுத்துக்கு ரோடியம் முலாம் பூசப் பட்ட தங்க ஆபரணங்கள். பலேடியம் முலாம் பூசப்பட்ட தூய தங்கத்தில் செய்யப் பட்ட காதணிகள், மோதிரங்கள், வங்கிகள், வெள்ளை தங்கத்தில் செய்யப் பட்ட வளையல்கள், நவ ரத்தினக் கற்கள் பதிக்க பட்ட ஒட்டியாணம், நெற்றிச்சுட்டி என இஷ்டத்திற்கு ஆர்டர் கொடுத்தான்.

“என்ன இதெல்லாம்… நகைக்கடை ஓபன் செய்ய போறீங்களா?” கடிந்தாள் மலர்.

“ஏது இத மட்டும் வச்சிட்டு கடை ஓபன் பண்ணிடுவியா? இது கல்யாண நகைதான், முதல் நாள் ஃபங்ஷன், ரிஷப்ஷன் இதுக்கெல்லாம் வேற ஆர்டர் செய்யணும்” என்றவன் வடிவமைப்பாளரிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு ரிஷப்ஷனுக்கு பிளாட்டின நகைகள், முதல் நாளுக்கு வைர நகைகள் என முடிவு செய்தான்.

கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்த்திருந்த மலர் அசுவாரஷ்யமாக கொட்டாவி விட, முறைத்த பிரவா கவனத்தை இங்கு வைக்குமாறு கண்களால் கட்டளையிட்டான்.

லேப்டாப்பை கடமையாக எட்டிப் பார்த்தவள், பின் தமனிடம் சின்ன குரலில், “அப்படியே இரும்புல சங்கிலி ஒண்ணு பண்ணி தர சொல்லி கேளுங்க தமன், கல்யாணத்துக்கு அப்புறம் உங்க எம் டிய கட்டி போட வசதியா இருக்கும் எனக்கு” என்றாள்.

தமன் முகம் போன போக்கை கண்ட பிரவாகன் என்ன என கேட்க, “மேடமுக்கு பசிக்குதாம் சார், நான் ஏதாவது அரேஞ் பண்றேன்” என சொல்லி வெளியேறினான்.

பருக வந்த குளிர் பானத்தில் பாதியை குடித்து விட்டு அறையில் இருந்த சுவர்க்கடிகாரத்தின் நொடி முள்ளை பார்த்துக் கொண்டே நேரத்தை கடத்தினாள்.

அவளுக்கு தேர்வு செய்ய அத்தனை நேரம் எடுத்துக் கொண்டவன் அவனுக்கு விரைவாகவே தேர்வு செய்து விட்டான்.

விலைப் பட்டியலை கணக்கிட்டு அனுப்புவதாக சொல்லி வடிவமைப்பாளர்கள் கிளம்பவும், “நான் போலாமா இப்போ?” எனக் கேட்டாள்.

“என்ன அவசரம் மலர்?” என்றான்.

“அதான் வேலை முடிஞ்சதே… இன்னும் என்ன?”

தமனை பார்வையால் வெளியேற்றியவன் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை தள்ளிக் கொண்டு அவளருகில் வந்து, “பாரு, என் டைம் ரொம்ப டைட்டா போயிட்டு இருக்கு. நமக்கு பேசிக்க கூட டைம் கிடைக்க மாட்டேங்குது. இப்ப பேசுவோமே” என்றான்.

“உங்களை மீட் பண்ண அவ்ளோ பேர் வெளில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”

“வெயிட் பண்ணட்டும், நீதான் முக்கியம் எனக்கு” என்றான்.

நெற்றிப் பொட்டை அழுந்த தேய்த்துக் கொண்டவள், “பேசுங்க” என்றாள்.

“என்ன மாட்யூலேஷன் மலர் இது? என் ஆஃபீஸ் ரூம்ல ஒண்ணா இருக்கிறதை டாலரேட் செய்ய முடியலையா? கல்யாணத்துக்கு அப்புறம் நீ எனக்கு வைஃப்னா வைஃப்தான், புரிஞ்சுதா?” எனக் கேட்டான்.

கண்கள் தெறித்து விடுபவள் போல அவனை பார்த்தவள், “உன்கிட்டேருந்து வேற எதை நான் எதிர்பார்க்க முடியும்?” கசப்பு வழிய சொன்னாள்.

“தேவையில்லாம நீ ஒர்ரி பண்ணிக்கிற, எந்த விதத்திலேயும் உன்னை நான் கஷ்ட படுத்த போறதில்ல மலர். நீயும் என்னை கஷ்ட படுத்தாத. மேரேஜுக்காக வேற எதுவும் தேவை படுதா உனக்கு?”

“தேவைன்னா சொல்றேன், இப்ப ஹெட்டேக் ஆ இருக்கு, நான் போகட்டுமா?” எனக் கேட்டாள்.

“அப்படியா? அப்போ உன் ஹெட்டேக் சரி செய்யணுமே இப்ப” என்றான்.

“நீங்கதான் என் ஹெட்டேக், உங்க மூச்சு காத்து படாம, உங்க கண் பார்வை படாம எங்கேயாவது போயிட்டேன்னா ஹெட்டேக் சரியாகிடும்” என்றாள்.

“ஓ அந்த ஹெட்டேக் ஆ? அப்ப இந்த வலிக்கு பழகிக்க” என்றான்.

வெளியில் விளக்கு எரியும் பட்டனை அழுத்தினாள் மலர். பிரவாகன்தான் அழைக்கிறான் என நினைத்த தமன் உள்ளே வர, “உங்க எம் டியோட பல்லுல வலியாம், முடிஞ்சா பல்ல பிடுங்கி விடுங்க” என சொல்லி வேகமாக வெளியேறி விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement